மத சகிப்புத்தன்மை—கேள்விக்குறியாகிவிட்டதா?
“ஒவ்வொருவருக்கும் சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமை உண்டு; இந்த உரிமை அவர் தன்னுடைய மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றிக்கொள்வதற்கான சுதந்திரத்தை அர்த்தப்படுத்துகிறது. இந்த உரிமை அவர் தனியாக அல்லது மற்றவர்களுடன் ஒரு குழுவாக, பொதுவிலோ தனிப்பட்ட விதத்திலோ அவருடைய மதத்தை அல்லது நம்பிக்கையை வணக்கத்தில், போதிப்பதில், செயல்படுத்துவதில் அல்லது அனுசரிப்பதில் வெளிக்காட்டுவதற்குரிய சுதந்திரத்தையும் உட்படுத்துகிறது.” சட்டப்பிரிவுக் கூறு 18, மனித உரிமைகளுக்கான அனைத்துலக உறுதிமொழி, 1948.
உங்களுடைய நாட்டில் மத சுதந்திரத்தை நீங்கள் அனுபவிக்கிறீர்களா? இது, பல சந்தர்ப்பங்களில் அனைத்துலக உறுதிமொழியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த உயரிய கொள்கைக்கு உலகிலுள்ள அநேக நாடுகள் வெளிப்படையாக ஆதரவு தருகின்றன. என்றபோதிலும், பல நாடுகளில் மத பாகுபாடும், வெறித்தனமும் ஜீரணிக்கவேண்டிய கசப்பான உண்மைகளாய் இருக்கின்றன. இன்றும், பல கோடிக்கணக்கான மக்கள் மத சுதந்திரம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஆனால், அதற்கு நேர்மாறாக, அநேகர் ஜாதி, மத, இன பேதமின்றி ஒருமித்து வாழ்கின்றனர். இவர்கள் சட்டத்தால் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மத சகிப்புத்தன்மை என்பது அந்த இடத்தின் கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்ட ஒன்று.
இருப்பினும், இத்தகைய இடங்களிலும்கூட, சில மக்களுடைய மத சுதந்திரம் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடுமோ என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. “உலகின் எல்லா பாகங்களிலும், கிட்டத்தட்ட எல்லா பொருளாதார, சமூக, கொள்கை அமைப்புகளிலும், மத அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் பாகுபாடு நிலவுகிறது” என மனித உரிமைகளுக்கான ஐநா கமிஷனால் நியமிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு நிருபர் ஆன்ஞ்சலூ டால்மேடா ரிபேரோ குறிப்பிடுகிறார். 1997-ல் பிரசுரிக்கப்பட்ட, மத மற்றும் நம்பிக்கையின் சுதந்திரம்—ஓர் உலக அறிக்கை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், பதிப்பாசிரியர்கள் கெவன் பாய்ல் மற்றும் ஜூலியட் ஷீன் இவ்வாறு கூறுகின்றனர்: “சிறுபான்மை மதத்தொகுதியினர் துன்புறுத்தப்படுவதும், [மேலும்] மத நம்பிக்கைகளை சட்ட விரோதமானதென தடைசெய்வதும், மத பாகுபாடு ஊடுருவுவதும் . . . இந்த இருபதாம் நூற்றாண்டின் கடைசியிலும் தினசரி நிகழ்ச்சிகளாகி விட்டன.”
இருப்பினும், மத பாகுபாடு சிறுபான்மை மதத் தொகுதியினரை மாத்திரம் பாதிக்கவில்லை. “எந்த மதமுமே தாக்கப்படுவதில் இருந்து தப்ப முடியவில்லை” என மனித உரிமைகளுக்கான ஐநா கமிஷனின் மத சகிப்பின்மை பற்றிய சிறப்பு நிருபர் அப்துல்ஃபடாக் ஆமோர் கருத்து தெரிவிக்கிறார். எனவே, நீங்கள் வாழும் இடத்திலும், சில மதங்கள் தப்பெண்ணங்களாலும் வெறுப்புணர்ச்சியாலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.
