உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 12/22 பக். 18-20
  • ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பழங்குடியினர் மத்தியில் யுத்தம்
  • நீடித்திருப்பது ஆபத்தில்
  • சர்ச்சும் ‘கலப்புப் பண்பாடும்’
  • நீங்கள் என்ன செய்யவேண்டும்?
  • கத்தோலிக்க பேராயர்களும் “உறங்கும் அரக்கனும்”
    விழித்தெழு!—1989
  • மதம் ஆதரவு கொடுக்கிறது
    விழித்தெழு!—1994
  • பைபிளா அல்லது பாரம்பரியமா?—உண்மை மனமுள்ள கத்தோலிக்கருக்கு ஒரு மனக்குழப்பம்
    விழித்தெழு!—1987
  • இந்தியாவின் கத்தோலிக்க சர்ச் அது எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
    விழித்தெழு!—1988
விழித்தெழு!—1994
g94 12/22 பக். 18-20

ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச்

இத்தாலியிலுள்ள விழித்தெழு! நிருபர்

ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச் கோடிக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்டிருக்கிறது, மேலும் அதனுடைய பிரச்சினைகள் அங்கு குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு மாத காலம் நீடித்த விசேஷித்த குருமார் கூட்டம் ஒன்றில் இந்தப் பிரச்சினைகளில் சிலவற்றைக் குறித்து கலந்து பேசுவதற்காக ரோமிலுள்ள வாடிகனில் 300-க்கும் மேற்பட்ட சர்ச் தலைவர்கள் கூடிவந்தனர்.

நிகழ்ச்சிநிரலை ஆரம்பித்து வைக்கையில், லாசர்வேட்டோரா ரோமானோ-வில் அறிக்கை செய்யப்பட்டிருந்தபடி, போப் பின்வருமாறு சொன்னார்: “இன்று முதல் முறையாக முழு கண்டத்தையும் உட்படுத்தும் ஆப்பிரிக்க சர்ச்சின் குருமார் கூட்டம் நடைபெறுகிறது. . . . ஆப்பிரிக்கா முழுவதிலுமிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகள் இன்று செயின்ட் பாஸலிக்காவில் இருக்கிறார்கள். ரோமின் ஆயர் மிகுதியான பாசத்தோடு ஆப்பிரிக்காவை வாழ்த்துகிறார்.”

பழங்குடியினர் மத்தியில் யுத்தம்

அநேகர் அறிந்துள்ளபடி, பெரும்பான்மையர் கத்தோலிக்கராக இருக்கும் ஆப்பிரிக்கத் தேசங்களாகிய புருண்டி மற்றும் ருவாண்டாவில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் பிரச்சினைகள் விசேஷமாக அதிகமாய் உள்ளன. இவ்வாண்டு வசந்த காலத்தில் லட்சக்கணக்கானோர் தங்கள் அயலகத்தாரால் படுகொலை செய்யப்பட்டபோது அது சர்வதேச செய்தியாயிற்று. நேரில் பார்த்த ஒரு சாட்சி இவ்வாறு சொன்னார்: “பிள்ளைகளைத் தங்கள் முதுகில் சுமந்துகொண்டு பெண்கள் கொலைசெய்வதை நாங்கள் பார்த்தோம். பிள்ளைகள் பிள்ளைகளைக் கொல்வதை நாங்கள் பார்த்தோம்.”

நேஷனல் கேத்தலிக் ரிப்போர்டர் கத்தோலிக்க தலைவர்களின் மனவேதனையைப் பற்றி சொன்னது. போப், “பெரும்பான்மையர் கத்தோலிக்கர்களாக இருக்கும் சிறிய ஆப்பிரிக்கத் தேசத்தில் [புருண்டியில்] நடைபெறும் சண்டைகளைப் பற்றிய புதிய அறிக்கைகளைக் குறித்து ‘கடுந்துயரமடைந்துள்ளார்’” என்று அது சொன்னது.

ருவாண்டாவின் படுகொலைகள் கத்தோலிக்க தலைவர்களின் பெயரை இன்னும் அதிகம் கெடுப்பதாக உள்ளது. “70 சதவீதம் கத்தோலிக்கர்களாக இருக்கும் தேசத்தில் நடைபெறும் படுகொலைகளைப் போப் கண்டிக்கிறார்,” என்பதாக அதே செய்தித்தாளின் ஒரு தலைப்புச்செய்தி அறிவித்தது. கட்டுரை குறிப்பிட்டதாவது: “ஆப்பிரிக்கத் தேசத்தில் நடைபெறும் சண்டை ‘உண்மையான மற்றும் மெய்யான இனப்படுகொலையை உட்படுத்துகிறது, சந்தர்ப்பவசமாக கத்தோலிக்கரும்கூட இதற்குப் பொறுப்பு,’ என்பதாக போப் சொன்னார்.”

