இந்தியாவின் கத்தோலிக்க சர்ச் அது எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
இந்தியாவில் விழித்தெழு! நிருபர்
அது மக்கள் தொகையின் மிகக் குறைந்த சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்ததாகக் கருதப்படும் மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கும் பெரும்பான்மையினரால் அது அந்நியரின் தலையீடாகக் கருதப்பட்டு சந்தேகப் பார்வை கொண்டு நோக்கப்படுகிறது. ஆனால் சந்தேகமின்றி இந்திய கத்தோலிக்கச் சர்ச் இந்தத் துணைகண்டத்தில் ஒரு பிடிகொண்டிருக்கிறது மற்றும் இங்கு ஆழமாக வேர் கொண்டிருக்க விரும்புகிறது. இந்த இலக்கை அடைவதற்கு சர்ச் என்ன செய்கிறது? அது வெற்றி பெறுமா? சுருக்கமாக, சர்ச் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
கத்தோலிக்க சர்ச் இந்தியாவின் மதங்களில் மிக முக்கியமான மதமாக இருக்காது—அதன் 1.4 கோடி அங்கத்தினர்கள் தேசத்துக் குடிகளில் 2 சதவிகிதத்துக்கும் குறைவே. என்றபோதிலும் உலக கத்தோலிக்க மதத்தில் இந்திய கத்தோலிக் சர்ச் வகிக்கும் முக்கிய பாகம் பிப்ரவரி 1986-ல் போப் ஜான் பால்II இந்தியாவுக்கு பத்து நாள் விஜயம் செய்தபோது மேலெழும்பி நின்றது. அவர் 14 மாநிலங்களை விஜயம் செய்தார், இந்தியாவில் பேரளவான கத்தோலிக்க மக்கள் இருக்கும் கேரளாவும் அந்த விஜயத்தில் உட்பட்டிருந்தது.
சர்ச்சின் பார்வையில் கேரளா ஓர் ஆபரணமாக ஜொலிக்கிறது. இந்தியாவில் கத்தோலிக்க அதிகாரத்தின் இருக்கை அது. மாநிலத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட பெரிய நிறுவனங்களில் சர்ச்சும் ஒன்று. நாட்டில் கிறிஸ்தவ மதத்தின் இருப்பிடமாகவும் கேரளா கருதப்படுகிறது. பொதுவான பாரம்பரிய வழக்கின்படி தோமா—இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரில் ஒருவர்—மேசியாவின் மரணத்துக்குப் பின்பு கேரளாவின் மலபார் கடற்கரைக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது.
என்றபோதிலும் ஏறக்குறைய 14 நூற்றாண்டுகளுக்குப் பின்புதான் ரோமன் கத்தோலிக்க சர்ச் இந்தியாவுக்கு வந்தது. போர்ச்சுகீஸ் ஆய்வுப்பயணிகளும் அவர்களைப் பின்தொடர்ந்த மிஷினரிகளும் ரோமன் சர்ச்சை கோவாவுக்கு கொண்டுவந்தனர், இது இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதியிலிருக்கும் ஒரு பழைய போர்ச்சுகீஸ் காலனி. அம்மத விசுவாசிகள் அங்கிருந்து கேரளாவுக்குத் தெற்கே பயணமாக வந்தனர்.
கத்தோலிக்க சர்ச் இந்தப் பிராந்திய மக்களின் பார்வையில் வெகுகாலமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. நாடுமுழுவதும் கல்வி, சமூக மற்றும் மருத்துவ சேவைகளில் அதன் பங்கைப் பலர் போற்றினாலும், சர்ச் என்ன உண்மையான நோக்கத்திற்காக இருக்கிறது என்பதை அவர்கள் பார்ப்பதால் அதை ஏளனமாக நோக்குகின்றனர்—மதம் மாற்றும் ஒன்றாக அதை நோக்குகின்றனர்.
‘மதம் மாற்றுவதுதான்’ நோக்கமா?
கத்தோலிக்க மதத் தலைவரின் வருகைதாமே மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மொத்தமாக மதம் மாறும் நிலை ஏற்படும் என்று தீவிரமான இந்து முன்னணிகள் எச்சரித்தன. தனக்கும், தான் இந்தியரை மதம் மாற்றிட தனக்கிருந்த ஆர்வத்துக்குமிடையே தூரமாக இருந்துகொள்ள சர்ச் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தது. இந்தியாவின் கத்தோலிக்க பிஷப்புகள் மாநாட்டுத் தலைவர், “ஒருவரும் பயப்படவேண்டிய அவசியமில்லை,” என்றார். “புனித தந்தை மக்களை மதம் மாற்ற வரவில்லை.” இந்தியாவின் தலைமைக் குரு ஒருவர் இன்னும் அதிக அழுத்தந்திருத்தமாக பின்வருமாறு கூறினார்: “கத்தோலிக்க சர்ச் மதமாற்றுவதைக் கடுமையாக எதிர்க்கிறது. அது மத சுயாதீனத்தில் குறுக்கிடுவதாகும். நாங்கள் அதைக் கண்டனம் செய்கிறோம்.”
