குதிரைகளால் அவர்கள் இன்னும் நிலத்தை உழுகின்றனர்
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
முன்னேற்றமடைந்த தொழில்நுட்பக் காலமாகிய இந்நாளில், குதிரைகளால் தங்கள் நிலத்தை உழும் உழவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நம்புவது சிலருக்கு கடினமாக இருக்கலாம். ஆயினும், பாரமிழுக்கும் கொழுத்த குதிரை அணிகள், ட்ராக்டர்களுக்குப் பதிலாக இன்னும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
மறுப்புக்கிடமின்றி, குதிரைகளைப் பயன்படுத்தும் பண்ணைகள் அரிதாகிவிட்டிருக்கின்றன. ஆயினும், குதிரைகளைப் பயன்படுத்துவதில் நன்மைகள் இருக்கின்றன.
வேளாண்மையில் அதன் பயன்
ஆரம்ப காலம் முதற்கொண்டே குதிரைகள் பொதி சுமக்கும் விலங்குகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. சுமேரியர், ஏத்தியர், எகிப்தியர், சீனர் ஆகியோரது வரலாற்றுப் பதிவேடுகளில் அவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் பல நூற்றாண்டுகளாக அவை வேளாண்மைக்காக குறைவாகவே பயன்படுத்தப்பட்டன. இது ஏனென்றால், எருதுகளை வைத்துப் பராமரிப்பது மலிவானதாக இருந்தது, மேலும் அவை வேலை செய்யமுடியாமல் போகும்போது உண்பதற்கு உணவாக பயன்படுத்தப்படக்கூடும். எனினும், எருதுகள் குதிரைகளைக் காட்டிலும் மெதுவாக செயல்படுபவை.
19-வது நூற்றாண்டளவில், அநேக மேற்கத்திய நாடுகளில் நிலத்தை உழுவதற்கு குதிரைகள் பயன்படுத்தப்படுவது ஆரம்பமானது. அதற்கு ஒரு காரணம், “மெதுவாக நகரும் எருதுகளைவிட விரைவாகவும் சமமாகவும் உழும் குதிரைகளைப் பயன்படுத்துவதற்கு அதிக பொருத்தமானதாக [இருந்த] அதிநுட்பமான பண்ணை இயந்திரங்களின் கண்டுபிடிப்பு” என்பதாக ஒரு பிரசுரம் சொல்கிறது.
பின்பு, ஸ்காட்லாந்திலுள்ள க்ளைடெஸ்டேல் (clydesdale), இங்கிலாந்திலுள்ள சஃபல்க் பன்ச் (suffolk punch) மற்றும் ஷையர் (shire), முக்கியமாக பிரான்ஸில் பெர்ச்செரான் (percheron) போன்ற இனங்கள் வேளாண்மைக்காக உபயோகிக்கப்பட்டன. மெதுவான ஆனால் பலமான இந்தக் குதிரைகள், சற்றுக் குறைவான பலமுள்ள ஆனால் அதிக வேகமான குதிரையை பிறப்பிக்க, மெலிந்த குதிரைகளோடு இனச்சேர்க்கை செய்யப்பட்டன. அந்த விதத்தில் விசேஷமாக இனச்சேர்க்கை செய்யப்பட்ட மிருகங்கள், இழுவைக் குதிரைகள் என அழைக்கப்பட்டன; பொதிகளை இழுப்பதற்கான அவற்றின் திறனை இது குறிப்பிடுகிறது.
ட்ராக்டரோடு ஒப்பிடப்படும் குதிரை
சந்தேகமில்லாமல், நவீன ட்ராக்டரின் இழுசக்திக்கு சமமாக எந்தக் குதிரையும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் குதிரைகளுக்கு எவ்வளவு பலமிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் நீங்கள் ஒருவேளை ஆச்சரியமடைவீர்கள்! 1890-ல், பாரமிழுக்கும் இரண்டு க்ளைடெஸ்டேல் குதிரைகள், முழுவதும் பாரமேற்றப்பட்டு சக்கரங்கள் சுழலாதபடி தடுக்கப்பட்ட பாரவண்டியை இழுத்துச்சென்றன! 1924-ல், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஜோடி ஷையர் குதிரைகள், 50 டன் என கணக்கிடப்பட்ட பொதியை இழுத்து, அதேபோன்ற கவரத்தக்க அருஞ்செயலை செய்துகாட்டின!
