பாடம் 9
கடவுளுடைய நண்பர்கள் யார்?
இயேசு கிறிஸ்து யெகோவாவின் குமாரன். அவரது மிக நெருங்கிய, ஆருயிர் நண்பர். பூமியில் மனிதனாக வாழ்வதற்கு முன்பு, இயேசு பரலோகத்தில் வல்லமையுள்ள ஆவி சிருஷ்டியாக இருந்தார். (யோவான் 17:5) கடவுளைப் பற்றிய சத்தியத்தை மக்களுக்கு போதிப்பதற்காக பின்பு பூமிக்கு வந்தார். (யோவான் 18:37) கீழ்ப்படிதலுள்ள மனிதரை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்ய தம்முடைய உயிரையே கொடுத்தார். (ரோமர் 6:23) இப்போது இயேசு, கடவுளுடைய ராஜ்யத்தின் அரசர், அதாவது இந்தப் பூமியை பரதீஸாக மாற்றப்போகும் பரலோக அரசாங்கத்தின் அரசர்.—வெளிப்படுத்துதல் 19:16.
தூதர்களும் கடவுளுடைய நண்பர்களே. தூதர்கள் பூமியில் மனிதர்களாக வாழ்ந்தவர்கள் அல்ல. கடவுள் இந்தப் பூமியை உண்டாக்குவதற்கு முன்பே அவர்களை பரலோகத்தில் படைத்தார். (யோபு 38:4-7) தூதர்கள் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். (தானியேல் 7:10) ஜனங்கள் யெகோவாவை பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டும் என இந்தப் பரலோக நண்பர்கள் விரும்புகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 14:6, 7.
இந்தப் பூமியிலும் கடவுளுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்களை சாட்சிகள் என அழைக்கிறார். நீதிமன்றத்தில் ஒரு சாட்சி தனக்கு தெரிந்த ஒருவரைப் பற்றி அல்லது ஒன்றைப் பற்றி சொல்கிறார். யெகோவாவின் சாட்சிகளோ யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். (ஏசாயா 43:10) தூதர்களைப் போலவே, இந்தச் சாட்சிகளும் யெகோவாவைப் பற்றிய சத்தியத்தை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக உதவியும் செய்கிறார்கள். ஏனெனில் நீங்களும் கடவுளுடைய நண்பராக வேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பம்.