மெய்யான அன்பு பலனளிக்கிறது
“உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.
1, 2. மெய்யான அன்பு தனிப்பட்ட வகையில் நமக்கு ஏன் பலனளிப்பதாக இருக்கிறது?
சுயநலமற்ற அன்பே நாம் காண்பிக்கக்கூடிய மிகப் பெரிய, மிகச் சிறந்த, அதிக விலைமதிப்புள்ள குணமாகும். இந்த அன்பு (கிரேக்கு, அகாப்பே) மாறாது நம்மிடம் அதிகத்தை கேட்பதாயிருக்கிறது. ஆனால் நீதியும் அன்புமுள்ள ஒரு கடவுளால் நாம் சிருஷ்டிக்கப்பட்டதன் காரணமாக சுயநலமற்ற அன்பு நிச்சயமாகவே பலனளிப்பதை நாம் காண்கிறோம். இது ஏன் இப்படி?
2 மெய்யான அன்பு பலனளிப்பதாய் இருப்பதற்கு ஒரு காரணம், சிந்தையும் உடலையும் சார்ந்த நியமத்தை உட்படுத்துகிறது, நம்முடைய உடலின் மீது எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் பாதிப்பு. அழுத்தம் பற்றி ஒரு நிபுணர் இவ்விதமாகச் சொல்லியிருக்கிறார்: “‘உன் அயலானை நேசி’ என்பது எக்காலத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ ஆலோசனையில் ஆழ்ந்த அறிவுள்ள ஆலோசனையாகும்.” ஆம், “தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 11:17) பின்வரும் வார்த்தைகளும் அதே கருத்துடையவையாக இருக்கின்றன: “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”—நீதிமொழிகள் 11:25; லூக்கா 6:38 ஒப்பிடவும்.
3 கடவுள் சுயநலமின்மைக்கு பலனளிப்பதன் காரணமாகவும்கூட அன்பு பலனளிப்பதாயிருக்கிறது. நாம் வாசிக்கிறோம்: “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் [கடவுள்] திரும்பக் கொடுப்பார்.” (நீதிமொழிகள் 19:17) யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கையில் அவர்கள் இந்த வார்த்தைகளுக்கிசைவாக செயல்படுகிறார்கள். ‘அவர்களுடைய கிரியையும், அவருடைய நாமத்திற்காக அவர்கள் காண்பிக்கிற அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்ல’ என்பதை அவர்கள் அறிவார்கள்.—எபிரெயர் 6:10.
நம்முடைய மிக நேர்த்தியான முன்மாதிரி
4. மெய்யான அன்பு பலனளிக்கிறது என்பதற்கு யார் மிக நேர்த்தியான முன்மாதிரியை அளிக்கிறார்? எவ்விதமாக அவர் இதைச் செய்திருக்கிறார்?
4 மெய்யான அன்பு பலனளிக்கிறது என்பதற்கு யார் மிக நேர்த்தியான முன்மாதிரியை அளிக்கிறார்? ஏன், வேறு எவராலுமன்றி கடவுளால்தாமே இது அளிக்கப்படுகிறது! அவர் [மனிதவர்க்க] “உலகத்தின் மீது அவ்வளவாய் அன்புகூர்ந்ததினால் தம்முடைய ஒரே பேறான குமாரனைத் தந்தருளினார்.” (யோவான் 3:16, NW) மீட்பின் பலியை ஏற்றுக்கொள்பவர்கள் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கும் பொருட்டு, தம்முடைய குமாரனைக் கொடுத்ததானது, நிச்சயமாகவே யெகோவாவுக்கு அதிகமான நடவடிக்கைகளை உட்படுத்தியது, அது அவருக்கு அன்பும் பிறரிடத்தில் தம்மை வைத்துப் பார்க்கும் பண்பும் இருக்கிறது என்பதைத் தெளிவாக காட்டியது. ‘எகிப்தில் இஸ்ரவேலருடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்,’ என்ற உண்மையிலிருந்து இது மேலுமாக காண்பிக்கப்படுகிறது. (ஏசாயா 63:9) கழுமரத்தில் தம் குமாரன் வேதனைப்படுவதைக் காண்கையிலும், “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்,” என்று கதறுவதைக் கேட்கையிலும் யெகோவாவுக்கு எவ்வளவு அதிகமாக வேதனையளிப்பதாக இருந்திருக்கும்.—மத்தேயு 27:46.
