எமது வாசகரிடமிருந்து
மழைக் காடுகள் மழைக் காடுகளைப் பற்றி நீங்கள் வெளியிட்ட தெளிவான, ஆறுதலளிக்கும் தகவலுக்கு தேங்க்யூ. (மே 8, 1998) மனிதனுடைய மதியீனத்தாலும் பேராசையாலும் நம்முடைய கிரகமும் விலங்கினங்களும் தாவரயினங்களும் அழிந்துவருவதைக் காண்பது வருத்தமூட்டுகிறது. நம்முடைய மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவா சீக்கிரத்தில் நடவடிக்கை எடுத்து, ஜொலிக்கும் ஆபரணத்தைப் போன்ற அருமையான இந்த கிரகத்தையும் அதிலுள்ள உயிர்களையும் காப்பார் என்பதை நினைப்பதே எனக்கு சந்தோஷ சாரல்.
எஃப். ஏ. பிரேஸில்
இன்று நம்முடைய மழைக் காடுகளை அழிப்பதைப் பற்றிய கவலைதரும் பல்வகை பிரச்சினைகளையும் விவாதங்களையும் குறித்து உங்கள் கட்டுரை கண்ணாடி போல் பிரதிபலித்தது என்பதை தெரிவிப்பதில் பெருமையடைகிறேன். குறிப்பாக கடைசி பத்தியில் நீங்கள் தந்த தகவலுக்கு—அதாவது, நம்முடைய காடுகளுக்கு நம்பிக்கை இருக்கிறது, அவற்றின் எதிர்கால வாழ்க்கை தளதளவென செழிப்பாக இருக்கும் என்ற உண்மைக்கு—நன்றி.
ஜே. டி., ஆஸ்திரேலியா
எனக்கு அறிமுகமில்லாத ஆனால் என்னிடம் நட்புடன் பழகிய யெகோவாவின் சாட்சி ஒருவர் கொடுத்த விழித்தெழு! ‘எக்ஸலென்ட்.’ அதை இப்பொழுதுதான் வாசித்தேன். 1939-ல் எடின்பர்க் யுனிவர்சிட்டியில் காடு வளர்ப்பு பாடத்தில் பட்டம் பெற்றேன்; எடின்பர்க் யுனிவர்சிட்டி ஈக்காலஜிக்கல் சொஸைட்டியில் உறுப்பினராக இருக்கிறேன். வெப்பமண்டல மழைக் காடுகளைப் பற்றி நாங்கள் நிறைய படித்தோம். “நம் மழைக்காடுகளுக்கு விமோசனம் பிறக்குமா?” என்ற மிகச் சிறந்த தொடர் கட்டுரைகளுக்காக உங்களுக்கும் உங்களுடைய உதவியாளர்களுக்கும் ‘கங்ராஜூலேஷன்ஸ்.’ ஒரு வார்த்தை விடாமல் அதை வாசித்தேன். உங்களுடைய புனிதமான இயக்கம் தழைத்தோங்குக! அது நிச்சயமாக தழைத்தோங்கும்.
எல். எம்., இங்கிலாந்து
வருஷம் 2000 மே 8, 1998, விழித்தெழு!-வில் வெளிவந்த “பைபிளின் கருத்து: வருஷம் 2000 எந்த அளவிற்கு தனிச்சிறப்பு வாய்ந்தது?” என்ற கட்டுரை மகிழ்வளிக்கும் நினைப்பூட்டல். இதைக் குறித்து ஆவலோடு எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்று வெளிப்படையாக எழுதியதை பாராட்டுகிறேன். உங்களுடைய நேர்மைத்தன்மை, யெகோவாவின் நாளைப் பற்றிய கணிப்பு சம்பந்தமான கடந்தகால கூற்றுகளுக்கு விளக்கமளித்தது.
