கத்தோலிக்க பேராயர்களும் “உறங்கும் அரக்கனும்”
சாதாரண கத்தோலிக்கர் பிரசங்கிப்பவர்களாக இருக்க வேண்டுமா? அல்லது குறைந்து கொண்டிருக்கும் எண்ணிக்கையிலான குருமார்களுக்குப் பிரசங்க வேலை விட்டுவிடப்பட வேண்டுமா? இதுதாமே கடந்த ஆண்டு ரோமில் நடந்த கத்தோலிக்க பேராயர்களின் உலக கூட்டத்தில் அவர்கள் எதிர்ப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பிரச்னையான இருந்தது. நீங்கள் ஒரு கத்தோலிக்கராக இருப்பீர்களானால், பிரசங்க வேலையைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரையாக, பாமர மக்கள் சம்பந்தமாக ஓர் உடன்பாடற்ற கருத்து இருந்தது. உதாரணமாக, இந்த நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில், போப் பத்தாவது பையஸ் அறிவித்தார்: “இயல்பாகவே சர்ச் ஒரு சமனில்லாத சமுதாயமாக இருக்கிறது . . . ஆட்களின் இரண்டு தொகுதிகளைக் கொண்டிருக்கிறது; மேய்ப்பர்கள் மற்றும் மந்தை; பதவி வகிப்பவர்கள் மற்றும் விசுவாசமுள்ளவர்களின் கூட்டம் . . . இந்த பெருங்கூட்டத்தினருக்கு வழிநடத்தப்படுவது மற்றும் பின்பற்றுவதைத் தவிர வேறு கடமை இல்லை.”
இத்தகைய ஒரு விவரிப்பு இன்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. “பாமரன் ஒருவன் முன்பு அநேக காலங்களாக செயலற்றவனாக கருதப்பட்டிருந்தாலும் இப்பொழுது அப்படியில்லை,” மாறாக “சுறுசுறுப்புள்ளவனாகவும் உத்தரவாதமுள்ளவனாகவும் இருக்கிறான்,” என்று ஒரு நவீன இறைமையியல் அகராதி கூறுகிறது.
உலகத்தில் சுமார் 70 கோடி கத்தோலிக்க பாமர மக்கள் இருக்கிறார்கள். அயர்லாந்து நாட்டின் கத்தோலிக்க மதகுரு ஓ’ஃபியெய்ச் அவர்களை ஓர் “உறங்கும் அரக்கன்” என்று வருணித்தார். அவர் அர்த்தப்படுத்தியது என்ன? பேராயர்களின் பிரகாரம், பாமர மக்கள் அதிக சுறுசுறுப்பான வழியில் தங்களுடைய விசுவாசத்தில் வாழ வேண்டும். பாமர மக்களை அவர்களுடைய பொறுப்புகளைக் குறித்து உணர்வுள்ளவர்களாக ஆக்குவதே கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்த “உறங்கும் அரக்கனை” எழுப்பிவிட கத்தோலிக்க சர்ச்சில் உண்மையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவா?
பெண்கள் வகிக்கும் பாகம். சர்ச்சிற்குள்ளாக பெண்கள் வகிக்கும் பாகத்தில் மாற்றங்களை அநேக கத்தோலிக்கர் எதிர்பார்த்தார்கள். கத்தோலிக்க பெண்களால் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆவணம் பேராயர்களுக்குப் பரிந்துறைத்தது: “பெண்களைக் குறித்த வேறுபடுத்திக்காட்டும் சர்ச் சட்டத்தொகுப்பு அல்லது பெண்களின் ‘தன்மை’ மற்றும் அவர்கள் வகிக்கும் ‘பாகம்’ சம்பந்தமான வரையறையுள்ள கூற்றுகளின் அடிப்படையிலான கருத்துக்களோ திருத்தியமைக்கப்படவும் சரிசெய்யப்படவும் வேண்டும். இதில் பொறுப்பேற்றல் சார்ந்த எண் 1024 உட்படும்.” சர்ச் சட்டத்தொகுப்பின் விதி எண் 1024 சொல்கிறது: “புனித பொறுப்பேற்றல் முழுக்காட்டப்பட்ட ஆண்பாலினருக்கே பிரத்தியேகமாக உரித்தானது.”
