நீர்க்கட்டி நார்மிகு நோயுடன் எதிர்நீச்சல்
ஜிம்மி காராட்ஸ்யாட்டிஸ் என்பவரால் சொல்லப்பட்டது
அன்று ஜூலை 25, 1998; நெஞ்சுவலியால் துடிதுடித்துப்போன என்னை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். இதயத்தில் கோளாறு எதுவும் இல்லை. ஆனால் நுரையீரலில் ஏதோ தொற்று ஏற்பட்டதனால் என்னால் மூச்சு விடவே முடியவில்லை. அப்போது எனக்கு வயது 25 தான், என் உயிரோ ஊசலாடிக்கொண்டிருந்தது.
நான் பிறந்த இரண்டே நாட்களில் எனக்கு மஞ்சட்காமாலை நோய் முற்றிவிட்டதாக டாக்டர்கள் என் பெற்றோரிடம் தெரிவித்தனர். எனக்கு இரத்தம் ஏற்றாவிட்டால் இறந்துவிடுவேன், அல்லது மூளை பாதிக்கப்படும் என்றும் கூறினர். எனக்கு இரத்தம் ஏற்றவுமில்லை; மூளை பாதிப்பும் ஏற்படவில்லை. எப்படியோ பிழைத்துக்கொண்டேன்.
இரண்டு வயதுவரை ஏதாவதொரு நோய் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். என்னவென்றே தெரியாமல் ஒரே குழப்பமாய் இருக்கும். திடீர் திடீரென்று நிமோனியா காய்ச்சல் வரும். கடைசியில் என் நோய் என்னவென்று டாக்டர் கண்டுபிடித்துவிட்டார். எனக்கு வந்திருந்தது, நீர்க்கட்டி நார்மிகு நோய் (சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் [CF]). அப்போதெல்லாம் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக ஏழு வயது வரைதான் தாக்குப்பிடித்தனர். ஆனால் மருத்துவத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக CF நோயால் பாதிக்கப்பட்ட சிறுபிள்ளைகள் பருவ வயதை எட்டமுடிந்தது.
CF என்பது என்ன?
CF என்பது, ஒரு பரம்பரை நோய். இந்நோய் ஒருவரது உடலிலுள்ள சுவாச மண்டலத்தை கடுமையாய் தாக்கும். இதற்கு நிவாரணமே இல்லை; பொதுவாக CF நோயாளிகள் உணவை ஜீரணிப்பது கடினம்.
குத்துமதிப்பாக கணக்கிடுகையில், 25 பேரில் ஒருவருக்கு CF குறைபாடுள்ள ஜீன் இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த ஜீன் தங்கள் உடலில் இருப்பது நோயாளிக்கே தெரிவதில்லை. ஏனெனில் இதற்கான அறிகுறிகள் வெளியில் தலைகாட்டாது. அப்பா, அம்மா இருவருக்குமே இந்த குறைபாடுள்ள ஜீன் இருந்தால், பிள்ளைக்கு இக்குறைபாடு ஏற்படும் சாத்தியம் 25 சதவீதம் உள்ளது.
மூக்கில் சதை வளர்ந்திருந்ததை வைத்து எனக்கு CF இருந்ததாக டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். இப்படி கண்டுபிடிப்பது அரிது. எனக்கு அப்படி இருந்ததால் CF நோயை ஊர்ஜிதப்படுத்துவதற்கு பொதுவாக செய்யப்படும் பரிசோதனை ஒன்றை செய்யும்படி டாக்டர்கள் தீர்மானித்தனர். அதுதான் வியர்வையிலுள்ள உப்பின் அளவு. பொதுவாக, சிறுபிள்ளைகளை முத்தமிடுகையில் தங்கள் உதட்டில் உப்புச்சுவை தெரிவதை வைத்து பெற்றோரோ தாத்தாபாட்டிமாரோ பிள்ளையின் தோலில் உப்பு படிந்திருப்பதை கண்டுகொள்கின்றனர்.