போப்பைப் பற்றியதென்ன? “இந்தியாவின் பாரம்பரியத்தில் காணப்படும் உண்மைகளைக் கத்தோலிக்க மதம் அங்கீகரிக்கிறது, இந்த அங்கீகரிப்பு உண்மையான பேச்சு வார்த்தையைக் கூடிய காரியமாக்குகிறது,” என்று இந்து மதம், ஜொராஸ்ட்ரிய மதம், புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம், யூத மதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவதாக உரிமைப்பாராட்டும் சில மதங்களைச் சேர்ந்த ஒரு சபையாரிடம் பேசினார். இன்னொரு சந்தர்ப்பத்தில் மற்ற விசுவாசங்களுடன் ஒரே சிந்தை குறித்து சிபாரிசு செய்தார்: “எங்களுடைய இந்து மற்றும் முஸ்லீம் சகோதர சகோதரிகளுடன் மற்ற மத பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறவர்களுடனும் எமது கூட்டொருமைப்பாட்டை உறுதி செய்கிறோம்.”
இக்கூட்டொருமைப்பாடு வார்த்தைகளில் மட்டுமல்ல, போப் கல்கத்தாவுக்கு வந்திருந்தபோது காலிகாட்டின் காளி ஆலயத்தின் பூசாரியால் மாலையணிவிக்கப்பட்டார்.a மற்றொரு சமயம் அவர் இந்து பூசாரியிடமிருந்து நெற்றிக்கு விபூதி அல்லது புனித சாம்பலைப் பெற்றுக்கொண்டார். இஸ்லாமிய மத அடையாளங்களைக் கொண்ட ஒரு முஸ்லீம் பொன்னாடையைப் போட்டுக் கொண்டார்.
இவ்வளவு இருந்தும், போப் இந்திய பிஷப்புகளிடம் பேசியபோது, இந்தியாவில் சர்ச்சின் நலத்தை பாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமான ஒன்று “சுவிசேஷத்தை அறிவிப்பது” என்று குறிப்பிட்டார். ஆனால் போப் எப்படிப்பட்ட சுவிசேஷ அறிவிப்பைத் தன் மனதில் கொண்டிருந்தார்? ஆச்சரியப்படுவதற்கில்லை, சுவிசேஷம் பரவுதல் சமூக நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகள் மூலம் வரவேண்டும் என்று அழுத்திக் காண்பித்தார்.
“சர்ச்சின் சுவிசேஷ வேலை நீதி, சமாதானம் மற்றும் மானிட வளர்ச்சிக்கான உற்சாகமானதும் நிலையானதுமான நடவடிக்கையை உட்படுத்துகின்றன. இந்த வேலைகளை செய்யாமலிருப்பது சுவிசேஷ வேலையையே வஞ்சிப்பதாயிருக்கும்.”
“தங்களுடைய சகோதர சகோதரிகளின் மதிப்பையும் சுயாதீனத்தையும் முன்னேற்றுவித்த அனைவரும் கிறிஸ்துவின் பார்வையில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்,” என்றார் போப். இப்படியாக இந்திய செய்தி ஒன்று பொருத்தமாகக் கூறியது: “நற்செய்தியைப் பிரசங்கித்தல் குறித்து, கிறிஸ்தவ மதத்தை ஒரு மதமாக பரப்புதல் என்ற சொல்லர்த்தமான பொருளில் இன்று யாருமே—சர்ச் உயர்மட்ட குருவர்க்கத்தைச் சார்ந்த ஒருவர்கூட—பேசுவதில்லை.”
ஓர் இந்து—கத்தோலிக்க சர்ச்சா?
கத்தோலிக்க மதத்தை அயல்நாட்டினதாக இருப்பதைக் குறைக்கவும், அதிகமாக இந்திய முறைமை கொண்டதாக இருக்கும்படி செய்யும் முயற்சியில், சர்ச் தன் வழிபாட்டில் இடத்திற்கேற்ப பொருத்திக்கொள்ளும் ஒரு திட்டத்தை ஊக்குவித்திருக்கிறது. எனவே கத்தோலிக்கப் பாதிரிமார்கள் ஓர் இந்து ஆஸ்ரமத்திலிருப்பது போல் தரையில் உட்கார்ந்த வண்ணம் ஜெபங்களை வாசிப்பார்கள், மேற்கத்திய பாமாலைகளுக்குப் பதிலாக வேத மந்திரங்கள் ஓதப்படலாம், இந்துக்கள் பயன்படுத்தும் நிலவிளக்கு பல விழாக்களுக்கு முன்பு ஏற்றிவைக்கப்படலாம்.
