அதிகாரம் 11
உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
1. குடும்பங்களில் பிளவுகளை உண்டாக்கக்கூடிய சில காரியங்கள் யாவை?
அன்பு, புரிந்துகொள்ளுதல், சமாதானம் ஆகியவை இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள். உங்கள் குடும்பம் அப்படிப்பட்ட ஒரு குடும்பமாயிருக்குமென்று நம்புகிறோம். எண்ணற்ற குடும்பங்கள் அந்த விவரிப்புக்கு பொருத்தமாய் இருக்க தவறுவதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக பிளவுற்றிருப்பதும் வருந்தத்தக்கதாய் இருக்கிறது. குடும்பங்களை எது பிளவுறச்செய்கிறது? இந்த அதிகாரத்தில் நாம் மூன்று விஷயங்களைக் கலந்தாலோசிப்போம். சில குடும்பங்களில் எல்லா அங்கத்தினர்களும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருப்பதில்லை. வேறுசில குடும்பங்களில், பிள்ளைகள் அனைவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகளாக இல்லாமலிருக்கலாம். இன்னும் மற்ற குடும்பங்களில் பிழைப்புக்காக போராடிக்கொண்டிருப்பது அல்லது கூடுதலான பொருளுடைமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை குடும்ப அங்கத்தினர்கள் பிரிந்து இருக்கும்படி கட்டாயப்படுத்துவதாய் தோன்றுகிறது. இருப்பினும், ஒரு குடும்பத்தைப் பிரிக்கும் சூழ்நிலைகள் மற்ற குடும்பத்தை ஒருவேளை பாதிக்காமல் இருக்கலாம். எது வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது?
2. குடும்ப வாழ்க்கையைப் பற்றிய வழிநடத்துதலைப் பெற்றுக்கொள்வதற்கு சிலர் எங்கே நாடுகின்றனர், ஆனால் அப்படிப்பட்ட வழிநடத்துதலுக்கு எது மிகச் சிறந்த ஆதாரமாய் இருக்கிறது?
2 நோக்குநிலை ஒரு காரணக்கூறு ஆகும். அடுத்த நபரின் நோக்குநிலையை நீங்கள் உண்மைமனதோடு புரிந்துகொள்ள முயற்சிசெய்தால், ஒரு ஐக்கியப்பட்ட குடும்பத்தை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதை நீங்கள் கண்டுணர்வதற்கான சாத்தியம் அதிகம் இருக்கும். இரண்டாவது காரணக்கூறு, நீங்கள் நாடும் அறிவுரையின் ஆதாரம். பெரும்பாலான மக்கள் உடன்வேலையாட்கள், அயலவர், செய்தித்தாள் எழுத்தாளர்கள், அல்லது மற்ற மனித வழிகாட்டிகள் ஆகியோரின் புத்திமதியைப் பின்பற்றுகின்றனர். ஆனால் சிலர் தங்கள் நிலைமையைக் குறித்து கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதைக் கண்டுபிடித்து, பின்னர் தாங்கள் கற்றுக்கொண்டவற்றை பொருத்தினர். இதைச் செய்வது சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்கு எவ்வாறு ஒரு குடும்பத்துக்கு உதவும்?—2 தீமோத்தேயு 3:16, 17.
உங்கள் கணவர் வேறு மதத்தைச் சேர்ந்தவராயிருந்தால்
அடுத்த நபருடைய நோக்குநிலையை புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள்
3. (அ) வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்வதைப் பற்றி பைபிள் என்ன புத்திமதியை அளிக்கிறது? (ஆ) வாழ்க்கைத்துணைவரில் ஒருவர் விசுவாசியாயிருந்து மற்றவர் இல்லையென்றால், அப்போது பொருந்தக்கூடிய சில அடிப்படையான நியமங்கள் யாவை?
3 வித்தியாசமான மதநம்பிக்கையுள்ள ஒருவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும்படி பைபிள் கண்டிப்பாய் நமக்கு புத்திமதி அளிக்கிறது. (உபாகமம் 7:3, 4; 1 கொரிந்தியர் 7:39) ஒருவேளை உங்கள் திருமணத்திற்குப் பிறகு நீங்கள் பைபிளிலிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் உங்கள் கணவரோ கற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். அப்போது என்ன செய்வது? திருமண உறுதிமொழிகள் இன்னும் செல்லுபடியாகின்றன. (1 கொரிந்தியர் 7:10) திருமண பிணைப்பின் நிரந்தரத்தன்மையை பைபிள் அழுத்தியுரைப்பதால், திருமணமான நபர்கள் தங்கள் பிரச்சினைகளை விட்டு ஓடிவிடாமல் அவற்றைத் தீர்த்துக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றனர். (எபேசியர் 5:28-31; தீத்து 2:4, 5) பைபிளின் மதத்தை நடைமுறையில் கடைப்பிடிப்பதை உங்கள் கணவன் கடுமையாய் எதிர்த்தால் என்ன செய்வது? நீங்கள் சபைக்கூட்டங்களுக்கு செல்வதைத் தடைசெய்ய அவர் முயற்சிசெய்யலாம், அல்லது தன் மனைவி வீட்டுக்கு வீடு சென்று, மதத்தைப் பற்றி பேசுவதை விரும்பவில்லை என்று சொல்லலாம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
4. கணவன் தன் விசுவாசத்தை பகிர்ந்துகொள்ளவில்லை என்றால் மனைவி எந்த விதத்தில் ஒற்றுணர்வை காண்பிக்கலாம்?
