அதிகாரத்தைத் துர்ப்பிரயோகிப்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
“யெகோவாவுக்குப் பயப்படுவதே தீமையைப் பகைப்பதாம்; பெருமை, வீம்பு, தீமையான வழி, புரட்டு வாய் அனைத்தையும் நான் பகைக்கிறேன்.”—நீதிமொழிகள் 8:13, தி.மொ.
அதிகாரத்தைத் தன்னலத்துடன் தவறாகப் பிரயோகித்தல் யெகோவா வெறுக்கும் தீய வழிகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அபூரண மனிதரின் இந்த மனச்சாய்வுக்கு எதிராக அவருடைய வார்த்தை நமக்கு அறிவுரை அளிக்கிறது. ஏனெனில், அவர் மனிதரின் இருதயத்தை அறிந்திருக்கிறார். நாம் பின்ருமாறு வாசிக்கிறோம்: “இருதயமே எல்லாவற்றிலும் வஞ்சனையுள்ளது, மிகவும் கெட்டுப்போனது; அதை அறிபவன் யார்? யெகோவாவாகிய நானே இருதயத்தை ஆராய்ந்து நினைவுகளைச் சோதித்தறிகிறேன், ஒவ்வொருவனுக்கும் அவனவன் வழிகளுக்கும் அவன் செயல்களால் விளைந்ததற்கும் தக்கபடியே கொடுப்பேன்.”—எரேமியா 17:9, 10, தி.மொ.
2 நல்ல காரணங்களினிமித்தமே, கடவுளுடைய வார்த்தை அதிகாரத்தைத் தவறாக பிரயோகிப்பதற்கு எதிராக எச்சரிக்கிறது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது அல்லது அதிகாரத் துர்ப்பிரயோகத்திற்கான மனச்சாய்வின் காரணத்தால் ஆங்கில அறிஞர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “அதிகாரம் கேடு விளைவிக்கும் தன்மையுடையது, முழு அளவான அதிகாரம் முழு அளவில் கேடு விளைவிக்கிறது.” மேலும் அவர் கூறியது: “மனிதரை மட்டமான நிலைக்கும் நெறிமுறை கெட்ட நிலைக்கும் கொண்டுவரும் அனைத்து காரியங்களிலும் அதிகாரம் தானே மிக நிலையானதும், மிகச் சுறுசுறுப்பாக செயல்படுவதுமாகும்.” கடந்த மாத பத்திரிகையில் நாம் படித்ததுபோல, நிச்சயமாகவே அதிகாரம் கேடு விளைவிக்கத்தக்க செல்வாக்கை கட்டாயம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் அந்த விளைவை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
3 அதிகாரத்தைத் தவறாக பிரயோகிப்பதைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டியவர்கள் யார்? எல்லாருமே! மற்றவர் மீது பணம், கல்வி, ஆற்றல், அந்தஸ்து, அழகு போன்ற காரியங்களினிமித்தம் ஒருவர் மற்றவரைப் பார்க்கிலும் மேம்பட்ட நிலையில் இருக்கும் மனித உறவுகளின் எல்லாக் கட்டத்திலும் காணப்படுகிறது. எந்தளவுக்கு மேல் நிலையிலிருக்கிறாரோ, அந்தளவுக்கு அதைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தும் சோதனையும் அதிகமாயிருக்கிறது. ஏன்? ஏனென்றால், “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது.” (ஆதியாகமம் 8:21) ஆம், அபூரண மனிதரின் இருதயம் “வஞ்சனையுள்ளது,” ஏமாற்றக்கூடியது, அல்லது திருக்குள்ளது, மற்றும் தீய சாய்வுடையது.—எரேமியா 17:9.
கிறிஸ்தவ மூப்பர்கள்
4 முதலாவதாக, கிறிஸ்தவ சபையிலுள்ள கண்காணிகளை, மூப்பர்களைக் கவனியுங்கள். அவர்களுடைய தகுதிகளைக் குறித்து சிந்திக்கும்போது, ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும், நூறு பேருக்கும், ஐம்பது பேருக்கும் பத்து பேருக்கும் அதிபதிகளாக ஏற்படுத்துவதற்காக மனிதரைத் தெரிந்துகொள்வதன் சம்பந்தமாக எத்திரோ மோசேக்கு சொன்ன வார்த்தைகளை மனதிற்குக் கொண்டுவரலாம்: “ஜனங்கள் எல்லோருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொள்.” (யாத்திராகமம் 18:21; தி.மொ.) அப்படிப்பட்ட மனிதர்களுக்குக் கண்காணிக்கும் பொறுப்பை நம்பிக்கையுடன் கொடுக்கலாம். கண்காணிப்பின் ஸ்தானத்தினால் வரும் அனுகூலமான நிலையை அப்படிபட்டவர்கள் துர்ப்பிரயோகம் செய்யமாட்டார்கள், ஏனெனில் தேவ பயம் என்பது தீமையை வெறுப்பதைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட மனிதர் “அநியாய லாபத்தை” நாடுவதற்கு அல்லது நேசிப்பதற்குப் பதிலாக அதை உண்மையிலேயே “வெறுக்கிறவர்களாக” இருப்பார்கள்.
