மதம் நல்லொழுக்கங்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தியா?
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில், பின்வருமாறு எழுதிய ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் கருத்தை லட்சக்கணக்கானோர் ஒப்புக்கொள்வர்: “மதம் ஒரு மாபெரும் சக்தியாக—உலகில் செயலுக்கு ஊக்கமளிக்கும் ஒரே உண்மையான சக்தியாக இருக்கிறது.” இதற்கு நேர் எதிர்மாறாக, 19-வது நூற்றாண்டு ஆங்கில ஆசிரியர் ஜான் ரஸ்கின் நேர்மைக்கு அடிப்படையாக இருக்கும் அம்சத்தைக் குறித்து எழுதுகையில் பின்வருமாறு ஏளனமாக குறிப்பிட்டார்: “நாணயமில்லாதவனுடைய மதமே எப்பொழுதும் அவனைப் பற்றிய அருவருப்பான காரியமாக இருக்கிறது”. இவற்றில் எந்த கருத்து உண்மைக்கு அருகாமையில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஒழுக்கரீதியில் மதத்தின் சக்திக்கு அத்தாட்சியாக, சிலர், தன் ‘வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்த போது’ ‘மாறி விட்ட மனிதனைச்’ சுட்டிக் காண்பிக்கலாம். இவ்விதமாகத்தான் வாட்டர்கேட் ஊழலில் உட்பட்டிருந்த சார்லஸ் கால்சனின் “மாற்றத்தை” சர்வதேசீய பத்திரிக்கை ஒன்று விவரித்தது. வேறுசிலர் தங்களுடைய மதம் விலைமாதர் வாழ்க்கை அல்லது குடிபழக்கத்துக்கு அடிமையான ஒரு வாழ்க்கையிலிருந்து தங்களைப் பாதுகாத்ததாகச் சொல்பவர்களைச் சுட்டிக் காண்பிக்கிறார்கள். கிறிஸ்தவமல்லாத தேசங்களில், லட்சக்கணக்கான பைபிள்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இது அநேகருக்கு ஒழுக்கம் சம்பந்தமாக அவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவித்துக் கொள்ள உதவியிருப்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட ஆட்களின் மீது மதம் ஒழுக்கம் சம்பந்தமாக நல்லதோர் செல்வாக்கைச் செலுத்தியிருப்பது தெளிவாக இருக்கிறது.
மறு பக்கம்
மறுபக்கத்தில் ஹிட்லரின் மதம் அவனுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை. இது ஹிட்லரை திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கும்படியாக போப் பயஸ் XII-க்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளுக்கு ஏன் ஒருபோதும் பதில் கிடைக்கவில்லை என்று உண்மை மனதுள்ள ஆட்களை ஆச்சரியப்படும்படியாகச் செய்தது. ஓஹியோவிலுள்ள சின்சினாட்டியின் தி கத்தோலிக் டெலிகிராப் ரிஜிஸ்டரில், “கத்தோலிக்கனாக வளர்க்கப்பட்டும் விசுவாசத்தை மீறுகிறார் என்கிறது போப்புக்கு அனுப்பப்பட்ட தந்தி செய்தி,” என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது: “ஜெர்மன் நாட்டுத் தலைவர் அடால்ப் ஹிட்லர் திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பதாக பயஸ் XII-க்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததேயானால், போரின் விளைவை அது பாதித்து, மனிதவர்க்கத்தைப் பெரும்பகுதியான வேதனையிலிருந்து பாதுகாக்க உதவியிருக்கக்கூடுமா? போப் இதற்கு ஒருபோதும் பதிலளிக்காதது வருத்தத்திற்குரியதாகும்.
தென் அமெரிக்காவிலுள்ள சில கத்தோலிக்க தேசங்களில், வைப்பாட்டியைக் கொண்டிருத்தல் மிகவும் சாதாரணமான வழக்கமாக இருக்கிறது. வட அமெரிக்காவில், தலையங்கம் ஒன்றில் ஒரு பெருந்தகை குரு பின்வருமாறு எழுதினார்: “விபச்சாரத்துக்கு சட்டத்தில் அனுமதி கொடுங்கள்—அது புனிதமான ஒரு பரிகாரம்.” (பிலெதல்பியா டேய்லி நியூஸ்) மனைவியரை மாற்றிக் கொள்வதும், விவாகத்துக்கு முன் பாலுறவு கொள்வதும், விவாகமின்றி பாலுறவு கொள்வதும் வெகு சாதாரணமாக இருக்கும் சில புராட்டஸ்டண்டு தேசங்களின் நிலைமையையும்கூட பாருங்கள். இதற்கான காரணம் செய்தித்தாள் தலைப்பில் குறிப்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்: “விவாகத்துக்கு முன் பாலுறவு கொள்வதன் சம்பந்தமாக மதகுருமார் மெளனம் சாதிக்கிறார்கள்.” கட்டுரைச் சொன்னதாவது: “விவாகத்துக்கு முன் பாலுறவு கொள்வதன் சம்பந்தமாக பிரசங்கிப்பதில் மதகுருமார் மெளனம் சாதிப்பது பாவமானச் செயலாகும் . . . தங்கள் வட்டார உறுப்பினர்களை இழந்து விடுவோமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.” (டெலிகிராப், நார்த் ப்ளேட், நெப்ராஸ்கர்) ஆகவே எல்லா மதங்களும் நல்லொழுக்கங்களை ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கின்றனவா?