4 ‘என் கணவன் ஏன் அவ்வாறு உணருகிறார்?’ என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 16:20, 23) நீங்கள் செய்துகொண்டிருப்பதை அவர் உண்மையிலேயே புரிந்துகொள்ளவில்லையென்றால், அவர் உங்களைக் குறித்து கவலைப்படலாம். அல்லது உங்கள் உறவினருக்கு முக்கியமாய் இருக்கும் சில பழக்கவழக்கங்களில் நீங்கள் இனிமேலும் கலந்துகொள்ளாததால் அவர்களிடமிருந்து அவர் தொல்லை அனுபவித்துக்கொண்டு இருக்கலாம். “வீட்டில் நான் தனியாக கைவிடப்பட்டவனைப் போல் உணர்ந்தேன்,” என்று ஒரு கணவன் சொன்னார். இந்தக் கணவன் மதத்தின் காரணமாக தன் மனைவியை இழந்துவிடுவதைப் போல் உணர்ந்தார். இருப்பினும், அவர் தனிமையாய் இருந்ததை ஒப்புக்கொள்வதற்கு பெருமை அவரை தடுத்தது. கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது உங்கள் கணவனை குறைவாக நேசிக்கிறீர்கள் என்பதை யெகோவாவின் பேரில் உங்களுக்கிருக்கும் அன்பு அர்த்தப்படுத்தாது என்பதை மறுபடியும் உறுதிசெய்வது உங்கள் கணவனுக்கு தேவைப்படலாம். அவரோடு நேரத்தை செலவிட நிச்சயமாயிருங்கள்.
5. வேறு மதத்தில் இருக்கும் கணவனையுடைய மனைவி என்ன சமநிலையை காத்துக்கொள்ள வேண்டும்?
5 இருப்பினும், அந்த நிலையை ஞானமாக சமாளிக்கப் போகிறீர்களென்றால், அதைக்காட்டிலும் அதிமுக்கியமான ஒன்றை சிந்தித்துப்பார்க்க வேண்டும். கடவுளுடைய வார்த்தை மனைவிகளை இவ்வாறு ஊக்குவிக்கிறது: “மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.” (கொலோசெயர் 3:18) இவ்வாறு, அது தன்னிச்சையாக செயல்படும் ஆவிக்கு எதிராக எச்சரிக்கிறது. கூடுதலாக, “கர்த்தருக்கேற்கும்படி” என்று சொல்வதன் மூலம், ஒருவர் தன் கணவனுக்கு கீழ்ப்பட்டிருப்பது என்பது, ஆண்டவருக்கு கீழ்ப்படிவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த வசனம் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. அதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்.
6. ஒரு கிறிஸ்தவ மனைவி என்ன நியமங்களை மனதில் வைக்க வேண்டும்?
6 ஒரு கிறிஸ்தவருக்கு, சபைக்கூட்டங்களுக்கு ஆஜராவதும் பைபிளை அடிப்படையாகக்கொண்ட விசுவாசத்தைக் குறித்து மற்றவர்களுக்கு சாட்சிகொடுப்பதும் மெய் வணக்கத்தின் முக்கியமான, புறக்கணிக்க முடியாத அம்சங்களாய் இருக்கின்றன. (ரோமர் 10:9, 10, 14; எபிரெயர் 10:24, 25) அப்படியென்றால், ஒரு மானிடன் கடவுளின் திட்டவட்டமான கட்டளை ஒன்றுக்கு இணங்கிப்போக வேண்டாம் என்று உங்களுக்கு நேரடியாக கட்டளையிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர் அறிவித்தனர்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” (அப்போஸ்தலர் 5:29) அவர்களுடைய முன்மாதிரி வாழ்க்கையில் ஏற்படும் அநேக சூழ்நிலைகளுக்கு பொருத்தமாயிருக்கும் முன்னோடியை வைக்கிறது. யெகோவாவுக்கு மட்டுமே உரிய பக்தியைக் கொடுப்பதற்கு அவர் பேரிலுள்ள அன்பு உங்களை உந்துவிக்குமா? அதே சமயத்தில், உங்கள் கணவர் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் இதைச் செய்வதற்கு அவர் பேரிலுள்ள அன்பும் மரியாதையும் உங்களை தூண்டுவிக்குமா?—மத்தேயு 4:10; 1 யோவான் 5:3.
7. ஒரு கிறிஸ்தவ மனைவி என்ன தீர்மானத்தை உடையவளாய் இருக்க வேண்டும்?
7 இது எப்போதும் நிகழக்கூடியதல்ல என்று இயேசு குறிப்பிட்டார். மெய் வணக்கத்திற்கு எதிராக இருக்கும் எதிர்ப்பின் காரணமாக, சில குடும்பங்களில் உள்ள விசுவாசத்திலிருக்கும் அங்கத்தினர்கள், தங்களுக்கும் மீதமுள்ள குடும்ப அங்கத்தினர்களுக்கும் நடுவிலே ஒரு பட்டயம் வந்து உறவைத் துண்டித்துப்போட்டதாக உணருவார்கள். (மத்தேயு 10:34-36) ஜப்பானில் வசிக்கும் ஒரு பெண் இதை அனுபவித்தாள். அவளுடைய கணவன் அவளை 11 வருடங்களாக எதிர்த்தார். அவர் அவளை கடுமையாகவும் மிக மோசமாகவும் நடத்தினார்; அடிக்கடி அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளி பூட்டி வைத்தார். ஆனால் அவளோ விடாமுயற்சியுடன் இருந்தாள். கிறிஸ்தவ சபையில் இருந்த நண்பர்கள் அவளுக்கு உதவிசெய்தனர். அவள் இடைவிடாமல் ஜெபித்து 1 பேதுரு 2:20-லிருந்து மிகுதியான உற்சாகத்தைப் பெற்றுக்கொண்டாள். தான் உறுதியாக நிலைத்திருந்தால், ஒருநாள் தன் கணவனும் யெகோவாவை சேவிப்பதில் தன்னோடு சேர்ந்துகொள்வார் என்று இந்தக் கிறிஸ்தவ பெண் உறுதியாய் நம்பினாள். அவரும் சேர்ந்துகொண்டார்.