பாரமிழுக்கும் குதிரைகள் புத்திக்கூர்மையுள்ளவையாகவும் சுயமாக செயல்படுபவையாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு நல்ல உழவுகால் குதிரை இருந்தால், வயலை உழும் குதிரை அணிக்கு கிட்டத்தட்ட எந்த மேற்பார்வையும் தேவையில்லை. உழவுகால் குதிரை, நாள்முழுவதும் உழவுகாலை பின்தொடரும் அந்த அணியை முன்நின்று நடத்தும். ட்ராக்டரைக்கொண்டு வேலைசெய்யும் ஜனங்கள் அடிக்கடி திரும்பிப்பார்க்கும் மனச்சாய்வைப் பெற்றிருப்பதுபோல அல்லாமல், குதிரைகள் கண்மறைப்பு வார்களை அணிந்திருப்பதன் காரணமாக, அவ்வணிகள் அசாதாரணமான விதத்தில் நேராக உழுகின்றன என்பதாக கருதப்படுகிறது.
கூடுதலாக, அறுவடையின்போது குதிரைகள் ட்ராக்டரைக் காட்டிலும் பல்வகைப் பயனுள்ளவையாக இருக்கக்கூடும். இம்மியும் பிசகாதபடி 90 டிகிரியில்—தேவை ஏற்படும்போது, 180 டிகிரியில்—திசை திரும்புவதற்கு அவற்றிற்கு இருக்கும் திறமை, விவசாய பணிகள் செய்யப்படும்போது வயலின் எந்தப் பகுதியையும் அவை உழாமல் விட்டுவிடுவதில்லை என்பதைக் காண்பிக்கிறது.
செயல்பாட்டில் குதிரை அணிகள்
ஓட்டுனரிடமிருந்து வரும் உத்தரவுகளுக்கு குதிரைகள் ஒரு அணியாக பிரதிபலிப்பது கவரத்தக்க ஒரு காட்சியாக இருக்கிறது. பயன்படுத்தப்படும் சரியான மொழியும் தொனிகளும் ஓட்டுனருக்கு ஏற்ப வித்தியாசப்பட்டாலும், குறிப்பான நிர்வாகத்தோடுள்ள குறிப்பான கட்டளைகளுக்கு கீழ்ப்படியும்படி அணி பயிற்றுவிக்கப்படுகிறது. ஒரு தனிப்பட்ட ஓட்டுனரால் பயன்படுத்தப்படும் வார்த்தைகளையும் அவரது குரலின் தொனியையும் குதிரைகள் நன்றாக அறிந்துகொள்கின்றன. ஓட்டுனருடைய உற்சாகமான வார்த்தைகளுடன், அவரது தனித்தன்மைவாய்ந்த விசில், குதிரைகள் செயல்பட ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கான அறிவிப்புக் குறியாக இருக்கலாம்.
ஆஸ்திரேலியாவில், (ஓட்டுனர் பார்க்கும் கோணத்தில்) அணியின் வலது புறத்திலிருக்கும் குதிரை வலதுபுற குதிரை என்பதாகவும் இடதுபுறத்திலிருக்கும் குதிரை அருகாமைக் குதிரை என்பதாகவும் அழைக்கப்படுகிறது. நீடித்த அனுபவமுள்ளோர் தங்களது அணிகளை நடத்திய விதத்திலிருந்து ஒருவேளை இந்தப் பெயர் வந்திருக்கலாம், அவர்கள் பொதுவாக இடதுபுறம் நடந்து செல்வர்.
