ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களுக்கான கேள்விகள்
பகுதி 2: கிறிஸ்தவ வாழ்க்கை
நீங்கள் பைபிளைப் படித்தபோது, யெகோவா உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்... அவருடைய நீதிநெறிகளின்படி வாழ்வது எப்படி... என்பதையெல்லாம் கற்றுக்கொண்டீர்கள். அதற்கு ஏற்றபடி வாழ்வதற்காக உங்களுடைய நடத்தையிலும், வாழ்க்கையை நீங்கள் பார்க்கும் விதத்திலும் பல மாற்றங்களைச் செய்திருப்பீர்கள். இப்போது, யெகோவாவுடைய நீதிநெறிகளின்படி வாழத் தீர்மானித்துவிட்டீர்கள். அதனால், நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிற ஒரு ஊழியராக கடவுளுக்குச் சேவை செய்ய தகுதி பெற்றுவிட்டீர்கள்.
பின்வரும் கேள்விகளைச் சிந்தித்துப் பார்ப்பது, யெகோவாவின் நீதிநெறிகளை மனதில் நன்றாகப் பதிய வைக்க உங்களுக்கு உதவும்; அவருடைய ஊழியராக ஆவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஞாபகப்படுத்தும். அதோடு, எல்லாவற்றையும் நல்ல மனசாட்சியோடும் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் விதத்திலும் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு உணர்த்தும்.—2 கொ. 1:12; 1 தீ. 1:19; 1 பே. 3:16, 21.
நீங்கள் பைபிளைப் படித்திருப்பதால், யெகோவாவின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கவும் அவருடைய அமைப்பின் பாகமாக ஆகவும் நிச்சயம் விரும்புவீர்கள். யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு, அதாவது சபை, குடும்பம், அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளுக்கு, கட்டுப்பட்டு நடப்பதைப் பற்றி நீங்கள் எந்தளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளும் வசனங்களும் உங்களுக்கு உதவும். அதோடு, தன் மக்களுக்குப் போதிப்பதற்கும் அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கும் யெகோவா செய்திருக்கிற ஏற்பாடுகளை இன்னும் அதிகமாக மதிப்பதற்கு உங்களுக்கு உதவும். அவர் செய்திருக்கிற ஏற்பாடுகளில் ஒன்றுதான் சபைக் கூட்டங்கள். உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து அவற்றில் தவறாமல் கலந்துகொள்ள நீங்கள் விரும்புவீர்கள்.
பிரசங்க வேலையில் தவறாமல் கலந்துகொண்டு, யெகோவாவைப் பற்றியும் மனிதர்களுக்காக அவர் செய்கிறவற்றைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்தப் பகுதி உங்களுக்கு உணர்த்தும். (மத். 24:14; 28:19, 20) கடைசியாக, யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் மனதில் பதிய வைக்கும். யெகோவா உங்கள்மேல் காட்டியிருக்கும் அளவற்ற கருணைக்கு நீங்கள் நன்றியோடு நடந்துகொள்வதைப் பார்த்து அவர் நிச்சயம் சந்தோஷப்படுவார்.
1. திருமண ஏற்பாட்டைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? பைபிளின்படி, எந்த ஒரே காரணத்துக்காக மட்டும் ஒருவர் விவாகரத்து செய்யலாம்?
• “கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்’ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும். . . . பாலியல் முறைகேட்டை தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன் முறைகேடான உறவுகொள்கிறான்.”—மத். 19:4-6, 9.
2. கணவன் மனைவியாக ஒன்றுசேர்ந்து வாழ்பவர்கள் ஏன் சட்டப்படி திருமணம் செய்திருக்க வேண்டும்? நீங்கள் திருமணமானவராக இருந்தால் உங்கள் திருமணம் அரசாங்க சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?
• “அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும், . . . என்றெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்து.”—தீத். 3:1, 2.
• “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள். ஏனென்றால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களையும் மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.”—எபி. 13:4.
3. குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் பொறுப்பு என்ன?
• “என் மகனே, உன் அப்பா சொல்கிற புத்திமதியைக் கேள், உன் அம்மா கொடுக்கிற அறிவுரையை ஒதுக்கித்தள்ளாதே.”—நீதி. 1:8.