8, 9. ஒரு மனைவி தன் கணவனுக்கு முன்பு தேவையற்ற இடையூறுகளை வைக்காமல் தவிர்ப்பதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும்?
8 உங்கள் துணைவரின் மனப்பான்மையை நல்லமுறையில் பாதிப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய நடைமுறையான காரியங்கள் அதிகம் உண்டு. உதாரணமாக, உங்கள் கணவன் உங்கள் மதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், மற்ற விஷயங்களில் அவர் குறைகூறுவதற்கு போதிய காரணங்களைக் கொடுக்காதீர்கள். வீட்டை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் தனிப்பட்ட தோற்றத்தின் பேரில் அக்கறை காண்பியுங்கள். அன்பு, பாராட்டுதல் ஆகியவற்றைத் தெரிவிக்கும் சொற்களை தாராளமாய் உபயோகியுங்கள். குறைகூறுவதற்குப் பதிலாக ஆதரவாயிருங்கள். தலைமைவகிப்புக்காக நீங்கள் அவரையே நோக்கியிருக்கிறீர்கள் என்பதை காண்பியுங்கள். உங்களுக்கு எதிராக தவறிழைக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் பதிலுக்குப்பதில் செய்யாதீர்கள். (1 பேதுரு 2:21, 23) மானிட அபூரணங்களை சகித்துக்கொள்ளுங்கள், சச்சரவுகள் ஏற்பட்டால் மனத்தாழ்மையோடு மன்னிப்புக் கேட்பதில் முந்திக்கொள்ளுங்கள்.—எபேசியர் 4:26.
9 நீங்கள் கூட்டங்களுக்கு செல்வதன் காரணத்தால் அவருடைய சாப்பாடு தாமதமாகும்படி அனுமதிக்காதீர்கள். உங்கள் கணவன் வீட்டில் இல்லாத சமயங்களில் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்ளவும்கூட நீங்கள் விரும்பலாம். கணவன் விரும்பாத சமயங்களில் கிறிஸ்தவ மனைவி தன் கணவனுக்கு பிரசங்கித்துக்கொண்டிருப்பதைத் தவிர்ப்பது ஞானமானது. மாறாக, அவள் அப்போஸ்தலனாகிய பேதுருவின் புத்திமதியைப் பின்பற்றுகிறாள்: “அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.” (1 பேதுரு 3:1, 2) கடவுளுடைய ஆவியின் கனிகளை அதிக முழுமையாக வெளிப்படுத்திக் காண்பிக்க கிறிஸ்தவ மனைவிகள் உழைக்கின்றனர்.—கலாத்தியர் 5:22, 23.
மனைவி வேறுமதத்தைச் சேர்ந்தவளாய் இருந்தால்
10. மனைவி வேறு மதத்தைச் சேர்ந்தவளாயிருந்தால் விசுவாசத்தில் இருக்கும் கணவன் அவளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
10 கணவன் விசுவாசத்தில் இருந்து, மனைவி விசுவாசத்தில் இல்லையென்றால் என்ன செய்வது? அப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு பைபிள் வழிநடத்துதலைக் கொடுக்கிறது. அது சொல்கிறது: “சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 7:12) அது கணவன்மாருக்கும் அறிவுரை கூறுகிறது: “உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்.”—கொலோசெயர் 3:19.
11. மனைவி வேறு மதத்தைச் சேர்ந்தவளாய் இருந்தால், ஒரு கணவன் எவ்வாறு பகுத்துணர்வைக் காண்பித்து தன் மனைவிமீது சாதுரியமாக தலைமை வகிப்பை பிரயோகிக்கலாம்?
