“பேச ஒரு காலம்”—எப்பொழுது?
“மேரி ஒரு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக வேலை செய்கிறாள். தன்னுடைய வேலையில் இரகசியத்தைக் காத்துக்கொள்ளும் தகுதியைக் கடைபிடிக்கும் உத்தரவாதமுடையவளாயிருந்தாள். தன்னுடைய வேலை சம்பந்தமாக பதிவேடுகளும் தகவல்களும் அவற்றைப் பெற்றுக்கொள்ள உரிமையற்றவர்களிடம் சென்றுவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அவளுடைய மாநிலத்தின் சட்டங்களும் நோயாளிகள் சம்பந்தமான இரகசியத்துக்குரிய தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துகிறது.
ஒரு நாள் மேரி ஓர் இரண்டகநிலையை எதிர்ப்பட்டாள். மருத்துவப் பதிவுகளைத் தயாரிக்கையில் ஒரு நோயாளி, ஒரு உடன் கிறிஸ்தவ பெண், கருச்சிதைவுக்குத் தன்னை உட்படுத்தியிருப்பதாகக் காண்பிக்கும் தகவலைக் கண்டாள். இந்தத் தகவலைச் சபையின் மூப்பர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டிய வேதப்பூர்வமான உத்தரவாதத்தின்கீழ் வந்தாளா? இது தன்னுடைய வேலையை இழப்பதற்கு, தன்மீது நீதிமன்ற வழக்கு தொடரப்படுவதற்கு, அல்லது தன்னுடைய முதலாளி சட்டரீதியான பிரச்னைகளை எதிர்ப்படுவதற்கு வழிநடத்தக்கூடுமென்றாலும் அந்த உத்தரவாதத்தின்கீழ் வந்தாளா? அல்லது நீதிமொழிகள் 11:13 இந்தக் காரியத்தை மறைத்துவைப்பதை நியாயநிரூபணம் செய்யுமா? இந்த வசனம் பின்வருமாறு வாசிக்கிறது: “புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.”—நீதிமொழிகள் 25:9,10-ஐ ஒப்பிடவும்.
யெகோவாவின் சாட்சிகள் அவ்வப்போது இதைப்போன்ற சந்தர்ப்பசூழ்நிலைகளை எதிர்ப்படுகிறார்கள். மேரியைப் போலவே அவர்கள் சாலொமோன் அரசன் கவனித்த காரியத்தை நன்கு அறிந்தவர்களாயிருக்கிறார்கள்: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. . . . மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:1, 7) இது மேரி மவுனமாயிருப்பதற்கான காலமா, அல்லது அவள் அறிந்த காரியத்தைப் பேசுவதற்கான காலமா?a
சந்தர்ப்ப சூழ்நிலைகள் வெகுவாக வித்தியாசப்படலாம். எனவே, எல்லோரும் மேரியைப் போலவே காரியங்களைக் கையாளவேண்டும் என்பது போல் ஒவ்வொரு சமயத்திலும் பின்பற்றுவதற்கான ஒரு செயல்முறையை நிர்ணயிப்பது கூடாத காரியம். ஆம், ஒவ்வொரு கிறிஸ்தவனும், இப்படிப்பட்ட நிலையை எதிர்ப்பட நேர்ந்தால், உட்பட்டிருக்கும் எல்லா அம்சங்களையும் நிதானித்து, பைபிள் நியமங்களையும், சட்டம் சம்பந்தமாக உட்படும் காரியங்களையும், யெகோவாவுக்கு முன்பாகத் தன்னை சுத்த மனச்சாட்சியுடைய ஒருவராயிருக்கச்செய்யும் காரியங்களையும் கவனத்திற்கெடுத்து ஒரு தீர்மானத்திற்கு வர தயாராயிருக்கவேண்டும். (1 தீமோத்தேயு 1:5, 19) பாவங்கள் வினைமையற்றதாயும் மனித அபூரணத்திநிமித்தம் செய்யப்பட்டவையாயும் இருந்தால், பின்வரும் நியமம் பொருந்துகிறது: “அன்பு திரளான பாவங்களை மூடும்.” (1 பேதுரு 4:8) ஆனால் வினைமையான குற்றமிழைக்கப்பட்டதாகத் தெரிந்தால், பாவம் செய்திருப்பவர் உதவி பெறுவதற்காகவும் சபையின் தூய்மை காக்கப்படுவதற்காகவும், உத்தமமுள்ள ஒரு கிறிஸ்தவன், கடவுள் பேரிலும் தன் உடன் கிறிஸ்தவன் பேரிலுமுள்ள அன்பின் காரணத்தால் தான் அறிந்ததை வெளிப்படுத்த வேண்டுமா?
