பைபிளின் கருத்து
மிருகங்களை வதைப்பது தவறா?
மத்திய அமெரிக்காவிலுள்ள ஒரு விளையாட்டு அரங்கில், வைத்தவிழி வாங்காமல் எல்லாருடைய கண்களும் இரண்டு சேவல்களையே நோக்கிக்கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று சிகப்பு, மற்றொன்று வெள்ளை. சிகப்பு சேவலின் காலில் பிளேடு போன்ற ஒரு கத்தி, இது வெள்ளை சேவலை ஒரு விளாசு விளாசியபோது மக்கள் கூட்டத்தில் ஒரே கரகோஷம். ரெஃபரி அந்த இரண்டு சேவல்களையும் தூக்கிக்கொள்கிறார். இப்பொழுது அந்த வெள்ளை சேவல் இரத்தம் சொட்ட சொட்ட துவண்டு விழுகிறது. அத்தோடு அதன் கதையும் முடிந்தது. கோழிச் சண்டையும் ‘ஓவர்.’
இப்பொழுது தென் பிலிப்பீன்ஸில் நடக்கும் காட்சிக்கு வருவோம். இரண்டு குதிரைகள் ஒன்றோடொன்று மோத தயாராக இருக்கின்றன. நடக்கப்போகும் கோரக் காட்சியின்மீது பார்வையாளர்களுடைய கவனம் ஆணியடித்தாற்போல் இருக்கிறது. காது, மூக்கு, கழுத்து என்று உடம்பில் ஒரு இடம் பாக்கியில்லாமல் அந்த இரண்டு குதிரைகளும் கடித்துக்கொள்கின்றன. ஒருவேளை அரங்கத்தைவிட்டு இரண்டும் உயிரோடு செல்லப்போவது என்னவோ உண்மைதான். ஆனால் இரண்டில் ஒன்று நொண்டியாகலாம், குருடாகலாம், அல்லது கடைசியில் சாவும் அளவுக்கு காயமடையலாம்.
ரஷ்யாவில் இரண்டு நாய்கள் ஒன்றுக்கொன்று கடித்துக் குதறுகின்றன. சில கணங்களில், கண்விழி பிதுங்கிவிடுகின்றன, காதுகள் அறுந்து தொங்குகின்றன, அவை அங்குமிங்கும் நொண்டி நொண்டி நடக்கின்றன, சதை கிழிந்து இரத்தம் பீறிடுகிறது.
மனிதன் காலம் காலமாக மிருகத்திற்கு எதிராக மிருகம் சண்டை போடும்படி செய்திருக்கிறான்—விளையாட்டு என்ற பெயரில். பெரும்பாலும் சூதாட்டமே இதற்கு முக்கிய காரணம். இந்தப் பட்டியலில் இடம்பெறும் மற்ற விலங்கினங்கள்? ஜல்லிக்கட்டு, நரி வேட்டை. இதுமட்டுமா, கேட்டால் அசந்துவிடுவீர்கள்—சிலந்தி சண்டையும்தான். அதோடு, சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படும் மிருகங்களுக்கு கணக்கு வழக்கே கிடையாது. மேலும், பிராணிகளை வளர்ப்பவர்களுடைய அசட்டையாலும் எண்ணிலடங்கா மிருகங்கள் படாதபாடு படுகின்றன, இது தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படுகிறது.
மிருகங்களை நடத்தும் விதத்தின் பேரில் விதிமுறைகளும் கொடூரமான செயல்களைத் தடைசெய்யும் சட்டங்களும் சில நாடுகளில் உள்ளன. 1641-லேயே மாசசூஸெட்ஸ் பே காலனி “விடுதலை சமுதாயத்தை” உருவாக்கியபோது இவ்வாறு குறிப்பிட்டது: “மனிதனுடைய நன்மைக்கு பயன்படுத்தப்படும் எந்த விலங்கையும் எவரும் கொடுமையோ சித்திரவதையோ செய்யக்கூடாது.” அது முதற்கொண்டு, மிருகங்களை சித்திரவதை செய்யாமல் பாதுகாப்பதற்கு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது, சங்கங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சண்டை விளையாட்டுகளை ஊக்குவிக்கும் அநேகர் மிருக சித்திரவதைக்கு தாங்களே காரணகர்த்தா என கருதுவதில்லை. மிருகங்களிடம் அன்புகாட்டுவதாக சொல்லிக்கொள்கிற சிலர், அவை அவஸ்தைப்படும்படியோ சாகும்படியோ கொடுமைப்படுத்துகின்றனர். கறிக்கு வளர்க்கப்படும் சராசரி கோழிகளைவிட தங்களுடைய கோழிகள் நீண்ட காலம் வாழ்கின்றன என சேவல் சண்டை பிரியர் வாதம் செய்கின்றனர்—ரொம்பதான் அக்கறை!
வதைப்பது ஏன் தவறு?
