‘நீங்க செய்ற வேலையினால சமுதாயத்துக்கு என்ன நன்மை?’
நியூ யார்க், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஒருவரிடம் சந்ரகாந்த் பட்டேல் என்ற இந்திய ஜர்னலிஸ்ட் கேட்ட கேள்விதான் இது. திரு. பட்டேல் அவர்கள் தலைமை அலுவலகத்தைச் சுற்றிப்பார்க்க வந்திருந்தார். அவர் கண்டவையும் கேட்டவையும் அவருடைய மனதை மிகவும் கவர்ந்ததால், இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு குஜராத்தி செய்தித்தாளுக்காக ஒரு கட்டுரை எழுதினார்.
அவருடைய கட்டுரையில் இந்தியாவிலுள்ள சர்ச் நிறுவனங்களின் நம்பிக்கைகளிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுடைய சில நம்பிக்கைகளை வேறுபடுத்திக் காட்டினார். சர்ச்சுகளில் பொதுவாக கற்பிக்கப்படும் திரித்துவ கோட்பாட்டிற்கு மாறாக, யெகோவாவின் சாட்சிகள் சர்வவல்லமையுள்ள யெகோவாவை நம்புகிறார்கள் எனவும் வழிபாட்டில் சிலைகளை பயன்படுத்துவதில்லை எனவும் திரு. பட்டேல் எழுதினார். யெகோவாவின் சாட்சிகளிடம் உயர்ந்த ஒழுக்கத்தராதரங்கள் இருப்பதை அவர் கவனித்தார்; ஏனெனில், விபச்சாரம், கருக்கலைப்பு, சகமனிதனை பகைப்பது அல்லது கொலைசெய்வது ஆகியவை சம்பந்தமாக பைபிளிலுள்ள உயர்ந்த தராதரங்களை அவர்கள் உறுதியாக பின்பற்றுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளை சமாதானமுள்ளவர்கள், அன்புள்ளவர்கள், நீடிய பொறுமையுள்ளவர்கள், சேவை மனப்பான்மையுள்ளவர்கள், மேலும் மற்றவர்களுக்கு பைபிள் செய்தியைப் பரப்புவதில் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள், வைராக்கியமானவர்கள் என யெகோவாவின் சாட்சிகளை வர்ணித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த அந்த ஜர்னலிஸ்ட், ‘நீங்க செய்ற வேலையினால சமுதாயத்துக்கு என்ன நன்மை?’ என்ற கேள்விக்கு என்ன பதிலை பெற்றார். அவர் எழுதினார்: ‘பைபிள் கல்வி வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நன்மையளிக்கிறது என்பதே அந்தப் பதில்.’ திரு. பட்டேல் முக்கியமாக ஆரோக்கியம், வேலை வாய்ப்பு போன்ற விஷயங்களில் பைபிள் கல்வி எவ்வாறு நன்மையளிக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில் சிலவற்றை குறிப்பிட்டு அவர் இவ்வாறு அறிக்கை செய்தார்: ‘புகையிலை, போதைப் பொருட்கள் போன்ற தீங்குண்டாக்கும் வஸ்துக்களை ஒதுக்கி, சுத்தமான வாழ்க்கையை நடத்தும்படி சொல்லப்பட்ட வேதப்பூர்வமான அறிவுரையை ஒரு நபர் கடைப்பிடித்தால், பல்வேறு வியாதிகளை அவர் தவிர்க்க முடியும். மேலும், கடினமாய் வேலைசெய்யும், சுத்தமான வாழ்க்கை நடத்தும், நேர்மையான ஆட்களுக்கு வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அதோடு, தயவான, அன்பான முறையில் பிரச்சினைகளை சரிசெய்துகொள்வது மற்றவர்களுடன் சமாதானமான உறவை உண்டுபண்ணுகிறது. ஆகவே, பைபிள் சொல்வதை மக்களுக்கு போதிப்பதால் சமுதாயத்திற்கு நன்மையளிக்கிறது.’
யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் பைபிள் போதனைகளை செயலில் காண்பிப்போரை இந்த ஜர்னலிஸ்ட் கண்டார். ஆவிக்குரிய வேலையின் மையமாக இருக்கும் இந்த இடத்தில் வேலைசெய்யும் அர்ப்பணிக்கப்பட்ட உற்சாகமான தொண்டர்களையும் அவர்களுடைய சுத்தத்தையும், அவர்கள் சந்தோஷமாக வேலை செய்யும் பாங்கையும் இவருடைய கட்டுரை பாராட்டியது. பைபிள் போதனைகளிலிருந்து எவ்வாறு நீங்களும் பயனடையலாம் என்பதை உங்களுக்கு காண்பிக்க யெகோவாவின் சாட்சிகள் ஆவலோடு இருக்கிறார்கள்.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
பின்னணியில் செய்தித்தாள்: Courtesy Naya Padkar, Gujarati Daily published from Anand, India