கிறிஸ்தவமண்டலத்தில் போர்காலங்களின் போது ஒழுக்க சக்தி மதத்தில் குறைவுப்படுவது மிகத் தெளிவாக இருக்கிறது. கேட்பதற்கு நன்றாக இருக்கும் இந்த அறிக்கைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். 1934ல், அமெரிக்காவிலுள்ள கிறிஸ்துவின் சர்ச்சுகளின் ஃபெடரல் கவுன்ஸில் துறையின் அப்போதைய செயலர் W. வான் கர்க் பின்வருமாறு எழுதினார்: “பிரசங்கிமார்களும் பாமர மக்களும் போருக்கு எதிராக ஒரு புனிதமான நிலைநிற்கையை எடுத்திருக்கிறார்கள் . . . சர்ச்சுகளின் இந்த சமாதான அறப்போரானது, போர் என்பது இயேசுவின் பிரசங்கத்துக்கும் பழக்கவழக்கங்களுக்கும் முற்றிலும் எதிர்மாறானது என்ற உறுதியான நம்பிக்கையிலிருந்து தோன்றியுள்ளது.” (மதம் போரைக் கண்டனம் செய்கிறது) பல்வேறு சர்ச்சுகளையும் மதகுருமார்களின் பெயர்களையும் குறிப்பிட்டு புத்தகம் பின்வரும் முடிவுக்கு வந்திருந்தது: “முக்கியமாக சர்ச்சுகள், மனிதர்களைக் கொலை செய்யும் மற்றும் ஊனமாக்கும் வியாபாரத்தில் கூட்டாக இருப்பதாக இனிமேலும் கருதப்படக்கூடாது என்பதைத் தெளிவாக்கிவிட்டிருக்கின்றன. பிரசங்கிமார்கள் தங்கள் உடன் மானிடரின் இரத்தப் பழிக்கு நீங்கலாக தங்கள் கைகளைக் கழுவிக் கொண்டு இராயனின் நட்பை முறித்துக் கொண்டிருக்கிறார்கள்.”
என்றபோதிலும் நம்பிக்கைதரும் முன்னறிவிப்புகள் உண்மையாக நடந்தேறாதது வருத்தத்திற்குரியதாகும். இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானபோது, கிறிஸ்தவமண்டலத்தின் முக்கிய மதங்களில் ஒன்றும்கூட போரைக் கண்டனம் செய்ய ஒரு உறுதியான நிலைநிற்கையை எடுக்கவில்லை. நீங்கள் வாழுமிடத்திலுள்ள சர்ச்சுகள் அவ்விதமாகச் செய்தனவா?
தகர்ந்து போன ஒழுக்க வேலிகள்
இரண்டு பக்கங்களிலிருந்தும் அத்தாட்சிகள் சிலவற்றை ஆராய்ந்த பின்பு, பெரும்பாலும் உலகின் பிரபல மதங்கள் நல்லொழுக்கங்களை ஊக்குவிக்கும் சக்தியாக இருக்க தவறியிருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? லுக் பத்திரிக்கை சொன்னதாவது: “சர்ச்சுகள், ஒழுக்க விஷயத்தில் தலைமையேற்று நடத்தும் ஆற்றலை அளிக்க தவறிவிட்டிருக்கின்றன. அவைகளின் பொறுப்பு மிகப் பெரியதாக இருப்பதால், அவைகளின் தோல்வியும் மிக மோசமானதாக இருக்கிறது.” ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்பேனில் வெளியாகும் தி குரியர்-மேய்ல், பாலுறவு ஒழுக்கத்தில் கட்டுப்பாட்டை ஏற்படுத்திட கிறிஸ்தவமண்டலத்தின் மதங்கள் தவறிவிட்டிருப்பதைக் குறித்து பின்வரும் கருத்தை வெளியிட்டிருந்தது: “பிஷப்புகளுக்கும் புனிதர்களுக்கும் வரும் போது . . . விவாகத்துக்கு வெளியே பாலுறவு கொள்வது ‘கடவுளின் மகிமையை அறிவிக்கும்’ ஒரு அறச்செயலாக இருக்கக்கூடும் என்பதாகவும் . . . வேசித்தனம் தன்னில்தானே தவறானதில்லை என்றோ விபச்சாரம் கட்டாயமாக தவறானதில்லை என்றோ எழுதும்போது சாதாரண ஆணுக்கும் பெண்ணுக்கும், குறிப்பாக பருவ வயதிலுள்ள பையனுக்கும் பெண்ணுக்கும் எது சரி எது தவறு என்ற விஷயத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. புதிய ஒழுக்கத்தை ஆதரிக்கும் இந்த எல்லா பிரச்சாரத்தின் விளைவும் ஒழுக்க வேலிகளைத் தகர்த்தெறிவதாக இருந்திருக்கிறது.”
இல்லை, பெரும்பாலும், உலகின் மதங்கள் நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் உண்மையான சக்தியாக இல்லை. இதற்கு மாறாக, இன்று நிலவும் மோசமான ஒழுக்க நிலைக்கு அவை ஓரளவு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்றபோதிலும் மதம் என்பது “கடவுள் அல்லது மீமானிட சக்தியைச் சேவிப்பதாகவும் வணங்குவதாகவும்” பொருள்படுவதாக கருதப்படுவதன் காரணமாக, மதங்கள் இருக்கும் எல்லா தேசங்களிலும் அவை நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் சக்தியாக இருக்க வேண்டாமா? எது குறைவுபடுகிறது? உங்கள் மதம் இப்படிப்பட்ட ஒரு சக்தியாக இன்று எவ்விதமாக இருக்கமுடியும்? (w87 10⁄15)