எமது வாசகரிடமிருந்து
பாலின் சூறாவளி மக்களை உண்மையிலேயே அக்கறையுடன் கவனிக்கிற அமைப்பின் பாகமாக இருப்பதற்காக நான் எப்பொழுதும் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். “பேரழிவின் மறுபக்கம்” (அக்டோபர் 8, 1998) என்ற உங்களுடைய படுசூப்பரான கட்டுரைக்காக நன்றி. யெகோவாவின் சாட்சிகள் “ஒழுங்கமைக்கப்பட்டவர்கள் நேர்மையானவர்கள்” என்று மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்வதை பார்க்கும்போது நான் வெகுவாக திருப்தியடைகிறேன்.
டி. எஃப். எஸ்., பிரேசில்
தனிமையின் இனிமை “பைபிளின் கருத்து: தனிமையின் இனிமை” (அக்டோபர் 8, 1998) என்ற கட்டுரை எனக்காகவே எழுதப்பட்டதுபோல இருந்தது. நான் ஆன்மீகத்திலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நலமாக இருப்பதற்கு தனிமை மிகவும் அவசியம். இருந்தபோதிலும் “தனிமை என்னும் இடத்தைச் சுற்றிப் பார்க்க செல்வது நல்லது; ஆனால் அங்கு தங்கி விடுவதோ ஆபத்து” என்ற கருத்து என்னை வெகுவாக கவர்ந்தது.
எல். ஜி., ஐக்கிய மாகாணங்கள்
வத்திக்கனும் நாசிப் படுகொலையும் கடந்த பல வருடங்களாக சாட்சிகள் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கின்றனர். சொல்லப்போனால் நாங்கள் நல்ல கூட்டுறவை அனுபவித்திருக்கிறோம். இருப்பினும் “கத்தோலிக்க சர்ச்சும் நாசிப் படுகொலையும்” (அக்டோபர் 22, 1998) என்ற கட்டுரை என் மனதை புண்படுத்தி விட்டது. பன்னிரண்டாம் போப் பயஸ் புனிதமானவர். யூதர்களுக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் அவர் செய்தார். அவருடைய முயற்சிகளினால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன!
ஜே. பி., ஐக்கிய மாகாணங்கள்
கத்தோலிக்க வாசகர்களை புண்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமல்ல; மாறாக “நினைவுகூருகிறோம்: ஷோவா ஒரு சோகக்கதை” (ஆங்கிலம்) என்ற வத்திக்கனின் ஆவனத்தைப் பற்றிய கருத்துவேறுபாடுகள் சம்பந்தமாக திருத்தமான அறிக்கையை கொடுக்கவேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். மதிப்பிற்குரிய வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், சட்ட வல்லுநர்கள் போன்றவர்களுடைய கூற்றுகளே இக்கட்டுரையில் வெளியிடப்பட்டன. இவர்களில் சிலர் ரோமன் கத்தோலிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகத்திற்கிடமின்றி மக்களுடைய உயிர்களை காப்பாற்றுவதற்கு வத்திக்கன் எடுத்த முயற்சிகள் பாராட்டத்தக்கவையே. இருந்தபோதிலும் நாசி ஆட்சிக்கு எதிராக போப் வெளிப்படையாக பேசாமல் இருந்தார் என்பது உண்மை. அவர் மட்டும் பேசியிருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.—ED.
ஒருவருக்கொருவர் அன்பு மழை பொழிதல் “ஜனங்கள் எல்லாரும் அன்புடன் இருக்கும் காலம் வருமா?” (அக்டோபர் 22, 1998) என்ற தலைப்பையுடைய தொடர் கட்டுரைகள் பிரமாதம். நான் சில சமயங்களில் வன்மத்தையும் வெறுப்பையும் பாலூட்டி வளர்த்திருக்கிறேன். இந்த பலமான தூண்டுதல்களை அணைகட்டி தடுப்பதற்கு இக்கட்டுரைகள் எனக்கு பேருதவி செய்தன. ஆகவே உங்களுக்கு பல கோடி நன்றிகள். உங்களுடைய பிரசுரங்களிலிருந்து ஊற்றெடுக்கும் உற்சாகம், நான் யெகோவா கடவுளுக்கு நல்ல ஊழியனாவதற்கு உதவும் என நம்புகிறேன்.