5. கடவுள் அவ்வளவாய் மனிதவர்க்கத்தை நேசித்து தம்முடைய குமாரனை பலியாக கொடுத்ததன் காரணமாக என்ன நடந்தேறியிருக்கிறது?
5 யெகோவா, தம்முடைய சொந்த மெய்யான அன்பின் வெளிக்காட்டுதல் பலனளிப்பதாக இருப்பதைக் கண்டாரா? நிச்சயமாகவே கண்டார். குறிப்பாக இயேசுவுக்கு சாத்தான் செய்திருக்கக்கூடிய அனைத்தின் மத்தியிலும் அவர் உண்மையுள்ளவராக நிரூபித்ததன் காரணமாக பிசாசினுடைய முகத்தில் என்னே ஒரு பதிலை கடவுளால் தூக்கி எறிய முடிந்தது! (நீதிமொழிகள் 27:11) உண்மையில் யெகோவாவின் நாமத்தின் பேரிலுள்ள நிந்தையை நீக்கிப் போடுவதிலும், இந்தப் பூமிக்கு பரதீஸைத் திரும்ப நிலைநாட்டுவதிலும், இலட்சக்கணக்கானோருக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதிலும், கடவுளுடைய ராஜ்யம் சாதிக்கப் போகும் அனைத்துமே, கடவுள் மனிதவர்க்கத்தின் மீது அவ்வளவாய் அன்புகூர்ந்து தம்முடைய இருதயத்தின் அருமையான பொக்கிஷத்தை ஒரு பலியாகக் கொடுத்ததன் காரணமாகவே நடந்தேறும்.
இயேசுவின் சிறந்த முன்மாதிரி
6. அன்பு எதைச் செய்யும்படி இயேசுவை தூண்டியது?
6 மெய்யான அன்பு பலனளிக்கிறது என்பதை நிரூபிக்கும் மற்றொரு சிறந்த முன்மாதிரி கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடையதாகும். அவர் தம்முடைய பரலோகத் தகப்பனை நேசிக்கிறார், அந்த அன்பு எது எப்படியானாலும், யெகோவாவின் சித்தத்தைச் செய்ய இயேசுவைத் தூண்டியிருக்கிறது. (யோவான் 14:31; பிலிப்பியர் 2:5–8) சில சமயங்களில் தம்முடைய தகப்பனிடம் “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்” மன்றாட வேண்டியிருந்ததை அது அர்த்தப்படுத்திய போதிலும், இயேசு தொடர்ந்து கடவுளுக்குத் தம்முடைய அன்பைக் காண்பித்து வந்தார்.—எபிரெயர் 5:7.
7. என்ன வழிகளில் மெய்யான அன்பு பலனளிப்பதை இயேசு கண்டார்?
7 இப்படிப்பட்ட சுய–தியாக அன்புக்காக இயேசு பலனளிக்கப்பட்டாரா? நிச்சயமாகவே பலனளிக்கப்பட்டார்! தம்முடைய மூன்றரை ஆண்டு கால ஊழியத்தின்போது அவர் செய்த எல்லா நல்ல காரியங்களிலிருந்தும் பெற்றுக்கொண்ட சந்தோஷத்தைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஆவிக்குரிய பிரகாரமாயும் சரீரப்பிரகாரமாயும் மக்களுக்கு எவ்வளவு உதவியிருக்கிறார்! எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பரிபூரண மனிதன், சாத்தான் அவனுக்கு எதிராக கொண்டு வரக்கூடிய எல்லாவற்றின் மத்தியிலும் கடவுளிடம் பரிபூரணமாக உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும் என்பதை காண்பிப்பதன் மூலம் பிசாசைப் பொய்யனாக நிரூபிக்கும் மனநிறைவை இயேசு பெற்றார். மேலுமாக, கடவுளுடைய ஓர் உண்மையுள்ள ஊழியனாக, இயேசு உயிர்த்தெழுதலின் போது பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கை என்ற பெரிய வெகுமதியைப் பெற்றார். (ரோமர் 6:9; பிலிப்பியர் 2:9–11; 1 தீமோத்தேயு 6:15, 16; எபிரெயர் 1:3, 4) அர்மகெதோனிலும், பூமியில் பரதீஸ் நிலைநாட்டப்பட்டு கோடிக்கணக்கானோர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படும் அந்தச் சமயமாகிய அவருடைய ஆயிர வருட ஆட்சியின் போதும் அவருக்கு முன்னால் இருக்கும் மகத்தான சிலாக்கியங்கள்தான் என்னே! (லூக்கா 23:43) இயேசு மெய்யான அன்பு பலனளிப்பதாக கண்டார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
பவுலின் முன்மாதிரி
8. கடவுளிடமாகவும் அவனுடைய உடன் மானிடரிடமாகவும் மெய்யான அன்பு கொண்டிருந்ததனால் பவுலின் அனுபவம் என்னவாக இருந்தது?