பைபிள் நியமங்களைப் பொருத்துதல்
பொருந்தக்கூடிய சில அடிப்படை பைபிள் நியமங்கள் யாவை? முதலாவதாக, வினைமையான குற்றமிழைக்கும் எவரும் அதை மறைக்க முற்படக்கூடாது. “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள் 28:13) யெகோவாவின் பார்வைக்கு எந்தக் காரியமும் தப்புவதில்லை. மறைவான மீறுதல்களுக்கு ஒருநாள் கணக்கு கொடுக்கவேண்டும். (நீதிமொழிகள் 15:3; 1 தீமோத்தேயு 5:24, 25) சில சமயங்களில் மறைக்கப்பட்டிருக்கும் குற்றத்துக்குத் தகுந்த கவனம் கொடுக்கப்படுவதற்காக அதை யெகோவா சபையின் ஒரு அங்கத்தினருடைய கவனத்திற்குக் கொண்டுவருகிறார்.—யோசுவா 7:1-26.
இதில் வழிநடத்தும் மற்றொரு பைபிள் வசனம் லேவியராகமம் 5:1-ல் காணப்படுகிறது: “தான் கண்டதுண்டா, அறிந்ததுண்டா என்று சாட்சியாகச் சொல்வதற்கு ஆணையோடு அழைப்பதை (வெளியரங்கமான சபித்தலை, NW) ஒருவன் கேட்டு தனக்குத் தெரிந்ததைச் சொல்லாமலிருந்து பாவத்துக்குட்பட்டால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.” இந்த “வெளியரங்கமான சபித்தல்” இழிவான பேச்சோ அல்லது தேவதூஷணமோ அல்ல. மாறாக, குற்றமிழைக்கப்பட்டவர் சரியான சாட்சிகள் தனக்கு நீதியைப் பெறுவதற்காக உதவும்படி வேண்டினான், அப்பொழுது தனக்குக் குற்றமிழைத்தவன், ஒருவேளை இன்னும் அடையாளங் காட்டப்படாதவனாயிருப்பவன் மீது சாபங்களை—அநேகமாய் யெகோவாவிடமிருந்து வரும் சாபங்களை—மொழிகிறான். இழைக்கப்பட்ட தவறுக்கு சாட்சிகளாயிருக்கும் எவரும் யாருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பார்களாதலால் முன்வந்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய உத்தரவாதம் இருக்கிறது. இல்லாவிடில், யெகோவாவுக்கு முன்பாகத் ‘தன் அக்கிரமத்தைச் சுமக்க’ வேண்டியதாயிருக்கும்.b
சர்வலோகத்திலும் உச்ச உயர்வான அதிகாரத்திலிருப்பவரிடமிருந்து வந்திருக்கும் இந்தக் கட்டளை, ஒவ்வொரு இஸ்ரவேலரும் தான் பார்க்கும் வினைமையான எந்த ஒரு குற்றத்தையும் நியாயாதிபதிகள் கையாளுவதற்காக அவர்களிடம் அறிக்கை செய்யவேண்டிய உத்தரவாதத்தை வைத்தது. கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லை என்றாலும், அதன் நியமம் இன்றும் கிறிஸ்தவ சபையில் பொருந்துகிறது. எனவே சில சமயங்களில் மூப்பர்களுடைய கவனத்துக்குக் கொண்டுவரப்படவேண்டிய காரியங்கள் இருக்கக்கூடும். தனிப்பட்டவர்களின் பதிவேடுகளில் காணப்படும் காரியங்களை அந்தத் தகவலைப் பெற்றுக்கொள்ள உரிமையற்றவர்களிடம் வெளிப்படுத்துவது அநேக நாடுகளில் சட்ட விரோதமான செயல் என்பது உண்மைதான். ஆனால் ஜெபத்தோடு சிந்தித்த பின்பு, கீழ்ப்பட்ட அதிகாரங்களின் உத்தரவின் மத்தியிலும் தான் அறிந்திருப்பவற்றை அறிக்கை செய்யும்படியாகக் கடவுளுடைய சட்டம் தன்னிடம் கேட்கும் ஒரு சூழ்நிலையை எதிர்ப்படுவதாக ஒரு கிறிஸ்தவன் உணர்ந்தால், அதை அவன் யெகோவாவுக்கு முன்பாக ஏற்றுக்கொள்கிறான். ஒரு கிறிஸ்தவன் “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிற” சமயங்களும் உண்டு.—அப்போஸ்தலர் 5:29.