எஸ். டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்
மரணத்தில் வெற்றி இரண்டாம் உலகப் போரின் சமயத்திலும் அதற்குப் பின்பும் நம்முடைய சகோதரர்கள் பட்ட அனுபவங்களை “மரணத்தில் வெற்றி” (மே 8, 1993, ஆங்கிலம்) போன்ற தொடர் கட்டுரைகள் வாயிலாக பிரசுரித்ததற்காக மனமார்ந்த நன்றி தெரிவித்து எழுதுவதில் அதிக மகிழ்ச்சி. வெற்றிவாகை சூடிய சாட்சிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி யெகோவாவை தொடர்ந்து சேவிப்பதற்கு அந்தத் தொடர் கட்டுரைகள் என்னைத் தூண்டின. யெகோவாவை சேவிப்பதிலிருந்து மரண பயமும்கூட அவர்களை நிறுத்தவில்லை.
ஏ. ஏ., அல்பேனியா
கம்போடியாவில் வாழ்வா சாவா “கம்போடியாவில் எனது ஜீவ மரண போராட்டத்தின் நீண்ட பயணம்” என்ற கட்டுரைக்கு நன்றி. (மே 8, 1998) யெகோவாவை உண்மையோடு சேவிப்பது அருமையானது. ஒரு படைவீரராக தப்பிப்பிழைப்பதற்காகவே மற்றவர்களைக் கொன்ற வதனா மியஸ் போல், சோகமான நினைவுகளின் மத்தியிலும் அநேகர் யெகோவாவை பின்பற்றுகிறார்கள் என்பதை அறிவதும் அருமையானது. மறைவான ஒரு குழியில் மூன்று மாதங்களை செலவழித்ததைப் பற்றி வாசித்தது அதிர்ச்சியூட்டியது. தன்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய சிலாக்கியத்தை—அதாவது, யெகோவாவை தெரிந்துகொள்ளும் சிலாக்கியத்தை—அனுபவிக்க இருந்ததை அவர் கொஞ்சம்கூட உணரவில்லை.
சி. எம். எஸ். எல்., பிரேஸில்
தோற்றத்தை வைத்து நியாயந்தீர்க்கிறீர்களா? நாஸ்ரதீன் ஹாஸ்ஸைப் பற்றிய கதாபாத்திரத்தில் நன்கு விவரித்துக் காண்பிக்கப்பட்டுள்ளபடி, தோற்றம் ஏமாற்றக்கூடியது. (மே 8, 1998) தோற்றத்தின் அடிப்படையில் சாதகமாகவோ பாதகமாகவோ பிறரை நியாயந்தீர்க்கக்கூடாது—நம்முடைய இருதயத்தைப் பார்த்து யெகோவா நியாயந்தீர்க்கிறார், தோற்றத்தைப் பார்த்து அல்ல—என்பதை நினைப்பூட்டியமைக்கு நன்றி.
ஏ. ஓ. எஃப். ஏ., பிரேஸில்
அன்பு நிரந்தரம் “‘அன்பு நிரந்தரமானது’—உங்கள் விஷயத்தில் எப்படி?” (மே 8, 1998) என்ற சுருக்கமான, மிகச் சிறந்த அந்தக் கட்டுரைக்கு என்னுடைய இருதயப்பூர்வமான நன்றி. உண்மையான அன்பின் பல்வேறு கோணங்களைப் பற்றி விளக்கிய அந்தக் கருத்துக்கள் என் இருதயத்தை தொட்டன, என்னை உற்சாகப்படுத்தின. ஏனென்றால் உண்மையில் எனக்கு உதவி தேவைப்படும் சரியான சமயத்தில் அவை என் கைக்கு கிடைத்தன. என்ன சூழ்நிலைமையானாலும் சரி, உண்மையான அன்பு ஒருபோதும் தோல்வியடையாது என்பதை இப்பொழுது உறுதியாக நம்புகிறேன்.
எஸ். ஜி., பிரான்ஸ்