மதம் ஆதரவு கொடுக்கிறது
செப்டம்பர் 1, 1939-ல் ஜெர்மனி போலந்துக்குள் நுழைந்து இரண்டாம் உலகப்போரை துவக்கியது. மூன்று வாரங்களுக்குப் பின்பு தி நியுயார்க் டைம்ஸ் பின்வரும் தலையங்கத்தைக் கொண்டிருந்தது: “போரிடுவதற்கு ஜெர்மன் போர்வீரர்களைச் சர்ச்சுகள் அதிக பலமாக உற்சாகப்படுத்தின.” ஹிட்லரின் போர்களை ஜெர்மன் சர்ச்சுகள் உண்மையில் ஆதரித்தனவா?
ஜெர்மன் சர்ச்சுகள் அவ்வாறு ஆதரித்தன என்று வீயன்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ரோமன் கத்தோலிக்க சரித்திர பேராசிரியர் பிரடெரிக் ஹார் என்பவர் ஒப்புக்கொண்டார்: “சர்ச்சை அடையாளப்படுத்திய சிலுவையும், நாசி அரசாங்கத்தை அடையாளப்படுத்திய ஸ்வஸ்திக்காவும் ஒன்றோடொன்று ஒத்துழைத்தன. ஜெர்மன் கதீட்ரல் கோபுரங்களிலிருந்து ஸ்வஸ்திக்கா வெற்றியடைந்த செய்தியை அறிவிக்கும்வரை, ஸ்வஸ்திக்கா கொடிகள் பீடங்களைச் சுற்றிக் காணப்பட்டன. கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் குருமார்கள், பாதிரிகள், சர்ச்சைச் சேர்ந்தவர்கள், ஆட்சி நிபுணர்கள் ஆகியோர் ஹிட்லரோடு செய்த ஒப்பந்தத்தை வரவேற்றனர். இவை ஜெர்மன் சரித்திரத்தில் அடங்கியிருக்கும் மறைக்கமுடியாத உண்மைகள்.”
ஹிட்லரின் போர் முயற்சிகளுக்கு சர்ச் தலைவர்கள் உண்மையில் முழு ஆதரவையும் அளித்தனர். ரோமன் கத்தோலிக்க பேராசிரியர் ஜார்டன் சான் பின்வருமாறு எழுதினார்: “ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கர் ஒருவர், ஹிட்லரின் போர்களில் சேவை செய்வதைக் குறித்து ஆவிக்குரிய வழிநடத்துதலுக்காகவும் உதவிக்காகவும் தன் மதத்தலைவர்களை எதிர்பார்த்து பெற்றுக்கொண்ட விடைகள், நாசி ஆட்சியாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட விடைகளைப் போன்றே இருந்தன.”
எதிர்ப்பக்கத்தில் இருந்த மதங்கள்
ஆனால் ஜெர்மனியை எதிர்த்த தேசங்களில் இருந்த சர்ச்சுகள் என்ன சொல்லிக் கொண்டிருந்தன? தி நியுயார்க் டைம்ஸ் டிசம்பர் 29, 1966 இவ்வாறு அறிக்கை செய்தது: “கடந்த காலங்களில் உள்ளூர் கத்தோலிக்க குருக்களாட்சிகள் எப்போதும் தங்கள் தேசத்து போர்களை ஆதரித்திருக்கின்றன, படைகளை ஆசீர்வதித்து வெற்றிக்காக ஜெபங்களை செய்திருக்கின்றன, ஆனால் எதிர்ப்பக்கத்தில் இருந்த பிஷப்புகள் அடங்கிய தொகுதி நேர் எதிர்மாறான விளைவுக்காக வெளிப்படையாக ஜெபம் செய்தது.”
ஒன்றையொன்று எதிர்க்கும் படைகளுக்கு ஆதரவு தருவது வத்திக்கனின் அங்கீகாரத்தோடு செய்யப்பட்டதா? சிந்தித்துப் பாருங்கள்: இரண்டாம் உலகப்போர் துவங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 8, 1939-ல் போப் பயஸ் XII ஆஸ்பெரிஸ் காமோட்டி ஆங்ஸியிட்டாடிபஸ் அதிகாரப்பூர்வமான ஒரு கடிதத்தை எல்லா குருமார்களுக்கும் அனுப்பினார். சண்டையிட்டுக் கொண்டிருந்த தேசங்களின் படைகளில் இருந்த குருமார்களுக்கு அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. தங்கள் இராணுவ பிஷப்புகளின் பேரில் நம்பிக்கை கொண்டிருக்கும்படி இரு பக்கங்களிலும் இருந்தவர்களை அது ஊக்கப்படுத்தியது. “தங்கள் தேசத்துக்காகப் போராடுபவர்களாக இருந்தாலும், சர்ச்சுக்காகவும்கூட போராடுங்கள்” என்று அக்கடிதம் புத்திமதி கூறியது.