என் மூக்கில் சதை வளர்ந்திருந்ததால் சரியாக மூச்சுவிட முடியவில்லை. ஆகவே வருடா வருடம் சைனஸில் ஆப்பரேஷன் நடந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட ஆப்பரேஷன்கள் செய்யும்போதெல்லாம் ரொம்ப சிரமமாய் இருக்கும்; அது ஆறுவதற்குள் படாதபாடு படவேண்டியிருக்கும். இரத்தக்கசிவும் இருக்கும் என்பதால் இந்த ஆப்பரேஷன்கள் ஆபத்தானவையும்கூட. ஆனால் எனக்கு இரத்தம் ஏற்றாமலே இதுபோன்ற ஆப்பரேஷன்கள் பலதடவை செய்யப்பட்டுள்ளன. இரத்தம் ஏற்றுவதால் உண்டாகக்கூடிய சிக்கலுடன் போராட வேண்டியதோ அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதோ இல்லாததால் எனக்கு எல்லையில்லா சந்தோஷம்!
நோயுடன் மல்லுக்கட்டுதல்
என்னால் அதிகவேலை செய்ய முடியாவிட்டாலும், முடிந்தளவு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயலுகிறேன். ஆகஸ்ட் 1, 1987-ஐ என் வாழ்க்கையின் வசந்தம் எனலாம். அன்றுதான் யெகோவா தேவனுக்கு நான் ஒப்புக்கொடுத்திருந்ததற்கு அடையாளமாக முழுக்காட்டப்பட்டேன்.
தினமும் காலையில் எழுந்ததும் வென்டோலின் கரைசலையும் அதைத் தொடர்ந்து சலைன் கரைசலையும் முகர்கிறேன். எதற்கென்றால், நுரையீரலில் ஏதாவது திரவம் சுரந்திருந்தால் அதைக் கலைத்துவிட்டு, என் சுவாசப்பாதையை திறந்துவிடும். அப்போது சுவாசிப்பதற்கு சிரமம் எதுவும் இருக்காது. இப்படி சுமார் 15 நிமிடம் உள்ளிழுக்க வேண்டும். அதன்பிறகு 40 நிமிடத்திலிருந்து ஒரு மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்கிறேன். அப்போதுதான் நுரையீரலிலுள்ள திரவங்கள் கலைந்து வெளியேறும். மற்றொரு உள்ளிழுக்கும் சிகிச்சையும் செய்துவருகிறேன். அது தொற்றை எதிர்த்து மல்லுக்கட்ட உதவும் நோய் எதிர்ப்பு மருந்து. இவையனைத்தையுமே மதியமும் சாயங்காலமும் திரும்ப ஒவ்வொரு முறை செய்யவேண்டும்.
மூன்று தடவை இதுபோன்று ஒவ்வொரு நாளும் செய்வதற்கே நான்கு மணிநேரம் போய்விடுகிறது. வெறும் வயிற்றில் சிகிச்சை செய்தால் எளிது என்பதற்காக சிகிச்சைக்குப் பிறகுதான் நான் சாப்பிடுகிறேன். நேரத்தை விழுங்கும் இப்படிப்பட்ட அன்றாட சிகிச்சையின் மத்தியிலும், கனடாவைச் சேர்ந்த ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரத்தில், கிரேக்க மொழியில் நடக்கும் யெகோவாவின் சாட்சிகளது சபைக்கூட்டங்களில் தவறாது கலந்துகொள்கிறேன். கூட்ட நாட்களில் என் சிகிச்சையை இரவு 10 மணிவரை தள்ளிப்போடுகிறேன். கூட்டங்களுக்குச் செல்வதால் ஏற்படும் நன்மைகளை ஒப்பிட, நான் செய்யும் தியாகங்கள் ஒன்றுமே இல்லை எனலாம். தவறாமல் ஊழியத்தில் பங்கேற்பதும் எனக்கு முக்கியம்.