• “கிறிஸ்து சபைக்குத் தலையாக இருப்பதுபோல், கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான். . . . கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.”—எபே. 5:23, 25.
• “அப்பாக்களே, உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள். அதற்குப் பதிலாக, யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி வளர்த்து வாருங்கள்.”—எபே. 6:4.
• “பிள்ளைகளே, உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எல்லா விஷயத்திலும் கீழ்ப்படிந்து நடங்கள். இதுதான் நம் எஜமானுக்குப் பிரியமானது.”—கொலோ. 3:20.
• “மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.”—1 பே. 3:1.
4. நாம் ஏன் உயிருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்?
• “[கடவுள்] எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும் தருகிறார். அவரால்தான் நாம் உயிர் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.”—அப். 17:25, 28.
5. நாம் ஏன் யாரையும் கொலை செய்யக் கூடாது, தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையைக்கூட ஏன் கொலை செய்யக் கூடாது?
• “ஆண்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடும்போது ஒரு கர்ப்பிணிக்கு அடிபட்டு . . . தாயோ குழந்தையோ இறந்துவிட்டால், உயிருக்கு உயிர் கொடுக்க வேண்டும்.”—யாத். 21:22, 23.
• “நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன. என்னுடைய உறுப்புகள் எதுவும் உருவாவதற்கு முன்பே, அவை ஒவ்வொன்றைப் பற்றியும், அவை உருவாகும் நாட்களைப் பற்றியும் உங்களுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.”—சங். 139:16.
• ‘யெகோவா . . . அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகளை [வெறுக்கிறார்].’—நீதி. 6:16, 17.
6. இரத்தத்தைப் பற்றிக் கடவுள் கொடுத்திருக்கும் கட்டளை என்ன?
• “இரத்தத்துக்கும் நெரித்துக் கொல்லப்பட்டதற்கும் . . . தொடர்ந்து விலகியிருங்கள்.”—அப். 15:29.
7. நாம் ஏன் நம் கிறிஸ்தவச் சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்ட வேண்டும்?
• “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.”—யோவா. 13:34, 35.
8. சாதாரண தொற்றுநோயோ உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயோ மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க, அந்த நோயால் பாதிக்கப்பட்டவர் (அ) மற்றவர்களைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது போன்றவற்றை ஏன் செய்யக் கூடாது? (ஆ) சிலர் தங்களுடைய வீடுகளுக்கு அழைக்காதபோது ஏன் கோபித்துக்கொள்ளக் கூடாது? (இ) ஏதாவது ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்படும் சூழலில் ஒருவர் இருந்திருந்தால், திருமணம் செய்யும் நோக்கத்தோடு ஒருவரிடம் பழக ஆரம்பிப்பதற்கு முன்பு ஏன் இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள தானாகவே முன்வர வேண்டும்? (ஈ) தொற்றுநோய் உள்ள ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன் மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் அதை ஏன் தெரிவிக்க வேண்டும்?
• “யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதுதான் நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாக இருக்க வேண்டும். . . . ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்’ . . . அன்பு காட்டுகிறவன் மற்றவர்களுக்குக் கெட்டது செய்ய மாட்டான்.”—ரோ. 13:8-10.
• “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலி. 2:4.
9. நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?
• “ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.”—கொலோ. 3:13.
10. ஒரு சகோதரர் உங்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசியிருந்தால் அல்லது உங்களை மோசடி செய்திருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
• “உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்துவிட்டால், அவரிடம் தனியாகப் போய் அவர் செய்த தவறை எடுத்துச் சொல்லுங்கள்; நீங்கள் சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்டால், நீங்கள் அவரை நல்ல வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள். நீங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை என்றால், ஒருவரையோ இருவரையோ உங்களோடு கூட்டிக்கொண்டு போய்ப் பேசுங்கள். ஏனென்றால், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலம் எல்லா விஷயங்களையும் உறுதிசெய்யும். அவர்கள் சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால், சபைக்குத் தெரியப்படுத்துங்கள். சபை சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால், அவர் உங்களுக்கு மற்ற தேசத்தாரைப் போலவும் வரி வசூலிப்பவரைப் போலவும் இருக்கட்டும்.”—மத். 18:15-17.