11 வேறு மதத்தைச் சேர்ந்த மனைவியையுடைய கணவராக நீங்கள் இருந்தால் உங்கள் மனைவிக்கு மரியாதையும் அவளுடைய உணர்வுகளின் பேரில் கரிசனையும் காண்பிப்பதற்கு விசேஷமாக கவனமாயிருங்கள். அவள் வயதுவந்த பெண்ணாக இருப்பதால், தன் மதசம்பந்தமான நம்பிக்கைகளை நடைமுறையில் கடைப்பிடிப்பதற்கு ஓரளவு சுயாதீனத்தைப் பெற, அவள் தகுதியுள்ளவளாய் இருக்கிறாள். நீங்கள் அவற்றை ஒத்துக்கொள்ளவில்லையென்றாலும்கூட அவள் அதற்குத் தகுதியுள்ளவளாய் இருக்கிறாள். உங்கள் விசுவாசத்தைக் குறித்து அவளிடம் முதல் முறையாக நீங்கள் பேசும்போது, புதிதான ஒன்றை நீங்கள் இப்போது நம்புவதன் காரணமாக, அவள் நீண்டகாலமாய் வைத்திருந்த நம்பிக்கைகளை விட்டுவிடும்படி எதிர்பார்க்காதீர்கள். அவளும் அவளுடைய குடும்பமும் நீண்டகாலமாய் மனதில் வைத்துப் போற்றி வந்த பழக்கங்கள் பொய்யானவை என்று திடீரென்று சொல்லிவிடுவதற்குப் பதிலாக, வேதாகமத்திலிருந்து பொறுமையோடு அவளுடன் காரணம் காண்பித்து பேசுவதற்கு முயற்சிசெய்யுங்கள். சபை நடவடிக்கைகளுக்கு நீங்கள் அதிகப்படியான நேரத்தை செலவழித்தீர்களென்றால், அவள் அசட்டை செய்யப்பட்டதாக ஒருவேளை உணரலாம். நீங்கள் யெகோவாவை சேவிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை அவள் ஒருவேளை எதிர்க்கலாம், இருப்பினும் அடிப்படை காரணம் வெறுமனே: “எனக்கு உங்கள் நேரம் அதிகம் தேவை!” என்பதாக இருக்கலாம். பொறுமையோடு இருங்கள். காலப்போக்கில், உங்கள் அன்பான கரிசனையின் காரணமாக, அவள் மெய் வணக்கத்தைத் தழுவிக்கொள்ள உதவப்படலாம்.—கொலோசெயர் 3:12-14; 1 பேதுரு 3:8, 9.
பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்
12. கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் தங்கள் பிள்ளைகளை பயிற்றுவிப்பதில் வேதாகம நியமங்களை எவ்வாறு பொருத்த வேண்டும்?
12 வணக்கத்தில் ஐக்கியப்பட்டில்லாத குடும்பத்தில் பிள்ளைகளுக்கு மதசம்பந்தமான போதனை அளிப்பது சில சமயங்களில் ஒரு பிரச்சினையாக ஆகிவிடுகிறது. வேதாகம நியமங்கள் எவ்வாறு பொருத்தப்பட வேண்டும்? பிள்ளைகளுக்கு போதனை அளிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பை பைபிள் தகப்பனுக்கு அளிக்கிறது, ஆனால் தாய்க்கும்கூட முக்கியமான பங்கு இருக்கிறது. (நீதிமொழிகள் 1:8; ஒப்பிடுக: ஆதியாகமம் 18:19; உபாகமம் 11:19, 20.) தகப்பன் கிறிஸ்துவின் தலைமை வகிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, அவர் இன்னும் குடும்பத் தலைவராக இருக்கிறார்.
13, 14. தன் மனைவி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கிறிஸ்தவக்கூட்டங்களுக்கு செல்வதையோ அல்லது அவர்களோடு படிப்பதையோ கணவன் தடைசெய்தால், அவள் என்ன செய்யலாம்?
13 மதசம்பந்தமான விஷயங்களை தாய் பிள்ளைகளுக்கு போதிப்பதைக் குறித்து சில அவிசுவாசியான தகப்பன்மார் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர். உங்கள் பிள்ளைகளை சபைக்கூட்டங்களுக்கு அழைத்துச்செல்ல உங்கள் கணவன் அனுமதி தர மறுத்தால் அல்லது வீட்டில் பிள்ளைகளோடு பைபிள் படிப்பதையும்கூட தடைசெய்தால் அப்போது என்ன செய்வது? இப்போது நீங்கள் அநேக கடமைப்பொறுப்புகளை—யெகோவா தேவனிடமாகவும், உங்கள் தலைவராகிய கணவனிடமாகவும், நீங்கள் பெரிதும் நேசிக்கும் பிள்ளைகளிடமாகவும் உங்களுக்கு இருக்கும் கடமைப்பொறுப்புகளை—சமநிலைப்படுத்த வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். இவையனைத்தையும் ஒன்றோடொன்று முரண்படாதபடி எவ்வாறு நீங்கள் செய்துமுடிக்கலாம்?
14 இவ்விஷயத்தைக் குறித்து நீங்கள் நிச்சயமாகவே ஜெபம் செய்வீர்கள். (பிலிப்பியர் 4:6, 7; 1 யோவான் 5:14) ஆனால் இறுதியில் என்ன போக்கை பின்பற்ற வேண்டும் என்பதைக் குறித்து நீங்கள்தானே தீர்மானிக்க வேண்டும். நீங்கள் சாதுரியத்தோடு செயல்பட ஆரம்பித்து, கணவனுடைய தலைமை வகிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்பதை அவருக்கு தெளிவாக்கினால், அவருடைய எதிர்ப்பு இறுதியில் குறைந்துவிடலாம். உங்கள் கணவன் பிள்ளைகளைக் கூட்டங்களுக்கு அழைத்துச்செல்வதை அல்லது அவர்களோடு முறைப்படியாக பைபிள் படிப்பு நடத்துவதைத் தடைசெய்தாலும்கூட, நீங்கள் தொடர்ந்து அவர்களுக்கு கற்பிக்கலாம். தினந்தோறும் பிள்ளைகளோடு பேசுவதன் மூலமும் உங்களுடைய நல்ல முன்மாதிரியின் மூலமும் யெகோவாவின் பேரில் ஓரளவு அன்பையும், அவருடைய வார்த்தையின் பேரில் விசுவாசத்தையும், அவர்களுடைய தகப்பன் உட்பட பெற்றோர் மீது மரியாதையையும், மற்ற நபர்கள் மீது அன்பான அக்கறையையும், கடமையுணர்ச்சியோடு செய்யப்படும் வேலைகளின்பேரில் உயர்வான மதிப்பையும் உங்கள் பிள்ளைகளில் படிப்படியாக வளர்க்க முயற்சிசெய்யுங்கள். காலப்போக்கில், தகப்பன் நல்ல விளைவுகளைக் கவனித்து உங்கள் முயற்சிகளின் மதிப்பைப் போற்றலாம்.—நீதிமொழிகள் 23:24.
15. பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதில் விசுவாசத்தில் இருக்கும் தகப்பனின் பொறுப்பு என்ன?
15 நீங்கள் விசுவாசத்தில் இருக்கும் கணவனாயிருந்து, உங்கள் மனைவி விசுவாசத்தில் இல்லையென்றால், அப்போது உங்கள் பிள்ளைகளை “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்” வளர்க்க வேண்டிய பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். (எபேசியர் 6:4, NW) அவ்வாறு செய்கையில், உங்கள் மனைவியோடு கொண்டுள்ள தொடர்புகளில் நீங்கள் தயவாகவும், அன்பாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும்.
உங்கள் மதம் உங்கள் பெற்றோரின் மதமாக இல்லாவிடில்
16, 17. தங்கள் பெற்றோரின் மதமல்லாத வேறு மதத்தை பிள்ளைகள் தழுவிக்கொண்டால் என்ன பைபிள் நியமங்களை பிள்ளைகள் ஞாபகத்தில் வைக்க வேண்டும்?
16 தங்கள் பெற்றோர் வைத்திருக்கும் மத நம்பிக்கைகளிலிருந்து வித்தியாசமான மத நம்பிக்கைகளை சிறு பிள்ளைகள்கூட தழுவிக்கொள்வது இப்போது வழக்கத்துக்கு மாறானதாய் இல்லை. நீங்கள் அவ்வாறு செய்திருக்கிறீர்களா? அப்படியென்றால் பைபிள் உங்களுக்கு புத்திமதி அளிக்கிறது.
17 கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். . . . உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” (எபேசியர் 6:1, 3) அது பெற்றோரிடமாக ஆரோக்கியமான மரியாதை காண்பிப்பதை உட்படுத்துகிறது. பெற்றோருக்கு கீழ்ப்படிவது முக்கியமானதாய் இருந்தபோதிலும், மெய்க் கடவுளுக்கு மரியாதை செலுத்தாமல் அது செய்யப்படக்கூடாது. ஒரு பிள்ளை தீர்மானங்கள் எடுக்க ஆரம்பிப்பதற்கு போதிய வயது அடைந்தவுடன், அவன் தன் செயல்களுக்கான அதிகரித்த பொறுப்பை ஏற்பவனாய் இருக்கிறான். இது உலகப்பிரகாரமான சட்டம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டுமல்லாமல் விசேஷமாக தெய்வீக சட்டத்தைக் குறித்த விஷயத்திலும் உண்மையாயிருக்கிறது. “ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்,” என்று பைபிள் குறிப்பிடுகிறது.—ரோமர் 14:12.
18, 19. பிள்ளைகள் பெற்றோரின் மதத்திலிருந்து வித்தியாசமான மதத்தைத் தழுவிக்கொண்டிருந்தால், தங்கள் விசுவாசத்தை பெற்றோர் சிறந்தமுறையில் புரிந்துகொள்வதற்கு எவ்வாறு உதவிசெய்யலாம்?
18 உங்கள் நம்பிக்கைகள் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்விக்கும்படி செய்ததென்றால், உங்கள் பெற்றோரின் நோக்குநிலையைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள். பைபிள் போதனைகளைக் கற்றுக்கொண்டு அதைப் பொருத்துவதன் காரணமாக நீங்கள் அதிக மரியாதையுள்ளவர்களாகவும், அதிக கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும், பெற்றோர் உங்களிடம் கேட்பவற்றை ஊக்கத்தோடு செய்பவர்களாகவும் இருந்தால் அவர்கள் உங்கள்மேல் பிரியப்படுவார்கள். என்றபோதிலும், அவர்கள் தனிப்பட்டவிதமாய் போற்றும் நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் தள்ளிவிடும்படி உங்கள் புதிய விசுவாசம் செய்ததென்றால், பெற்றோர் உங்களுக்கு அளிக்க விரும்பும் பரம்பரையாக வந்த காரியங்களை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்று அவர்கள் உணரலாம். நீங்கள் செய்துகொண்டிருக்கும் காரியம் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இல்லையென்றால் அல்லது நீங்கள் பொருள்சம்பந்தமாக செழித்தோங்குவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய நாட்டங்களை உங்கள் கவனத்திலிருந்து அது வேறு வழியில் திருப்புவதாய் பெற்றோர் உணர்ந்தால், அவர்கள் உங்கள் நலனைக் குறித்தும்கூட பயப்படலாம். பெருமையும்கூட ஒரு தடையாக இருக்கலாம். உண்மையில், நீங்கள் செய்வது சரி என்றும் அவர்கள் செய்வது தவறு என்றும் நீங்கள் சொல்வதாக அவர்கள் உணரலாம்.
