இடது: 1926-ல் புருக்லின் பெத்தேல் குடும்பம் கடைசியாக கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடியது; வலது: யெகோவாவின் சாட்சிகள் வித்தியாசப்பட்டவர்களாக இருப்பதை மக்கள் கவனிக்கிறார்கள்
பகுதி 3
கடவுளுடைய அரசாங்கத்தின் நெறிமுறைகள்—கடவுளுடைய நீதிநெறிகளைத் தேடுவது
கொஞ்ச நாளாகவே, பக்கத்து வீட்டுக்காரர் உங்களையும் உங்கள் வீட்டாரையும் கவனிப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதனால், அவருடைய வீட்டுப் பக்கமாக நடந்து போகும்போது அவரைப் பார்த்து கைகாட்டுகிறீர்கள். அவரும் பதிலுக்குக் கைகாட்டி உங்களைக் கூப்பிடுகிறார். பிறகு அவர், “உங்களிடம் ஒரு விஷயம் கேட்கலாமா? நீங்கள் மற்றவர்களிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறீர்கள், ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்கிறார். “எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். அதற்கு அவர், “நீங்கள் யெகோவாவின் சாட்சிகள்தானே? நீங்கள் மற்றவர்கள் மாதிரி கிடையாது. மற்ற மதங்களில் இருப்பவர்களைப் போல நீங்கள் பண்டிகைகள் கொண்டாடுவதில்லை, அரசியலிலும் போரிலும் கலந்துகொள்வதில்லை, புகைபிடிப்பதில்லை. உங்கள் குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் ரொம்ப ஒழுக்கமாக நடந்துகொள்கிறீர்கள். இப்படி பல விஷயங்களில் நீங்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறீர்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்கிறார்.
இதற்கு ஒரே காரணம், நாம் கடவுளுடைய ஆட்சியின் கீழ் வாழ்வதுதான். நம் ராஜா இயேசு, நம்மைத் தொடர்ந்து புடமிட்டுக்கொண்டே இருக்கிறார். அவருடைய அடிச்சுவடுகளில் நடக்க அவர் நமக்கு உதவுகிறார். அதனால்தான், இந்தப் பொல்லாத உலகத்தில் நாம் வித்தியாசப்பட்ட ஆட்களாகத் தெரிகிறோம். மேசியானிய அரசாங்கம், கடவுளுடைய மக்களை எப்படி ஆன்மீக விஷயங்களில், ஒழுக்க விஷயங்களில், அமைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் புடமிட்டிருக்கிறது என்றும் அதன்மூலம் யெகோவாவுக்கு எப்படி மகிமை சேர்த்திருக்கிறது என்றும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.