நம் மழைக்காடுகள் பிழைக்குமா?
இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், வட அமெரிக்க பயணப்புறா (passenger pigeon) இனம் மறைந்துவிட்டது. இதுவரை வாழ்ந்ததிலேயே ஏராளமான எண்ணிக்கையில் இருந்த பறவை இனம் அது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அவை 500 கோடிக்கும் 1,000 கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் இருந்தன என பறவை இயலாளர்கள் கணக்கிடுகின்றனர்!
என்றாலும், நூறு ஆண்டுகளுக்குள், மறையவே மறையாது என தோன்றிய விலைமலிவான இந்தப் பறவையின் இறைச்சி கிடைக்கவில்லை; அது, “இதுவரையில் சம்பவித்திருக்கும் [ஓர் உயிரினத்தின்] அதிவேக சரிவு” என விவரிக்கப்படுகிறது. அ.ஐ.மா., விஸ்கான்ஸினைச் சேர்ந்த வையலூசிங் மாநில பூங்காவில், இந்தப் பயணப்புறாவின் நினைவு வாசகம் வாசிப்பதாவது: “மனிதனின் பேராசையாலும் யோசனையின்மையாலும் இவ்வினம் மறைந்துவிட்டது.”
இந்தப் பயணப்புறாவுக்கு நேர்ந்த கதி நமக்கு எதை நினைப்பூட்டுகிறது என்றால், பூமியில் வாழும் உயிரினங்களிலேயே மிகவும் ஏராளமாய் இருப்பவையும்கூட மனிதனின் கைக்குத் தப்பவில்லை என்பதையே. இன்னும் எங்குப் பார்த்தாலும் பேராசையும் யோசனையின்மையும் இருக்கின்றன. இன்றோ, ஒரேவொரு இனம் மட்டுமல்ல, முழு சூழலியலுமே ஆபத்தில் இருக்கிறது. மழைக்காடுகள் மறைந்துவிட்டால், அவற்றின் உயிரினங்கள்—சுமார் கோளத்தின் பாதி உயிரினங்கள்—அனைத்துமே அவற்றோடு சேர்ந்து மாண்டுவிடும். இப்படிப்பட்ட பேரழிவு, “மனிதனால் நேர்ந்த [இழைக்கப்பட்ட] மிகப் பெரிய உயிரியல் பேரழிவாக இருக்கும்” என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உண்மைதான், சுற்றுச்சூழலைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பு நமக்கிருந்த அறிவைவிட இப்பொழுது அதிகமாய் இருக்கிறது. ஆனால் இந்த நுண்ணறிவு, வெல்லமுடியாத நாச அலையை ஓயச்செய்யுமளவுக்குப் போதுமானதாய் இல்லை. “விலைமதிக்க முடியாத ஏதோவொன்றை நாம் அழித்துவருகிறோம்” என தாவரவியலாளர் மனுவேல் ஃபிடால்கோ புலம்புகிறார். அவர் மேலும் சொல்கிறார்: “காலங்கடத்த நமக்கு இன்னும் அதிக காலம் இல்லை. சில ஆண்டுகளுக்குள், மரம் வெட்டுபவர்களுக்கு எட்டாததாய் உள்ள, மலைச்சரிவுகளில் அமைந்துள்ள காடுகளே தொடப்படாத காடுகளாய் மீந்திருக்குமோ என தோன்றுகிறது.”
மழைக்காடுகளை புதுப்பிப்பதில் அத்தனை சிரமம் இருப்பதால் இயற்கை இயலாளர்கள் பயப்படுகின்றனர். இந்தப் புதுப்பிப்பை, “மெதுவானது, செலவுபிடித்தது, . . . மழைக்காட்டின் அழிவைத் தடுக்க செய்ய முடிந்த ஒரு கடைசி முயற்சி” என தி எமரால்ட் ரெல்ம்: இயர்த்ஸ் ப்ரெஷ்யஸ் ரெய்ன் ஃபாரஸ்ட்ஸ் வெளிப்படையாய் விவரிக்கிறது. மறுபடியும் தாவரங்களை நடுவதன் மூலம் அதிகபட்சமாய் ஒருவேளை வெப்பமண்டல மரங்களில் சில வகைகளை மட்டுமே மீண்டும் பெறமுடியும்; அத்துடன், அந்த மரக் கன்றுகளை களைகள் நெரித்துப்போடாதவாறு தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.