11. பின்வரும் பாவங்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்:
▪ பாலியல் முறைகேடு
▪ சிலை வழிபாடு
▪ ஓரினச்சேர்க்கை
▪ திருட்டு
▪ சூதாட்டம்
▪ குடிவெறி
• “ஏமாந்துவிடாதீர்கள். பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்கள், சிலையை வணங்குகிறவர்கள், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள், ஆண் விபச்சாரக்காரர்கள், ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள், திருடர்கள், பேராசைக்காரர்கள், குடிகாரர்கள், சபித்துப் பேசுகிறவர்கள், கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.”—1 கொ. 6:9, 10.
12. பாலியல் முறைகேடு சம்பந்தமாக, அதாவது மணத்துணை அல்லாதவர்களோடு வைத்துக்கொள்ளும் பலவிதமான பாலியல் செயல்கள் சம்பந்தமாக, நீங்கள் என்ன தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள்?
• “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்.”—1 கொ. 6:18.
13. நம்மை அடிமைப்படுத்துகிற அல்லது நம் மனதைப் பாதிக்கிற பொருள்களை மருத்துவக் காரணத்துக்காக இல்லாமல் மற்ற காரணத்துக்காக நாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?
• “உங்களுடைய உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள். சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள். இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.”—ரோ. 12:1, 2.
14. பேய்களோடு சம்பந்தப்பட்ட என்ன சில பழக்கவழக்கங்களைக் கடவுள் வெறுக்கிறார்?
• “உங்களில் யாருமே . . . குறிசொல்லவோ, மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ, சூனியம் வைக்கவோ, வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம் அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ, இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது.”—உபா. 18:10, 11.
15. பெரிய பாவத்தைச் செய்துவிட்ட ஒருவர் திரும்பவும் யெகோவாவின் தயவைப் பெற விரும்பினால் அவர் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
• “என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன். என் தவறுகள் எதையும் மறைக்கவில்லை. ‘என்னுடைய குற்றங்களை யெகோவாவிடம் சொல்வேன்’ என்றேன்.”—சங். 32:5.
• “உங்களில் எவனாவது வியாதியாக இருக்கிறானா? அப்படியானால், சபையில் இருக்கிற மூப்பர்களை அவன் வரவழைக்கட்டும். அவர்கள் யெகோவாவின் பெயரில் அவனுக்கு எண்ணெய் பூசி அவனுக்காக ஜெபம் செய்யட்டும். விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம் வியாதியாக இருப்பவனைக் குணமாக்கும், யெகோவா அவனை எழுந்திருக்க வைப்பார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார்.”—யாக். 5:14, 15.
16. சக கிறிஸ்தவர் ஒருவர் பெரிய பாவம் செய்திருப்பது உங்களுக்குத் தெரியவந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
• “ஒருவன் பாவம் செய்வதைப் பார்க்கிறவனோ அதைப் பற்றித் தெரிந்தவனோ, அதற்குச் சாட்சியாக இருக்கிறான். அதனால், அதைத் தெரிவிக்க வேண்டுமென்ற அறிவிப்பை கேட்டும் அவன் தெரிவிக்காமல் இருந்துவிட்டால் அவன் குற்றவாளி. அந்தக் குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.”—லேவி. 5:1.
17. ஒருவர் இனியும் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை என்று அறிவிப்பு செய்யப்பட்டால், நாம் அவரை எப்படி நடத்த வேண்டும்?
• “சகோதரன் என்று அழைக்கப்படுகிற எவனும் பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவனாகவோ பேராசைப்படுகிறவனாகவோ சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறவனாகவோ சபித்துப் பேசுகிறவனாகவோ குடிகாரனாகவோ கொள்ளையடிக்கிறவனாகவோ இருந்தால், அப்படிப்பட்டவனோடு பழகுவதை விட்டுவிட வேண்டும். . . . அப்படிப்பட்டவனோடு சேர்ந்து நீங்கள் சாப்பிடவும் கூடாது.”—1 கொ. 5:11.