போர் தொடுப்பதற்காக தேசங்களை ஒன்றுசேர்ப்பதில் மதம் அநேகமாக ஏறக்குறைய எப்போதுமே ஆக்கிரமித்துக்கொள்ளும் விதத்தில் தலைமை தாங்கி வழிநடத்துகிறது. “எங்கள் சர்ச்சுகளிலும்கூட நாங்கள் போர்க்கொடிகளை நாட்டியிருக்கிறோம்” என்று முன்னாள் புராட்டஸ்டன்ட் மதகுரு ஹாரி எமெர்சன் ஃபாஸ்டிக் ஒப்புக்கொண்டார். முதல் உலகப்போரைக் குறித்து, பிரிட்டிஷ் இராணுவ அணித்தலைவர் பிராங்க் P. க்ரோசர் பின்வருமாறு சொன்னார்: “இரத்தம் சிந்துதலை முன்னேற்றுவிப்பவர்களில் முதன்மையாக இருப்பது கிறிஸ்தவ சர்ச்சுகள். அப்படிப்பட்ட சர்ச்சுகளை நாம் கொண்டிருப்பதால், நாம் அவர்களைத் தாராளமாக பயன்படுத்தியிருக்கிறோம்.”
கடந்தக் காலங்களில் மதத்தின் பதிவு அப்படியாகத் தான் இருந்தது. பெரும்பாலான ஜனங்கள் ரோமன் கத்தோலிக்கராகவோ அல்லது ஆர்த்தடாக்ஸ் மதத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கும் முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசுகளில், சமீபத்தில் நடந்த போரில் அதன் பங்கு என்னவாக இருந்தது?
மதத்தின் உத்தரவாதம்
அக்டோபர் 20, 1993, ஏஷியாவீக் தலையங்கம் ஒன்று இவ்வாறு அறிக்கையிட்டது: “மதசம்பந்தமான சண்டைகளுக்கு பாஸ்னியா ஒரு மையமாக உள்ளது.” சான் அன்ட்டோனியோ எக்ஸ்பிரஸ் நியூஸ், ஜூன் 13, 1993, ஒரு குறிப்புரையின் தலையங்கத்தில் இவ்வாறு அறிவித்தது: “பாஸ்னியாவின் துயரங்களை மதத்தலைவர்கள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.” அக்கட்டுரை சொன்னது: “ரோமன் கத்தோலிக்கர், கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ், முஸ்லிம் போன்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் நடந்துகொண்டிருக்கும் காரியங்களுக்கான உத்தரவாதத்தை உதறித் தள்ளிவிட முடியாது. இந்த முறை உலகமுழுவதிலுமுள்ள மக்கள் ஒவ்வொரு இரவும் மாலை செய்தியை டிவியில் காண்பர். இது அவர்களுடைய மதப் போர் . . . போருக்கு உத்தரவாதமாயிருப்பவர்கள் மதத் தலைவர்களே என்ற நியமம் தெளிவாக உள்ளது. அவர்கள் நீதிமான்கள் போல் வெளிவேஷம் போட்டுக்கொள்வது அதைத் தூண்டிவிடுகிறது. ஒரு பக்கத்துக்கு எதிராக மறுபக்கத்தை ஆசீர்வதிப்பதன் மூலம் அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்.”
உதாரணமாக, ரோமன் கத்தோலிக்க சர்ச் அங்கத்தினர்களுக்கும், கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச் அங்கத்தினர்களுக்கும் இடையே விரோதம் ஏன் அவ்வளவு பெரிதாக இருக்கிறது? போப்புகள், மூதாதையர்கள், மற்ற சர்ச் தலைவர்கள் அதற்கு உத்தரவாதமுள்ளவர்களாய் இருக்கின்றனர். இந்த மதங்கள் 1054-ல் கடைசியாக பிரிந்த சமயத்திலிருந்து, சர்ச் தலைவர்கள் தங்கள் அங்கத்தினர்களுக்கு இடையே விரோதத்தையும் போர்களையும் ஊக்குவித்திருக்கின்றனர். மான்டிநீக்ரோவின் செர்பிய மொழி செய்தித்தாள், பொபேடா, செப்டம்பர் 20, 1991, கத்தோலிக்க சர்ச்சுக்கும் கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளுக்கும் இடையே உள்ள பிளவையும் அதன் விளைவுகளைக் குறித்தும் சமீபத்தில் நடந்த சண்டையைப் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டுக் காட்டியது. “கடவுளின் பெயரில் கொலையாளிகள்” என்ற தலைப்பின் கீழ் அக்கட்டுரை பின்வருமாறு விளக்கியது:
“க்ரோயேஷிய அதிபரான டுஸ்மனுக்கும் செர்பிய தலைவரான மெலோஷ்வெக்குக்கும் இடையே உள்ள அரசியல் அதற்குக் காரணம் அல்ல, ஆனால் அதற்கு மாறாக அது ஒரு மதப் போராக இருக்கிறது. போட்டியாக இருந்த ஆர்த்தடாக்ஸ் மதத்தை நீக்கிவிடுவதற்கு போப் தீர்மானித்த சமயத்திலிருந்து ஏற்கெனவே ஓராயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதைக் குறிப்பிட வேண்டும் . . . பிரிவினைக்கு காரணமாயிருந்தது ஆர்த்தடாக்ஸ் சர்ச்சே என்று 1054-ல் போப் அறிவித்தார் . . . 20-ஆம் நூற்றாண்டில், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு எதிராக திட்டமிட்டு அவர்களைப் படிப்படியாக அழித்துவிட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக முதல் கத்தோலிக்க காங்கிரஸ் 1900-ல் விளக்கியது. இத்திட்டம் இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது.”
