அதிகாரம் 11
வணக்கத்துக்காக ஒன்றுகூடி வரும் இடங்கள்
உண்மை வணக்கத்தார், கடவுளால் கற்பிக்கப்படுவதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்கும் ஒன்றுகூடி வர வேண்டுமென்ற கட்டளையை யெகோவா கொடுத்திருக்கிறார். (எபி. 10:23-25) யெகோவா தேர்ந்தெடுத்த மக்களான இஸ்ரவேலர்கள் முதன்முதலில் ‘வழிபாட்டுக் கூடாரத்தில்,’ அதாவது ‘சந்திப்புக் கூடாரத்தில்,’ யெகோவாவை வணங்கினார்கள். (யாத். 39:32, 40) பிற்பாடு, தாவீதின் மகனான சாலொமோன் கடவுளுடைய மகிமைக்காக ஒரு ஆலயத்தைக் கட்டினார். (1 ரா. 9:3) கி.மு. 607-ல் அந்த ஆலயம் அழிக்கப்பட்ட பிறகு, ஜெபக்கூடங்கள் என்று அழைக்கப்பட்ட கட்டிடங்களில் யூதர்கள் ஒன்றுகூடி வந்து கடவுளை வணங்கினார்கள். அதன் பிறகு, அந்த ஆலயம் திரும்பக் கட்டப்பட்டு, அது மீண்டும் உண்மை வணக்கத்தின் மையமாக ஆனது. இயேசு ஜெபக்கூடங்களிலும் சரி, ஆலயத்திலும் சரி, மக்களுக்குக் கற்பித்தார். (லூக். 4:16; யோவா. 18:20) ஒருமுறை ஒரு மலைமேல்கூட அவர் கூட்டத்தை நடத்தினார்.—மத். 5:1–7:29.
2 இயேசுவின் மரணத்துக்குப் பிறகு, கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொடுப்பதற்காகவும், சக கிறிஸ்தவர்களோடு பழகுவதற்காகவும் பொது இடங்களிலும் சகோதர சகோதரிகளின் வீடுகளிலும் ஒன்றுகூடி வந்தார்கள். (அப். 19:8, 9; ரோ. 16:3, 5; கொலோ. 4:15; பிலே. 2) சிலசமயங்களில், எதிரிகளின் கண்களில் சிக்காமல் இருப்பதற்காக அவர்கள் ஒதுக்குப்புறமான இடங்களில் கூடிவர வேண்டியிருந்தது. சொல்லப்போனால், பழங்காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்கள், ‘யெகோவாவினால் கற்பிக்கப்படுவதற்கு’ ஒன்றுகூடி வர உண்மையிலேயே ஆசைப்பட்டார்கள்.—ஏசா. 54:13.
3 இன்றும்கூட, பொது இடங்களிலும் சகோதர சகோதரிகளின் வீடுகளிலும் கிறிஸ்தவக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சகோதர சகோதரிகளின் வீடுகளில் பொதுவாக வெளி ஊழியக் கூட்டம் நடத்தப்படுகிறது. அப்படிப்பட்ட கூட்டங்களுக்காகத் தங்கள் வீடுகளைத் தருகிறவர்கள் அதை ஒரு பாக்கியமாக நினைக்கிறார்கள். அது ஆன்மீக விதத்தில் பல நன்மைகளைத் தருவதாகவும் சொல்கிறார்கள்.