ஆணைகள் அல்லது பயபக்திக்குரிய வாக்குறுதிகள் சாதாரணமாகக் கருதப்படக்கூடாது. சிலசமயங்களில் மனிதர் கேட்கும் உறுதிமொழிகள், நம்முடைய கடவுளுக்கு தனிப்பட்ட பக்தியைக் கொடுக்க வேண்டும் என்ற தேவைக்கு முரணாக இருக்கக்கூடும். எவரேனும் ஒருவர் வினைமையான ஒரு பாவத்தைச் செய்வாரானால், அவர் தவறிழைக்கப்பட்டவராகிய யெகோவா தேவனின் ‘வெளியரங்கமான சபித்தலின்கீழ்’ வருகிறான். (உபாகமம் 27:26; நீதிமொழிகள் 3:33) கிறிஸ்தவ சபையின் பாகமாகும் அனைவரும் தாங்கள் தனிப்பட்டவர்களாகச் செய்யும் காரியங்கள் மூலமும் மற்றவர்களும் சுத்தமாக இருக்க அவர்களுக்கு உதவுவதன் மூலமும் சபையைச் சுத்தமாக வைக்கவேண்டிய “ஆணைக்குள்” தங்களை உட்படுத்திக்கொள்கிறார்கள்.
தனிப்பட்ட உத்தரவாதம்
தன்னுடைய தனிப்பட்ட தீர்மானத்தை எடுப்பதற்கு மேரி சில பைபிள் நியமங்களைச் சிந்தித்திருக்கக்கூடும். காரியங்களைக் கவனத்தோடு நிதானிக்காமல் அவசரப்பட்டு செயல்படாதிருக்க ஞானம் அவளுக்குத் துணையாயிருந்தது. பைபிள் பின்வரும் ஆலோசனையைக் கொடுக்கிறது: “நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.” (நீதிமொழிகள் 24:28) ஒரு காரியத்தை முடிவாக உறுதிசெய்ய, குறைந்தபட்சம் இரண்டு கண்கண்ட சாட்சிகளாவது தேவை. (உபாகமம் 19:15) கருச்சிதைவு குறித்து இலேசாக சொல்லப்பட்டதை மட்டுமே கேட்டிருப்பாளானால், குற்றத்துக்கான அத்தாட்சி அவ்வளவு பலவீனமாக இருப்பதால் அவள் தன் மனச்சாட்சியின் அடிப்படையில் அதைத் தொடரக்கூடாது என்று தீர்மானித்திருக்கக்கூடும். ஒருவேளை பில் போடுவதில் ஏதாவது தவறு ஏற்பட்டிருக்கலாம், அல்லது வேறு எந்த வழியிலாவது பதிவுகள் நிலைமையைச் சரியாகக் காண்பிக்காமலிருக்கலாம்.
என்றபோதிலும், இந்த விஷயத்தில், மேரிக்கு குறிப்பிடத்தக்க வேறொரு தகவல் இருந்தது. உதாரணமாக, சகோதரி அந்தக் குறிப்பிட்ட பில்லுக்குரிய தொகையைச் செலுத்திவிட்டாள், எனவே அதில் குறிப்பிடப்பட்டிருந்த மருத்துவப் பணியைத் தான் பெற்றதாக அங்கீகரித்திருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருந்தாள். மேலும் அந்தச் சகோதரி விவாகமாகாதவளாயிருந்ததால், வேசித்தனம் உட்பட்டிருப்பதற்கான சாத்தியத்துக்கும் இடமளிப்பதாயிருக்கிறது என்பதை அவள் தனிப்பட்ட விதத்தில் அறிந்திருந்தாள். தவறிழைத்திருக்கக்கூடிய ஒருவருக்கு அன்புடன் உதவியளிக்க வேண்டும், மற்றும் யெகோவாவின் அமைப்பின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் மேரிக்கு இருந்தது. நீதிமொழிகள் 14:25-ஐ அவள் நினைவுபடுத்தியிருக்கக்கூடும்: “மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.”
