இந்தக் கூடூ—ஞாபகம் வைத்திருந்தது
தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்
அழகான ஆண் கூடூ, கவர்ச்சியான நெளிந்துவளையும் கொம்புகளையும் விசித்திரமான காதுகளையும் உடைய ஒரு மானாகும் (antelope). முழு வளர்ச்சியடையும்போது அதன் முதுகின் உயரம் சுமார் 150 சென்டிமீட்டராக இருக்கிறது. பெண் கூடூவிற்கு பொதுவாக கொம்புகள் இல்லாதபோதிலும், அதன் பெரிய காதுகளால் நன்கு அறியப்பட்டிருக்கிறது. கூடூ, கூச்ச சுபாவமுள்ள ஒரு மிருகம், எப்போதுமே துருதுருவென விழிப்பாகவும் ஓடி ஒளிந்துகொள்வதற்கு தயாராகவும் இருக்கிறது. ஆக, ஜிம்பாப்வியில் காரன் என்பவருடைய வாழ்க்கையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க வனவாழ்வு என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சொல்லப்பட்டிருக்கிற விதமாய், ஒரு சின்ன கூடூ பெண்மான்குட்டி கம்பி வேலியில் மாட்டிக்கொண்டபோது அது காப்பாற்றப்பட்டு காரன் என்ற பெண்ணிடம் கொடுக்கப்பட்டது; காரன் சில வாரங்களுக்கு அதற்குப் புட்டிப்பால் கொடுத்து வளர்த்தார். அது புஷ்டியடைந்து, காரனும் அவரது குடும்பமும் வசித்துவந்த பண்ணைக்கு அக்கம்பக்கத்தில் சுற்றிக்கொண்டு, பிள்ளைகளோடும் நாய்களோடும் விளையாடிக்கொண்டிருந்தது. ஆனாலும், நாளாகநாளாக அது காட்டுக்கு சென்றுவிட்டு நினைக்கும்போதெல்லாம் திரும்பிவரும்; கிட்டத்தட்ட முழுமையாகவே வளர்ந்த பிறகு, அது பண்ணைப் பக்கமாக வரவேயில்லை.
சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, பண்ணையருகே கார் ஓட்டிக்கொண்டு சென்றபோது, கருத்தரித்த ஒரு கூடூவை காரன் பார்த்தார்; கார் அதன் பக்கத்தில் சென்றபோதிலும் அது ஓடிவிடாமலிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அதனருகே நடந்து போனபோதும்கூட அது ஓடவில்லை. இப்போதுதான் அவருக்குப் புரிந்தது, தான் புட்டிப்பால் கொடுத்த அதே மான்தான் இது என்று; அதனால் சப்தம்போடாமல் அதன் பக்கத்தில் சென்று மெதுவாக பேசினார். அந்த மானும் அவரை அடையாளம் கண்டுகொண்டது, தலையைக் குனிந்து அவர்மீது தேய்த்து கொஞ்சிக் குலவியது; அவர் அதைக் கட்டித்தழுவினார்!
சில மாதங்களுக்குப் பிறகு, அந்த மான் மறுபடியும் ரோடோரமாக வந்தது—இந்த முறை ஒரு சின்ன மான்குட்டியுடன் நின்றது. இதுதான் என் குட்டி என அதன் அம்மா பெருமையோடு சொன்னதுபோல் காரனுக்குத் தோன்றியது; இந்த முறையும் தன்னை செல்லம்கொஞ்சுவதற்கு அனுமதித்தது அந்த மான். சில வாரங்களுக்குப் பிறகும் இதேபோன்று நடந்தது; அந்த மான் காரனுக்காவே காத்துக்கொண்டிருந்ததுபோல் தோன்றியது.
அதன்பின் சில மாதங்களுக்குப் பிறகு, இதே கூடூ மான், கழுத்தில் சுருக்குக் கயிறுடன் போனதைப் பார்த்ததாக பண்ணை வேலையாட்கள் சிலர் கூறினர். சுருக்குக் கயிறை கழற்றிவிட அதன் அருகில் செல்ல அவர்கள் முயற்சி செய்தபோது அந்த மான் ஓடிவிட்டது. இதனால், காரன் அதைக் கூப்பிட்டுக்கொண்டே புதர்களுக்குள் சென்று தேடினார். கொஞ்ச நேரத்திலேயே, அது அவருக்குமுன் வந்து நின்றது. காரன் அந்த மானுக்கு மிகவும் பிடித்த ரொட்டியை முன்யோசனையோடு கொஞ்சம் எடுத்துவந்திருந்தார்; ருசியான இந்தப் பதார்த்தத்தை அதற்கு கொடுத்துக்கொண்டிருந்தபோது, காரனின் கணவர் இம்சைபிடித்த அந்தச் சுருக்குக் கயிறை வெட்டிவிட்டார்.
மனிதனுக்கும் மிருகத்திற்கும் அவ்வளவு நாளாக இருந்த அந்தப் பாசப்பிணைப்பு இந்தக் குடும்பத்தினருக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை அளித்தது.