நம்பிக்கையை பேசுதல்
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போதெல்லாம் என் கிறிஸ்தவ நம்பிக்கையை பிறரிடம் தெரியப்படுத்துவதற்கு அரிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஒரு சந்தர்ப்பத்தில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரி ஒருவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. அவர் எனக்கு அடுத்த அறையில் நோயாளியாக சேர்ந்திருந்தார். நான் மரியாதையாக நடந்துகொள்ளும் இளைஞன் என்றும் கிரேக்க இளைஞர் சமுதாயத்திற்கே நல்லதோர் முன்னுதாரணம் என்றும் சொல்லி என்னைப் பாராட்டினார். கிரேக்க மொழி பேசும் யெகோவாவின் சாட்சிகள் செய்யும் ஊழியத்தை எதிர்ப்பதில் முன்னின்று வழிநடத்துவது அவரே என்பது நானறிந்த விஷயம் என்று அவருக்குத் தெரியாது.
தன்னைப் பார்க்க வருபவர்களையெல்லாம், என்னையும் பார்த்துவிட்டுச் செல்லுமாறு அனுப்பிவைப்பார். அவ்வாறு வருபவர்களுக்கோ, என்னைப் பார்க்க வரும் என்னுடைய குடும்பத்தாரும், நண்பர்களும் யாரென்று நன்றாகவே தெரியும். ஏனென்றால் ஊழியத்திற்கென தங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது அவர்களைப் பார்த்திருக்கின்றனர். பாதிரியாரைப் பார்க்க வந்து என்னிடம் வந்தவர்களில் சிலர், கொஞ்சநேரம் இருந்துவிட்டுச் சென்றனர்; மற்றவர்களோ, ‘ஏன் யெகோவாவின் சாட்சிகளைப் பார்க்க அனுப்பி வைத்தீர்’ என்று கேட்பதற்காக அவரிடமே திரும்பிச் சென்றுவிட்டனர். நான் ஒரு சாட்சி என்று அவருக்குத் தெரியவந்த பிறகும் எங்கள் சம்பாஷணை தொடர்ந்தது. யெகோவா என்னும் நாமம், திரித்துவம், கிரீஸ் நாட்டில் யெகோவாவின் சாட்சிகள் வகிக்கும் அரசியல் நடுநிலைமை போன்ற விஷயங்களைப் பற்றி பேசினோம். அவ்வாறு பேசியபோது, அவர் காட்டும் எதிர்ப்பின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்ததைக் கண்டுகொண்டேன்.
நாங்கள் பேசிய விஷயங்களில் பொதிந்திருந்த உண்மை என்னவென்று தனக்கு ஏற்கெனவே தெரியும் என்று அவர் ஒத்துக்கொண்டார். ஆனால், தன் வேலைக்கு ‘வேட்டு’ வைத்துவிடுவார்களோ என்று பயந்துதான் அதை கற்பிக்கவில்லை என்று ஒப்புக்கொண்டார். பின்பு நானும் என் தங்கை எஸ்தரும் அவர் வீட்டுக்குச் சென்றோம். நாங்கள் கொண்டுசென்ற பைபிள் பிரசுரங்களை அவர் வாங்கிக்கொண்டார். எங்கள் பிராந்தியத்தில் பிரசங்க வேலைக்கு இருந்த எதிர்ப்பு குறைந்தது. இந்தப் பாதிரியே இவற்றையெல்லாம் ஒத்துக்கொண்டுவிட்டாரே என்று கேள்விப்பட்டு, இன்னும் அநேகர் செவிசாய்க்க ஆரம்பித்தனர். என்றாலும் சீக்கிரத்தில் அந்தப் பாதிரி வேறெங்கோ மாற்றப்பட்டார்.
ஒருமுறை நான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தபோது, என் நம்பிக்கையை பிறரிடம் பேசினதால் குறிப்பிடத்தக்க மற்றொரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. தன் தாத்தாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த ஜெஃப் என்ற ஓர் இளைஞனிடம் நான் பேசினேன். அவனிடம் தொடர்ந்து சம்பாஷித்ததால் அது பைபிள் படிப்பாக மலர்ந்தது. சில நாட்களுக்குப் பிறகு ஜெஃப் கூட்டங்களுக்கு வர விருப்பம் தெரிவித்தான். பொதுவாக நான் லண்டன் நகரிலுள்ள சபைக்குச் சென்றுவருவேன். ஆனால் அவனுக்காகவே அருகிலுள்ள ஸ்டிராட்போர்ட் சபைக்கு சிறிதுகாலம் சென்றுவந்தேன். அவனுடைய வீட்டுப் பக்கத்திலுள்ள எவராவது அவனுக்கு உதவமுடியும் என்பதே என் குறிக்கோள்.