8 அப்போஸ்தலனாகிய பேதுரு ஒரு சமயம் இயேசுவிடம் கேட்டான்: “இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” பகுதியளவாக இயேசுவினுடைய பதில்: “என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது, விட்டவன் எவனோ அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்வான்.” (மத்தேயு 19:27–29) அப்போஸ்தலர் புத்தகத்தில் விசேஷமாக லூக்காவால் பதிவு செய்யப்பட்டபடி அநேக ஆசீர்வாதங்களை அனுபவித்த அப்போஸ்தலனாகிய பவுலில் இதற்குக் கருத்தைக் கவரும் உதாரணம் இருக்கிறது. கடவுளிடமாகவும் அவனுடைய உடன் மானிடரிடமாகவும் கொண்டிருந்த மெய்யான அன்பு, பவுலை மதிப்புக்குரிய பரிசேயனாக அவனுடைய வாழ்க்கைத் தொழிலை துறந்துவிடச் செய்தது. அடிகள், மரண அவதி, ஆபத்துகள், மற்றும் பசி என்ற வகையில் பவுல் என்னவெல்லாம் சகித்தான் என்பதை எண்ணிப்பாருங்கள்—இவை அனைத்துக்கும் காரணம் கடவுளிடமாகவும் அவருடைய பரிசுத்த சேவையினிடமாகவும் அவனுக்கிருந்த மெய்யான அன்பே.—2 கொரிந்தியர் 11:23–27.
9. மெய்யான அன்பைக் காண்பித்ததற்காக பவுல் எவ்விதமாக பலனளிக்கப்பட்டான்?
9 மெய்யான அன்பை வெளிக்காட்டுவதில் இப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரியாக இருந்ததற்காக யெகோவா பவுலுக்கு பலனளித்தாரா? சரி, பவுலின் ஊழியம் எத்தனை பலனுள்ளதாக இருந்தது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஒன்றுக்குப் பின் ஒன்றாக அவனால் கிறிஸ்தவ சபைகளை ஸ்தாபிக்க முடிந்தது. என்னே அற்புதங்களைச் செய்ய கடவுள் அவனுக்கு வல்லமையளித்திருந்தார்! (அப்போஸ்தலர் 19:11, 12) இயற்கைக்கு அப்பாற்பட்ட தரிசனங்களை பெறவும், இப்பொழுது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பாகமாக இருக்கும் 14 நிருபங்களை எழுதவும் அவன் சிலாக்கியமளிக்கப்பட்டான். இவை அனைத்துக்கும் மேல் மகுடமாக, பரலோகங்களிலே சாவாமையுள்ள வாழ்க்கை அவனுக்குக் கொடுக்கப்பட்டது. (1 கொரிந்தியர் 15:53, 54; 2 கொரிந்தியர் 12:1–7; 2 தீமோத்தேயு 4:7, 8) கடவுள் மெய்யான அன்புக்கு பலனளிக்கிறார் என்பதைப் பவுல் நிச்சயமாகவே கண்டான்.
மெய்யான அன்பு நம்முடைய நாளில் பலனளிக்கிறது
10. இயேசுவின் சீஷராவதற்கும் யெகோவாவுக்கு நம்முடைய அன்பை காண்பிப்பதற்கும் என்ன செலவு ஆகலாம்?