என்றபோதிலும், இந்தச் சமீபத்திய போர் தான் இந்த நூற்றாண்டில் நடந்த மதப் போருக்கு முதல் உதாரணம் அல்ல. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலக யுத்தத்தின் போது, முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை அழித்து விடும்படி ரோமன் கத்தோலிக்கர்கள் முயற்சி செய்தனர். உஸ்டாஷி என்றழைக்கப்பட்ட க்ரோயேஷியா தேசிய இயக்கம் போப்பின் ஆதரவோடு க்ரோயேஷியா என்ற தனிப்பட்ட மாநிலத்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தது. வத்திக்கனின் அங்கீகாரம் பெற்ற இந்த ஆட்சி “வழக்கத்துக்கு மாறாக சித்திரவதைப் பழக்கவழக்கங்களை உபயோகித்தது. இலட்சக்கணக்கான செர்பியர்களும் யூதர்களும் அழிக்கப்பட்டதை அது உட்படுத்தியது,” என்று தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா அறிவிக்கிறது.
யூகோஸ்லாவ் ஆஷ்விட்சும் வத்திக்கனும் என்ற புத்தகத்தில்—ஆயிரக்கணக்கான பலியாட்களை உட்படுத்திய—இந்த ஒட்டுமொத்தமான கொலைகளைப் பற்றி பதிவு செய்து வைத்தது மட்டுமல்லாமல், அதில் வத்திக்கன் உட்பட்டிருந்ததும்கூட பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது.
மறுபட்சத்தில், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சும் போரில் செர்பியர்களை ஆதரித்திருக்கிறது. உண்மையில், ஒரு செர்பிய தொகுதியின் தலைவர் இவ்வாறு கூறியதாக சொல்லப்பட்டுள்ளது: ‘செர்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் முற்பிதா என்னுடைய தளபதி.’
பாஸ்னியாவிலும் ஹெர்சிகோவினாவிலும் மட்டும் 1,50,000 பேர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமற் போயினர். இப்படி கொலை செய்வதை நிறுத்துவதற்கு என்ன செய்யப்பட்டிருக்கலாம்? ஐ.நா. பாதுகாப்பு சபை, “போப், கான்ஸ்டான்டிநோப்பிள்-ன் முற்பிதா, பாஸ்னியா-ஹெர்சிகோவினா பிராந்தியத்துக்குள் இருக்கும் கத்தோலிக்க, கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் மற்றும் முஸ்லிம் சர்ச்சுகளின் [மற்ற தலைவர்கள்] ஆகியோருக்கு முறைப்படியான தீர்மானம் ஒன்றை அனுப்பி, உடனடியாக சண்டையை நிறுத்தும்படி கட்டளையிட வேண்டும். பிற மதத்தினரோடு எவ்வாறு அயலகத்தாராக வாழ முடியும் என்பதைப் பற்றி தீர்மானிப்பதற்கு ஒன்றுகூடி வரவேண்டும்” என்று பிரட் ஷ்மிட் என்பவர் சான் அன்ட்டோனியோ எக்ஸ்பிரஸ்-ல் அறிவித்தார்.
“அங்குள்ள மதத்தலைவர்கள் போரை நிறுத்துவதற்கு ஊக்கமான முயற்சி எடுத்தால் போரை நிறுத்தத்கூடும்” என்று அதே கருத்தில் ஸ்காட்ஸ்டேல்-ன் குறிப்புரையில், அரிசோனா புரோக்ரஸ் டிரிபியூன் முடிவுக்கு வந்தது. “சாரஜீவோ என்ற இடத்தில் சபையைச் சேர்ந்த ஒருவர் வெடிகுண்டு போட்டுத் தாக்கினால் அவரை உடனடியாக சபையிலிருந்து வெளியேற்றுவதன் மூலம்” மதத் தலைவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று அக்கட்டுரை ஆலோசனை கூறியது.