ஜெஃப்புக்கு வீட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பவே, ஆவிக்குரிய விஷயங்களில் அதற்குமேல் முன்னேற்றம் காட்ட முடியவில்லை என்பது ஒரு வருந்தத்தக்க விஷயம். என்றாலும், ஸ்டிராட்போர்டில் நடந்த கூட்டங்களுக்குச் சென்றுவந்தபோது, டீயண் ஸ்டீவர்ட்டுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டும் வேலைக்குச் சென்றிருந்தபோது நாங்கள் ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோம். எங்கள் காதல் கனிந்து, ஜூன் 1, 1996-ல் திருமணத்தில் இனிதே முடிந்தது.
சூழ்நிலையில் மாற்றம்
எதிர்பாராமல், திருமணம் முடிந்து மூன்றே வாரத்தில் நான் ரொம்ப சுகவீனம் அடைந்துவிட்டேன். இதனால் அடிக்கடி ஆஸ்பத்திரியில் சேரும் நிலை ஏற்பட்டது. இதுவே ஆரம்பத்தில் சொல்லப்பட்ட அவசரநிலை ஏற்பட்டதற்கும் காரணம். அதுமுதல் 24 மணிநேரமும் செயற்கை ஆக்ஸிஜன்தான். காய்ச்சல், இரவில் வியர்த்துக்கொட்டுதல், நுரையீரல் உறை வீக்கம், லொக்லொக்கென்று இருமுவதால் இரவெல்லாம் தூக்கமின்மை, மூட்டுவலி, கால்வலி, நெஞ்சுவலி—இவற்றோடெல்லாம் மல்லுக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. சில சமயங்களில் இருமி இருமி இரத்தமே வந்துவிடும். அதைக் கண்டாலே கதிகலங்கிவிடுவேன். ஏனென்றால் இருமல் நிற்காதபட்சத்தில், திடீர் மரணம்கூட ஏற்படலாம்.
உற்ற உதவியாகவும் சிநேகிதியாகவும் என் அருமை மனைவி என் அருகில் இருக்க, டாக்டர்கள், பிசியோதெரபிஸ்ட்டுகள், நோயாளிகள், ஆஸ்பத்திரியிலும் வீட்டிலும் மருத்துவ உதவி செய்யும் பணியாளர்கள் என அனைவரிடமும் சாட்சி கொடுக்கிறேன். எனக்கு வந்த இந்நோயோடு மல்லுக்கட்டுவது சிரமம்தான்; என்றாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களையெல்லாம் யெகோவாவைத் துதிக்க எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளாகவே கருதுகிறோம்.
இப்போது என்னைத் தாங்குவது
என் சூழ்நிலை மாறிவிட்டதால், எங்கள் வீட்டில் பிரத்தியேக தொலைபேசி இணைப்பு வைக்கப்பட்டுள்ளது; இதனால், நாங்கள் சபைக் கூட்டங்களில் சொல்லப்படுவதை கேட்கவும் பங்கேற்கவும் முடிகிறது. அன்பான இந்த ஏற்பாடு, ஏராளமான உற்சாகத்தைத் தருகிறது; அத்துடன், பெரும்பாலும் நேரில் சபைக்கூட்டங்களுக்குச் செல்ல முடியாவிட்டாலும், நாங்கள் இன்னும் சபையில் சுறுசுறுப்பாக பங்கேற்பவர்களென்று உணரச்செய்கிறது.