19 ஆகையால், விரைவில், மூப்பர்களில் சிலரை அல்லது உள்ளூர் சபையிலிருந்து சில முதிர்ச்சிவாய்ந்த சாட்சிகளை உங்கள் பெற்றோர் சந்திக்கும்படி ஏற்பாடுசெய்ய முயற்சி செய்யுங்கள். ராஜ்ய மன்றத்துக்குச் சென்று அங்கு கலந்தாலோசிக்கப்படும் காரியங்களை அவர்களே கேட்கும்படியும், யெகோவாவின் சாட்சிகள் என்ன வகையான ஜனங்கள் என்பதை நேரடியாக காணும்படியும் உங்கள் பெற்றோரை உற்சாகப்படுத்துங்கள். காலப்போக்கில் உங்கள் பெற்றோரின் மனநிலை சரியாகலாம். பெற்றோர் பிடிவாதமாக மறுத்து எதிர்ப்புத் தெரிவித்து, பைபிள் பிரசுரங்களை அழித்துப்போட்டு, பிள்ளைகள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்வதை தடைசெய்தாலும்கூட, வேறு இடங்களில் சென்று வாசிப்பதற்கும், உடன் கிறிஸ்தவர்களோடு பேசுவதற்கும், சாட்சி கொடுப்பதற்கும், சந்தர்ப்பவசமாக மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கும் பொதுவாக வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் யெகோவாவிடம்கூட ஜெபிக்கலாம். சில இளைஞர்கள் அதிகத்தைச் செய்வதற்குமுன் குடும்பமாக வாழும் வீட்டை விட்டு வெளியே சென்று வாழ்வதற்கு போதிய வயது வரும்வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் வீட்டில் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், “உங்கள் தகப்பனையும் தாயையும் கனம்பண்ண” மறவாதிருங்கள். வீட்டில் சமாதானம் நிலவ உங்கள் பங்கைச் செய்யுங்கள். (ரோமர் 12:17, 18) எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளோடு சமாதானத்தைத் தொடர்ந்து நாடுங்கள்.
மாற்றான் தாய்-தகப்பனாய் இருப்பதன் சவால்
20. தங்கள் தகப்பனோ அல்லது தாயோ மாற்றான் தகப்பனாக அல்லது மாற்றான் தாயாக இருந்தால் பிள்ளைகள் என்ன உணர்ச்சிகளைப் பெற்றிருக்கலாம்?
20 அநேக வீடுகளில் மிகப் பெரிய சவாலளிக்கும் சூழ்நிலை மதசம்பந்தமான ஒன்றல்ல, ஆனால் உறவுமுறை சார்ந்த பிரச்சினைகள் ஆகும். இன்றைய குடும்பங்களில் அநேகம் பெற்றோர் ஒருவரின் அல்லது இருவரின் முந்தைய திருமணங்களிலிருந்து பிறந்த பிள்ளைகளை உள்ளடக்குகின்றன. அப்படிப்பட்ட குடும்பங்களில் பிள்ளைகள் பொறாமையையும் கோபத்தையும் அனுபவிக்கலாம் அல்லது ஒருவேளை பற்றுறுதிகளில் முரண்பாட்டை அனுபவிக்கலாம். அதன் விளைவாக, மாற்றான் தாய்-தகப்பன் ஒரு நல்ல தகப்பனாக அல்லது தாயாக இருப்பதற்கு எடுக்கும் உண்மையான முயற்சிகளை அவர்கள் தடைசெய்யலாம். மாற்றான் குடும்பம் வெற்றிபெறுவதற்கு எது உதவக்கூடும்?
இயற்கையான பெற்றோராயிருந்தாலும் மாற்றான் பெற்றோராயிருந்தாலும், வழிநடத்துதலுக்காக பைபிள் பேரில் சார்ந்திருங்கள்
21. விசேஷமான சூழ்நிலைகள் அவர்களுக்கு இருந்தபோதிலும், மாற்றான் தாய்-தகப்பன் பைபிளில் காணப்படும் நியமங்களை ஏன் உதவிக்காக நாட வேண்டும்?
21 விசேஷமான சூழ்நிலைகள் இருந்தாலும்கூட, மற்ற குடும்பங்களில் வெற்றியைக் கொண்டுவரும் பைபிள் நியமங்கள் இங்கேயும்கூட பொருந்தும். அந்தப் பைபிள் நியமங்களைப் புறக்கணிப்பது ஒரு பிரச்சினையைத் தற்காலிகமாக தீர்த்து வைப்பதாக தோன்றலாம், ஆனால் பின்னர் மனவேதனைக்கு வழிநடத்தும் சாத்தியம் இருக்கிறது. (சங்கீதம் 127:1, 2; நீதிமொழிகள் 29:15) ஞானத்தையும் பகுத்துணர்வையும் வளர்த்துக்கொள்ளுங்கள்—நீண்ட நாளைய பலன்களை மனதில் வைத்து தெய்வீக நியமங்களைப் பொருத்துவதற்கு ஞானமும், குடும்ப அங்கத்தினர்கள் ஏன் சிலவற்றை சொல்கின்றனர் மற்றும் செய்கின்றனர் என்பதை கண்டுணர்வதற்கு பகுத்துணர்வும், ஒற்றுணர்வு காண்பிப்பதற்கான தேவையும் உள்ளது.—நீதிமொழிகள் 16:21; 24:3, NW; 1 பேதுரு 3:8.
22. மாற்றான் தாய்-தகப்பனை ஏற்றுக்கொள்வதை பிள்ளைகள் ஏன் கடினமாய் காண்பர்?