சட்ட சம்பந்தமான அம்சங்களைக் குறித்து மேரி ஓரளவுக்குப் பயந்தாள், ஆனால் இந்தச் சூழ்நிலையில் தான் மருத்துவ பதிவுகளிலிருக்கும் இரகசிய தகவல்களைக் காத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறதைவிட பைபிள் நியமங்கள் அதிக முக்கியமானதாயிருக்கிறது என்று உணர்ந்தாள். இந்தக் காரியத்தைக் குறித்து அந்தச் சகோதரி என்பேரில் கோபப்பட்டு, பழிக்குப்பழி வாங்க எனக்கு வேலையில் கஷ்டத்தை ஏற்படுத்த விரும்ப மாட்டாள் என்று மேரி தனக்குள் விவாதித்தாள். எனவே தனக்குக் கிடைத்த எல்லா உண்மைகளையும் மேரி அலசிப்பார்த்த போது, இது “பேச ஒரு காலம்,” “மவுனமாயிருப்பதற்கான” காலம் அல்ல என்று தன் மனச்சாட்சியின்படி தீர்மானித்தாள்.
இப்பொழுது மேரி கூடுதலான ஒரு கேள்வியை எதிர்ப்பட்டாள். தான் யாரிடம் பேச வேண்டும், அதை தான் எப்படி விவேகமாய்ச் செய்வது? அவள் நேரடியாக மூப்பர்களிடம் செல்லலாம், ஆனால் முதலாவதாக அந்த சகோதரியிடம் தனித்துப் பேச தீர்மானித்தாள். இது ஒரு அன்பான அணுகுமுறை. இந்த சகோதரி ஏதோ ஒரு சந்தேகத்தின்கீழ் காரியங்களைத் தெளிவாக்கிக்கொள்வாள், அல்லது குற்றமுள்ளவளாயிருந்தால் சந்தேகம் உறுதிப்படுத்தப்படுகிறது. அந்தச் சகோதரி மூப்பர்களிடம் ஏற்கனவே பேசியிருந்தால், அதைக் குறித்து அவள் சொல்லியிருப்பாள், மற்றும் மேரி அதைத் தொடரவேண்டிய அவசியமிராது. சகோதரி கருச்சிதைவு செய்திருந்து கடவுளுடைய சட்டத்திற்கு விரோதமாக இந்த வினைமையான குற்றத்தை அறிக்கை செய்யாதிருந்தால், இதைச் செய்யும்படியாக அவளை உற்சாகப்படுத்துவாள். பின்பு மூப்பர்கள் யாக்கோபு 5:13-20-க்கு இணங்க அவளுக்கு உதவலாம். மகிழ்ச்சிக்குரிய விதத்தில் காரியம் இப்படியாகத்தான் நடந்தது. கடுமையான அழுத்தத்தின் காரணத்தாலும் ஆவிக்குரிய பலவீனத்தாலும் கருச்சிதைவுக்கு இடம்கொடுத்துவிட்டாள் என்பதை மேரி கண்டாள். வெட்கமும் பயமும் அவளுடைய பாவத்தை மறைக்கச் செய்திருக்கிறது, ஆனால் ஆவிக்குரிய ஆரோக்கியத்தினிடமாக மூப்பர்களிடமிருந்து உதவி பெற்றுக்கொள்ள மகிழ்ச்சியாயிருந்தாள்.