சமாதானத்தை முன்னேற்றுவிப்பதற்கு மெய்யான சக்தியாக இல்லை
என்றபோதிலும், மிகவும் மோசமான போர் குற்றவாளிகளைச் சர்ச்சிலிருந்து நீக்குவதற்கு போப்புகள் மறுத்திருக்கின்றனர். உடன் கத்தோலிக்கர்கள் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் அவர்கள் மறுத்திருக்கின்றனர். உதாரணமாக, கத்தோலிக்க டெலிகிராப்-ரெஜிஸ்டர், சின்சினாட்டி, ஒஹாயோ, அ.ஐ.மா., “கத்தோலிக்கனாக வளர்க்கப்பட்டாலும் விசுவாசத்தை மீறுகிறான் என்று போப்புக்கு அனுப்பிய தந்திச் செய்தி சொல்கிறது” என்ற தலைப்பின் கீழ் அது இவ்வாறு அறிக்கை செய்தது: “ரிக்ஸ்ஃபுரர் அடால்ஃப் ஹிட்லரை சர்ச்சிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று போப் பயஸ் XII-க்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது, அடால்ஃப் ஹிட்லர், ‘கத்தோலிக்க பெற்றோருக்கு பிறந்தவர், கத்தோலிக்கனாக முழுக்காட்டப்பட்டவர், கத்தோலிக்கனாக வளர்க்கப்பட்டு கல்வி கற்பிக்கப்பட்டவர்’ என்று [அத்தந்தியின்] ஒரு பகுதி கூறியது.” இருந்தாலும் ஹிட்லர் சர்ச்சிலிருந்து நீக்கப்படவில்லை.
ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கொடூரமான போர் தீவிரமாக நடந்து வருவதையும் சிந்தித்துப் பாருங்கள். முழுக்காட்டப்பட்ட “கிறிஸ்தவர்கள்” அப்பகுதியில் அநேகர் இருந்தபோதிலும், “உள்நாட்டு சண்டைகள் படுகொலைகளுக்கும், அழிவுக்கும், மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதற்கும் வழிநடத்தியிருக்கின்றன” என்று புருன்டி, ருவான்டா, டான்சானியா, யுகான்டா, சாயெர் போன்ற ஆப்பிரிக்க தேசங்களிலிருந்து வந்த பதினைந்து ரோமன் கத்தோலிக்க பிஷப்புகள் ஒப்புக்கொண்டார்கள். “கிறிஸ்தவ விசுவாசம் ஜனங்களின் மனநிலையை போதுமான அளவு பாதிக்கவில்லை” என்பது தான் பிரச்னையின் மூலக்காரணம் என்று பிஷப்புகள் ஒத்துக்கொண்டார்கள்.
“மிகச்சிறிய ஆப்பிரிக்க தேசமாகிய புருன்டியின் ஜனத்தொகையில் பெரும்பாலானோர் கத்தோலிக்கராக இருக்கின்றனர். போரைப் பற்றி அங்கிருந்து வரும் புதிய அறிக்கைகளைக் கேள்விப்பட்டு போப் ‘மிகவும் வேதனைப்பட்டார்’ என்று நேஷனல் கேத்தலிக் ரிப்போர்ட்டர், ஏப்ரல் 8, 1994 கூறியது. ருவான்டாவின் ஜனத்தொகையில் 70 சதவிகிதத்தினர் கத்தோலிக்கர், “கத்தோலிக்கரும்கூட கொலைகளுக்கு காரணமாயிருக்கின்றனர்” என்று போப் சொன்னார். ஆம், இரு பக்கங்களிலும் உள்ள கத்தோலிக்கர்கள் ஒருவரையொருவர் படுகொலை செய்தனர், இதற்கு முன்பு நடந்த எண்ணற்ற போர்களிலும் அவர்கள் அவ்வாறு செய்திருக்கின்றனர். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, மற்ற மதங்களும் இதே காரியத்தைச் செய்திருக்கின்றன.
எல்லா மதங்களும் போருக்கு ஆதரவு தருகின்றன என்ற முடிவுக்கு நாம் வரவேண்டுமா? சமாதானத்துக்கு மெய்யான சக்தியாக உள்ள மதம் ஏதாவது இருக்கிறதா?
[பக்கம் 5-ன் படம்]
போப்பின் உயர்நிலைப் பிரதிநிதியான பசலோ டி டோரிகுரோசாவுடன் இங்கு காணப்படும் ஹிட்லர் சர்ச்சிலிருந்து நீக்கப்படவேயில்லை
[படத்திற்கான நன்றி]
Bundesarchiv Koblenz