22 நீங்கள் ஒரு மாற்றான் தாய் அல்லது மாற்றான் தகப்பனாக இருந்தால், நீங்கள் ஒருவேளை குடும்பத்தின் நண்பராக பிள்ளைகளால் வரவேற்கப்பட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களுடைய மாற்றான் தாயாக அல்லது மாற்றான் தகப்பனாக ஆனபோது, அவர்களுடைய மனநிலை ஒருவேளை மாறியிருக்கக்கூடும். அவர்களோடு வாழ்ந்துகொண்டிராத பெற்றெடுத்த பெற்றோரை நினைத்து, பிள்ளைகள் பற்றுறுதி மனப்போராட்டத்தால் போராடிக்கொண்டிருக்கலாம், இல்லாத பெற்றோரின்மீது அவர்கள் வைத்திருக்கும் பாசத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள விரும்புவதாக ஒருவேளை உணர்ந்து அவ்வாறு செய்யலாம். சில சமயங்களில் நீங்கள் அவர்களுடைய தந்தை அல்ல அல்லது அவர்களுடைய தாய் அல்ல என்பதை உணர்ச்சியற்றவிதத்தில் உங்களுக்கு நினைப்பூட்டலாம். அப்படிப்பட்ட கூற்றுகள் புண்படுத்துகின்றன. இருப்பினும், ‘உங்கள் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதீர்கள்.’ (பிரசங்கி 7:9) பிள்ளைகளின் உணர்ச்சிகளைக் கையாளுவதற்கு பகுத்துணர்வும் ஒற்றுணர்வும் தேவைப்படுகின்றன.
23. மாற்றான் பிள்ளைகளையுடைய குடும்பத்தில் சிட்சை எவ்வாறு அளிக்கப்படலாம்?
23 ஒருவர் சிட்சை அளிக்கையில் அப்படிப்பட்ட பண்புகள் மிகவும் முக்கியமானவை. முரண்பாடில்லாத நிலையான சிட்சை இன்றியமையாதது. (நீதிமொழிகள் 6:20; 13:1) எல்லா பிள்ளைகளும் ஒரே இயல்புடையவர்களாய் இல்லாமல் இருப்பதன் காரணமாக, சிட்சை பிள்ளைக்கு பிள்ளை வித்தியாசப்படலாம். பெற்றோராய் இருப்பதன் இந்த அம்சத்தை ஆரம்பத்திலாவது பெற்றெடுத்த பெற்றோர் கையாளுவது நல்லது என்று சில மாற்றான் தாய்-தகப்பன்மார் காண்கின்றனர். பெற்றோர் இருவரும் சிட்சை கொடுப்பதை ஏற்றுக்கொண்டு அதை உறுதியாய்க் கடைப்பிடிப்பது அவசியம். மாற்றான் பிள்ளையைவிட பெற்றெடுத்த பிள்ளைக்கு பட்சபாதம் காண்பிக்கக்கூடாது (நீதிமொழிகள் 24:23) கீழ்ப்படிதல் முக்கியம், ஆனால் அபூரணங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும். அளவுக்குமீறி பிரதிபலிக்காதீர்கள். அன்போடு சிட்சியுங்கள்.—கொலோசெயர் 3:21.
24. மாற்றான் குடும்பத்தில் எதிர்பாலாரைச் சேர்ந்த அங்கத்தினர்களுக்கிடையே ஒழுக்க பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எது உதவக்கூடும்?
24 குடும்ப கலந்துரையாடல்கள் தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்கு அதிகத்தைச் செய்யக்கூடும். வாழ்க்கையில் அதிமுக்கியமாய் இருக்கும் காரியங்களின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு அவை குடும்பத்துக்கு உதவக்கூடும். (ஒப்பிடுக: பிலிப்பியர் 1:9-11, NW.) குடும்ப இலக்குகளை அடைவதற்கு ஒவ்வொருவரும் எவ்வாறு பங்களித்து உதவலாம் என்பதை காணவும் அவை உதவக்கூடும். கூடுதலாக, ஒளிவுமறைவற்ற குடும்ப கலந்தாலோசிப்புகள் ஒழுக்கப் பிரச்சினைகளைத் தவிர்க்கக்கூடும். பெண்கள், தங்கள் மாற்றான் தகப்பன் மற்றும் மாற்றான் சகோதரர்கள் இருக்கையில் எவ்வாறு உடுத்தி மதிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் மாற்றான் தாயிடமும் மாற்றான் சகோதரிகளிடமும் தகுதியான முறையில் நடந்துகொள்வதைப் பற்றி பையன்களுக்கு புத்திமதி தேவை.—1 தெசலோனிக்கேயர் 4:3-8.
25. மாற்றான் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்கு என்ன பண்புகள் உதவக்கூடும்?
25 மாற்றான் தாயாக அல்லது மாற்றான் தகப்பனாக இருப்பதால் ஏற்படும் விசேஷ சவாலை எதிர்ப்படுகையில் பொறுமையாயிருங்கள். புதிய உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு காலம் எடுக்கிறது. இயல்பான பாசப்பிணைப்புகள் இல்லாத பிள்ளைகளின் அன்பையும் மரியாதையையும் சம்பாதித்துக்கொள்வது கடினமாய் இருக்கலாம். ஆனால் அது சாத்தியம். ஞானமும் பகுத்துணர்வுமுள்ள இதயமும் அதோடுகூட யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற பலமான ஆசையுமே மாற்றான் குடும்பத்தில் சமாதானம் நிலவுவதற்கான திறவுகோல் ஆகும். (நீதிமொழிகள் 16:20) அப்படிப்பட்ட பண்புகள் நீங்கள் மற்ற சூழ்நிலைகளையும்கூட சமாளித்துக்கொள்வதற்கு உங்களுக்கு உதவக்கூடும்.
பொருளாதார நாட்டங்கள் உங்கள் குடும்பத்தைப் பிளவுபடுத்துகின்றனவா?
