பூமி கோளத்துக்கு ஆச்சரியமான—ஓர் எதிர்காலம்
“கடந்த 600 ஆண்டுகளாக இருந்திருப்பதிலேயே இப்போது பூமி அதிக வெப்பமுள்ளதாக இருப்பதாய் ஆய்வு காட்டுகிறது,” என்று டோரன்டோவின் குளோப் அண்ட் மெய்ல் அறிக்கை செய்கிறது. 1995-ல், ஐக்கிய மாகாணங்களின் மத்திபப் பகுதியில் ஏற்பட்ட வெப்ப அலை (heat wave), சிகாகோவில் 500-க்கும் மேலானோர் உயிரிழக்கும்படி செய்தது. இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அதைப்போன்ற கடுமையாக தகிக்கும் வெயில் இருந்த அதே சமயத்தில், இங்கிலாந்து “200 ஆண்டுகளில் வறட்சிமிகுந்த மூன்றாவது கோடைகாலத்தை” அனுபவித்தது.
இதற்குக் காரணம் என்ன? “பூகோள அளவிலான தட்பவெப்பநிலைமீது காணக்கூடிய அளவில் மனித செல்வாக்கு இருக்கிறது என்ற உண்மையைப் பெரும்பான்மையான அத்தாட்சி குறிப்பிட்டுக் காட்டுகிறது” என்று கனடாவிலுள்ள ஃபெடரல் சுற்றுச்சூழல் துறையில் பணிபுரியும் தட்பவெப்பநிலை நிபுணரான, ஹென்றி ஹென்ஜ்வெல்ட் கூறுகிறார். “இவ் வழக்கத்துக்கு மாறான வானிலை, பெரும்பாலும் புதைபடிவ எரிபொருட்கள் எரிவதால் உண்டாவதாய்க் கருதப்படும், பூகோள அளவிலான சூட்டின் விளைவுகளைப் போன்றேயுள்ள கம்ப்யூட்டர் மாதிரிகளோடு ஒத்திருக்கிறது” என்று குளோப் அண்ட் மெய்ல் அறிக்கை செய்கிறது.
பூகோள அளவில் சூடடைவது குறித்து இன்னும் விஞ்ஞான வட்டாரங்களில் வாதிடப்படுகிறது. இருந்தபோதிலும், “மனிதகுலம் வளிமண்டல சூழலைப் புரிந்துகொள்வதைவிட வேகமாக அதைத் துர்ப்பிரயோகம் செய்துவருகிறது” என்று தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது.
மகிழ்ச்சிகரமாக, பூமி “என்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. (பிரசங்கி 1:4) இது ஏனெனில், படைப்பாளர் யெகோவா தேவன், மனிதனோ, அல்லது வேறு இயற்கைச் சக்திகளோ அதை அழிக்க அனுமதிக்கப்போவதில்லை. அதற்கு முரணாக, அவர் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்.’—வெளிப்படுத்துதல் 11:17, 18.
கூடுதலாக, யெகோவா தேவன், நம்முடைய பூமி கோளத்துக்காகவும், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் முழுவதற்காகவும் ஆச்சரியமான ஓர் எதிர்காலத்தை வைத்திருப்பதாக பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” பூமியின் எதிர்காலம் மனிதனின் கைகளில் இல்லாமல், கடவுளின் கைகளில் இருப்பதற்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கலாம்!—சங்கீதம் 37:11; 72:16; ஏசாயா 65:17-25; 2 பேதுரு 3:13.
நீங்கள் அடுத்துவரும் விழித்தெழு! இதழ்களைப் பெற விரும்பினால், தயவுசெய்து உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொள்ளுங்கள், அல்லது பக்கம் 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள மிக அருகாமையிலுள்ள முகவரிக்கு எழுதுங்கள்.