மேரி முதலாவதாக மூப்பர் குழுவிடம் அறிக்கை செய்திருந்தால், அதுபோன்ற ஒரு தீர்மானத்தைத்தான் அவர்களும் எதிர்ப்பட்டிருப்பார்கள். தங்களிடம் வரும் இரகசியத்துக்குரிய தகவலைத் தாங்கள் எவ்விதம் கையாளுவார்கள்? மந்தையின் மேய்ப்பர்களாக யெகோவாவும் அவருடைய வார்த்தையும் தங்களிடமிருந்து கேட்கும் காரியத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியதாயிருந்திருக்கும். அறிக்கை சபையோடு நெருங்க கூட்டுறவு கொண்டிருந்திருக்கும் ஒரு முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவனை உட்படுத்தியதாயிருந்தால், தாங்கள் தொடரவேண்டுமா என்பதற்கு மேரியைப் போல அத்தாட்சிகளை நிதானித்துப்பார்க்க வேண்டியதாயிருந்தது. சபையில் “புளிப்புள்ள” நிலை இருப்பதற்கு பலமான காரணம் இருக்கிறது என்று அவர்கள் தீர்மானித்தால் அந்தக் காரியத்தைக் கவனிப்பதற்கு ஒரு நீதிவிசாரணைக் குழுவை நியமிப்பதைத் தெரிந்துகொண்டிருக்கலாம். (கலாத்தியர் 5:9, 10) சந்தேகத்துக்குரிய நபர் ஒரு அங்கத்தினராக இருப்பதிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டவராக இருப்பாரானால், ஒரு காலப்பகுதிக்குக் கூட்டங்களுக்கு வராமலும் தன்னை ஒரு யெகோவாவின் சாட்சியாக அடையாளங்காட்டாமலும் இருந்தால், அவள் மீண்டும் தன்னை ஒரு சாட்சியாக அடையாளங்காட்டும் அந்தச் சமயம் வரை காரியத்தை விட்டுவைக்க தீர்மானிக்கக்கூடும்.
முன்னதாகவே யோசனைசெய்தல்
தங்களுடைய கிறிஸ்தவ வேலையாட்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்ளுதல் சம்பந்தமான விதிகள் உட்பட ‘சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிப்பார்கள்’ என்பதை எதிர்பார்க்கும் உரிமை முதலாளிகளுக்கு இருக்கிறது. (தீத்து 2:9, 10) ஒரு உறுதிமொழி எடுக்கப்படுமாயின், அதை இலேசாகக் கருதிவிடக்கூடாது. ஒரு ஆணை அல்லது உறுதிமொழி ஒரு வாக்கைப் பயபக்திக்குரியதாகவும் உடன்பாட்டுக்குரியதாகவும் ஆக்குகிறது. (சங்கீதம் 24:4) இரகசியத்தைக் காத்துக்கொள்ளுதலின் தேவையை ஒரு சட்டம் அமலாக்குகிறதென்றால், இந்தக் காரியம் அதிக கவனத்துக்குரியதாகிறது. எனவே ஒரு கிறிஸ்தவன் தன் வேலை சம்பந்தமாகவோ அல்லது வேறு காரியங்களிலோ உறுதிமொழி எடுப்பதற்கு முன்பு அல்லது இரகசியத்தைக் காத்துக்கொள்ளும் கட்டுப்பாட்டுக்குள் தன்னை உட்படுத்திக்கொள்வதற்கு முன்பு, பைபிள் காரியங்களுக்கு முரணாக இது என்ன பிரச்னைகள் உண்டுபண்ணக்கூடும் என்பதைத் தீர்மானிப்பது ஞானமானது. ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ தன்னுடைய வாடிக்கையாளராக இருந்தால் ஒருவர் காரியங்களை எப்படி கையாளுவார்? சாதாரணமாக மருத்துவர்கள், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்களுக்கு பணிபுரியும் வேலைகளில் இந்தப் பிரச்னைகள் எழக்கூடும். நாம் இராயனுடைய சட்டத்தை, அல்லது ஒரு ஆணைக்குட்படுவதன் அல்லது உறுதிமொழி எடுப்பதிலடங்கிய வினைமைத்தன்மையை அசட்டை செய்ய முடியாது, ஆனால் யெகோவாவின் சட்டமே உன்னதமானது.