வரலாற்று சிறப்புடைய குருமார் கூட்டம் ரோமில் கூட்டப்பட்ட அதே சமயத்தில் ருவாண்டாவில் அட்டூழியங்கள் செய்யப்பட்ட காரணத்தால், தெளிவாகவே போப்பின் கவனம் ருவாண்டாவின் மீது ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தது. நேஷனல் கேத்தலிக் ரிப்போர்டர் இவ்வாறு குறிப்பிட்டது: “ருவாண்டாவில் சண்டை பீதியை ஏற்படுத்தும் ஒன்றை வெளிப்படுத்துகிறது: பழங்குடிப் பற்றை மேற்கொள்ளும் அளவுக்குக் கிறிஸ்தவ விசுவாசத்தின் வேர்கள் ஆப்பிரிக்காவில் போதிய அளவு ஆழமாக சென்றிருக்கவில்லை.”

கூடிவந்திருந்த ஆயர்களின் கவலையைக் கவனித்து, நேஷனல் கேத்தலிக் ரிப்போர்டர் தொடர்ந்து இவ்விதமாக சொன்னது: “இந்தத் தலைப்பின்பேரில் [பழங்குடிப்பற்று] நைஜீரியாவிலுள்ள ஆக்கியின் ஆயர் ஆல்பர்ட் கேனின் ஒபிஃபூனா குருமார் கூட்டத்தில் பேசினார்.” அவருடைய உரையில், ஒபிஃபூனா இவ்வாறு விளக்கினார்: “ஒரு அசல் ஆப்பிரிக்கன் தன்னுடைய குடும்ப வாழ்க்கையையும் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையையும் அவனுடைய அல்லது அவளுடைய பழங்குடியின் அக்கறைகளை மையமாக கொண்டு அதைச் சுற்றியே அமைக்கிறான்.”

பின்னர் சந்தேகமின்றி ருவாண்டாவை மனதில் கொண்டவராய் ஒபிஃபூனா தொடர்ந்து குருமார் கூட்டத்தில் பேசினார்: “இந்த மனநிலையானது எங்கும் பரவியிருப்பதன் காரணமாக, நிலைமை கவலைக்கிடமாகி ஒருவர் தெரிவு செய்ய கட்டாயப்படுத்தப்படும் பட்சத்தில் சர்ச்சை ஒரு குடும்பமாக கருதும் கிறிஸ்தவக் கொள்கை அல்ல, ஆனால் தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பழமொழியே வெற்றியடைகிறது என்ற கருத்து ஆப்பிரிக்கர்கள் மத்தியில் காணப்படுகிறது. இங்கே தண்ணீர் என்பது ஒருவர் தண்ணீர்களின் முழுக்காட்டுதல் மூலமாக ஒரு சர்ச்சின் குடும்பத்துக்குள் பிறப்பதை உட்படுத்துகிறது. ஒரு கிறிஸ்தவனாக மதம் மாறிய ஆப்பிரிக்கனுக்கும்கூட இரத்த உறவுகள் அதிமுக்கியமானவை.

இயேசு கிறிஸ்து கற்பித்ததுபோல விசுவாசிகள் உண்மையிலேயே ஒருவரையொருவர் நேசிக்கும் ஒரு கிறிஸ்தவ சகோதரத்துவத்தை உருவாக்குவதில் கத்தோலிக்க விசுவாசம் ஆப்பிரிக்காவில் தோல்வியடைந்திருப்பதை ஆயர் ஒப்புக்கொண்டார். (யோவான் 13:35) மாறாக, ஆப்பிரிக்க கத்தோலிக்கர்களுக்கு “இரத்த உறவுகள் அதிமுக்கியமானவையாக” இருக்கின்றன. இது மற்றெல்லா காரியத்துக்கும் மேலாக அவர்கள் பழங்குடியினரின் பகைமையை வைக்கும்படி செய்வதில் விளைவடைந்திருக்கிறது. போப் ஒப்புக்கொண்ட விதமாகவே, ஆப்பிரிக்காவிலுள்ள கத்தோலிக்கர்கள், நினைவைவிட்டு நீங்காத அண்மைக் காலத்தில் நடந்துள்ள மிக மோசமான அட்டூழியங்களில் சிலவற்றுக்குப் பொறுப்பேற்கவேண்டும்.

நீடித்திருப்பது ஆபத்தில்

ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சமயம் நீடித்திருப்பது குறித்து குருமார் கூட்டத்திலுள்ள ஆப்பிரிக்க ஆயர்கள் பயத்தை வெளியிட்டனர். “சர்ச் என்னுடைய தேசத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று நாம் விரும்பினால், கலப்புப் பண்பாட்டின் காரியத்துக்கு மிகவும் கருத்தார்ந்த கவனத்தைச் செலுத்தவேண்டும்,” என்பதாக பானிஃபேஷியஸ் ஹாஷிக்கூ என்ற நமிபிய பிஷப் சொன்னார்.