ராஜ்ய மன்றம்
4 யெகோவாவின் சாட்சிகள் தவறாமல் ஒன்றுகூடி வரும் இடம்தான் ராஜ்ய மன்றம். பொதுவாக, அவர்கள் ஒரு நிலத்தை வாங்கி புதிய ராஜ்ய மன்றத்தைக் கட்டுகிறார்கள் அல்லது ஏற்கெனவே இருக்கும் ஒரு கட்டிடத்தைப் புதுப்பிக்கிறார்கள். செலவுகளைக் குறைப்பதற்காகவும் மன்றங்களைச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவதற்காகவும், ஒரு ராஜ்ய மன்றத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட சபைகள் உபயோகிக்கலாம். சில இடங்களில் ஒரு மன்றத்தை வாடகைக்கு எடுக்க வேண்டியிருக்கிறது. ராஜ்ய மன்றங்களைப் புதிதாகக் கட்டும்போது அல்லது பெரிய அளவில் புதுப்பிக்கும்போது, அர்ப்பணிப்பு நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமாக இருக்கும். ஆனால், ஏற்கெனவே இருக்கும் ராஜ்ய மன்றத்தை சிறிய அளவில் புதுப்பிக்கும்போது, அர்ப்பணிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
5 மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக ராஜ்ய மன்றங்களை ஆடம்பரமாகக் கட்டக் கூடாது. அதன் வடிவமைப்பு இடத்துக்கு இடம் வேறுபடலாம். ஆனால், வணக்கத்துக்கு ஏற்ற விதத்தில் இருப்பதுதான் எப்போதுமே முக்கியம். (அப். 17:24) உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, கிறிஸ்தவக் கூட்டங்களை நடத்துவதற்குச் சௌகரியமான, வசதியான இடங்களாக அவை இருக்க வேண்டும்.
6 ஒரு ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகளை, அங்கே கூடிவரும் எல்லா சபைகளுமே ஏற்றுக்கொள்கின்றன. அங்கே காணிக்கைகள் வசூலிக்கப்படுவது இல்லை; நன்கொடைகள் கொடுக்கும்படி யாரும் வற்புறுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, நன்கொடைப் பெட்டிகள் வைக்கப்படுகின்றன. கூட்டங்களுக்கு வருகிறவர்கள், அந்த மன்றத்தைப் பயன்படுத்துவதற்கு ஆகும் செலவுகளுக்காக அந்தப் பெட்டிகளில் நன்கொடைகளைப் போடுகிறார்கள். அவரவர் விருப்பப்படி மனப்பூர்வமாகவும் சந்தோஷமாகவும் அந்த நன்கொடைகளைக் கொடுக்கிறார்கள்.—2 கொ. 9:7.
7 ராஜ்ய மன்றத்துக்காக நன்கொடைகள் கொடுப்பதையும், அதைச் சுத்தம் செய்வதையும், பராமரிப்பதையும் சபையிலுள்ள எல்லாருமே ஒரு பாக்கியமாக நினைக்கிறார்கள். இந்த வேலைகளுக்கு அட்டவணை போட ஒரு மூப்பர் அல்லது உதவி ஊழியர் நியமிக்கப்படுகிறார். பொதுவாக, ஒவ்வொரு கூட்டத்துக்குப் பிறகும் ஒரு வெளி ஊழியத் தொகுதியினர் ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்கிறார்கள்; தொகுதிக் கண்காணி அல்லது அவருடைய உதவியாளர் அந்த வேலையை முன்நின்று செய்கிறார். ராஜ்ய மன்றத்தின் உட்புறமும் சரி, வெளிப்புறமும் சரி, யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் புகழ் சேர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும்.
ராஜ்ய மன்றத்துக்காக நன்கொடைகள் கொடுப்பதையும், அதைச் சுத்தம் செய்வதையும், பராமரிப்பதையும் சபையிலுள்ள எல்லாருமே ஒரு பாக்கியமாக நினைக்கிறார்கள்
8 ஒரு ராஜ்ய மன்றத்தை ஒன்றுக்கும் அதிகமான சபைகள் பயன்படுத்தும்போது, அந்தச் சபைகளைச் சேர்ந்த மூப்பர் குழுக்கள் ஒரு ராஜ்ய மன்ற செயற்குழுவை ஏற்படுத்துகின்றன. கட்டிடம், நிலம், சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை அந்தச் செயற்குழு பார்த்துக்கொள்ளும். அந்தச் செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் சேவை செய்ய ஒரு சகோதரரை அந்த மூப்பர் குழுக்கள் தேர்ந்தெடுக்கும். மூப்பர் குழுக்களுடைய வழிநடத்துதலின் கீழ், ராஜ்ய மன்றத்தைச் சுத்தப்படுத்தும் வேலையை அந்தச் செயற்குழு கண்காணிக்கும். மன்றம் நன்றாகப் பராமரிக்கப்படுகிறதா, பராமரிப்பதற்குத் தேவையான பொருள்கள் இருக்கின்றனவா என்றெல்லாம் பார்த்துக்கொள்ளும். அந்த மன்றத்தைப் பயன்படுத்தும் எல்லா சபைகளும் இந்த விஷயங்களில் நன்றாக ஒத்துழைப்பது அவசியம்.