26. பொருளாதார உடைமைகள் சம்பந்தமான பிரச்சினைகளும் மனநிலைகளும் குடும்பத்தை என்ன வழிகளில் பிரிக்கலாம்?
26 பொருளாதார உடைமைகளைக் குறித்த பிரச்சினைகளும் மனநிலைகளும் குடும்பங்களை அநேக வழிகளில் பிரிக்கக்கூடும். விசனகரமாக, சில குடும்பங்கள் பணத்தின் காரணமாக மற்றும் செல்வந்தர்களாக ஆக வேண்டும்—அல்லது கொஞ்சமாவது பணக்காரர்களாக ஆக வேண்டும்—என்ற விருப்பத்தின் காரணமாக பிளவுபட்டுவிடுகின்றன. இரண்டு துணைவர்களும் உலகப்பிரகாரமான வேலை செய்து “என் பணம், உன் பணம்” என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டால் பிரிவினைகள் உண்டாகலாம். தர்க்கங்களைத் தவிர்த்தாலும்கூட, இரண்டு துணைவர்களும் வேலை செய்தால், அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து செலவழிப்பதற்கு குறைவான நேரத்தையுடைய அட்டவணையையே கொண்டிருப்பர். இவ்வுலகில் வளர்ந்து வரும் போக்கு என்னவென்றால், தகப்பன்மார் தங்கள் குடும்பங்களை விட்டு தூரமாக விலகி, நீண்ட காலம்—மாதங்கள் அல்லது வருடங்கள்கூட—வாழ்கின்றனர்; அவர்கள் வீட்டிலிருந்து சம்பாதிப்பதைக் காட்டிலும் கூடுதலான பணத்தை சம்பாதிப்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இது மிகவும் மோசமான பிரச்சினைகளுக்கு வழிநடத்தக்கூடும்.
27. பண அழுத்தங்களின் கீழிருக்கும் குடும்பத்துக்கு உதவியளிக்கக்கூடிய சில நியமங்கள் யாவை?
27 இந்தச் சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு எந்தச் சட்டமும் விதிக்கப்பட முடியாது, ஏனென்றால் வெவ்வேறு குடும்பங்கள் வெவ்வேறு அழுத்தங்களையும் தேவைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கின்றன. இருப்பினும், பைபிள் அளிக்கும் புத்திமதி உதவக்கூடும். உதாரணமாக, ‘ஒன்றாகக்கூடி கலந்து பேசுவதன்’ மூலம் சில சமயங்களில் தேவையற்ற போராட்டத்தைத் தவிர்த்திடலாம் என்று நீதிமொழிகள் 13:10 (NW) குறிப்பிடுகிறது. இது வெறுமனே ஒருவரின் சொந்த எண்ணங்களைக் குறிப்பிடுவதை மட்டும் உட்படுத்தாமல், அடுத்தவர் ஒரு விஷயத்தைக் குறித்து எவ்வாறு உணருகிறார் என்பதைக் கண்டுபிடித்து புத்திமதியை நாடுவதாகும். கூடுதலாக, நடைமுறையான வரவுசெலவு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்வது குடும்ப முயற்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கு உதவக்கூடும். சில சமயங்களில் விசேஷமாக பிள்ளைகள் அல்லது ஆதரவை எதிர்பார்த்து வாழ்பவர்கள் இருக்கையில் இரண்டு துணைவர்களும் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்ய வேண்டிய தேவை ஒருவேளை தற்காலிகமாக ஏற்படலாம். இந்நிலை ஏற்படுமானால், கணவன் தன் மனைவிக்காக இன்னும் நேரத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார் என்பதை அவர் அவளுக்கு உறுதிப்படுத்தலாம். அவள் பொதுவாக தனியே செய்யும் வேலைகள் சிலவற்றை அன்போடு கணவனும் பிள்ளைகளும் சேர்ந்து செய்து உதவலாம்.—பிலிப்பியர் 2:1-4.
28. ஐக்கியத்தை அடைய உழைப்பதற்கு என்ன நினைப்பூட்டுதல்களை கடைப்பிடிப்பது ஒரு குடும்பத்துக்கு உதவும்?
28 எனினும், இந்தக் காரிய ஒழுங்குமுறையில் பணம் அவசியமாயிருந்தாலும்கூட அது மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறதில்லை. அது நிச்சயமாகவே உயிரை அளிப்பதில்லை என்பதை மனதில் வையுங்கள். (பிரசங்கி 7:12) உண்மையில், அளவுக்குமீறி பொருளாதார உடைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கப்பிரகாரமான அழிவை உண்டாக்கக்கூடும். (1 தீமோத்தேயு 6:9-12) வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளின் பேரில் அவருடைய ஆசீர்வாதம் இருக்கும் என்ற உறுதியோடு கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவது எவ்வளவு மேலானதாய் இருக்கிறது! (மத்தேயு 6:25-33; எபிரெயர் 13:5) ஆவிக்குரிய அக்கறைகளை முதலாவது வைப்பதன் மூலமும் முதலாவது கடவுளோடு சமாதானத்தை நாடுவதன் மூலமும், சில சூழ்நிலைகளின் காரணமாக உங்கள் குடும்பம் ஒருவேளை பிளவுபட்டிருந்தாலும், அதிமுக்கியமான வழிகளில் மெய்யாகவே ஐக்கியப்பட்டிருக்கும் ஒரு குடும்பமாக ஆவதை நீங்கள் காணலாம்.