அத்துடன், இப்போது நாங்கள் செய்யும் ஊழியத்தில், பைபிள் சார்ந்த எங்கள் நம்பிக்கையை தொலைபேசியில் ஜனங்களிடம் பேசுவதும் அடங்கும். எங்களுக்கு பைபிள் படிப்புகளும் கிடைத்துள்ளன; அவற்றை தொலைபேசியிலேயே நடத்துகிறோம். முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் யெகோவாவைப் பற்றியும் உண்மையான மனிதகுலத்துக்கு நீதியுள்ள ஒரு புதிய பூமியில் அவர் செய்யவிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றியும் பேசுவது எங்கள் உள்ளத்தில் சந்தோஷம் பொங்கச் செய்கிறது.
என் அப்பாவும் அம்மாவும் காட்டும் ஆதரவு, ஆறுதலும் உற்சாகமும் அளிக்கிறது; அதுவே என்னைத் தாங்குகிறது. டீயண்ணை எனக்குத் தந்து ஆசீர்வதித்த யெகோவாவுக்கு நான் முக்கியமாக கடன்பட்டிருக்கிறேன். நான் ஒரு நோயாளி என்று தெரிந்தும் அவள் என்னை ஏற்றுக்கொண்டாள். இப்போது நான் சகித்திருக்க அவள் பெரும் பங்கு வகிக்கிறாள்.
என் நோய் முற்றிய நிலையில், எதிர்கால நம்பிக்கையை தியானிப்பதே எனக்கு அருமருந்து. அதுவே நான் மனம் தளர்ந்துவிடாமல் இருக்க உதவுகிறது. டீயண்ணுடன் சேர்ந்து தினந்தோறும் பைபிளை வாசிப்பது எங்கள் இருவருக்குமே ஆறுதல் தருகிறது. சீக்கிரம் வரவிருக்கும் எதிர்காலத்தில், நான் ஆரோக்கியமாய் இருப்பேன்; சுவாசிப்பதற்காக மட்டுமே இதுபோன்ற சிகிச்சையை அன்றாடம் செய்ய வேண்டிய தேவை இருக்காது என்றெல்லாம் எனக்குத் தெரியும். வாக்குப்பண்ணப்பட்ட பரதீஸில், என் நுரையீரல் குணமடைந்தபிறகு நான் எப்படியிருப்பேன்? நான் திறந்த வெளியில் ஓடியாடி துள்ளி மகிழ்வதை அவ்வப்போது என் மனக்கண்ணால் காண்கிறேன். இதுவே எனக்குத் தேவை. என் நுரையீரல் நன்றாக வேலைசெய்வதை நிரூபிக்க திறந்த வெளியில் மனம்போன போக்கில் கொஞ்ச நேரம் ஓடி மகிழவேண்டும், அவ்வளவுதான்.
கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட பரதீஸில் கிடைக்கும் ஆசீர்வாதங்களை கற்பனை செய்து பார்ப்பது, இந்த நோயுடன் அன்றாடம் மல்லுக்கட்ட எனக்கு உதவுகிறது. நீதிமொழிகள் 24:10 இவ்வாறு கூறுகிறது: “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது.” என் பெலன் குறுகிவிட்டதே என்று புலம்பிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை யெகோவா எனக்குத் தருவதாகவே நான் உணருகிறேன். (2 கொரிந்தியர் 4:7, NW) இதுவே அவரது நாமத்தையும் நோக்கங்களையும் பற்றி சாட்சி கொடுக்க எனக்கு உதவுகிறது. அத்துடன், அவர் அனுமதிப்பது என்னவாக இருந்தாலும்—அர்மகெதோனில் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு ஏற்படும்போது தப்பிப் பிழைப்பதாய் இருந்தாலும் சரி, இப்போது நிம்மதியாக கண்மூடி புதிய உலகில் கண்விழிப்பதாய் இருந்தாலும் சரி—அதை எதிர்கொள்ள உதவுகிறது.—1 யோவான் 2:17; வெளிப்படுத்துதல் 16:14-16; 21:3, 4.
[பக்கம் 13-ன் படம்]
கண்ணும் கருத்துமாக கவனித்துவரும் என் மனைவியுடன்