இதே போன்ற கருத்துக்களை வெளியிடுபவர்களாய், இத்தாலிய கத்தோலிக்க பிரஸ் ஏஜென்ஸி அடிஸ்டா சொன்னது: “ஆப்பிரிக்காவில் சுவிசேஷத்தின் ‘கலப்புப் பண்பாட்டைப்’ பற்றி பேசுவது என்பது அந்தக் கண்டத்தில் கத்தோலிக்க சர்ச்சின் முடிவைப் பற்றி, நீடித்திருப்பதற்கு அல்லது மறைந்துபோவதற்கான வாய்ப்புக்களைப் பற்றி பேசுவதை அர்த்தப்படுத்துகிறது.”

“கலப்புப் பண்பாடு” என்பதால் ஆயர்கள் எதை அர்த்தப்படுத்துகிறார்கள்?

சர்ச்சும் ‘கலப்புப் பண்பாடும்’

“இதே மெய்ம்மையைக் குறிப்பிடுவதற்குத் தக்கவாறு அமைத்துக்கொள்ளுதல் என்ற பதமே நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டுவந்தது,” என்பதாக ஜான் M. வாலிகோ விளக்கினார். எளிதாக சொன்னால், “கலப்புப் பண்பாடு” என்பது பழங்குடியினரின் மதங்களிலுள்ள பாரம்பரியங்களையும் கொள்கைகளையும் கத்தோலிக்க சடங்குகளிலும் வணக்கத்திலும் தன்மயமாக்கிக்கொண்டு பண்டைய ஆசாரங்கள், பொருட்கள், சைகைகள் மற்றும் இடங்களுக்குப் புதிய பெயரையும் புதிய அர்த்தத்தையும் கொடுப்பதே ஆகும்.

கலப்புப் பண்பாடு ஆப்பிரிக்கர்களை நற்பெயருள்ள கத்தோலிக்கர்களாக கருதப்படவும் அதே சமயத்தில் தங்களுடைய பழங்குடி மதங்களின் பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றிக்கொண்டிருக்கவும் அனுமதிக்கிறது. இதற்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கவேண்டுமா? உதாரணமாக, இத்தாலிய செய்தித்தாள் லா ரிப்பப்ளிக்கா இவ்வாறு கேட்டது: “டிசம்பர் 25-ல் நடைபெற்ற சோலிஸ் இன்விக்டி பண்டிகை அன்று ஐரோப்பாவில் கிறிஸ்மஸ் தேதி குறிக்கப்பட்டது உண்மையல்லவா?”

ஆம், இவான்ஜலைசேஷன் ஆஃப் பீப்பிள்ஸ் சபையின் கார்டினல் யோசஃப் கார்டினல் டாம்கோ இவ்விதமாக குறிப்பிட்டார்: “மிஷனரி சர்ச்சானது இந்தப் பதம் பயன்படுத்தப்படுவதற்கு வெகு முன்னரே கலப்புப் பண்பாட்டைக் கடைப்பிடித்து வந்தது.” லா ரிப்பப்ளிக்கா குறிப்பிட்டது போல கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இந்த விஷயத்தை நன்றாக விளக்குகிறது. ஆரம்பத்தில் அது ஒரு புறமத கொண்டாட்டமாக இருந்தது. “டிசம்பர் 25 என்ற தேதி கிறிஸ்துவின் பிறப்போடு ஒத்தில்லை,” என்பதை நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா ஒப்புக்கொள்கிறது. ஆனால் “கதிர்த்திருப்பத்தில் ரோமர்கள் சூரியனுக்கு எடுத்த விழாவாகிய நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்டி விழா நாளோடு ஒத்திருக்கிறது.”

கிறிஸ்மஸ் என்பது புறமதத்தில் ஆதாரம் கொண்ட சர்ச்சின் அநேக பழக்கங்களில் ஒன்றே ஆகும். திரித்துவம், ஆத்துமா அழியாமை, மரணத்துக்குப் பின் மனித ஆத்துமாக்களின் நித்திய வாதனை ஆகியவை புறமதத்தில் ஆதாரம் கொண்ட மற்ற நம்பிக்கைகளாகும். “ஆரம்ப காலங்களிலிருந்தே சர்ச்சின் ஆட்சியாளர்கள் வேளை வருமானால், பொதுமக்களின் சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொள்ள அல்லது பின்பற்ற அல்லது ஒப்புதலளிக்க தயாராக இருந்தனர்,” என்பதாக 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஜான் ஹென்றி கார்டினல் நியூமேன் எழுதினார். அநேக சர்ச் பழக்கங்களையும் விடுமுறை நாட்களையும் பட்டியலிட்டு, “அவை அனைத்தும் புறமத ஆரம்பத்தைக் கொண்டவை, சர்ச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் புனிதமாக்கப்பட்டவை,” என்று அவர் சொன்னார்.