9 ஒன்றுக்கும் அதிகமான சபைகள் ஒரு ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்தும்போது, கூட்டங்களை நடத்தும் நேரத்தைச் சுழற்சி முறையில் மாற்றிக்கொள்ளலாம். இதை முடிவு செய்யும்போது, மூப்பர்கள் ஒருவர்மேல் ஒருவர் அக்கறையையும் சகோதர அன்பையும் காட்ட வேண்டும். (பிலி. 2:2-4; 1 பே. 3:8) எந்தவொரு சபையும் மற்ற சபைகளின் சார்பாக முடிவுகளை எடுக்கக் கூடாது. ஒரு சபையை வட்டாரக் கண்காணி சந்திக்கும்போது, மற்ற சபைகள் அந்த வாரத்துக்கு மட்டும் கூட்டங்களுக்கான நேரங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
10 சபை ஊழியக் குழுவின் அனுமதியோடு ராஜ்ய மன்றத்தில் திருமண பேச்சுகள் அல்லது சவ அடக்க பேச்சுகள் கொடுக்கப்படலாம். அந்தக் குழுவிலுள்ள மூப்பர்கள், சூழ்நிலையைக் கவனமாகச் சீர்தூக்கிப் பார்த்து, கிளை அலுவலகம் கொடுத்திருக்கிற அறிவுரைகளின்படி முடிவெடுப்பார்கள்.
11 அப்படிப்பட்ட பேச்சுகளுக்காக ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்த அனுமதி பெறுகிறவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களுக்குத் தகுந்த விதத்தில் நடந்துகொள்ள வேண்டும். சபையில் உள்ளவர்களை முகம் சுளிக்க வைக்கிற அல்லது யெகோவாவின் பெயருக்கோ சபையின் பெயருக்கோ களங்கத்தை ஏற்படுத்துகிற எதையுமே ராஜ்ய மன்றத்தில் அவர்கள் செய்யக் கூடாது. (பிலி. 2:14, 15) கிளை அலுவலகத்தின் அறிவுரைப்படி, மற்ற ஆன்மீக நிகழ்ச்சிகளுக்காகவும் ராஜ்ய மன்றம் பயன்படுத்தப்படலாம்; உதாரணத்துக்கு, ராஜ்ய ஊழியப் பள்ளி, பயனியர் ஊழியப் பள்ளி போன்றவற்றை அங்கே நடத்தலாம்.
12 ராஜ்ய மன்றங்களை நாம் எப்போதுமே உயர்வாக மதிக்க வேண்டும். நம்முடைய நடத்தையும் உடையும் அலங்காரமும் யெகோவாவின் வணக்கத்தாருக்கு ஏற்றபடி கண்ணியமாக இருக்க வேண்டும். (பிர. 5:1; 1 தீ. 2:9, 10) இந்த ஆலோசனைகளின்படி நடக்கும்போது, நம் கிறிஸ்தவக் கூட்டங்களை மதிக்கிறோம் என்பதைக் காட்டுவோம்.
13 கூட்டங்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடப்பது அவசியம். அதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தங்களோடு உட்கார வைப்பது நல்லது. பிள்ளைகளைக் கண்டிப்பதற்காக அல்லது மற்ற விஷயங்களுக்காக பெற்றோர் அவர்களை வெளியில் கூட்டிக்கொண்டு போக வேண்டியிருக்கலாம்; அதற்கு வசதியான இடத்தில் அவர்கள் உட்கார்ந்தால்தான் மற்றவர்களுடைய கவனம் சிதறாமல் இருக்கும்.
