கிரேஸி ஹார்ஸ்—சிகரம் சிற்பமாகிறது
அந்த இளம் சிற்பிக்கு திறமையோ திறமை, அவருக்குக் குரு அவரேதான். போலிஷ்-அமெரிக்கரான அப்படிப்பட்ட ஒரு கெட்டிக்காரர், மதிப்பிற்குரிய அமெரிக்க இந்திய வீரர் ஒருவரின் கற்பனைச் சாயலில் ஒரு மலையை செதுக்க முடிவெடுத்தார். இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது எது? அவர் அவசரப்பட்டு முடிவெடுக்கவே இல்லை. ஏனென்றால் தீர யோசித்து முடிவெடுக்க அவருக்கு ஏழு வருடம் பிடித்தது. அந்த சிற்பியின் பெயர் கார்ச்சாக் ஷால்காவ்ஸ்கி.
1939-ல் கார்ச்சாக்கிற்கு ஒரு கடிதம் வந்தது. ஹென்றி ஸ்டான்டிங் பேர் என்ற பூர்வ லக்கோட்டா இந்தியப் பிரிவினரின் தலைவரிடமிருந்தே அந்தக் கடிதம் வந்தது. அவர் தென் டகோடாவிலிருந்த பைன் ரிட்ஜ் இந்திய ஒதுக்கீட்டுப் பகுதியில் வசித்துவந்தார். புகழ்பெற்ற இந்தியத் தலைவர்களில் ஒருவருக்கு தென் டகோடாவின் கறுப்புக் குன்றுகளில் (Black Hills) ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பும்படி அந்தத் தலைவர் கார்ச்சாக்கிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். லக்கோட்டா இந்தியர்கள் அந்தக் கறுப்புக் குன்றுகளை புனித இந்திய பிராந்தியமாக கருதுகின்றனர்; ஆகவே கட்ஸன் பார்க்ளம் என்ற சிற்பி அவர்களது புனித கறுப்புக் குன்றுகளின் மத்தியிலேயே, அதாவது ரஷ்மோர் மலையில் நான்கு ஐ.மா. ஜனாதிபதிகளின் இமாலய உருவங்களை செதுக்கி முடித்தது அவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. “சிவப்பிந்தியர்களுக்கும் பெரிய ஹீரோக்கள் உண்டு என்பதை அந்த வெள்ளைக்காரருக்கு புரிய வைக்க நானும் மற்ற தலைவர்களும் விரும்புகிறோம்” என தலைவராகிய ஸ்டான்டிங் பேர் கார்ச்சாக்கிற்கு எழுதியிருந்தார்.
ஏன் கிரேஸி ஹார்ஸ்?
அவர்கள் ஏன் கிரேஸி ஹார்ஸ் என்பவரின் உருவத்தை செதுக்க தீர்மானித்தார்கள்?a ராப் டிவால் இவ்வாறு விளக்குகிறார்: “நினைவுச் சின்னத்திற்கு கிரேஸி ஹார்ஸை தேர்ந்தெடுத்தவர்கள் இந்தியர்களே. கிரேஸி ஹார்ஸ் இந்தியர்களுக்கு இந்தியராக விளங்கியவர்; அசாத்திய துணிச்சல்மிக்க வீரர், மிகுந்த சாணக்கியம் படைத்தவர், ஆசைகாட்டி மோசம் போக்கும் உத்தியை கையாண்ட முதல் இந்தியர். அவர் . . . ஒருபோதும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை, ஒருபோதும் ஒதுக்கீட்டுப் பகுதிகளில் வசிக்கவில்லை.”
எந்த வடிவத்தில் சிற்பத்தை செதுக்குவது என கார்ச்சாக் எப்படி முடிவெடுத்தார்? பெரும்பாலான லக்கோட்டா இந்தியர்கள் தங்கள் ஒதுக்கீட்டுப் பகுதிக்கு சென்றுவிட்ட போதிலும் கிரேஸி ஹார்ஸ் மட்டும் அங்கே சென்று வசிக்க மறுத்தார்; இதற்காக வெள்ளைக்கார வணிகர் ஒருவர் கிரேஸி ஹார்ஸை ஏளனம் செய்தபோது அவர் என்ன சொன்னார் என்ற கதையை கார்ச்சாக் கேள்விப்பட்டார். “உன்னுடைய நிலங்கள் இப்போது எங்கே?” என அந்த வணிகர் அவரைக் கேட்டார். அதற்கு கிரேஸி ஹார்ஸ், “அடிவானத்தைப் பார்த்து, தன் குதிரையின் தலைக்கு மேலாக கையை நீட்டி, ‘என் இறந்தோர் புதைக்கப்பட்ட நிலங்களே என் நிலங்கள்’ என பெருமையாக சொன்னார்.”
