உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 1/22 பக். 22-23
  • பல்நோக்குடைய சிடெங்கே

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பல்நோக்குடைய சிடெங்கே
  • விழித்தெழு!—1998
  • இதே தகவல்
  • யெகோவாவின் ஒழுக்க தராதரங்களின்படி வாழ தீர்மானமாயிருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
விழித்தெழு!—1998
g98 1/22 பக். 22-23

பல்நோக்குடைய சிடெங்கே

நமிபியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

சிடெங்கே—அது என்ன என்று உங்களுக்கு தெரியுமா? உங்களால் கொஞ்ச நேரம் செலவுசெய்ய முடியுமென்றால், ஓர் ஆப்பிரிக்க கிராமத்திற்கு வந்து பல்நோக்குடைய சிடெங்கே எவ்வாறு வேலையிலும் விளையாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பாருங்கள்.

நமிபியாவிலுள்ள ருண்டு என்ற கிராமத்திற்கு நாம் இப்போது செல்கிறோம். ஜனசந்தடியுள்ள சந்தையில்தான் முதலாவது போய் நிற்கிறோம். சிரித்த முகமுள்ள பெண்கள், பேரம் பேசுகிறார்கள், வாங்குகிறார்கள், விற்கிறார்கள் அல்லது வெறுமனே நின்று கதை பேசுகிறார்கள். ஆனால் உற்று கவனித்தீர்கள் என்றால், அநேகமாக அவர்களில் எல்லாருமே ஒரு விசேஷித்த விதமான உடை அணிந்திருப்பதை கவனிப்பீர்கள்; அது சிடெங்கே என்று அழைக்கப்படும், உடலில் சுற்றிக்கொள்ளக்கூடிய பாவாடை.

பருத்தி உடையான சிடெங்கே, இரண்டு மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் அகலமும் எண்ணிலடங்கா பலவித வண்ணங்களையும் டிசைன்களையும் உடையது. சில, மிருகங்களின் படங்களாலும் மற்றவை, ஆட்கள் அல்லது இயற்கைக் காட்சிகளின் படங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

பிறகு, நாம் அந்தக் கிராமவாசிகளில் சிலரை அவர்கள் வீடுகளில் சென்று சந்திக்கிறோம்; அவை மண்ணால் கட்டப்பட்டு, வைக்கோலால் கூரை வேயப்பட்டு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளன. வீட்டிற்கு முன்னாலிருக்கும் மண்ணை சமப்படுத்துவது அல்லது குடும்பத்தினருக்கு சமைப்பதற்காக நெருப்பு மூட்டுவது போன்ற அன்றாட வேலைகளில் பெண்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கின்றனர். சிலர் ஒரு சிடெங்கே மட்டுமே அணிந்திருக்கிறார்கள்; இப்போது அதை முழுவதுமாக மார்புக்கு மேலே இழுத்து உடலைச் சுற்றி கட்டியிருக்கிறார்கள். இது வீட்டில் அணியும் ஆடையாக சேவிக்கிறது. அப்பெண்கள் உடையணிந்த பிறகு—ஒருவேளை பிளௌஸும் பாவாடையும் அணிந்தபிறகு—தங்கள் இடுப்பில் ஒரு சிடெங்கேவை சுற்றிக்கொள்வார்கள்; கிராமத்தின் புழுதிநிறைந்த சாலைகளில் நடந்துபோகையில் தங்கள் பாவாடை அழுக்காகாமல் இருப்பதற்காகவே அவ்வாறு அணிகிறார்கள்.

அந்த அழகான இளம்பெண்ணை கவனித்தீர்களா? ஒரு சிடெங்கேவை, முழுமையாக அதன் இரண்டு மீட்டரையும், ஓர் அழகான, நுண்ணிய வேலைப்பாடுடைய தலைப்பாகையாக அவள் சுற்றி கட்டியிருக்கிறாள். தன் குழந்தையை அவள் எவ்வாறு தூக்கிச் செல்கிறாள் என்பதையும் கவனியுங்கள். மற்றொரு சிடெங்கேவை முடிச்சுப்போட்டு, அதைத் தன் ஒரு தோளில் தொட்டிலைப்போல தொங்கவிட்டிருக்கிறாள். அம்மாவின் முதுகில் இவ்விதம் சவாரி செய்கையில் குழந்தை சந்தோஷமாய் உணருகிறது. அவன் அழ ஆரம்பித்துவிட்டால், வெறுமனே அந்தத் தொட்டிலை முன்பக்கம் இழுத்து, நடந்தவாரே குழந்தைக்கு பால் கொடுக்கிறாள் அல்லது அவனை தாலாட்டுகிறாள்.