5 மூப்பர்கள் அதிகாரத்தைத் தவறாக பிரயோகிக்கும் அபாயத்தைக் குறித்து அப்போஸ்தனாகிய பேதுரு அறிந்திருந்தான், எனவேதான் அவன் கிறிஸ்தவ சபையிலுள்ள கண்காணிகளுக்குப் பின்வரும் புத்திமதியைக் கொடுப்பதை நாம் காண்கிறோம்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்காணிப்புச் செய்யுங்கள்.” (1 பேதுரு 5:2, 3) கடவுளுடைய மந்தையை அவலட்சணமான ஆதாயத்திற்கு மேய்ப்பது அதிகாரத்தைத் தவறாகப் பிரயோகிப்பதாகும். அதுபோல, மந்தை மீது ஆளுகிறவர்களாக இருப்பதும் ஒருவருடைய அதிகாரத்தைத் தன்னலத்திற்குப் பயன்படுத்துவதாயிருக்கும். உதாரணமாக, தன்னுடைய குடும்பம் எப்படி உடை உடுத்த வேண்டும் என்பதன் பேரில் ஒரு மூப்பர் குறிப்பிட்ட சில கருத்துக்களை உடையவராயிருக்கலாம். ஆனால் அப்பேர்ப்பட்ட தனிப்பட்ட எண்ணங்களை அவர் மந்தையின் மீது திணிக்க முற்படாதபடிக்கு கவனமாயிருக்க வேண்டும்; அப்படிச் செய்வது அவர்களை ஆளுவதாக இருக்கும்.
6 மூப்பர்கள் கவனமாயிராவிட்டால், அவர்கள் ‘உறவினர் சலுகை’ (nepotism) என்ற பழிக்கு ஆளாகக்கூடும். அதுவுங்கூட அதிகாரத் துர்ப்பிரயோகமாக இருக்கும். உறவினர் சலுகையா? ஆம், அது “உடன் பிறந்தார் பிள்ளைகள்” (nephews) என்ற அர்த்தத்தையுடைய இலத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. போப்புகளும் சர்ச்சின் மற்ற அதிகாரிகளும் தங்களுடைய உறவினருக்கு, விசேஷமாக தங்களுடைய ‘சகோதர அல்லது சகோதரிகளின் பிள்ளைகளுக்கு மதச் சலுகை அல்லது பொருள் சலுகை வழங்கும் ஓர் இகழத்தக்க பழக்கத்தைக் கொண்டிருந்ததால் இந்தச் சொல் உருவானது. போப் நிக்கோலாஸ் III “போப்பாட்சிக்குரிய உறவினர் சலுகையின் முற்பிதா” என்றும் அழைக்கப்பட்டார். கிறிஸ்தவ மூப்பர்கள் கவனமாயிராவிட்டால் ஆவிக்குரிய நியமங்களின் செல்வாக்குக்குப் பதிலாக குடும்ப உறவுகளின் செல்வாக்குக்கு இடமளித்துவிடக்கூடும். மற்ற மூப்பர்கள் ஒத்துக்கொள்ளாதபோதிலும், தன்னுடைய மகன் கண்காணியாக சிபார்சு செய்யப்பட வேண்டும் என்று மூப்பர் ஒருவர் பலமாக உணர்ந்தார். ஆகையால் அந்தத் தகப்பனார் இன்னொரு சபைக்கு மாறிச் சென்றார். சில ஆண்டுகள் கழிந்தும் அவருடைய மகன் மூப்பராக சிபார்சு செய்யப்படவில்லை. இரத்த உறவு தன் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கு அந்தத் தகப்பனார் அனுமதித்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
7 தங்களுடைய உறவினர் செய்யும் தவறுகளின் பேரில் நடவடிக்கை எடுக்காமலிருப்பதும் ‘உறவினர் சலுகை’ என்ற உருவில் மற்றொரு அதிகாரத் துர்ப்பிரயோகமாகும். (1 சாமுவேல் 2:22-25, 30-35-ஐ ஒப்பிடவும்) ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஐக்கிய மாகாணங்களின் சில சபைகளில் தவறான செயலை உட்படுத்திய ஒரு நிலைமை அதிர்ச்சியைக் கொடுத்தது. அண்மையில், இப்படிப்பட்ட காரியம் சில ஐரோப்பிய நாடுகளிலும் சம்பவித்தது. அநேக இளைஞர்கள் வேசித்தனம், போதை மருந்து துர்ப்பிரயோகம் போன்ற காரியங்களில் ஈடுபட்டவர்களாயிருந்தனர். இவர்களில் மூப்பர்களின் பிள்ளைகள் சிறிய எண்ணிக்கையாக இருக்கவில்லை, சில மூப்பர்கள் தங்களுடைய பிள்ளைகளின் தவறான நடத்தையைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டனர். உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தபோது, மூப்பர்களில் பலர் மூப்பர் ஸ்தானத்திலிருந்து நீக்கப்பட்டனர், ஏனென்றால், மூப்பர்களாக தாங்கள் பெற்றிருந்த விசேஷ சிலாக்கியத்தை அவர்கள் துர்ப்பிரயோகம் செய்தனர் அல்லது குறிப்பாக சொல்லப்போனால், தங்களுடைய அதிகாரத்தைச் சரியாக பிரயோகிக்க தவறிவிட்டனர்.