நினைவுச் சின்னத்தை எங்கே அமைப்பது
ரஷ்மோர் மலையின் சிற்பங்களையும் மிஞ்சும் அளவில், உலகிலேயே மிகப் பிரமாண்டமான சிற்பத்தை செதுக்க முதலில் ஒரு மலையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. 1947-ல் ஒருவழியாக கார்ச்சாக்கும் தலைவராகிய ஸ்டான்டிங் பேரும் சேர்ந்து இதற்கேற்ற ஒரு மலையை தேர்ந்தெடுத்தார்கள். அது கடல்மட்டத்திற்கு மேல் 6,740 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையின் 600 அடி உயர சிகரம். அதன் மேல் வழக்கத்திற்கு மாறான மேகக் கூட்டங்கள் சிலசமயங்களில் திரண்டிருக்கும் என்பதால் கார்ச்சாக் அதை கார்மேக மலை (Thunderhead Mountain) என அழைத்தார். இந்த மலையை ஒரு இந்தியனின் இமாலய உருவமாக மாற்ற அவர்களுக்கு எப்படி அனுமதி கிடைக்கும்?
கார்ச்சாக்—சிற்பம் வாயிலாக கதை சொல்பவர் என்ற ஆங்கில புத்தகத்தில் டிவால் இவ்வாறு விளக்குகிறார்: “கறுப்புக் குன்றுகளில் சுரங்கம் தோண்ட யார் வேண்டுமானாலும் அனுமதி கேட்டு, அந்த நிலத்தை ‘சொந்தமாக்கிக் கொள்ளலாம்,’ வருடா வருடம் 5,000 ரூபாய் மதிப்புள்ள வேலை அங்கே நடத்தப்படும் பட்சத்தில். அந்த மலை குதிரையின் மேல் அமர்ந்த இந்தியரைப் போல் காட்சியளிக்கப் போகிறதா இல்லையா என்றெல்லாம் அரசாங்கம் கவலைப்படாமல், வருடா வருடம் உரிய வேலையை செய்து முடித்தால் போதும் என்றிருந்தது கார்ச்சாக்கிற்கு வேடிக்கையாக இருந்தது.”
மலையை எந்தளவு தகர்ப்பது?
கார்ச்சாக்கிடம் இருந்த பணம் கையளவு, ஆனால் அவர் செய்ய வேண்டிய பணியோ ‘மலையளவு,’ அதுவும் முதலில் அவர் சொந்தக் காலில் நின்று எல்லாவற்றையும் செய்து வந்தார். ஜூன் 3, 1948-ல் சுரங்க வெடி வைத்ததில் மலையின் சிறு பகுதி—பத்து டன் பாறை—தகர்க்கப்பட்டது. அதுமுதல் 1994 வரை சுமார் 84 லட்சம் டன் பாறை தகர்க்கப்பட்டது. ஆரம்பத்தில் வெடி வைத்தபோது நூற்றுக்கணக்கான இந்தியர்கள் அதைக் கண்டுகளித்தனர்; புகழ்பெற்ற லிட்டில் பிக்ஹார்ன் யுத்தத்தில் (ஜூன் 25, 1876) தப்பிப்பிழைத்தவர்களில் இன்றிருக்கும் ஒன்பது பேரில் ஐந்து பேரும் அதைக் கண்டுகளித்தனர்.b
கார்ச்சாக், முன்வைத்த காலை பின்வைப்பதில்லை என்ற உறுதியோடு கருமமே கண்ணாக பணியாற்றினார். அவரே வெட்டியெடுத்த மரங்களை உபயோகித்து மலைச் சிகரம்வரை படிக்கட்டுகளை அமைத்தார். அது 741 படிகள் கொண்டது. அங்கேதான் வெடி வைத்து பாறைகளை தகர்த்து குதிரையின் தலையை செதுக்கத் திட்டமிட்டிருந்தார். காற்றழுத்தத்தில் இயங்கும் சுத்தியலை (jackhammer) பயன்படுத்த ஆற்றல் தேவைப்பட்டது. இதற்கு பழைய பெட்ரோல் கம்ப்ரெஸ்ஸர் ஒன்றை அவர் பயன்படுத்தினார். மலைக்கு மேலாகவும் குறுக்காகவும், தான் துளையிட்டுக் கொண்டிருந்த இடம் வரை பைப்லைனை அவர் அமைக்க வேண்டியிருந்தது; 8 சென்டிமீட்டர் தடிமமுள்ள பைப்பை 620 மீட்டர் நீளத்திற்கு அமைக்க வேண்டியிருந்தது. திடீரென கம்ப்ரெஸ்ஸர் வேலை செய்யாமல் காலைவாரிய போதெல்லாம் அவர் அந்த 741 படிகளையும் கடந்து கீழே இறங்கி வந்து மோட்டாரை ஸ்டார்ட் செய்ய வேண்டியிருந்தது. ஒரு நாள் ஒன்பது முறை அவர் இவ்வாறு மேலும் கீழும் ஏறி இறங்கி சாதனை படைத்தார்! கம்ப்ரெஸ்ஸரை இயக்கும் வேலைக்கு ஒருவரை அமர்த்த அவருக்கு வசதியில்லை. அசுர பலமும் அசாத்திய மன உரமும் அவருக்கு இருந்ததை யார்தான் மறுப்பார்!
1951-ல், 660 லிட்டர் வெள்ளை பெயின்ட்டை செலவழித்து சிற்பத்தின் அவுட்லைனை அவர் மலையில் வரைந்தார்; இதனால், சிற்பம் இறுதியில் எப்படி காட்சியளிக்கும் என கற்பனை செய்து பார்ப்பது பார்வையாளர்களுக்கு எளிதானது.
துயரச்சம்பவமும் நெருக்கடியும்
1970-களிலும் 80-களின் ஆரம்பத்திலும், குதிரையின் தலைப்பகுதியை செதுக்குவதற்கு வசதியாக போதுமான பாறைகளை தகர்ப்பதில் கார்ச்சாக் கவனம் செலுத்தினார். அவருக்கு ஏற்கெனவே இருமுறை (1968-லும் 1970-லும்) மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. 1982 கோடையில், அவருக்கு க்வாட்ருபல் பைபாஸ் இதய ஆபரேஷன் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அதன் பின்னர்தான் துயரம் தாக்கியது—அதே வருடம் அக்டோபர் மாதம் கார்ச்சாக் தனது 74-ஆம் வயதில் திடீரென்று காலமானார். இப்போது கிரேஸி ஹார்ஸ் இமாலய பணிக்கு என்னவாகும்? சிற்பியின் முடிவோடு சிற்பத்திற்கும் முடிவு வந்துவிடுமா?
தன்னால் இந்தப் பணியை முடிக்க முடியுமென்று கார்ச்சாக் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஒருவரது வாழ்நாட்காலம் போதாது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே இந்தப் பணிக்கு விலாவாரியாக திட்டங்கள் போட்டிருந்தார். அவரது துணைவி ரூத்தும் அவரது பத்து பிள்ளைகளும் அவரைப் போலவே இந்தப் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் ரூத் கைகொடுத்திருந்தார்; கணக்குகள் போடுவதிலும் மற்ற வேலைகளிலும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
குதிரையின் தலைப்பகுதியை முதலில் முடிக்கவே கார்ச்சாக் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது மரணத்தால் அந்தத் திட்டம் மாறியது. 1987-ல் அவரது மனைவியும் லாபம் கருதாத நிறுவனத்தின் இயக்குநர்களும், கிரேஸி ஹார்ஸின் முகத்தை முதலில் செதுக்கி முடிக்க தீர்மானித்தார்கள். ஏன் இந்த மாற்றம்? குதிரையின் தலைப்பகுதியைவிட கிரேஸி ஹார்ஸின் முகம் மிகவும் சிறியதாக இருந்ததால் அதை சீக்கிரத்தில் செதுக்க முடியும், அதிக செலவும் பிடிக்காது என நினைத்தார்கள். பொதுமக்கள் அடையாளம் கண்டுகொள்ளும் அளவுக்கு சிற்பம் குறைந்த காலத்தில் உருப்பெறும், இவ்வாறு இப்பணிக்கு பொதுமக்களின் ஆதரவு பெருகும் என்றும் நினைத்தார்கள்.
வியக்கத்தக்க பரிமாணங்கள்
கிரேஸி ஹார்ஸ் தலையின் உயரம் 87 அடி, 6 அங்குலம்; அதன் அகலம் 58 அடி. “ரஷ்மோர் மலையிலுள்ள 60 அடி உயர தலைகள் நான்கும் கிரேஸி ஹார்ஸின் ஒரே தலைக்குள் அடங்கிவிடும், அதுபோக மிச்ச இடமும் இருக்கும்!” என சொல்லப்படுகிறது. இடது கையை நீட்டியவாறு, குதிரையுடன் காட்சியளிக்கும் கிரேஸி ஹார்ஸ் சிற்பம்தான் உலகிலேயே மிகப் பெரிய சிற்பமாக விளங்கும் என்பது சிலரின் கருத்து. ஏனெனில் அது 563 அடி உயரமும் 641 அடி நீளமும் உடையது. கை மட்டுமே 227 அடி நீளம், சுட்டுவிரலின் நீளம் 37.5 அடி, பருமன் 10 அடி.
கார்ச்சாக் தன் திட்டத்திற்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி பெற மறுத்துவிட்டார். இருமுறை சுமார் 50 கோடி ரூபாயை அவருக்கு தர அரசு முன்வந்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. “அரசு சாரா பொருளாதார அமைப்புமுறையில் அவர் எப்போதுமே நம்பிக்கை வைத்திருந்தார். தன் வாழ்நாட்காலத்தில் தனி ஒருவராக நின்று 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியைத் திரட்டி கிரேஸி ஹார்ஸிற்காக செலவழித்தார்” என டிவால் சொல்கிறார். அவர் சம்பளம் வாங்கவில்லை, தான் திரட்டிய நிதியை சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தவும் இல்லை.
இன்று காரில் செல்லும் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; மோட்டார் பைக்கிலும் மற்றபடியும் செல்வோருக்கு சற்று குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கிரேஸி ஹார்ஸை பார்க்க வருகிறார்கள். நன்கொடையாக சாதனங்களும் பணமும் பெருமளவு வந்து குவிவதால் இப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்திய அருங்காட்சியகம்
கிரேஸி ஹார்ஸ் சிற்பம் செதுக்கப்படும் இடத்தில், வட அமெரிக்காவின் மனங்கவரும் இந்திய அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. அது உள்ளூர் மரத்தால் கட்டப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான இந்தியக் கலைப் பொருட்கள் உள்ளன; 500-க்கும் அதிகமான வட அமெரிக்க குலத்தவரின் வித்தியாசமான கைவண்ணங்களை அவை பறைசாற்றுகின்றன. பூர்வீக அமெரிக்கர்களைப் பற்றிய புத்தகங்கள் அடங்கிய பெரிய நூலகமும் அதில் உண்டு; மாணவர்களும் அறிஞர்களும் அவற்றை படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
ப்ரிஸில்லா எங்கன், ஃப்ரிடா குட்செல் (ஓக்லாலா லக்கோட்டா) போன்ற பூர்வீக அமெரிக்கர்கள் வருபவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அங்கு இருக்கிறார்கள். காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சில கலைப்பொருட்களையும் கைவினைப் பொருட்களையும்கூட அவர்கள் விளக்குகிறார்கள். வருபவர்களோடு கலந்துபேச, லக்கோட்டா குலமாகிய மினகான்ஜூவின் அங்கத்தினரும் பல்கலைக்கழக ஆசிரியருமான டானவன் ஸ்ப்ரேக்கும் அங்கிருக்கிறார். 1876-ல் லிட்டில் பிக்ஹார்ன் போரில் பங்குபெற்ற தலைவர் ஹூம்ப்பின் பேரனுக்கு பேரன்தான் இவர்.
கிரேஸி ஹார்ஸ் நினைவுச்சின்னத்தின் எதிர்காலம்?
அருங்காட்சியகத்திற்காக வேறொரு இடம் திட்டமிடப்படுகிறது. நினைவுச் சின்னத்தின் அடித்தளத்திற்கு அருகே ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதுதான் கார்ச்சாக்கின் ஆரம்ப திட்டமாக இருந்தது; அதுவும் நவஹோ இந்தியர்களின் குடியிருப்புக்கு ஒத்ததாக அதை அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். இந்த அருங்காட்சியகம் 110 மீட்டர் விட்டம் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடமாக இருக்கும். வட அமெரிக்க இந்தியருக்கு ஒரு பல்கலைக்கழகத்தையும் மருத்துவ பயிற்சி மையத்தையும் கட்டும் திட்டங்கள்கூட இருக்கின்றன. இருந்தாலும் இந்த அருமையான கனவுகள் நனவாவதற்கு முன் கிரேஸி ஹார்ஸ் சிற்பம் செதுக்கி முடிக்கப்பட வேண்டும். அதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? கார்ச்சாக்கின் மனைவி ரூத் இவ்வாறு சொல்கிறார்: “எந்தத் தேதியையும் எங்களால் குறிப்பாக சொல்ல முடியாது, ஏனென்றால் சீதோஷணம், குளிரின் கடுமை, பணவசதி போன்ற நிறைய விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கும். உண்மையிலேயே முக்கியமான விஷயம், முடிவான இலட்சியத்தை நோக்கி நாங்கள் தொடர்ந்து முன்னேறுகிறோம் என்பதுதான்.”(g02 11/08)
[அடிக்குறிப்புகள்]
a கிரேஸி ஹார்ஸ் (சுமார் 1840-77) இளம் வயதில், ‘அவரது குதிரை கண்ணுக்கு முன் நிற்கிறது’ என அழைக்கப்பட்டார். இருபது வயதாவதற்கு சற்று முன்னர்தான் அவருக்கு கிரேஸி ஹார்ஸ் [லக்கோட்டா மொழியில், டாஷுங்க்கா விட்கோ] என்ற பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்; அவரது குடும்பத்தில் இப்பெயரைப் பெற்றவர்களில் இவரே மூன்றாவதும் கடைசியுமானவர்.” இவரது தந்தையும் தாத்தாவும்கூட இப்பெயராலேயே அழைக்கப்பட்டனர்.—வட அமெரிக்க இந்தியர்களின் என்ஸைக்ளோப்பீடியா (ஆங்கிலம்).
b சரித்திர புகழ்பெற்ற அந்த யுத்தத்தில், சுமார் 2,000 டிடன் சூஸ் இனத்தவரும் (லக்கோட்டாக்களும்) ஷையன் இனத்தவரும் சேர்ந்து, படைத் துணைத்தலைவரான ஜார்ஜ் ஆர்ம்ஸ்ட்ராங் கஸ்டரையும் அவரது 215 குதிரைப்படை வீரர்களையும் கொன்று குவித்தனர். மேஜராக இருந்த மார்கஸ் ரினோ, கேப்டனாக இருந்த ஃப்ரெட்ரிக் பென்டின் ஆகியோரின் தலைமையில் வந்த துணைப்படைகளையும் அவர்கள் தோற்கடித்தனர். அந்த யுத்தத்தில் சண்டையிட்ட இந்திய வீரர்களில் ஒருவரே கிரேஸி ஹார்ஸ்.
[பக்கம் 14, 15-ன் படம்]
கிரேஸி ஹார்ஸ் சிற்பத்தின் மாடல், மலைமீது குதிரையின் தலைப்பகுதி பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கிறது
[படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 2, 15: Korczak, Sculptor © Crazy Horse Memorial Fnd.
[பக்கம் 15-ன் படம்]
ஜூன் 3, 1948-ல் கார்ச்சாக்கும் தலைவர் ஹென்றி ஸ்டான்டிங் பேரும். பின்னணியில் பளிங்கு மாடலும், தகர்க்கப்படுவதற்கு முன் மலையின் தோற்றமும்
[படத்திற்கான நன்றி]
போட்டோ: Crazy Horse Memorial archives
[பக்கம் 16-ன் படம்]
ஷால்காவ்ஸ்கி குடும்பம். வலமிருந்து நான்காவது ரூத், காலம் சென்ற கார்ச்சாக்கின் மனைவி
[படத்திற்கான நன்றி]
Crazy Horse photo
[பக்கம் 17-ன் படம்]
அமெரிக்க இந்திய அருங்காட்சியகத்தின் உட்புறம்
[பக்கம் 16, 17-ன் படம்]
கிரேஸி ஹார்ஸின் முகத்தைக் காண ஆண்டுதோறும் திரண்டுவரும் கூட்டம்
[படத்திற்கான நன்றி]
Photo by Robb DeWall, courtesy Crazy Horse Memorial Foundation (nonprofit)
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
Photos by Robb DeWall, courtesy Crazy Horse Memorial Foundation (nonprofit)