ஜி. சி., இத்தாலி
அஞ்சா நெஞ்சம் படைத்த மிஷனரிகள் “எங்களுக்காக உயிர்வாழவில்லை” (அக்டோபர் 22, 1998) என்ற கட்டுரையை இப்போதுதான் படித்து முடித்தேன். முதலில் உங்களுக்கு நன்றிகள் பல. ஏனெனில் இதில் அடங்கியிருந்த தகவல்கள் என் விசுவாசத்தை எவ்வளவு பலப்படுத்தின என்பதைச் சொல்லிமாளாது. பிரிட்டனில் அசட்டை மனப்பான்மையை நாங்கள் அதிகமாக எதிர்ப்படுகிறோம். ஜாக் மற்றும் லின்டா யோஹான்சன் அனுபவித்ததை ஒப்பிடும்போது எங்களுடைய பிரச்சினை பூஜ்யம்தான். உண்மையில் அந்தக் கட்டுரை என் இருதயத்தை ஆழமாக தொட்டுவிட்டது. என்னிடத்தில் தற்போது என்ன இருக்கிறதோ அதற்கு போற்றுதல் உள்ளவளாக இருப்பதற்கு இக்கட்டுரை எனக்கு உதவியது.
எல். ஜே., இங்கிலாந்து
சில வருடங்களாக எனது மனைவியும் நானும் முழுநேர ஊழியர்களாக சேவை செய்துவருகிறோம். ஆகவே புதிய இடத்தில் சேவை செய்யும் வேலையை ஏற்றுக்கொள்வது உண்மையில் பெரிய சவால் என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு யோஹான்சன் சென்றபோது தன்னுடைய உணர்ச்சிகளை மறைக்காமல் அவர் வெளிப்படையாக சொன்னார். நாங்கள் மாத்திரம்தான் இப்படிப்பட்ட உணர்ச்சிகளில் அல்லாடிக்கொண்டில்லை என்பதை அவர்களுடைய வாழ்க்கை சரிதை நிரூபித்தது. யெகோவா தேவனில் தொடர்ந்து முழுமையாக சார்ந்திருக்க வேண்டும் என்பதையும் இச்சரிதை நினைப்பூட்டியது.
எஸ். இ. சி., பிரேசில்
சத்தியத்தோடு ஒன்றாக கலந்துவிடுதல் எனக்கு 12 வயதாகிறது. “இளைஞர் கேட்கின்றனர் . . . சத்தியத்தோடு ஒன்றிவிட நான் என்ன செய்ய வேண்டும்?” (அக்டோபர் 22, 1998) என்ற கட்டுரையை ரொம்ப சந்தோஷமாக படித்தேன். இப்பொழுது எங்களுக்கு மீண்டும் ஸ்கூல் துவங்கிவிட்டது. அதனால் கூட்டங்களுக்கு ஒழுங்காக தயாரிக்க முடிவதில்லை. ஆனால் இதற்காக கட்டாயம் நேரத்தை ஒதுக்கவேண்டும். என்னை போன்ற சிறுவர்கள் அநேகர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சத்தியத்தில் உறுதியாக இருப்பதற்கும் யெகோவா தேவனிடத்தில் பிரியமாக இருப்பதற்கும் இக்கட்டுரை ரொம்ப உதவியாக இருக்கும் என்பதாக நான் நினைக்கிறேன்.
சி. எஸ்., போர்ச்சுகல்
சில வருடங்களுக்கு முன்னால் இதே கேள்விகள் என் மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தன. நான் சத்தியத்தை உண்மையிலேயே நேசிக்கிறேனா அல்லது எனது குடும்பம் சாட்சிகளாக இருப்பதால் நானும் ஏதோ ஒப்புக்கு சப்பாணியாக சத்தியத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே சந்தேகமாக இருந்தது. நீங்கள் ஆலோசனை அளித்தது போலவே பைபிளை ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டேன். எனது முயற்சியில் இப்போது வெற்றிபெற்று விட்டேன். ஆம், இப்போது சத்தியத்தை எனக்கு சொந்தமாக்கி விட்டேன் என சொல்வதில் மிகவும் சந்தோஷமடைகிறேன். எதிர்காலத்தில் முழுநேர ஊழியராக வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு.
ஹெச். என்., ஐக்கிய மாகாணங்கள்