• “உங்களிடம் வருகிற யாராவது இந்தப் போதனைக்கு ஏற்றபடி கற்றுக்கொடுக்கவில்லை என்றால், அவனை ஒருபோதும் உங்களுடைய வீட்டுக்குள் சேர்க்காதீர்கள், அவனுக்கு வாழ்த்தும் சொல்லாதீர்கள்.”—2 யோ. 10.
18. நீங்கள் ஏன் யெகோவாவை நேசிப்பவர்களை மட்டும் நெருங்கிய நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
• “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்.”—நீதி. 13:20.
• “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை கெடுத்துவிடும்.”—1 கொ. 15:33.
19. யெகோவாவின் சாட்சிகள் ஏன் அரசியல் விவகாரங்களில் நடுநிலையோடு இருக்கிறார்கள்?
• “[இயேசு] இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.”—யோவா. 17:16.
20. நீங்கள் ஏன் அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
• “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஏனென்றால், கடவுளுடைய அனுமதி இல்லாமல் எந்த அதிகாரமும் இல்லை. தனக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அவர்களை அனுமதித்திருக்கிறார்.”—ரோ. 13:1.
21. மனிதர்களுடைய சட்டம் கடவுளுடைய சட்டத்துக்கு முரணாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
• “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்.”—அப். 5:29.
22. ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது என்ன வசனங்கள் இந்த உலகத்திலிருந்து விலகியிருக்க உங்களுக்கு உதவும்?
• “ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.”—மீ. 4:3.
• “என் மக்களே, அவளுடைய [மகா பாபிலோனுடைய] பாவங்களுக்குத் துணைபோகாமலும் அவளுக்கு வரப்போகும் தண்டனைகளில் பங்குகொள்ளாமலும் இருக்க வேண்டுமென்றால் அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”—வெளி. 18:4.
23. நீங்கள் என்ன விதமான பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுப்பீர்கள், எவற்றைத் தவிர்ப்பீர்கள்?
• “வன்முறையை விரும்புகிற எவனையும் [யெகோவா] வெறுக்கிறார்.”—சங். 11:5.
• “பொல்லாததை அடியோடு வெறுத்துவிடுங்கள். நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.”—ரோ. 12:9.
• “உண்மையானவை எவையோ, அதிமுக்கியமானவை எவையோ, நீதியானவை எவையோ, சுத்தமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, மெச்சத்தக்கவை எவையோ, ஒழுக்கமானவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ அவற்றையே யோசித்துக்கொண்டிருங்கள்.”—பிலி. 4:8.
24. யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற மதத் தொகுதிகளோடு சேர்ந்து கடவுளை வணங்குவதில்லை?
• “‘யெகோவாவின் மேஜையிலும்’ பேய்களின் மேஜையிலும் நீங்கள் சாப்பிட முடியாதே.”—1 கொ. 10:21.
• “‘அவர்களிடமிருந்து பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்’; ‘அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்’ என்று யெகோவா சொல்கிறார்.”—2 கொ. 6:17.
25. ஒரு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளலாமா கூடாதா என்பதைத் தீர்மானிக்க என்ன நியமங்கள் உங்களுக்கு உதவும்?
• “அவர்களோடு நெருக்கமாகப் பழகினார்கள். அவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள். அவர்களுடைய சிலைகளை வணங்கினார்கள். அவை இஸ்ரவேலர்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிட்டன.”—சங். 106:35, 36.
• “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது.”—பிர. 9:5.
• “நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.”—யோவா. 17:16.
• “முன்பு நீங்கள் உலக மக்களுடைய விருப்பத்தின்படி வெட்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவதிலும், கட்டுக்கடங்காத ஆசைகளுக்கு இடம்கொடுப்பதிலும், குடித்து வெறிப்பதிலும், குடித்துக் கும்மாளம் போடுவதிலும், போட்டி போட்டுக்கொண்டு குடிப்பதிலும், கண்டனத்துக்குரிய சிலை வழிபாடுகளில் கலந்துகொள்வதிலும் ஏற்கெனவே நிறைய காலத்தைச் செலவழித்துவிட்டீர்கள்.”—1 பே. 4:3.
26. பிறந்தநாட்களைக் கொண்டாடலாமா என்பதைத் தீர்மானிக்க எந்த பைபிள் உதாரணங்கள் உங்களுக்கு உதவுகின்றன?