14 ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களில் தகுதியுள்ள சகோதரர்கள் அட்டன்டண்டுகளாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் விழிப்பாகவும், விவேகமாகவும், அதேசமயத்தில் நட்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். புதியவர்களை வரவேற்பது, அவர்களைச் சகஜமாக உணர வைப்பது, தாமதமாக வருகிறவர்களை உட்கார வைப்பது, கூட்டங்களுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பது, மன்றத்தில் போதுமான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது, மன்றம் ரொம்ப சூடாகவோ குளிராகவோ இல்லாதபடி பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வேண்டும். பிள்ளைகள் கூட்டங்களுக்கு முன்போ பின்போ ஓடியாடிக்கொண்டு அல்லது மேடைமேல் ஏறி விளையாடிக்கொண்டு இருக்கலாம்; அவர்கள் அப்படிச் செய்யாமல் பார்த்துக்கொள்ளும்படி அவர்களுடைய பெற்றோர்களிடம் அட்டன்டண்டுகள் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கலாம். ஒருவேளை, ஒரு பிள்ளை ரொம்பவே குறும்பு செய்தால், மற்றவர்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காக அந்தப் பிள்ளையை வெளியே கூட்டிக்கொண்டு போகும்படி அதன் பெற்றோரிடம் அன்பாகவும் சாதுரியமாகவும் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கலாம். அட்டன்டண்டுகளின் சேவை, கூடிவந்திருக்கிற எல்லாருமே கூட்டங்களை நன்றாகக் கேட்டு அனுபவிக்க உதவுகிறது. மூப்பர்களும் உதவி ஊழியர்களும் அட்டன்டண்டுகளாக நியமிக்கப்படுவது சிறந்தது.
ராஜ்ய மன்றக் கட்டுமானம்
15 முதல் நூற்றாண்டில் சில கிறிஸ்தவர்கள் மற்றவர்களைவிட வசதியுள்ளவர்களாக இருந்தார்கள். அதனால், அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “உங்கள் மத்தியில் சமநிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன். அப்படிச் சமநிலை ஏற்படும்போது, உங்களிடம் மிகுதியாக இருப்பது அவர்களுடைய பற்றாக்குறையை ஈடுகட்டும்; அவர்களிடம் மிகுதியாக இருப்பது உங்களுடைய பற்றாக்குறையை ஈடுகட்டும்.” (2 கொ. 8:14) அதேபோல் இன்றும் நன்கொடைகள் ‘ஈடுகட்டப்படுகின்றன.’ உலகம் முழுவதும் உள்ள சபைகளிலிருந்து வரும் நன்கொடைகளைக் கொண்டு, ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் ஆகும் செலவுகள் ஈடுகட்டப்படுகின்றன. சகோதர சகோதரிகள் தாராளமாகத் தரும் இந்த நன்கொடைகளுக்காக நம் அமைப்பு பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறது; அந்த நன்கொடைகளால் பயனடையும் சபைகளும் நன்றியோடு இருக்கின்றன.
16 அந்தந்தப் பகுதிகளைப் பொறுத்து, கிளை அலுவலகம் ஒவ்வொரு சபைக்கும் ஒரு ராஜ்ய மன்றத்தை நியமிக்கிறது. எப்போது அல்லது எங்கே புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்ட வேண்டும் என்றும், புதுப்பிக்க வேண்டும் என்றும் கிளை அலுவலகம் முடிவு செய்யும். பேரழிவுகள் தாக்கும்போது, சேதமடைந்த ராஜ்ய மன்றங்களையும், சிலசமயங்களில் சகோதர சகோதரிகளின் வீடுகளையும் பழுதுபார்க்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
17 நிலம் வாங்குவது, ராஜ்ய மன்றத்தை வடிவமைப்பது, கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வாங்குவது, மன்றத்தைக் கட்டுவது, பராமரிப்பது என வாலண்டியர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் கிளை அலுவலகம் ஒருங்கிணைக்கிறது. பெரும்பாலான நாடுகளில், ராஜ்ய மன்றங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் நிறைய வாலண்டியர்கள் தேவைப்படுகிறார்கள். தகுதியும் விருப்பமும் உள்ள ஞானஸ்நானம் பெற்ற பிரஸ்தாபிகள் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சபை ஊழியக் குழுவிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிகளும்கூட, தங்களுடைய சபையின் ராஜ்ய மன்ற கட்டுமான வேலையில் அல்லது புதுப்பிக்கும் வேலையில் கலந்துகொள்ளலாம்.