ஒரு காடு முந்தைய செழிப்பைப் பெறமுடியுமா, முடியாதா என்பது, கைபடாத மழைக்காட்டுக்கு எவ்வளவு அருகில் புதிய தாவரங்கள் மறுபடியும் நடப்படுகின்றன என்பதைப் பொறுத்தே உள்ளது. அருகில் இருந்தால்தான் புதுப்பிக்கப்பட்ட காட்டுப் பகுதி காலப்போக்கில் ஆயிரமாயிர இனங்களால் நிறைந்து, ஓர் உண்மையான மழைக்காட்டை உருவாக்க முடியும். அப்படியே உண்டாக்கினாலும், இதற்கு பல நூற்றாண்டுகள் எடுக்கும். சில பகுதிகள், மாயன்களின் நாகரிகம் வீழ்ச்சியுற்ற சமயத்தில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டவை; இன்னும் அவை முழுவதும் திரும்பப் பெறப்படவில்லை.
“புதிய சர்வதேசியம்”?
பின்வரும் தலைமுறைகளுக்கு எத்தனை இனங்களைப் பாதுகாக்க முடியுமோ, அத்தனை இனங்களையும் பாதுகாப்பதற்காக, தற்போதுள்ள மழைக்காடுகளில் 10 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என வாஷிங்டன் டி.சி.-யிலுள்ள ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்யூஷனைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி முன்மொழிந்தார். தற்போது சுமார் 8 சதவீத காடுகளே பாதுகாக்கப்படுகின்றன; ஆனால் இந்தக் காப்பிடங்களிலோ, தேசிய பூங்காக்களிலோ பல, வெறுமனே பெயரளவில் தான் பூங்கா; ஏனெனில் அவற்றைப் பாதுகாக்க எவ்வித நிதியோ, பணியாட்களோ இல்லை. இன்னும் ஏதாவது அதிக முயற்சி எடுக்கப்படவேண்டும் என்பது தெளிவாயிருக்கிறது.
மழைக்காடு பாதுகாப்புத் துறை பிரதிநிதியான பேட்டர் ரேவன் பின்வருமாறு விளக்குகிறார்: “மழைக்காடுகளைக் காப்பாற்றுவதற்காக எடுக்கும் முயற்சிகளுக்கு, ஒரு புதிய சர்வதேசியம் தேவை; அதாவது, இந்தக் கதி இந்தப் பூமிக்கு ஏற்படுவதில் எல்லாரும் சேர்ந்து, அவரவரின் பங்கை ஏற்கின்றனர் என்பதைப் பற்றிய உணர்வு தேவை. உலகமுழுவதிலுமுள்ள வறுமையையும் பசியையும் போக்குவதற்கு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். நாடுகளுக்கு இடையே புதுப்புது ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும்.”
அவர் செய்யும் சிபாரிசு பலருக்கு நியாயமாய்ப் படுகிறது. மழைக்காடுகளைக் காப்பதற்கு, மனிதருக்குள்ள மற்ற சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டியதைப் போலவே ஓர் உலகளாவிய தீர்வு தேவை. உலகளாவிய பேரழிவு ஏற்படுவதற்கு முன்னும், சரிசெய்யப்படாதளவு சேதம் ஏற்படுவதற்கு முன்னும் “நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள்” செய்யப்படுவதில்தான் பிரச்சினை இருக்கிறது. பேட்டர் ரேவன் அர்த்தப்படுத்துவதைப் போலவே, மழைக்காடுகளின் அழிவு, பசி மற்றும் வறுமை போன்ற, வளரும் நாடுகளின் மற்ற சிரமந்தரும் பிரச்சினைகளுடன் நெருங்கிய தொடர்புடையதாய் இருக்கிறது.
இதுவரை, இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென எடுக்கப்பட்டுள்ள சர்வதேச முயற்சிகள் அரிதாகவே வெற்றியடைந்துள்ளன. தேசிய அக்கறைகளில் தேசங்களுக்கிருக்கும் குறுகிய மற்றும் எதிர்மறையான மனப்பான்மைகளை பொது நன்மைக்காக அவை ஒருநாள் மேற்கொள்ள முடியுமா, அல்லது “ஒரு புதிய சர்வதேசியம்” வெறும் ஒரு பகற்கனவுதானா? என்று சிலர் கேட்கின்றனர்.