• “மூன்றாம் நாளில் பார்வோனின் பிறந்த நாள் விழா நடந்தது. அவன் தன்னுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் விருந்து வைத்தான். அப்போது, பானம் பரிமாறுபவர்களின் தலைவனையும் ரொட்டி சுடுபவர்களின் தலைவனையும் தன்னுடைய ஊழியர்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினான். பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு மறுபடியும் அதே பதவியைக் கொடுத்தான். . . . ஆனால், ரொட்டி சுடுபவர்களின் தலைவனை பார்வோன் மரக் கம்பத்தில் தொங்கவிட்டான்.”—ஆதி. 40:20-22.
• “ஏரோதுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ஏரோதியாளின் மகள் அங்கிருந்த விருந்தாளிகள் முன்னால் நடனம் ஆடினாள்; அதைப் பார்த்து ஏரோது மனம் குளிர்ந்துபோனான். அதனால், அவள் என்ன கேட்டாலும் தருவதாக ஆணையிட்டுக் கொடுத்தான். அப்போது அவள் தன்னுடைய அம்மா தூண்டிவிட்டபடியே, ‘யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்’ என்று சொன்னாள். உடனே ஆள் அனுப்பி, சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்.”—மத். 14:6-8, 10.
27. நீங்கள் ஏன் மூப்பர்களுடைய அறிவுரைகளின்படி நடக்க விரும்புகிறீர்கள்?
• “உங்களை வழிநடத்துகிறவர்கள் உங்களைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்களைப் பாதுகாத்து வருகிறார்கள்; அதனால், அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்; அப்போது, அவர்கள் இதை வருத்தத்தோடு செய்யாமல் சந்தோஷத்தோடு செய்வார்கள்; அவர்கள் இதை வருத்தத்தோடு செய்தால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்.”—எபி. 13:17.
28. நீங்களும் உங்கள் குடும்பமும், பைபிளை வாசிப்பதற்கும் ஆழமாகப் படிப்பதற்கும் தவறாமல் நேரம் ஒதுக்குவது ஏன் முக்கியம்?
• “அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான். அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான். அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும், அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.”—சங். 1:2, 3.
29. கூட்டங்களுக்குப் போகவும் அதில் பங்கெடுக்கவும் உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது?
• “என்னுடைய சகோதரர்களுக்கு உங்களுடைய பெயரை அறிவிப்பேன். சபை நடுவில் உங்களைப் புகழ்வேன்.”—சங். 22:22.
• “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; சிலர் வழக்கமாகச் சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடுவதுபோல் நாமும் இருந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒன்றுகூடிவந்து ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்; நாள் நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்.”—எபி. 10:24, 25.
30. இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் மிக முக்கியமான வேலை என்ன?
• “அதனால், நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, . . . ஞானஸ்நானம் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.”—மத். 28:19, 20.
31. ஊழிய வேலைக்காக அல்லது நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் நன்கொடைகள் தரும்போது, எப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டுவது யெகோவாவைப் பிரியப்படுத்தும்?
• “உன்னுடைய மதிப்புமிக்க பொருள்களை . . . கொடுத்து யெகோவாவை மகிமைப்படுத்து.”—நீதி. 3:9.
• “ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்.”—2 கொ. 9:7.
32. கிறிஸ்தவர்கள் என்ன விதமான கஷ்டங்களை எதிர்பார்க்கலாம்?
• “நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது. நீங்கள் என் சீஷர்கள் என்பதற்காக மக்கள் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போதும், உங்களைத் துன்புறுத்தும்போதும் சந்தோஷப்படுங்கள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதியுங்கள், ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும்; உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் அப்படித்தான் துன்புறுத்தினார்கள்.”—மத். 5:10-12.
33. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஞானஸ்நானம் எடுப்பது ஏன் ஒரு விசேஷ பாக்கியம்?
• “உங்கள் வார்த்தை கிடைத்ததுமே . . . சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனேன். . . . யெகோவாவே, நான் உங்கள் பெயரால் அழைக்கப்படுவதை நினைத்து உள்ளம் பூரித்துப்போனேன்.”—எரே. 15:16.