மாநாட்டு மன்றங்கள்
18 ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பொதுவாகச் சிறிய தொகுதிகளாகக் கூடிவந்தார்கள். ஆனால் சிலசமயங்களில், ‘ஏராளமான மக்கள்’ கூடிவந்தார்கள். (அப். 11:26) அதேபோல் இன்றும், வட்டார மாநாடுகளுக்காகவும் மண்டல மாநாடுகளுக்காகவும் யெகோவாவின் மக்கள் பெரிய தொகுதிகளாகக் கூடிவருகிறார்கள். இதற்காக உள்ளூர் மன்றங்கள் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன. ஆனால், பொருத்தமான மன்றங்கள் கிடைக்காத இடங்களில், புதிதாக ஒரு கட்டிடம் வாங்கப்படலாம் அல்லது கட்டப்படலாம். அது மாநாட்டு மன்றம் என்று அழைக்கப்படும்.
19 சிலசமயங்களில், ஒரு கட்டிடம் வாங்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, மாநாட்டு மன்றமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மற்ற சமயங்களில், ஒரு நிலம் வாங்கப்பட்டு அங்கே ஒரு புதிய மன்றம் கட்டப்படுகிறது. மாநாட்டு மன்றங்கள் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பது உள்ளூர் தேவைகளைப் பொறுத்து வித்தியாசப்படலாம். செலவுகளைக் கவனமாகச் சீர்தூக்கிப் பார்த்த பிறகும், மன்றம் எவ்வளவு அடிக்கடி பயன்படுத்தப்படும் என்பதை முடிவு செய்த பிறகும்தான் அப்படிப்பட்ட ஒரு கட்டிடத்தை வாங்குவது அல்லது கட்டுவது பற்றி கிளை அலுவலகம் தீர்மானிக்கும்.
20 மாநாட்டு மன்றங்களைப் பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது சம்பந்தமான வேலைகளைப் பார்த்துக்கொள்ள கிளை அலுவலகம் சகோதரர்களை நியமிக்கிறது. மன்றத்தைப் பயன்படுத்தும் சமயங்களில் சுத்தம் செய்வது, வருடத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்வது, பராமரிப்பு வேலைகளைச் செய்வது போன்றவற்றை அந்தந்த வட்டாரங்கள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த வேலைகளைச் சகோதரர்கள் மனப்பூர்வமாகச் செய்யும்போது நல்ல பலன் கிடைக்கும். அதனால், இந்த ஏற்பாடுகளை மனப்பூர்வமாக ஆதரிக்கும்படி எல்லா சபைகளிடமும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.—சங். 110:3; மல். 1:10.
21 சிலசமயங்களில், பைபிள் பள்ளிகளுக்காகவோ வட்டாரக் கண்காணிகளுக்கு அல்லது வட்டாரத்திலுள்ள மூப்பர்களுக்கு நடத்தப்படும் விசேஷக் கூட்டங்களுக்காகவோ இதுபோன்ற மற்ற நிகழ்ச்சிகளுக்காகவோ மாநாட்டு மன்றங்கள் பயன்படுத்தப்படலாம். ராஜ்ய மன்றங்களைப் போலவே மாநாட்டு மன்றங்களும் வணக்கத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடங்களாக இருக்கின்றன. அதனால், ராஜ்ய மன்றத்துக்கு வரும்போது நம் நடத்தையும் உடையும் அலங்காரமும் எப்படிக் கண்ணியமாக இருக்க வேண்டுமோ அப்படியே மாநாட்டு மன்றத்துக்கு வரும்போதும் இருக்க வேண்டும்.
22 கடைசி நாட்களின் இந்தக் கடைசிக் கட்டத்தில் புதியவர்கள் நிறைய பேர் கடவுளுடைய அமைப்புக்குள் திரண்டு வருகிறார்கள். இது யெகோவாவின் ஆசீர்வாதத்துக்கு அடையாளமாக இருக்கிறது. (ஏசா. 60:8, 10, 11, 22) அதனால், வணக்கத்துக்காக சுத்தமான, வசதியான இடங்களைக் கட்டவும் பராமரிக்கவும் செய்யப்படும் ஏற்பாடுகளுக்கு நாம் ஆதரவு தர வேண்டும். அப்போதுதான், யெகோவாவை வணங்குவதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்கும் உதவுகிற அந்த இடங்களுக்காக நாம் நன்றியோடு இருப்பதைக் காட்ட முடியும்.