“நான் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை”
யெகோவாவின் சாட்சிகளின் பிள்ளைகள் கிறிஸ்மஸ் கொண்டாடாததன் காரணமாக ஏதோ இழந்து விடுவதைப் போன்று சிலர் பேசுகின்றனர். ஆனால் அ.ஐ.மா-ல் உள்ள கலிபோர்னியாவில் ஒரு 11-வயது சாட்சி “நான் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை” என்ற தலைப்பைக் கொண்ட கட்டுரையை ஒரு வகுப்பறை நியமிப்பாக எழுதியதை சிந்தித்துப் பாருங்கள்:
“அநேக மக்களுக்கு கிறிஸ்மஸ் ஏராளமான பொருட்களை அர்த்தப்படுத்துகிறது—வெகுமதிகள், குடும்பம், வெகுமதிகள், உணவு, வெகுமதிகள், பகிர்ந்துகொள்ளுதல், வெகுமதிகள், அன்பு, வெகுமதிகள், கிறிஸ்மஸ் தாத்தா, வெகுமதிகள் போன்றவை. இருப்பினும், இந்நாட்களில் மக்கள் கிறிஸ்மஸ் எதைக் குறிக்கிறது என்பதைக் குறித்தும், அதை அவர்கள் ஏன் கொண்டாடுகின்றனர் என்பதைக் குறித்தும் வெகு அரிதாகவே சிந்திக்கின்றனர். அப்படி அவர்கள் அதைப் பற்றி சிந்தித்தாலும்கூட, அதை இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகவும், குடும்பம் ஒன்றுசேரும் நேரமாகவும், ஏராளமான வெகுமதிகள் இருக்கும் சமயமாகவும் பொதுவாக நினைக்கின்றனர். அநேக மக்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பார்த்து பரிதாபப்படுகின்றனர், ஏனென்றால் அவர்களுடைய பிள்ளைகள் ஏதோ இழந்து விடுவதைப் போன்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் நாம் நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விடுகிறோமா? யெகோவாவின் சாட்சிகள் ஏன் இந்தப் பண்டிகையை கொண்டாடுவதில்லை என்று நாம் சிந்திப்போம்.
“யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக நான் அநேக காரணங்களுக்காக கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை. ஒரு விஷயம், அது இயேசு பிறந்த நாள் அல்ல. மேய்ப்பர்கள் வயல்வெளிகளில் தங்கள் ஆடுகளோடு இருந்தனர் என்று பைபிள் சொல்கிறது. ஜெருசலேமில் குளிர்காலம் அதிகக் குளிராகவும் அடிக்கடி உறைபனியும் இருக்கும். இந்த மாதங்களில் மேய்ப்பர்கள் பொதுவாக வெளியே தங்கியிருக்க மாட்டார்கள். . . . இதைக் குறித்து சிந்திப்பதற்கு கூடுதலான விஷயங்கள் இருக்கின்றன.
“கிறிஸ்மஸ் இயேசுவின் பிறந்தநாள் அல்ல என்பது மட்டுமல்லாமல், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அதைக் கொண்டாடவேயில்லை. டிசம்பர் 17-ல் ஆரம்பித்து டிசம்பர் 25-ல் முடிவடைந்த பண்டைய ரோம பண்டிகையாகிய சாட்டர்நேலியா, ‘தோற்கடிக்கப்படமுடியாத சூரியனின் பிறந்தநாளில்’ அது அதன் ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. நான்காம் நூற்றாண்டில் ரோம அதிகாரி ஒருவர் இயேசுவின் பிறந்தநாளை டிசம்பர் 25-ல் கொண்டாட தீர்மானித்தார், ரோமர்களின் பண்டிகையை பரிசுத்தப்படுத்துவதற்காக ஒருவேளை அப்படிச் செய்திருக்கலாம்.
“அநேக தேசங்களில் கிறிஸ்மஸ் தடை செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாயில்லை. இன்று சில ஜனங்கள் (யெகோவாவின் சாட்சிகளைப் போன்று) தங்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கின்றனர்.
“நான் நான்கு வயதை அடையும் வரை கிறிஸ்மஸ் கொண்டாடி வந்தேன். . . . யெகோவாவின் சாட்சிகள் நிச்சயமாகவே எதையும் இழப்பதில்லை. வருடமுழுவதும் நாங்கள் வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தவற விடுவது, புறமத பண்டிகைகளும் அவற்றின் புறமத கொண்டாட்டங்கள் மட்டும் தான்.”
“எல்லா ஆட்களுமே வெகுமதிகளைப் பெற விரும்புவதில்லை” என்று ஆசிரியை அத்தாளில் எழுதியபோதிலும், “மிகவும் நன்றாக எழுதியிருக்கிறாய்” என்றும்கூட எழுதி அக்கட்டுரைக்காக மாணவிக்கு உயர்ந்த மதிப்பெண் கொடுத்தார்கள்.