10 அதேவிதமாக மெய்யான அன்பு பலனளிக்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் இன்று கண்டுகொண்டிருக்கிறார்கள். யெகோவாவின் பக்கத்தில் நம்முடைய நிலைநிற்கையை எடுத்து, இயேசுவின் சீஷர்களாக ஆவதன் மூலம் யெகோவாவுக்கு நம்முடைய அன்பை வெளிக்காட்டுவது உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களாக, நம்முடைய உயிர்களையும்கூட அது கேட்பதாயிருக்கலாம். (வெளிப்படுத்துதல் 2:10 ஒப்பிடவும்.) இதன் காரணமாகவே செல்லுஞ் செலவைக் கணக்குப் பார்க்க வேண்டும் என்று இயேசு சொன்னார். ஆனால் ஒரு சீஷனாக இருப்பது பலனளிப்பதாக இருக்குமா அல்லது இருக்காதா என்பதை தீர்மானிப்பதற்கு நாம் அதைச் செய்வதில்லை. மாறாக, சீஷராகுதல் என்ன செலவை உட்படுத்தினாலும் அதைச் செலுத்த நம்மைத் தயாரிப்பதற்காக நாம் அவ்விதமாகச் செய்கிறோம்.—லூக்கா 14:28.
11. சிலர் ஏன் தங்களை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கத் தவறுகின்றனர்?
11 இன்று அநேகர்—சந்தேகமின்றி லட்சக்கணக்கானோர்—கடவுளுடைய வார்த்தையிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் அவர்களுக்குக் கொண்டுவரும் செய்தியை நம்புகிறார்கள். ஆனால் கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவதிலிருந்து அவர்கள் பின்வாங்குகிறார்கள். கடவுளிடமாக மற்றவர்களுக்கிருக்கும் அந்த மெய்யான அன்பில் குறைவுபடுவதனால் இது இவ்வாறு இருக்கக்கூடுமா? அநேகர், அவிசுவாசியான ஒரு துணையின் தயவில் நிலைத்திருக்க விரும்புவதன் காரணமாக ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதலின் படிகளை எடுக்கத் தவறுகிறார்கள். மற்றவர்கள் ஒரு சாட்சியிடம் பின்வருமாறு சொன்ன ஒரு வியாபாரியின் மனநிலையைக் கொண்டிருப்பதன் காரணமாக, கடவுளிடம் நெருங்கி வருவதில்லை: “எனக்கு பாவம் விருப்பம்.” தெளிவாக, இப்பேர்ப்பட்ட ஆட்கள் கடவுளும் கிறிஸ்துவும் அவர்களுக்காகச் செய்திருக்கும் அனைத்தையும் போற்றுகிறதில்லை.
12. மெய்யான அன்பில் கடவுளிடமாக நம்மை நெருங்கிவரச் செய்யும் அறிவின் பலன்களை உயர்த்திக் காண்பிக்கும் எதை இந்தப் பத்திரிகை சொல்லியிருக்கிறது?
12 யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நமக்காகச் செய்திருக்கும் அனைத்துக்கும் நாம் உண்மையான போற்றுதலையுடையவர்களாக இருந்தால், நம்முடைய பரலோகத் தகப்பனை சேவிப்பதற்கும் இயேசுவின் சீஷர்களில் ஒருவராக இருப்பதற்கும் என்ன செலவு ஆனாலும் அதைச் செலுத்த மனமுள்ளவர்களாக இருப்பதன் மூலம் அதைக் காண்பிப்போம். கடவுளிடமிருக்கும் மெய்யான அன்பின் காரணமாக, எல்லா வாழ்க்கை துறையிலுமிருந்து ஆண்களும் பெண்களும்—வெற்றிகரமான வியாபாரிகள், பிரபலமான விளையாட்டில் புகழ்பெற்றவர்கள் போன்றவர்கள்—அப்போஸ்தலனாகிய பவுல் செய்தது போல தன்னல நாட்டமுள்ள வாழ்க்கைத் தொழில்களைக் கிறிஸ்தவ ஊழியத்துக்காக பரிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். கடவுளைத் தெரிந்து கொள்வதாலும் சேவிப்பதாலும் கிடைக்கும் பலன்களுக்குப் பதிலாக எதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த விஷயத்தில் காவற்கோபுரம் [ஆங்கிலம்] ஒரு சமயம் இவ்வாறு