பாகுபாட்டில் பலவிதம்
மத பாகுபாடு பலவிதங்களில் காட்டப்படுகிறது. சில நாடுகள், எல்லா மதங்களையும் ஒரேயடியாக நீக்கிவிட்டு, ஒரே ஒரு மதத்தை மட்டுமே அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றன. அது, அங்கு தேசிய மதமாக எண்ணப்படுகிறது. மற்ற நாடுகளில், குறிப்பட்ட சில மதங்களின் செயல்முறைகளை தடைசெய்து சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சில நாடுகள் அமல்செய்திருக்கும் சட்டங்கள் தெளிவற்றவையாய் இருக்கின்றன. அதனால், சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு, அவரவர் இஷ்டப்படி அவற்றிற்கு அர்த்தம் சொல்லும் வகையில் இருக்கின்றன. இஸ்ரேலில் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமே இதற்கு மிகச் சிறந்த உதாரணம். இச்சட்டத்தின்படி, “மத மாற்றத்தை தூண்டுவிக்கும் எந்தவொரு” பத்திரிகையையோ அல்லது புத்தகத்தையோ இறக்குமதி செய்வது, அச்சிடுவது, விநியோகிப்பது, அல்லது அவற்றை வைத்திருப்பதும்கூட தண்டனைக்குரியது. இது, இச்சட்டத்தை அத்துமீறி துஷ்பிரயோகம் செய்ய வழிவகுத்தது. இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் செய்தித்தாளில் வெளிவந்த அறிக்கை இதோ: “இஸ்ரேலில், யெகோவாவின் சாட்சிகள் சதா பல தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் வருகின்றனர்.” இது ஆச்சரியத்தைத் தருகிறதா என்ன? இல்லவே இல்லை. கடுந்தீவிர யூத மதவெறியர்கள், லாட் நகரத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு ராஜ்ய மன்றத்திற்குள் மூன்று தடவை அத்துமீறி புகுந்தனர். இரண்டு தடவை சூறையாடி நாசமாக்கினர். போலீசார் இதைப் பார்த்து சும்மா கையைக்கட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.
மத மற்றும் நம்பிக்கையின் சுதந்திரம் புத்தகம் மத சகிப்புத்தன்மை இல்லாமைக்கு நிறைய உதாரணங்களை மேற்கோள் காட்டுகிறது. “மதபேதங்களும் அவற்றை ஆதரிப்போரும் ஏதோ கடந்த காலத்தில் மட்டுமே இருந்ததாக நினைக்க வேண்டாம். . . . அப்போது நிலவிய பொதுவான கருத்துக்கு மாறான ஒரு பாதையை சிலர் தேர்ந்தெடுத்தனர்; இதுவே சகிப்பின்மைக்கு முக்கியமான காரணம். அவர்களை மற்றவர்கள் ஒதுக்கி வைத்தார்கள், துன்புறுத்தினார்கள், பாகுபாடாய் நடத்தினார்கள். கிரீஸ், சிங்கப்பூர், கிழக்கு ஐரோப்பாவின் பல நாடுகளில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளைப் போன்றே பாகிஸ்தானிலுள்ள ஆஹ்மாடீக்களும், எகிப்து, ஈரான், மலேசியா போன்ற நாடுகளில் இருக்கும் [பஹாய்] மதத்தினரும் மத ஒடுக்குமுறையை எதிர்ப்படுவோருக்கு ஒருசில எடுத்துக்காட்டுகள்.” உலகின் பல்வேறு பாகங்களில் மத சுதந்திரம் தாக்கப்படுவது மறுக்க முடியாத உண்மை.
இப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களை நேருக்கு நேர் சந்திக்கையில், வெகு சமீபத்தில் மாறிவரும் சமுதாயத்தை கவனிக்கும்போது, “நம் இருதயத்தில் சந்தோஷ உணர்ச்சி தோன்றுவதில்லை. . . . சுதந்திரத்தின் காற்று வெறுப்புணர்ச்சி எனும் தணலை மீண்டும் கிளறிவிட்டிருக்கிறது” என ஐக்கிய நாட்டுக் கல்வி, விஞ்ஞானம், கலாச்சார நிறுவனத்தின் தலைமை-இயக்குநர் ஃபெடரீகோ மாயோர் அறிவிக்கிறார். இதை ஒத்துக்கொள்ளும் வகையில், பிரிட்டனின், எஸெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் இவ்வாறு கூறுகிறார்: “எல்லா சான்றுகளும் நிரூபிப்பது என்னவெனில், மத சகிப்புத்தன்மை இல்லாமை . . . நவீன உலகில் கம்மியாகவில்லை, ஜாஸ்தியாகிக் கொண்டே செல்லுகிறது.” இவ்விதம் மத சகிப்பின்மை அதிகரிப்பது மத சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது. உங்களுடைய மத சுதந்திரமே பறிக்கப்படலாம் என்று சொன்னால் அது மிகையாகாது. மத சுதந்திரம் ஏன் அவ்வளவு முக்கியமானது?