பத்துக் குதிரைகளுள்ள ஒரு வரிசை, ஓட்டுனரின் ஆணைகளுக்கு பிரதிபலிப்பதாய், 90 டிகிரியில் திசை திரும்புவதைப் பார்ப்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் உள்ளது! இடதுபக்கம் திரும்புவதற்கு, அருகாமைக் குதிரை பின்புறமாக சிறு காலடிகளை எடுத்துவைக்க வேண்டும், அப்போது அணியிலுள்ள மற்றவை அதைச் சுற்றி 90 டிகிரியில் திசை திரும்புகின்றன. பின்பு, வலதுபுறமாக திரும்ப வேண்டுமென்றால், வலதுபுற குதிரை பின்புறமாக சிறு காலடிகளை எடுத்துவைக்க வேண்டும். வறண்ட காலத்தில், அந்த அணி, தூசிமண்டலத்தில் மறைந்து, பின்பு திசை திரும்பிய பிறகு பெரும் ஓசையுடன் ஒரு சுவர்போன்ற குதிரைத் தொகுதியாக மறுபடியும் தோன்றுவதைப் பார்ப்பது மிகவும் கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது!
ஒவ்வொரு குதிரையும் அதனதன் பெயரால் அழைக்கப்படுகிறது; ஓட்டுனரின் குரல் தொனிக்கேற்ப அவை அதற்கு பிரதிபலிக்கின்றன. ஒரு குதிரை வேகத்தில் பின்தங்கிப்போனால், உரத்த கண்டிக்கும் தொனியில் அதன் பெயரைக் கூப்பிடுவதே பொதுவாக போதுமானதாக இருக்கிறது. ஆரம்ப பயிற்சியின்போது, அப்படிப்பட்ட ஒரு தொனியுடன் தடியினாலோ சவுக்கினாலோ அடி விழும் என்பதை குதிரைகள் பெரும்பாலும் கற்றுக்கொள்ள வேண்டும். எனினும், அந்தப் பாடம் கற்றுக்கொள்ளப்பட்டவுடன் அதிக கடினமான அந்தச் சிட்சை அரிதாகவே தேவைப்படுகிறது.
மாதிரி வேலைநாள்
ஓர் உழவர், குதிரைகளுக்கு தீவனத்தைக் கொடுப்பதற்கும் அவை தீவனத்தை உண்ணும்போது தனது சொந்த காலையுணவை அருந்தவும் காலையில் ஐந்து மணிக்கு ஒருவேளை எழுந்திருப்பார். அந்நாளின் வேலை ஆரம்பமாவதற்கு முன்பே குதிரைகள் நன்றாக குடிக்க கற்றுக்கொள்கின்றன, ஏனெனில் மதிய உணவுவரை குடிப்பதற்கு வேறு எதுவுமே அவற்றிற்கு கிடைக்காது. ஒவ்வொரு குதிரையும் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பு பிரஷ்ஷால் கோதிவிடப்படுகிறது. தோல் அரிப்பை இது தடுத்து சுகமான உணர்வை கொடுக்கிறது. பொதுவாக குதிரைகள் உழவரைச் சுற்றி கும்பலாக நின்று, அவற்றின் முறை வரும்வரை காத்துக்கொண்டிருக்கின்றன. பின்பு அவை சேணம் பூட்டப்பட்டு நுகத்தடியில் சேர்க்கப்படுகின்றன. இவையனைத்திற்கும், அந்த அணியின் அளவைப் பொருத்து ஒரு மணிநேரமோ அதற்கு மேலாகவோ எடுக்கலாம். மேலும், குதிரைகளின் நடுப்பகல் உணவுக்காக தீவனப் பைகள் தயாரிக்கப்படுகின்றன. ஓட்டுனருக்கு மாத்திரமா மதிய இடைவேளை!
