ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களுக்கான கேள்விகள்
பகுதி 1: கிறிஸ்தவ நம்பிக்கைகள்
நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து, அதில் இருக்கிற உண்மைகளைக் கற்றிருப்பீர்கள். அவை, கடவுளோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உங்களுக்கு நிச்சயம் உதவியிருக்கும். அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ் பூஞ்சோலை பூமியில் முடிவில்லாத வாழ்வையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையையும் தந்திருக்கும். கடவுளுடைய வார்த்தையின் மீது நீங்கள் வைத்திருக்கிற விசுவாசமும் பலப்பட்டிருக்கும். சபையில் சகோதர சகோதரிகளோடு பழகுவதால் ஏற்கெனவே நிறைய ஆசீர்வாதங்களும் உங்களுக்குக் கிடைத்திருக்கும். இன்று யெகோவா எப்படித் தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்கிறார் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்.—சக. 8:23.
ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயாராகும்போது, அடிப்படையான கிறிஸ்தவ நம்பிக்கைகளைப் பற்றி சபை மூப்பர்கள் உங்களிடம் கேட்பது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். (எபி. 6:1-3) யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் அவர் தொடர்ந்து ஆசீர்வதித்து, உங்களுக்கு முடிவில்லாத வாழ்வைத் தரட்டும்.—யோவா. 17:3.
1. நீங்கள் ஏன் ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுகிறீர்கள்?
2. யெகோவா யார்?
• “மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாதான் உண்மைக் கடவுள். . . . அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.”—உபா. 4:39.
• “யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.”—சங். 83:18.
3. நீங்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது ஏன் முக்கியம்?
• “நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்: ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்.’”—மத். 6:9.
• “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”—ரோ. 10:13.
4. யெகோவாவை எப்படியெல்லாம் பைபிள் விவரிக்கிறது?
• “பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார்.”—ஏசா. 40:28.
• “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே.”—மத். 6:9.
• “கடவுள் அன்பாகவே இருக்கிறார்.”—1 யோ. 4:8.
5. நீங்கள் யெகோவாவுக்கு எதைத் தரலாம்?
• “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்.”—மாற். 12:30.
• “உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்.”—லூக். 4:8.
6. நீங்கள் ஏன் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?
• “என் மகனே, ஞானமாக நடந்து என் இதயத்தைச் சந்தோஷப்படுத்து. அப்போதுதான், என்னைப் பழித்துப் பேசுகிறவனுக்கு என்னால் பதிலடி கொடுக்க முடியும்.”—நீதி. 27:11.
7. நீங்கள் யாரிடம் ஜெபம் செய்கிறீர்கள், யார் மூலமாக ஜெபம் செய்கிறீர்கள்?
• “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் [இயேசுவின்] தகப்பனிடம் எதைக் கேட்டாலும், அதை அவர் என்னுடைய பெயரில் உங்களுக்குத் தருவார்.”—யோவா. 16:23.
8. நீங்கள் எதைப் பற்றியெல்லாம் ஜெபம் செய்யலாம்?
• “நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்: ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும். இன்றைக்குத் தேவையான உணவை எங்களுக்குக் கொடுங்கள்; எங்கள் கடனாளிகளை நாங்கள் மன்னித்ததுபோல் எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள். சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள், பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்.’”—மத். 6:9-13.
• “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார் என்பதுதான் நாம் அவர்மேல் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.”—1 யோ. 5:14.
9. யெகோவா எப்போது ஒருவருடைய ஜெபத்தைக் கேட்க மாட்டார்?
• “நீங்கள் உதவிக்காக யெகோவாவைக் கூப்பிடுவீர்கள். ஆனால், அவர் பதில் சொல்ல மாட்டார். . . . ஏனென்றால், நீங்கள் அக்கிரமம் செய்கிறீர்கள்.”—மீ. 3:4.
• “யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன; ஆனால், யெகோவாவுடைய முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”—1 பே. 3:12.
10. இயேசு கிறிஸ்து யார்?
• “அதற்கு சீமோன் பேதுரு, ‘நீங்கள் கிறிஸ்து, உயிருள்ள கடவுளுடைய மகன்’ என்று சொன்னார்.”—மத். 16:16.
11. இயேசு ஏன் இந்தப் பூமிக்கு வந்தார்?
• “மனிதகுமாரனும் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்குமே வந்தார்.”—மத். 20:28.
• “நான் [இயேசு] மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்.”—லூக். 4:43.
12. இயேசு கொடுத்திருக்கும் பலிக்கு நீங்கள் எப்படி நன்றி காட்டலாம்?
• “அவர் எல்லாருக்காகவும் இறந்திருப்பதால், வாழ்கிறவர்கள் இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்காக இறந்து உயிரோடு எழுப்பப்பட்டவருக்காகவே வாழ வேண்டும்.”—2 கொ. 5:15.
13. இயேசுவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
• “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.”—மத். 28:18.
