உலக மதங்கள் அவற்றின் முடிவை நருங்குகின்றனவா?
ஸ்வீடனிலிருந்து விழித்தெழு! நிருபர்
‘அது எப்படி முடியும்? உலகம் முழுவதிலும் கணிசமானளவு பலம்பொருந்தியதாயும் செல்வாக்குமிக்கதாயும் உலக மதங்கள் இன்று இருக்கின்றனவல்லவா?’ என்பதாக இத் தலைப்பு உங்களை யோசிக்கச் செய்கிறதா?
ஆம், துன்பக்கடலினூடே கடந்து செல்கின்றபோதிலும், அவை பலம்பொருந்தியவையாயும் செல்வாக்குமிக்கவையாயும் தோன்றுகின்றன. மதம், மனித வரலாற்றில் எக்காலத்தையும்விட இந்த 20-வது நூற்றாண்டில் அதிகமாய் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது, மேலும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. வானவியல் நிபுணர்கள் தங்களுடைய மிகப் பெரிய தொலைநோக்கிகளைக் கொண்டு அண்டத்தை ஆய்வு செய்துள்ளனர், மேலும் விண்வெளி வீரர்கள் புறவெளியில் குறுக்குமறுக்காகச் சென்றிருக்கின்றனர்; சோவியத்தைச் சேர்ந்த ஒரு வானவியல் நிபுணர் தெரிவித்ததைப் போல, அவர்கள் “கடவுளையோ, தூதர்களையோ” பார்க்கவில்லை. இயற்பியலார்கள், பருப்பொருளை சிறுசிறு துகள்களாகப் பிளந்திருக்கின்றனர், ஆனாலும் உயிரைத் துவக்கியிருந்திருக்கும் எந்தவொரு தெய்வீக சக்தியையும் கண்டுபிடிக்கவில்லை. அமீபாவிலிருந்து மனிதன் வரைக்கும், உயிரின் நீண்ட பரிணாம சங்கிலி இணைப்பை மாற்றியமைத்துள்ளதாக உயிரியலார்களும் தொல்லுயிரியலார்களும் அடித்துக் கூறுகின்றனர்; அப்போது ஒரு படைப்பாளருக்கான மிகச் சிறிய இணைப்பைக்கூட அச் சங்கிலி இணைப்பில் எங்கும் காணவில்லை.
என்றபோதிலும், மத உணர்வை இக் கோளத்திலிருந்து துடைத்தழிக்க, மதச் சார்பற்ற ஞானத்தாலும் பொருள்வாத தத்துவத்தாலும் முடியவில்லை; அதைக் காட்டிலும், நாத்திக அரசியல் ஆட்சிமுறைகளாலும் தத்துவங்களாலும்கூட முடியவில்லை. ஏனெனில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வாதிபத்திய, நாத்திக கம்யூனிஸமானது, மதத்தை மூடநம்பிக்கையென்றும், “மக்களின் அபினி” என்றும் இகழ்ந்திருப்பதோடு, மதத் தலைவர்களைப் பொறுப்பான பதவியிலிருந்து விலக்கியது மற்றும் அவர்களுடைய நடவடிக்கைகளைத் தடை செய்தது, சர்ச்சுகளையும் கோவில்களையும் அழிக்கவோ, கொள்ளையிடவோ செய்தது; மேலும் வணக்கத்தாரை மூளைச்சலவை செய்ததோடு, கொலையும் செய்தது. ஆனாலும், இப்படிப்பட்ட செயல்கள் மத உணர்வை முற்றிலும் நீக்கவில்லை. அந்த அரசாங்கங்கள் வீழ்ச்சியுற்றவுடனே, தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்த மதம், புதுப்பிக்கப்பட்டதுபோன்ற பலத்தோடு எழுச்சியுற்றது. முன்பு கம்யூனிஸ்ட்டாயிருந்த நாடுகளில், மக்கள் மறுபடியும் தங்கள் கோயில்களுக்கு ஒருமிக்கத் திரண்டு சென்று, அவர்களுடைய முன்னோர்கள் முன்பு வணங்கிவந்ததுபோலவே பக்தியுடன்கூடிய வணக்கத்தைச் செலுத்தும்படியாக முழங்கால்படியிடுகின்றனர்.
உலகின் பிற பாகங்களில் மத உணர்வு இன்னும் கொழுந்துவிட்டு எரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா நகருக்கு உலகெங்கிலுமிருந்து கோடிக்கணக்கான முஸ்லீம் யாத்ரீகர்கள் புனிதப்பயணம் செல்கின்றனர். போப்பின் ஆசியைப் பெறும் நம்பிக்கையோடு, அவரது தரிசனம்தேடி, வத்திகனிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயருக்கு, அதன் கொள்ளளவுக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் அடிக்கடி திரண்டுவருகின்றனர். கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் இந்தியாவிலுள்ள “புனித” நதிகளின் கரைகளிலுள்ள நூற்றுக்கணக்கான புண்ணியத்தலங்களுக்குத் தொடர்ந்து வந்து குவிந்த வண்ணமாய் இருக்கின்றனர். பக்தியுள்ள யூதர்கள் எருசலேமிலுள்ள புலம்பலின் மதிலுக்கு (wailing wall) பிரார்த்திக்கச் செல்வதோடு, எழுதப்பட்ட பிரார்த்தனைகளை அம்மதிலின் இடுக்குகளில் விட்டுவருகின்றனர்.
ஆம், மனிதகுலத்திடமிருந்து மதத்தை ஒழிப்பது முடியாத காரியமாய்த் தோன்றுகிறது. “தேகக்கட்டின்படி மனிதன் ஒரு மத விலங்கு,” என்பதாக அயர்லாந்தில் பிறந்த அரசியல் மேதகை எட்மண்டு பர்க் கூறினார். புள்ளிவிவரத்தின்படி, பூமியின்மீதுள்ள 6 பேரில் 5 பேர் ஏதோவொரு மதத்தோடு ஓரளவு தொடர்புடையோராய் இருக்கின்றனர். சமீபத்திய எண்ணிக்கைகளின்படி, உலகிலுள்ள ஸ்தாபிக்கப்பட்ட மத ஆதரவாளர்களாக சுமார் 470 கோடி பேர் இருக்கின்றனர், அதே சமயத்தில் வெறுமனே 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே மதப்பற்று இல்லாதவர்களாகவும் நாத்திகர்களாகவும் இருக்கின்றனர். a
இந் நோக்குநிலையில், உலகின் மதங்கள் அவற்றின் முடிவை நெருங்குகின்றன என்று நம்புவது நியாயமாய் இருக்கிறதா? அவை முடிவை நெருங்கினால், எப்பொழுது மற்றும் எப்படி அதை நெருங்கும்? ஏதாவதொரு மதமாவது விட்டுவைக்கப்படுமா? இக் கேள்விகளை அடுத்த இரண்டு கட்டுரைகளில் நாம் சிந்திப்போம்.
[அடிக்குறிப்பு]
a ‘மதப்பற்று இல்லாதவர்களை’ உட்படுத்துவது: “எந்த மதத்தையும் கடைப்பிடிக்காதவர்கள், அவிசுவாசிகள், அறியொணாமைக் கொள்கையினர், சுதந்திர சிந்தனையாளர்கள், எல்லா மதத்தின்மீதும் அசட்டை மனப்பான்மை காட்டுபவர்களான, மதத்தின் தன்மையைக் களைந்து கைவிட்டவர்கள் ஆகியோர்.”
[பக்கம் 3-ன் படம்]
வத்திகன் நகரிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர்