இலட்சியத்தை அடைவதில் குறியாக இருந்தேன்
மார்ட்டா சாவெஸ் செர்னா சொன்னபடி
எனக்கு அப்போது 16 வயது. வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துவிட்டேன். நினைவு திரும்பியபோது படுக்கையில் இருந்தேன். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது, தலையோ விண் விண்ணென வலித்தது; கொஞ்ச நேரத்திற்கு எனக்குக் கண்ணும் தெரியவில்லை, காதும் கேட்கவில்லை. எனக்குப் பயமாகிவிட்டது. எனக்கு என்ன ஆகிவிட்டதோ என்று குழம்பிப்போனேன்.
கவலையில் மூழ்கிப் போன என் அம்மாவும் அப்பாவும் என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள்; அவர் எனக்கு விட்டமின் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். இரவில் ரொம்ப நேரம் கண்விழித்திருந்ததால் இது ஏற்பட்டதென அவர் சொன்னார். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு திரும்பவும் அதேபோல் ஏற்பட்டது, மூன்றாவது முறையும் ஏற்பட்டது. நாங்கள் வேறொரு டாக்டரிடம் போனோம்; அவர் நரம்பு பாதிக்கப்பட்டிருந்ததாக நினைத்து தூக்க மருந்துகளைக் கொடுத்தார்.
ஆனால் அடிக்கடி திடீர் திடீரென மயங்கி விழுந்தேன், இதனால் காயம் பட்டுக்கொண்டேன். சில சமயங்களில் என் நாக்கைக் கடித்திருக்கிறேன், வாயின் உட்பகுதிகளையும் உதட்டையும் கடித்திருக்கிறேன். நினைவு திரும்பிய பிறகு தலைவலி மண்டையைப் பிளக்கும், தலைசுற்றலும் இருக்கும். உடம்பு முழுவதும் வலி தாங்க முடியாது, மயங்கி விழுவதற்கு முன் என்ன நடந்தது என்பது பெரும்பாலும் எனக்கு நினைவே இருக்காது. சாதாரணமாக ஓரிரு நாள் நல்ல ஓய்வெடுத்த பிறகே மீண்டும் பழையபடி நடமாட முடிந்தது. ஆனாலும், இந்தக் கஷ்டமெல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான், சீக்கிரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன்.
என் இலட்சியங்களைச் செயல்படுத்துவதில்
நான் சிறுமியாக இருந்தபோது என் குடும்பத்தார் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். பைபிளைக் கற்றுக்கொடுக்க எங்கள் வீட்டுக்கு வந்த தம்பதியர் விசேஷப் பயனியர்களாக, அதாவது முழுநேர ஊழியர்களாக, இருந்தார்கள்; மற்றவர்களுக்குப் பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொடுப்பதற்கு ஒவ்வொரு மாதமும் அநேக மணிநேரத்தைச் செலவிட்டார்கள். அந்த ஊழியம் அவர்களுக்குச் சந்தோஷமளித்ததைக் கண்ணாரப் பார்த்தேன். பைபிள் வாக்குறுதி அளித்திருக்கும் அற்புத எதிர்காலத்தைப் பற்றி என் ஸ்கூல் டீச்சரிடமும் மற்ற பிள்ளைகளிடமும் பேசியபோது எனக்கும்கூட அதே விதமான சந்தோஷம் கிடைத்தது.
சீக்கிரத்தில் எங்கள் குடும்பத்தில் பலர் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! ஏழு வயதாக இருக்கும்போது, நானும் ஒரு விசேஷப் பயனியராக ஆக வேண்டுமென்ற இலட்சியத்தை வைத்தேன். 16 வயதில், அதை அடைவதற்கான முக்கிய படியாக, முழுக்காட்டுதல் பெற்றேன். அந்தச் சமயத்தில்தான் திடீர் திடீரென மயங்கி விழ ஆரம்பித்தேன்.
பயனியர் ஊழியம்
எனக்கு உடல்நிலை சரியில்லாதிருந்த போதிலும்கூட, ஒரு யெகோவாவின் சாட்சியாக என்னாலும் முழுநேர ஊழியம் செய்ய முடியுமென நினைத்தேன். ஆனால் வாரத்தில் இரண்டு தடவை இப்படி மயங்கி விழுந்ததால், அதிக பொறுப்புமிக்க முழுநேர ஊழியத்தை என்னால் செய்ய முடியாதென சபையிலிருந்த சிலர் நினைத்தார்கள். நான் சோகத்திலும் சோர்விலும் மூழ்கினேன். ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து, யெகோவாவின் சாட்சிகளுடைய மெக்சிகோ கிளை அலுவலகத்தில் சேவை செய்யும் ஒரு தம்பதியர் எங்கள் சபைக்கு வந்தார்கள். பயனியர் செய்ய எனக்குக் கொள்ளை ஆசை இருப்பதை அறிந்துகொண்டு எனக்கு அதிக உற்சாகத்தை அளித்தார்கள். பயனியர் செய்வதற்கு என் உடல்நிலை முட்டுக்கட்டையாக இருக்க தேவையில்லை என்பதை அவர்கள் எனக்குப் புரிய வைத்தார்கள்.
எனவே 1988, செப்டம்பர் 1-ம் தேதி, மெக்சிகோவில், சான் ஆன்ட்ரேஸ் சியவுட்லா என்ற என் சொந்த ஊரில் ஒழுங்கான பயனியராக நியமிக்கப்பட்டேன். ஒவ்வொரு மாதமும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பல மணிநேரத்தைச் செலவிட்டேன். என் வியாதி தலைகாட்டிய போதெல்லாம், வெளியே சென்று பிரசங்கிக்க முடியவில்லை; அந்தச் சமயங்களில் அப்பகுதியிலுள்ள ஜனங்களுக்கு பைபிள் விஷயங்கள் சம்பந்தமாகக் கடிதங்கள் எழுதி, பைபிளைப் படிக்க ஊக்குவித்தேன்.
என் வியாதி கண்டுபிடிக்கப்பட்டது
இந்தச் சமயத்தில் என் அப்பா அம்மா தங்களுடைய சக்திக்கு மீறி செலவு செய்து, சிகிச்சைக்காக என்னை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துப் போனார்கள். எனக்குக் காக்காய்வலிப்பு வியாதி வந்திருப்பதாக அவர் கண்டுபிடித்துச் சொன்னார். அப்போது பெற்ற சிகிச்சை காரணமாகச் சுமார் நான்கு வருடங்களுக்கு வியாதி தணிந்திருந்தது. இதற்கிடையில், பயனியர் ஊழியப் பள்ளியில் என்னால் கலந்துகொள்ள முடிந்தது; இப்பள்ளியில் பெற்ற உற்சாகம், பிரசங்கிப்பதற்குத் தேவை அதிகமுள்ள இடங்களில் ஊழியம் செய்வதற்கான என் ஆசையை அதிகரித்தது.
எந்தளவுக்கு அதிகமாக ஊழியம் செய்ய ஆசைப்படுகிறேன் என்பதை என் பெற்றோர் அறிந்திருந்தார்கள். என் வியாதி ஓரளவுக்குத் தணிந்திருந்ததால், வீட்டிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில், மிசோயகான் மாகாணத்திலுள்ள சிடாக்வாரோ என்ற இடத்தில் போய் ஊழியம் செய்ய அவர்கள் என்னை அனுமதித்தார்கள். அங்குள்ள பயனியர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்தது, முழுநேர ஊழியத்தைப் பொன்னெனப் போற்ற எனக்கு உதவியது.
சிடாக்வாரோ நகரில் இரண்டு வருடங்கள் இருந்திருப்பேன், திடீரென என் வியாதி மறுபடியும் தலைகாட்டியது. என்ன செய்வதென தெரியாமல், சோகமே உருவாக, மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு என் அப்பா அம்மாவிடம் திரும்பி வந்தேன். ஒரு நரம்பியல் நிபுணரைப் போய் பார்த்தபோது, அதுவரை நான் பயன்படுத்தி வந்த மருந்தால் என் ஈரல் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நிபுணர்களிடம் சென்று சிகிச்சை பெற போதிய வசதி இல்லாததால், மாற்று சிகிச்சை பெற தீர்மானித்தேன். என் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது, எனவே பயனியர் செய்வதை விட்டுவிட நேர்ந்தது. ஒவ்வொரு முறை காக்காய்வலிப்பு வந்தபோதும் சோர்ந்து போனேன். ஆனால் பைபிளிலுள்ள சங்கீதங்களைப் படித்து, யெகோவாவிடம் ஜெபித்தபோது ஆறுதலையும் பலத்தையும் பெற்றேன்.—சங்கீதம் 94:17-19.
என் இலட்சியத்தை அடைந்தேன்
தினந்தினம் இரண்டு முறையாவது காக்காய்வலிப்பு வந்த சமயம்தான் மிக மோசமான சமயமாக இருந்தது. அதன் பிறகோ ஒரு திருப்புக்கட்டம் ஏற்பட்டது. காக்காய்வலிப்புக்கு ஒரு டாக்டர் விசேஷ சிகிச்சை அளித்தார், அதனால் நோய் சரியாகிவிட்டதைப் போல் ரொம்ப காலத்துக்கு உணர்ந்தேன். எனவே 1995, செப்டம்பர் 1-ம் தேதி மீண்டும் பயனியர் ஊழியம் செய்யத் தொடங்கினேன். இரண்டு வருடத்தில் ஒருமுறைகூட காக்காய்வலிப்பு வராமல் என் உடல்நிலை சீராக இருந்ததால் விசேஷப் பயனியராகச் சேவை செய்ய விண்ணப்பித்தேன். அதாவது, எங்கு தேவை அதிகமுள்ளதோ அங்கு போய், இன்னும் அதிக நேரத்தை ஊழியத்தில் செலவிட விரும்புவதைத் தெரிவித்தேன். அப்படி விசேஷப் பயனியராகச் சேவை செய்ய நியமிப்பைப் பெற்றபோது எனக்குச் சந்தோஷம் தாங்கவில்லை! சிறுமியாக இருந்தபோது வைத்த என் இலட்சியக் கனவு நனவானது.
2001, ஏப்ரல் 1-ம் தேதி விசேஷப் பயனியராக ஊழியம் செய்வதற்கு, ஈடால்கோ மாகாணத்திலுள்ள மலை சூழ்ந்த ஒரு சிறிய குடியிருப்புக்குச் சென்றேன். இப்போது குவாநாஹ்வாடோ மாகாணத்திலுள்ள ஒரு சிறிய நகரத்தில் ஊழியம் செய்து வருகிறேன். மருந்து சாப்பிடுவது, போதுமான ஓய்வெடுப்பது போன்ற விஷயங்களில் ரொம்பவே கவனமாக இருக்கிறேன். சாப்பாட்டு விஷயத்தில், முக்கியமாக கொழுப்புச் சத்துள்ள உணவு, காஃபின், டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றைத் தவிர்ப்பதிலும் ரொம்பவே கவனமாக இருக்கிறேன். கோபம், அளவுக்கதிகமான சோகம் போன்றவற்றைக்கூட தவிர்க்க முயற்சி செய்கிறேன். இப்படியெல்லாம் கவனமாக இருப்பதால் எனக்குப் பல நன்மைகள் உண்டாகியிருக்கின்றன. விசேஷப் பயனியராகச் சேவை செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஒரேவொரு முறை மட்டுமே என் வியாதி தலைகாட்டியிருக்கிறது.
எனக்குத் திருமணமும் ஆகவில்லை, குடும்பப் பொறுப்புகளும் இல்லை; எனவே, விசேஷப் பயனியராக என் ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதில் ஆனந்தப்படுகிறேன். ‘நம் கிரியையையும் . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு யெகோவா அநீதியுள்ளவரல்லவே’ என்பதை அறிந்திருப்பது ஆறுதலின் அருமருந்தாய் இருக்கிறது. அவர் எவ்வளவு அன்புள்ளவர்! நம்மால் கொடுக்க முடியாததைக் கொடுக்கும்படி அவர் நம்மிடம் கேட்பதே இல்லை. இந்த உண்மையை உணர்ந்திருப்பது சமநிலையுடன் சிந்திப்பதற்கு எனக்கு உதவியிருக்கிறது; ஒருவேளை என் உடல்நலம் மோசமாகி மீண்டும் பயனியர் ஊழியம் செய்வதை விட்டுவிட நேர்ந்தால்கூட மனப்பூர்வமாகச் செய்யும் என் சேவையில் யெகோவா பிரியப்படுவார் என்பதை அறிந்திருக்கிறேன்.—எபிரெயர் 6:10; கொலோசெயர் 3:24.
என் மத நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களுடன் தினமும் பேசுவது பலத்தை அளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் கடவுள் தரப்போகும் ஆசீர்வாதங்களை எப்போதும் என் கண்முன் வைக்கவும் உதவுகிறது. புதிய உலகில் வியாதி இருக்காது, ‘துக்கமும், அலறுதலும், வருத்தமும் இருக்காது; முந்தினவைகள் ஒழிந்துபோயிருக்கும்’ என்பது பைபிளின் வாக்குறுதி, அல்லவா?—வெளிப்படுத்துதல் 21:3, 4; ஏசாயா 33:24; 2 பேதுரு 3:13. (g05 6/22)
[பக்கம் 26-ன் படங்கள்]
சுமார் 7 வயதில் (மேலே); சுமார் 16 வயதில், முழுக்காட்டுதல் பெற்ற கொஞ்ச நாட்களுக்குப் பிறகு
[பக்கம் 27-ன் படம்]
தோழியுடன் பிரசங்கித்தபோது