• “கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தினார். மற்ற எல்லா பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குக் கொடுத்தார்.”—பிலி. 2:9.
14. யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுதான் இயேசுவினால் நியமிக்கப்பட்ட “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?
• “ஏற்ற வேளையில் தன்னுடைய வீட்டாருக்கு உணவு கொடுப்பதற்காக எஜமான் நியமித்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?”—மத். 24:45.
15. கடவுளுடைய சக்தியை ஒரு நபர் என்று பைபிள் சொல்கிறதா?
• “அதற்கு அவர், ‘கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்; உன்னதமான கடவுளுடைய வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.’”—லூக். 1:35.
• “அப்படியானால், பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, பரலோகத் தகப்பன் தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை இன்னும் எந்தளவு கொடுப்பார்!”—லூக். 11:13.
16. யெகோவா தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி எதையெல்லாம் செய்திருக்கிறார்?
• “யெகோவாவின் வார்த்தையால் வானம் உண்டாக்கப்பட்டது. அவருடைய வாயின் சுவாசத்தால் வானத்திலுள்ள எல்லாமே உருவாக்கப்பட்டது.”—சங். 33:6.
• “கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று, . . . பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.”—அப். 1:8.
• “வேதவசனங்களில் இருக்கிற எந்தத் தீர்க்கதரிசனமும் தனி நபர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் சொல்லப்படவில்லை . . . ஏனென்றால், மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை. கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்.”—2 பே. 1:20, 21.
17. கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?
• “பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது. அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது. அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”—தானி. 2:44.
18. கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு என்ன நன்மைகளைச் செய்யும்?
• “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”—வெளி. 21:4.
19. கடவுளுடைய அரசாங்கம் தரும் ஆசீர்வாதங்களை சீக்கிரத்தில் அனுபவிப்பீர்கள் என்று எப்படிச் சொல்வீர்கள்?
• “சீஷர்கள் அவரிடம் தனியாக வந்து, ‘இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, ‘. . . ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும், அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் நிலநடுக்கங்களும் ஏற்படும். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்’ [என்றார்].”—மத். 24:3, 4, 7, 14.
• “கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள். ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக, பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறாக வாழ்கிறவர்களாக இருப்பார்கள்.”—2 தீ. 3:1-5.
20. கடவுளுடைய அரசாங்கத்தை நீங்கள் முக்கியமாக நினைக்கிறீர்கள் என்பதை எப்படிக் காட்டுகிறீர்கள்?
• “எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்.”—மத். 6:33.
• “இயேசு தன்னுடைய சீஷர்களிடம், ‘யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே துறந்து, தன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வர வேண்டும்.’”—மத். 16:24.
21. சாத்தானும் பேய்களும் யார்?
• “பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான்.”—யோவா. 8:44.
• “உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.”—வெளி. 12:9.
22. யெகோவாமீதும் அவரை வணங்குபவர்கள்மீதும் என்ன குற்றச்சாட்டை சாத்தான் சுமத்தியிருக்கிறான்?
• “அதற்கு அந்தப் பெண், ‘தோட்டத்தில் இருக்கிற மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம். ஆனால், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தை நாங்கள் சாப்பிடக் கூடாது என்றும், தொடக் கூடாது என்றும் கடவுள் சொல்லியிருக்கிறார். மீறினால் நாங்கள் செத்துப்போவோம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்’ என்றாள். அப்போது அந்தப் பாம்பு அவளிடம், ‘நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள். நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள் என்றும் கடவுளுக்குத் தெரியும்’ என்று சொன்னது.”—ஆதி. 3:2-5.
• “சாத்தான் யெகோவாவிடம், ‘ஒரு மனுஷன் எந்த உயிரையும்விட தன்னுடைய உயிரைத்தான் பெரிதாக நினைப்பான். அதைக் காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராயிருப்பான்’ [என்று சொன்னான்].”—யோபு 2:4.
23. சாத்தானுடைய குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நீங்கள் எப்படி நிரூபிக்கலாம்?
• “அவருக்கு [கடவுளுக்கு] முழு இதயத்தோடு . . . சேவை செய்.”—1 நா. 28:9.
• “சாகும்வரை நான் என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்.”—யோபு 27:5.
24. மனிதர்கள் ஏன் சாகிறார்கள்?
• “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.”—ரோ. 5:12.
25. இறந்தவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்?
• “உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும். ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது.”—பிர. 9:5.
26. இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
• “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.”—அப். 24:15.
27. இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்ய எத்தனை பேர் பரலோகத்துக்குப் போவார்கள்?
• “சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டியானவர் நின்றுகொண்டிருந்தார்; அவருடைய பெயரும் அவருடைய தகப்பனின் பெயரும் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த 1,44,000 பேர் அவரோடு நின்றுகொண்டிருந்தார்கள்.”—வெளி. 14:1.