இந்தப் பிரச்னையை எதிர்பார்த்து, வழக்கறிஞராக, மருத்துவராக, கணக்கராக இருக்கும் சில சகோதரர்கள் வழிகாட்டியாக அமையும் சில குறிப்புகளை எழுதிவைத்து, அவர்களை ஆலோசனைக்கு அணுகும் ஆட்கள் இரகசிய காரியங்களை வெளிப்படுத்துவதற்கு முன்பு அவற்றை வாசிக்கும்படியாகக் கேட்டிருக்கின்றனர். இப்படியாக ஏதாவது வினைமையான குற்றச்செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தால், அதைச் செய்தவர் தம்முடைய சபையின் மூப்பர்களிடம் காரியத்தை எடுத்துச்செல்லும்படியாகச் சொல்லப்படுவார்கள் என்பதை அவர்கள் முன்னதாகவே அறிந்திருப்பது அவசியம். அவர் அப்படிச் செய்யாமலிருந்தால், ஆலோசகர் தாமே மூப்பர்களிடம் செல்லவேண்டிய கடமையிலிருப்பது தெளிவாக்கப்பட்டிருக்கும்.
கடவுளுடைய உண்மையுள்ள ஒரு ஊழியக்காரன் அவருடைய வார்த்தையின் பேரிலான அறிவின் அடிப்படையிலுண்டாகும் தன்னுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளால் உந்துவிக்கப்பட்டவனாய் தெய்வீக சட்டத்தின் மேன்மையான தேவைகளினால் இரகசியத்தைக் காத்துக்கொள்ளவேண்டிய தகுதியை முறித்திட உந்துவிக்கப்படக்கூடும். இதற்குத் தைரியமும் விவேகமும் தேவை. இதன் நோக்கம் பிறருடைய சுயாதீனத்தை உளவு பார்ப்பதல்ல, ஆனால் தவறிழைப்பவருக்கு உதவுவதும் சபையைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுமாகும். பாவத்தின் காரணத்தால் செய்யப்படும் வினைமையற்ற மீறுதல்கள் புறக்கணிக்கப்படவேண்டும். இங்கு, “அன்பு திரளான பாவங்களை மூடும்,” மற்றும் நாம் “ஏழெழுபதுதரமட்டும்” மன்னிக்க வேண்டும். (மத்தேயு 18:21, 22) இது “மவுனமாயிருக்க காலம்.” ஆனால் வினைமையான பெரிய பாவங்களை மூடுவதற்கு முற்படும்போது, இது “பேச ஒரு கால”மாயிருக்கக்கூடும். (w87 9⁄1)
[அடிக்குறிப்புகள்]
a மேரி சில கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்டிருக்கும் ஒரு சூழ்நிலையை எதிர்ப்படும் ஒரு கற்பனை பெண். அவள் நிலைமையைக் கையாளும் விதம் அதுபோன்ற நிலைமையின்கீழ் சிலர் எப்படி பைபிள் நியமங்களைப் பொருத்தியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
b பழைய ஏற்பாட்டின்பேரில் விளக்கவுரை (Commentary on the Old Testament) என்று தாங்கள் எழுதிய புத்தகத்தில், கீல் மற்றும் டெலீஷ் குறிப்பிடுவதாவது, ஒருவர் “மற்றொருவர் இழைத்த குற்றச்செயலைத் தானே பார்த்ததன் மூலமோ, அல்லது மற்ற வழியிலோ அறியவந்திருப்பதால், குற்றவாளிக்குத் தீர்ப்பளிப்பதற்காக நீதிமன்றத்தில் சாட்சிசொல்ல தகுதியானவராயிருக்கிறார்; பொதுவிசாரணையில் நீதிபதி வேண்டுகோள் விடுக்க, அங்கு கூடியிருக்கும் எல்லாரும் விஷயமறிந்தவர்களாக இருந்தால் முன்வந்து சாட்சி சொல்ல ஊக்குவிக்கப்பட்டபோது இவர் அப்படி செய்யாமல், தான் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமலிருந்தால் குற்றம் அல்லது பாவம் செய்தவராக இருப்பார்.”
[பக்கம் 31-ன் படம்]
மூப்பர்கள் பிரச்னையைத் தயவாகவும் நன்கு புரிந்தவர்களாகவும் கையாளுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தவறிழைக்கும் சாட்சியை அவர்களிடம் பேசும்படியாக உற்சாகப்படுத்துவது சரியான மற்றும் அன்பான ஒரு செயல்.