கத்தோலிக்கர்கள் ஆப்பிரிக்காவிலுள்ள சில பகுதிகளைப் போன்ற, கிறிஸ்தவமல்லாத பிராந்தியங்களுக்குள் பிரவேசிக்கும்போது, அங்குள்ள மக்கள் ஏற்கெனவே கத்தோலிக்க சர்ச்சினுடையதற்கு ஒத்த பழக்கங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டிருப்பதைக் காண்கிறார்கள். முந்தைய நூற்றாண்டுகளில் சர்ச்சானது கிறிஸ்தவரல்லாத ஆட்களின் பழக்கவழக்கங்களையும் போதகங்களையும் ஏற்றுக்கொண்டு கத்தோலிக்க மதத்தில் அவற்றை அறிமுகப்படுத்தியதே இதற்கு காரணமாகும். இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களும் போதகங்களும் கார்டினல் நியூமேன் சொல்கிறபடி, “சர்ச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் புனிதமாக்கப்பட்டவை,” ஆகும்.

இதன் காரணமாகவே, போப் ஜான் பால் II கடந்த ஆண்டு கிறிஸ்தவரல்லாத ஆட்களைச் சந்தித்தபோது பின்வருமாறு சொன்னதாக லாசர்வேட்டோர் ரோமானோ குறிப்பிட்டது: “ஆப்பிரிக்காவிலுள்ள பெனினில் பில்லி சூனிய மரபினரை நான் சந்தித்தேன். ஏதோவொரு வகையில், ஏற்கெனவே ஓரளவுக்கு, சர்ச் அவர்களுக்கு அளிக்க விரும்புகிற அதே சடங்குகளையும் அடையாளங்களையும் மனச்சாய்வுகளையும் தங்கள் மனோபாவத்தில் கொண்டிருப்பது அவர்கள் என்னிடம் பேசியதிலிருந்து தெளிவாக தெரிகிறது. எவராவது ஒருவர் வந்து வாயிலைக் கடக்க அவர்களுக்குக் கைகொடுத்து ஞானஸ்நானம் கொடுக்கவும் ஒருவகையில் அவர்கள் ஞானஸ்நானத்திற்கு முன்பே வாழ்ந்தும் அனுபவித்தும் வருவதன்படி வாழவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.”

நீங்கள் என்ன செய்யவேண்டும்?

ஆப்பிரிக்க மக்களுக்கு உண்மையான, கலப்படமில்லாத கிறிஸ்தவத்தைக் கற்பிக்க சர்ச் தவறியிருப்பது அழிவுண்டாக்கும் விளைவுகளைக் கொண்டுவந்திருக்கிறது. மற்ற இடங்களில் தேசப்பற்று இருப்பது போலவே பழங்குடிப்பற்றும் உறுதியாக இருந்து கத்தோலிக்கர் ஒருவரையொருவர் கொலைசெய்வதில் விளைவடைந்திருக்கிறது. கிறிஸ்துவுக்கு என்னே அவமரியாதை! இப்படி அநியாயமாக ஒருவரையொருவர் கொலைசெய்வது “பிசாசின் பிள்ளை”களாக அவர்களை அடையாளங்காட்டுகிறது என்பதாக பைபிள் சொல்கிறது, இயேசு இப்படிப்பட்டவர்களைக் குறித்து சொல்கிறார்: “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்.”—1 யோவான் 3:10-12; மத்தேயு 7:23.

நேர்மையான இருதயமுள்ள கத்தோலிக்கர்கள் என்ன செய்யவேண்டும்? கடவுளுடைய பார்வையில் தங்களுடைய வணக்கத்தை அசுத்தமானதாக்கும் எந்தப் பழக்கவழக்கங்களோடும் அல்லது நம்பிக்கைகளோடும் ஒத்திணங்கிப் போவதற்கு எதிராக எச்சரிக்கையாயிருக்கும்படி பைபிள் கிறிஸ்தவர்களைத் துரிதப்படுத்துகிறது. “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக,” என்று பைபிள் சொல்கிறது. கடவுளுடைய தயவைப் பெறுவதற்கு, நீங்கள் ‘புறப்பட்டு பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருப்பது’ அவசியமாகும்.—2 கொரிந்தியர் 6:14-17.

‘ருவாண்டாவில் நடைபெறும் யுத்தம் உண்மையிலேயே இனப்படுகொலையாக இருக்கிறது, இதற்கு கத்தோலிக்கர்களும் பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றனர்,’ என்பதாக போப் சொன்னார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்