மிருகங்களிலிருந்து நன்மையடைய கடவுள் நம்மை அனுமதிக்கிறார். உணவுக்காகவும் உடைக்காகவும் அல்லது தீங்கு நேர்ந்தால் பாதுகாத்துக்கொள்வதற்காகவுமே மிருகங்களை கொலை செய்வதை பைபிள் நியமங்கள் அனுமதிக்கின்றன. (ஆதியாகமம் 3:21; 9:3; யாத்திராகமம் 21:28) ஆனால் கடவுளுக்கு உயிர் பரிசுத்தமானது. உயிரை மதிக்கும் விதத்தில் மிருகங்களின்மீது நம்முடைய அதிகாரத்தை சமநிலையோடு செலுத்த வேண்டும். நிம்ரோது என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனை பைபிள் கண்டனம் செய்கிறது. மிருகங்களையும் ஒருவேளை மனிதர்களையும் கொலைசெய்வதில் அவனுக்கு குரூர இன்பம்.—ஆதியாகமம் 10:9, NW.
மிருகங்கள்மீது கடவுளுக்கு இருக்கும் கரிசனையைக் குறித்து இயேசு பின்வரும் வார்த்தைகளில் கூறினார்: “இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.” (லூக்கா 12:6) பொல்லாங்கு செய்து ஆனால் மனந்திரும்பிய ஆட்களிருந்த ஒரு நகரத்தை அழிப்பதைப் பற்றிய தம்முடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டபோது, கடவுளே இவ்வாறு சொன்னார்: “இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ”? (யோனா 4:11) வேண்டாதபோது குப்பைத் தொட்டியில் வீசப்படும் பொருட்களைப் போல மிருகங்களை அவர் கருதுவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இஸ்ரவேலருக்கு கடவுள் சட்டங்கள் கொடுத்தபோது, மிருகங்களை சரியாக பராமரிப்பதைப் பற்றி போதித்தார். வழிதப்பிய விலங்கை அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கும்படியும் துன்பத்தில் இருக்கும் விலங்குகளுக்கு உதவும்படியும் சொன்னார். (யாத்திராகமம் 23:4, 5) மனிதர்களைப் போலவே, மிருகங்களும் ஓய்வுநாளினால் நன்மையடைய வேண்டும். (யாத்திராகமம் 23:12) பண்ணை விலங்குகளை தகுந்த விதத்தில் நடத்துவதன் சம்பந்தமாக சட்டங்கள் இருந்தன. (உபாகமம் 22:10; 25:4) விலங்குகளை சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்தக் கூடாது, ஆனால் அவற்றை பராமரித்து பாதுகாக்க வேண்டும்.
கடவுளுடைய நோக்கைக் குறித்து நீதிமொழிகள் 12:10 தெள்ளத் தெளிவாக சொல்கிறது: “நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.” பைபிள் விளக்கவுரை ஒன்று இந்த வசனத்தை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “நீதிமான் வாயில்லா ஜீவன்களிடமும் அன்பு காட்டுகிறான்; பொல்லாதவனோ சித்திரவதை செய்கிறான்; இருந்தபோதிலும் தன்னை அதிக மென்மையானவனாக நினைத்துக்கொள்கிறான்.”—வில்லியம் மேக்டோனால்டு என்பவரால் எழுதப்பட்ட பிலீவர்ஸ் பைபிள் காமெண்ட்ரி என்ற நூலிலிருந்து.
நீதிமான் மிருகஜீவன்களை அன்புடன் நடத்துகிறான், அவற்றின் தேவைகளையும் அறிந்துகொள்ள முயலுகிறான். மிருகங்களிடம் பொல்லாத மனிதன் காட்டும் அன்போ வெறும் வாயளவில்தான், அவன் காட்டும் ‘இரக்கத்தின்’ மறுபெயர் சித்திரவதை. அவனுடைய சுயநலத்தை செயல்களே காட்டிக்கொடுத்துவிடுகின்றன. பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் ஒரு மிருகத்தை மற்றொரு மிருகத்தோடு மோத விடுகிறவர்களுடைய விஷயத்தில் இது எவ்வளவு உண்மை!
மிருகங்களுக்கு விமோசனம்
‘பூமியைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் [மனிதன்] ஆண்டுகொள்வது’ கடவுளுடைய ஆதிநோக்கம் என்பது உண்மைதான். (ஆதியாகமம் 1:28) ஆனால் மிருகங்களை வதைப்பதை அர்த்தப்படுத்தாது. மிருகங்களை ஈவிரக்கமின்றி பாடாய் படுத்துவது என்றென்றும் தொடராது. அனாவசியமான எல்லா துன்பத்திற்கும் கடவுள் முடிவுகட்டுவார் என நாம் நம்பலாம். ஆனால் எப்படி?
பொல்லாத, குரூரமான மக்களை அழிக்கப்போவதாக அவர் வாக்குறுதி அளிக்கிறார். (நீதிமொழிகள் 2:22) மிருகங்களைக் குறித்ததில் ஓசியா 2:18 இவ்வாறு சொல்கிறது: “அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கை பண்ணி, . . . [அவற்றை] சுகமாய்ப் படுத்துக் கொண்டிருக்கப்பண்ணுவேன்.” நேர்மையான மனிதர்கள் மட்டுமல்ல, மிருகங்களும்கூட சமாதானமான நிலைமைகளால் நன்மையடையப் போகும் ஒரு காலத்தில் வாழ்வது மகிழ்ச்சி ததும்பும் ஒன்றல்லவா?
[பக்கம் 26-ன் படம்]
“ஒரு கிராமத்தில் ஜல்லிக்கட்டு,” பிரான்ஸிஸ்கோ கோயாவுடையது