சரித்திரம், நம்பிக்கைவாதத்துக்கான அடிப்படையை அளிப்பதுபோல் தெரியவில்லை. இருந்தபோதிலும், ஓர் அம்சம், அதாவது, மழைக்காட்டைப் படைத்தவரின் நோக்குநிலை, அடிக்கடி புறக்கணிக்கப்படுகிறது. “படைப்பின் ஒரு பகுதியை நாம் அழித்து வருவதன் மூலம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டதை, எதிர்கால சந்ததிகள் அனைத்தும் அனுபவிக்க முடியாமல் ஆக்குகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்” என ஹார்வார்ட் பல்கலைக்கழக பேராசிரியர், எட்வர்ட் ஓ. வில்ஸன் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
பூமியைப் படைத்தவர், தம் கையால் உண்டாக்கியதை மனிதகுலம் கபளீகரம் செய்ய அனுமதிப்பாரா? அதைக் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. a மாறாக, கடவுள், ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்’ என பைபிள் முன்னுரைக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) கடவுள் தமது தீர்வை எப்படி நடைமுறைப்படுத்துவார்? அவர், ஒரு ராஜ்ய ஸ்தாபிதத்தைப் பற்றி வாக்குக் கொடுத்திருக்கிறார்; அந்த ராஜ்யம் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பரலோக அரசாங்கம்; அது, பூமியின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும்; அந்த ராஜ்யம், ‘என்றென்றைக்கும் அழியாது.’—தானியேல் 2:44, NW.
இந்தக் கோளத்தைத் தவறாக பயன்படுத்திவரும் மனிதனின் செயல்களுக்கு கடவுளுடைய ராஜ்யம் ஒரு முடிவைக் கொண்டுவருவதோடு, பூமியின் இயற்கை எழிலை மறுபடியும் ஸ்தாபிக்கும் வேலையையும் கண்காணிக்கும். படைப்பாளரின் ஆதிநோக்கத்துக்கு இசைய, முழு பூமியும் காலப்போக்கில் ஓர் உலகளாவிய பூங்காவனமாகும். (ஆதியாகமம் 1:28; 2:15; லூக்கா 23:42, 43) மக்கள் அனைவரும் “யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்,” அவர்கள், மழைக்காடு உட்பட, அவருடைய படைப்பு எல்லாவற்றையும் நேசிக்கவும் மதித்துணரவும் கற்றுக்கொள்வார்கள்.—ஏசாயா 54:13, NW.
ஆசீர்வதிக்கப்பட்ட அந்தக் காலத்தை விவரிப்பவராய், சங்கீதக்காரன் எழுதினதாவது: “நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும். அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.”—சங்கீதம் 96:12, 13.
சந்தோஷகரமாக, மனிதனின் கவலை, அல்லது பேராசை ஆகியவற்றால் மழைக்காட்டின் எதிர்காலம் பாதிக்கப்படப் போவதில்லை. நமது வெப்பமண்டலக் காடுகளைக் காப்பாற்ற படைப்பாளரே அதில் தலையிடுவார் என நாம் நம்பிக்கையுடன் இருப்பதற்கான காரணத்தை பைபிள் அளிக்கிறது. கடவுள் வாக்குக் கொடுத்துள்ள புதிய உலகில், வருங்கால சந்ததியினர் மழைக்காட்டின் மகிமையைக் கண்டுமகிழ்வர்.—வெளிப்படுத்துதல் 21:1-4.
[அடிக்குறிப்புகள்]
a எவ்வளவு மறைந்துவரும் விலங்கினங்களைக் காப்பாற்ற முடியுமோ அவ்வளவையும் காப்பாற்ற முயற்சி எடுக்கும் வன பாதுகாவலர்கள், தங்களது கடமையை, “நோவாவின் கொள்கை” என விளக்குகின்றனர்; ஏனெனில், ‘சகலவித மாம்சமான ஜீவன்களையும்’ பேழைக்குள் சேர்த்துக்கொள்ளும்படி நோவாவுக்கு கூறப்பட்டது. (ஆதியாகமம் 6:19) “[இனங்கள்] இயற்கையில் நெடுநாள் வாழ்வது, தொடர்ந்து வாழும், பறிக்கமுடியாத உரிமையைப் பெற்றுள்ளதால்” என வாதிடுகிறார், உயிரியலாளர் டேவிட் ஏரன்ஃபெல்ட்.