எட்டு அல்லது பத்து மணிநேரங்களுக்கு அணி எந்த முறையீடுமில்லாமல் கடினமாக உழைக்கிறது; மேலும், கழுத்துவார்களும் கருவியும் நன்றாக பொருத்தப்பட்டிருந்தால், நாளின் முடிவிலே குதிரைகளின் தோள்களில் காயங்களும் சிராய்ப்புகளும் இருக்காது. சாயங்காலம் ஆரம்பமாகும்போது, மனிதனும் மிருகமும் நிம்மதியாக சாப்பிடுவதற்கும், போதுமானளவு குடிப்பதற்கும், நன்றாக ஓய்வெடுப்பதற்கும் பண்ணை வீட்டிற்கு சந்தோஷமாக செல்கின்றன[ர்].
தங்கள் நிலத்தை உழவு செய்ய இன்னும் குதிரைகளைப் பயன்படுத்துவோர், நாள் முழுவதும் இயந்திரங்களின் இரைச்சலைக் கேட்பதைக் காட்டிலும் எவ்வளவோ அதிக சந்தோஷமான ஒரு காரியம் இது என்பதாக உடனடியாக வாதிடுவர். அங்கு நிலவும் அமைதி, அந்த நிலத்தின் ஒரு பாகமாக உழவரை உணரச்செய்கிறது. அவரைச் சுற்றியுள்ள சிருஷ்டிப்பை இன்னும் தெளிவாக அவரால் கவனிக்க முடிகிறது—உழவுகால்களிலுள்ள புதிதாய் புரட்டப்பட்ட மண்ணை சோதிப்பவையாய், பறவைகள் அதைக் கிளறுவதன் சப்தம்; ஈரமான புல்வாசனை; குளிர்நிறைந்த காலைவேளையில் குளிர்ச்சியான நிலத்தினூடே கலப்பை ஊடுருவிச்செல்லும்போது உறைபனி சடசடவென்று உடைவது—ட்ராக்டரின் சப்தத்தால் சூழப்பட்டிருக்கும்போது உழவரால் கவனிக்கப்படாமல் போகும் சிறு காரியங்கள்.
ட்ராக்டர்கள் நாளுக்கு 24 மணிநேரம் வேலை செய்யும்; இது குதிரைகளால் முடியாத செயல் என்பது உண்மைதான். ட்ராக்டர்கள் அதிக நிலத்தை உழ முடியும் என்பதும் குறைவான பராமரிப்பையே தேவைப்படுத்துகின்றன என்பதும்கூட உண்மைதான். ஆனால் எந்த ட்ராக்டரும் ஒரு அருமையான குட்டியை எக்காலத்திலும் ஈன்றெடுக்கவில்லை, இது குதிரைகளோடு வேலை செய்வதை ஈடற்றதாக்கும் இன்பங்களில் வெறுமனே ஒன்று. ஓட்டுனர், குதிரைகள் வேலை செய்யும்போது அவற்றுடன் “சம்பாஷணை” கொள்வதையும் மகிழ்ந்தனுபவிக்கலாம். ஓட்டுனரின் ஒவ்வொரு வார்த்தையையும் செவிகொடுத்துக் கேட்க காதுகளை நிமிர்த்தியவாறு வைத்திருக்கும் அவை, கீழ்ப்படிதலின்மூலம் பதிலளிக்கின்றன.
விவசாயம், கடினமானதும் சிலசமயங்களில் களைப்புண்டாக்குவதுமான வேலையாகும். ஆனால் இன்னும் தங்களது வயல்களை பழைய பாணியில் உழுபவர்களுக்கு, கடவுளுடைய சிருஷ்டிப்பின் இந்தத் தசைபொருந்திய, கடினமாக உழைக்கும் மிருகங்களோடு இவ்வளவு நெருக்கமாக வேலை செய்வதில் பேரின்பம் ஏற்படலாம்.
[பக்கம் 26-ன் படம்]
ஒரு ட்ராக்டரைக் காட்டிலும் குதிரைகள் பல்வகைப் பயன்தருபவையாய் இருக்கலாம்