ஆபத்திலிருப்பது எது?
“ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படைத் தேவை மத சுதந்திரமே. அதை உடைய சமுதாயமே சுதந்திரமானது என சொல்லலாம். . . . எங்கே ஒருவருடைய நம்பிக்கையை பரப்பும் உரிமையும் மத சுதந்திரமும் இல்லையோ, அங்கே மனசாட்சிக்கான உரிமையும் உண்மையான மக்களாட்சியும் நிச்சயமாகவே இருக்கமுடியாது” என சமூகவியலாளர் ப்ரையன் வில்சன், மாறிக்கொண்டிருக்கும் உலகில் மனித மதிப்பீடுகள் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமீபத்தில் பிரெஞ்ச் கோர்ட் “பொது மக்களின் சுதந்திரத்தை கட்டிக்காக்க தேவையான அடிப்படை காரியங்களுள் ஒன்று, நம்பிக்கைக்கான சுதந்திரமே” என அங்கீகரித்தது. எனவே, நீங்கள் மதப்பற்றுடையவரோ இல்லையோ, மத சுதந்திரத்தை காப்பதில் உங்களுக்கும் கட்டாயம் பங்குண்டு.
மத சுதந்திரத்திற்கு ஒரு நாடு காட்டும் மனப்பான்மை, அதனுடைய நற்பெயரையும் சர்வதேச அரங்கில் அதன் நன்மதிப்பையும் பெரிதும் பாதிக்கும். 1997-ஆம் ஆண்டு, 54 தேசங்களடங்கிய ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “மனித உரிமைகளின் தொகுப்பிலேயே மத சுதந்திரம்தான் மிக உயரிய கொள்கைகளுள் ஒன்று. மனிதனுடைய கண்ணியத்தின் மறுபெயரே இதுதான். இப்படிப்பட்ட உரிமைகளை மீறும் அல்லது திட்டமிட்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் எந்தவொரு அமைப்புமே, மனிதனுடைய அடிப்படை உரிமைகளை மதிக்கும் நீதியான மற்றும் ஜனநாயக அரசுகளின் சர்வதேச கூட்டமைப்பிலும் அதிகாரப்பூர்வ ஓர் அங்கத்தினராக உரிமை பாராட்டிக் கொள்ள முடியாது.”
ஒரு கட்டடத்திற்கு ஆதாரமே அஸ்திவாரம்தான். அதுபோலவே, சமுதாயத்தின் ஆதார அஸ்திவாரக் கற்களுள் ஒன்று மத சுதந்திரமே. குடிமுறை, அரசியல், கலாச்சாரம், பொருளாதாரம் போன்ற மற்ற சுதந்திரங்களும் இந்த அஸ்திவாரத்தின் மேலேயே கட்டப்படுகிறது. அஸ்திவாரத்திற்கு சரியான கவனம் செலுத்தாவிட்டால், முழு கட்டிடமே ஆட்டங்கண்டுவிடும். இந்த கருத்தை, பேராசிரியர் பிரான்சிஸ்கோ மார்ஜோட்டா-ப்ரோலியோ ரத்தினச் சுருக்கமாக கூறியுள்ளார்: “[மத] சுதந்திரம் எப்போது மீறப்படுகிறதோ, அப்போது ஒன்றன்பின் ஒன்றாக மற்ற சுதந்திரங்களும் பறிக்கப்படும்.” மற்ற சுதந்திரங்கள் காக்கப்பட, முதலாவது மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒன்றை எவ்வளவு சிறந்த முறையில் காப்பாற்றலாம் என்று யோசித்து செயல்படுவதற்குமுன், அதை முழுமையாக புரிந்து கொள்வது அவசியம். மத சுதந்திரத்தின் வேர்கள் எவை? அது எப்படி நிலைநிறுத்தப்பட்டது, அதற்காக கொடுக்கப்பட்ட விலை என்ன?
[பக்கம் 4-ன் படம்]
மத சகிப்பின்மை காலங்காலமாக இருந்துவருகிறது