இருப்பினும், வத்திக்கன் ‘ஆசாரியத்துவத்திலிருந்து பெண்களை விலக்கும் பாரம்பரியத்தைத் திருத்தக்கூடிய எந்தவொரு காரியத்திற்கும் செவிகொடுக்க விரும்பாததுபோன்று தற்போது தோன்றுகிறது’ என்று கத்தோலிக்க வெளியீடு ரோக்கா விவரித்தது. “இது பெண்களுக்கு இகழ்ச்சியைக் கொண்டுவருவதாக இருக்கிறது” என்று ஒரு மதகுரு சொன்னார்.
குறைவான எண்ணிக்கையிலான மதகுருக்கள். அதே சமயத்தில் கடுமையான அலுவல் சம்பந்தமான ஆபத்தை கத்தோலிக்க சர்ச் அனுபவித்துக் கொண்டிருக்கிறது: மதகுருக்களின் எண்ணிக்கை உலகளாவிய விதத்தில் குறைந்து கொண்டே செல்கிறது. போப் ஜான் இரண்டாவது பால் இதை “சர்ச்சின் அடிப்படை பிரச்னை” என்று கருதுகிறார். உதாரணமாக, “இத்தாலியில் ஒருபோதுமில்லாத அளவு குறைந்த எண்ணிக்கையிலான மதகுருக்கள் இருக்கிறார்கள்” என்று லா ரிப்பப்லிக்கா எழுதுகிறது. நெதர்லாந்திலுள்ள மதகுருக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி “குறிப்பிடத்தக்கதாக” இருக்கிறது என்று லா சிவில்ட்டா கத்தோலிக்கா சொல்கிறது.
உலககெங்கிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடக்கும் ஆராதனைக் கூட்டத்தில் கூடிவர வேண்டிய மூன்று இலட்சம் உள்ளூர் கத்தோலிக்க சமூகங்களின் பாதிக்கும் மேலானவற்றில் அங்கேயே தங்கி வேலை செய்யும் ஒரு மதகுருமாரும் இல்லை என்று ஒரு பத்திரிகை உறுதிசெய்கிறது.
ஆழ்ந்த அக்கறைக்குரிய காரியம். இந்தக் கூட்டத்தில் அதிக கவனத்தைப் பெற்ற பிரச்னை பிரசங்க வேலையாகும். இக்கூட்டத்திற்கு முன்பு, “ஒவ்வொரு கிறிஸ்தவனும் . . . அவசியமாகவே ஓர் அப்போஸ்தலனாக இருக்கிறான்” என்று போப் அழுத்திக் கூறியிருந்தார்.
இருப்பினும், கத்தோலிக்கர்களுக்குத்தானே “மறுபடியும் பிரசங்கம் செய்யப்பட வேண்டும்” என்று அநேக பேராயர்கள் கருதினார்கள். அவர்கள் பிரகாரம், “மத பிரிவுகளின் மற்றும் புதிய மத சம்பந்தமான குழுக்களின் சவாலின்” காரணமாக இது தேவைப்படுகிறது. அவர்கள் தேவையான அளவு ஆயத்தமில்லாதவர்களாக இருந்தால், ‘கத்தோலிக்கர் மத பிரிவுகளால் வெகு சுலபமாக வெல்லப்படுவதற்கு தங்களை அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று ஈக்குவேடார் நாட்டின் ஒரு பேராயர் சொன்னார்.