சுற்றி கட்டியுள்ள தன் பாவாடையின் ஒரு நுனியில் அவள் பணத்தை முடிந்து வைப்பதையும்கூட நீங்கள் பார்த்திருக்கலாம்—வசதியான ஒரு பர்ஸ். பொருட்களை வாங்கிமுடித்த பிறகு, இன்னொரு சிடெங்கேவை கழற்றி, காய்கறிகளை அதிலே வைத்து, பக்குவமாய் மூட்டை கட்டி, அந்தச் சாமான் மூட்டையைத் தன் தலையில் வைத்து வீட்டிற்கு எடுத்துச் செல்கிறாள்.

அவள் தன் வீட்டிற்குள் நுழைந்த பிறகு, இந்தப் பல்நோக்குடைய துணியின் மற்ற திறம்பட்ட உபயோகங்களையும் நீங்கள் கவனிப்பீர்கள். ஒவ்வொரு வாசலுக்கு முன்பாகவும் பளிச்சென்ற நிறமுடைய ஒரு சிடெங்கே தொங்குகிறது. நீங்கள் பார்க்கிற வண்ணம் அங்கே தடுப்புச்சுவர்கள் இல்லை. வீட்டின் ஒரு மூலையிலிருந்து அடுத்த மூலைவரை நீளமான கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது; அதில் தொங்கவிடப்பட்டிருக்கும் நான்கு சிடெங்கேக்கள் முன் அறையை படுக்கை அறையிலிருந்து பிரிக்கும் தடுப்புச் சுவர் ஆகின்றன.

எங்களை விருந்துக்கு அழைத்தப் பெண், தான் கொண்டுவந்த காய்கறிகளை தரையிலே இறக்கியப்பிறகு வீட்டிலே விறகு இல்லை என்பதை உணருகிறாள். விறகுக் கட்டைகளைப் பொறுக்க காட்டிற்கு போகுமுன், மறக்காமல் தன்னோடு மற்றொரு சிடெங்கேவை எடுத்துச் செல்கிறாள். விறகுக் கட்டைகளைப் பொறுக்கிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கட்டுவதற்கு ஒரு சிடெங்கேவைப் பயன்படுத்துகிறாள். பிறகு மற்றொரு சிடெங்கேவை எடுத்து அதை மொத்தென்று சும்மாடுபோல இறுக்கமாக சுற்றி தன் தலையில் வைத்துக் கொள்கிறாள். அந்தப் பெரிய விறகுக் கட்டை தன் தலையில் வைத்து வீட்டிற்கு எடுத்துச்செல்ல அது மெத்தென்ற குஷன்போல இருக்கிறது.

சாப்பாடு இலேசாக கொதிக்க ஆரம்பித்ததும், அது வேகும் முன் பக்கத்து வீட்டாரை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வரலாமென நம் தோழி நினைக்கிறாள். அவள் கையசைத்து பேசுகையில், தன் சிடெங்கேவை ஒரு கம்பளத்தைப்போல தரையிலே விரித்து அதில் தன் குழந்தையை படுக்க வைக்கிறாள். அவன் விளையாடுவதற்காக ஒரு குச்சியை அவனுக்குக் கொடுக்கையில், பதிலுக்கு அவன் தன் அம்மாவைப் பார்த்து அழகாக புன்னகைக்கிறான்.

சீக்கிரத்திலேயே உணவைப் பதம்பார்க்க நம் தோழி திரும்ப வேண்டியிருக்கிறது. ஆனால் வானம் கறுத்துக்கொண்டு திடீரென்று மழைபெய்ய ஆரம்பிக்கிறது. கொஞ்சம்கூட கவலைப்படாமல் தன் குழந்தையை ஒரு கையில் எடுத்துக்கொண்டு சிடெங்கேவை லாவகமாக தன் தலையில் சுற்றிக்கொள்கிறாள். தன் ‘ரெடிமேட்’ குடையின் உதவியால் இருவரையும் மூடிக்கொண்டு உணவைப் பதம்பார்க்க வீட்டிற்கு வந்து சேருகிறாள்.

பாவாடை, வீட்டில் அணியும் ஆடை, பர்ஸ், சாமான்பை, குஷன், கம்பளம், குடை, குழந்தை தூக்கிச்செல்ல, தலைப்பாகை—அப்பப்பா! சிடெங்கேவின் பயன்பாட்டுக்கு முடிவே இல்லாததுபோல் தோன்றுகிறது; ஆப்பிரிக்க மக்களுடைய புத்திக்கூர்மையின் அத்தாட்சியாய் இது திகழ்கிறது.

[பக்கம் 23-ன் படம்]

“சிடெங்கே” அநேக விதங்களில் பயன்படுகிறது: விறகுக் கட்டை சுற்றி கட்ட, குழந்தையை தூக்கிச்செல்ல, ஓர் அழகான தலைப்பாகையாக, வண்ணமிக்க ஒரு கம்பளமாக

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்