ஒரு கத்தோலிக்கப் பாமரன் கூறுகிற விதமாக, “இந்து மதத்திலும் மற்ற மதங்களிலும் காணப்படும் சர்வதேச தன்மைகளை அடையாளங் காட்டி அந்த வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களையும் சடங்குகளையும் நம்முடைய வணக்கத்தில் இணைத்து அதை ஆதரிப்பதே அதன் நோக்கம்.” கேரளாவில் அநேக சர்ச்சுகளின் மத வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் நிச்சயமாகவே கத்தோலிக்க பாரம்பரியமும் இந்துமத சடங்குகளும் கலந்தவை.
சர்ச் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
இந்தியாவில் இருக்கும்போது போப், மோகன்தாஸ் காந்தியின் போதனைகளைக் குறிப்பிடுகையில், “உலக பிரச்னைகளுக்கான தீர்வு மானிட இருதயத்துக்குள் இருக்கும் ஒன்று என்று எல்லா மக்கட் தலைவர்களும் நம்பி செயல்பட வேண்டும்” என்றார். இளைஞர்கள் “மகா பரிசுத்தவான்களின் போதனைகளைப் பின்பற்றிட வேண்டும். அதில் ‘தீரா ஞானமும் சத்தியமும்’ உண்டு. அது அவர்களை வாழ்க்கையில் முன்னேற ஏவிவிடும்’ என்று அவர் இளைஞர்களை ஊக்குவித்தார்.”
இவையனைத்தும் இயேசு கற்பித்தவற்றிலிருந்து எவ்வளவு வித்தியாசமாயிருக்கிறது! அவருடைய போதனையின் மையப்பொருள் கடவுளுடைய ராஜ்யம் வருவதாகும், அது வறுமை, சமூக அநீதிகள் மற்றும் நோய் ஆகியவற்றை முற்றிலுமாக நீக்கிப்போடும் ஓர் உலக அரசாங்கம். (மத்தேயு 9:35) மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு இந்த ராஜ்யம் ஒன்றுதான் பரிகாரம் என்று முழு பைபிளும் எடுத்துக் காட்டுகிறது. இயேசு தாமே கடவுளுடைய வாக்குத்தத்தங்களில் முழு நம்பிக்கை உடையவராயிருந்தார். தம்முடைய ஜெபத்தில், “உம்முடைய வசனமே சத்தியம்,” என்றார். (யோவான் 17:17) மற்றும் அவர் தம்முடைய சீஷர்களிடம், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,” என்று சொன்னார்.—மத்தேயு 6:33.
மற்ற மதத் தொகுதிகளுடன் கலப்பது பற்றியதென்ன? உண்மை விசுவாசிகளை பைபிள் பின்வருமாறு எச்சரிக்கிறது: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது?”—2 கொரிந்தியர் 6:14; உபாகமம் 12:30, 31.
எனவே இந்தியாவிலுள்ள கத்தோலிக்க சர்ச் நம்பிக்கையான திசை நோக்கி செல்வதாக உரிமை பாராட்டுகிறது. இங்கு பலமான ஓர் இடத்தைக் கொண்டிருப்பதாக உரிமை பாராட்டுகிறது—உண்மையில் அது பைபிள் சத்தியத்திலிருந்து தூரமாய் விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. என்றபோதிலும் இயேசுவின் போதனைகளுக்கும் கத்தோலிக்க சர்ச்சின் போதனைகளுக்குமிடையே வித்தியாசத்தைக் காண மேலும் அதிகமதிகமான ஆட்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. எப்படி?
தற்போது இந்தியாவில், 7,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் பைபிள் சத்தியத்தை ஒரே மனதாய் உயர்த்தி வருகின்றனர். தம்முடைய ஆட்சியின் கீழ் முடிவில்லா சமாதானத்தை வாக்களித்திருக்கும் அவருடைய வாக்குத்தத்தத்தை மதித்துணருகிறவர்களுக்கு உதவிசெய்ய ஆவலாயிருக்கின்றனர். கத்தோலிக்க சர்ச்சைப் போன்றோ அல்லது மற்ற மதங்களைப் போன்றோ இவர்கள் தேசங்களுக்கிடையே நடைபெறும் போர்களில் அல்லது அரசியல் முரண்பாடுகளில் பங்குபெறுவதில்லை. (ஏசாயா 2:2-4) சாட்சிகள் ஏன் வித்தியாசமாக இருக்கிறார்கள், அவர்கள் பைபிளுக்கு இசைவாக தங்களை எப்படி அமைத்துக் கொள்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதி கேளுங்கள். (g87 9⁄22)
[அடிக்குறிப்புகள்]
a காளி இந்து மதத்தின் அழிக்கும் தேவதை.
[பக்கம் 14-ன் படங்கள்]
இந்து மத யோகா நிலையில் அமர்ந்திருக்கும் இயேசு கிறிஸ்துவின் உருவச் சிலை. அதற்குக் கீழே ‘ஓம்’ மந்திரம். அதற்கும் கீழே தாவீதின் நட்சத்திரம்
சேலை அணிந்தும் நெற்றியில் பொட்டு இட்டும் காணப்படும் மரியாளின் உருவச்சிலை