பேராயர்களால் அங்கீகரிக்கப்பட்ட கடைசி ஆலோசனைகளில் ஒன்று சொல்கிறது: “பூமியின் அநேக பகுதிகளில் மத பிரிவுகள் தீவிரமாக முன்னேறிச் செல்கின்றன . . . தங்களுடைய விசுவாசத்திற்குக் காரணத்தை அளிக்கும்பொருட்டு, விசுவாசிகள் ஒரு சிறப்பான போதனா முறை மூலமாக விழிப்படையச் செய்யப்படவேண்டும்.” ‘சகல தேசங்களிலும் சீஷர்களாக்கும்’படி அந்தக் கூட்டம் கத்தோலிக்கரை ஊக்குவித்தது. பிரசங்கிப்பது எப்படி என்று தாங்கள் அறியாமலிருக்கையில், “உறங்கும் அரக்கனாக” இருக்கிற 70 கோடி கத்தோலிக்கர்கள் எப்படி சீஷர்களாக்கக்கூடும்?
பாத்திரவான்களை “வீட்டுக்குவீடு” தேடிக் கண்டுபிடிப்பதே மெய் கிறிஸ்தவர்களின் வேலையாக இருக்கிறது என்று பைபிள் தெளிவாக காட்டுகிறது. (அப்போஸ்தலர் 5:42; 20:20; மத்தேயு 10:11) இதில் யார் பங்குகொள்ள வேண்டும்? எல்லாக் கிறிஸ்தவர்களுமே. பூர்வ கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தைப் பரவச் செய்த விதத்தைக் குறித்து, பிரான்ஸ் நாட்டு வரலாற்றாசிரியர் குஸ்டாவ் பார்டி சொல்கிறார்:
“தனிப்பட்ட நபர்களாகச் செயல்படுவது சர்ச்சின் ஆரம்பத்திலிருந்தே காணப்படுகிறது. முதல் இரண்டு நூற்றாண்டுகளின்போது, ஒருவேளை இந்த வழியில்தாமே . . . கிறிஸ்தவம் அதனுடைய விசுவாசிகளின் பெரும் பாகத்தை வெற்றி கொண்டது. ஒவ்வொரு விசுவாசியும் அவசியமாகவே ஓர் அப்போஸ்தலனாக இருக்கிறான் . . . எல்லாரும், ஏழைகள், படிப்பறிவில்லாதவர்கள், மிகவும் அர்ப்பமானவர்களும்கூட, இந்தப் பிரசங்க வேலைக்குத் தங்களை அர்ப்பணம் செய்ய முடியும்.”
உண்மையிலேயே, எல்லா மெய் கிறிஸ்தவர்களும் கடவுளுடைய வார்த்தையின் ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கிடையே மதகுரு மற்றும் பாமரர் என்ற வித்தியாசம் இல்லை. இத்தகைய வித்தியாசங்கள் பூர்வ கிறிஸ்தவத்திலிருந்து விலகிய பிறகே தோன்றின. (அப்போஸ்தலர் 20:29, 30) கத்தோலிக்க சர்ச்சிலுள்ள மதகுரு-பாமரர் என்ற வித்தியாசம் “இறைமையியல் சம்பந்தமான ஆதாரத்தைக் கொண்டில்லை” என்று சில கத்தோலிக்க ஊற்றுமூலங்கள் ஒப்புக்கொள்கின்றன. வத்திக்கன் பார்வையாளர் கியான்கார்லோ ஜிஜோலாவின் பிரகாரம், பூர்வ கிறிஸ்தவர்கள் “மதகுருக்களைக் கொண்டிருக்கவில்லை, அவர்களுடைய ஊழியக்காரர்கள் கண்காணிகளாக, அதாவது, மூப்பர்களாக இருந்தனர் . . . அவர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு இருக்கவில்லை.”
இன்றைய மெய் கிறிஸ்தவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ ஊழியத்தில் விழிப்புள்ளவர்களாகவும் அதிக சுறுசுறுப்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் “நற்செய்தியை” வைராக்கியத்துடன் பிரசங்கிக்கிறார்கள். அநேகமாக, அவர்கள் இந்தப் பத்திரிகையை உங்கள் கைகளில் விட்டுச் சென்றிருக்கக்கூடும்.—மத்தேயு 24:14; 25:13; 1 கொரிந்தியர் 15:58. (g88 8⁄22)