சொன்னது: “நாங்கள் சில சமயங்களில் கேட்டிருக்கிறோம், சத்தியம் என்பதாக அவர்கள் அறிந்திருப்பதற்குப் பதிலாக ஆயிரம் டாலர்களை ஏற்றுக்கொள்ள எத்தனை சகோதரர்கள் மனமுள்ளவர்களாக இருப்பர்? ஒரு கையும்கூட காணப்படவில்லை! யார் பத்தாயிரம் டாலர்கள் ஏற்றுக் கொள்வர்? எவருமே இல்லை! யார் பத்து லட்சம் டாலர்கள் ஏற்றுக்கொள்வர்? தெய்வீக பண்புகளையும் தெய்வீக திட்டத்தையும் பற்றி ஒருவர் அறிந்திருப்பவற்றிற்கு பரிமாற்றமாக யார் முழு உலகத்தையும் ஏற்றுக்கொள்வார்? ஒருவர்கூட இல்லை! பின்னர் நாம் சொன்னோம், நீங்கள் மோசமான அதிருப்தியுள்ள கூட்டம் இல்லை, அன்பான நண்பர்களே. கடவுளைப் பற்றிய உங்கள் அறிவுக்குப் பதிலாக நீங்கள் எதையும் எடுத்துக்கொள்ளாதபடி அத்தனை ஐசுவரியமுள்ளவர்களாய் உணர்ந்தால், நீங்கள் எங்களைப் போலவே ஐசுவரியமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.” (டிசம்பர் 15, 1914, பக்கம் 377) ஆம், கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவு மெய்யான அன்பில் அவரிடமாக நம்மை நெருங்கி வரச் செய்வது நிச்சயமாகவே பலனளிப்பதாயிருக்கிறது.
13. தனிப்பட்ட படிப்பை நாம் எவ்வாறு கருதவேண்டும்?
13 நாம் கடவுளை நேசிப்போமேயானால் நாம் அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ளவும் செய்யவும் முயற்சி செய்வோம். (1 யோவான் 5:3) தனிப்பட்ட படிப்பு, ஜெபம் மற்றும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவதைப் பற்றி மெய் ஆர்வமுள்ள நோக்குநிலையைக் கொண்டிருப்போம். இவை அனைத்தும் சுயதியாகத்தைக் கேட்பதாயிருக்கிறது. ஏனென்றால், இந்த நடவடிக்கைகள் நேரம், சக்தி, இன்னும் மற்ற வள ஆதாரங்களின் செலவுகளை உட்படுத்துகிறது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிநிரலைப் பார்ப்பதற்கும் தனிப்பட்ட பைபிள் படிப்பில் ஈடுபடுவதற்குமிடையே நாம் தெரிவு செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட படிப்பை பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொண்டு அதற்காக போதுமான நேரத்தை ஒதுக்கி வைக்கையில், நாம் ஆவிக்குரிய வகையில் எத்தனை பலமுள்ளவர்களாக ஆகிறோம், மற்றவர்களுக்கு எத்தனை மேம்பட்ட வகையில் சாட்சி கொடுக்க முடிகிறது, கிறிஸ்தவ கூட்டங்களிலிருந்து எத்தனை அதிகத்தைப் பெறுகிறோம்!—சங்கீதம் 1:1–3.
14. ஜெபமும் யெகோவா தேவனோடு ஒரு நல்ல உறவும் எவ்வளவு முக்கியமானவையாக இருக்கின்றன?
14 ‘ஜெபத்தில் தரித்திருப்பதன் மூலம்’ நம்முடைய பரலோகத் தகப்பனிடம் பேசுவதை நாம் ஒழுங்காக அனுபவித்துக் களிக்கிறோமா? (ரோமர் 12:12) அல்லது விலைமதிப்புள்ள இந்தச் சிலாக்கியத்தைச் சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் அடிக்கடி அதிக வேலையுள்ளவர்களாக இருக்கிறோமா? ‘இடைவிடாமல் ஜெபம் பண்ணுவது’ யெகோவா தேவனோடு நம்முடைய உறவை பலப்படுத்திக் கொள்வதற்கு இன்றியமையாத ஒரு வழியாக இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:17) நாம் சோதனைகளை எதிர்ப்படும் போது, நமக்கு உதவ யெகோவாவோடு ஒரு நல்ல உறவைப் போன்ற ஒன்று வேறு எதுவும் இல்லை. போர்த்திபாரின் மனைவியால் தவறு செய்ய தூண்டப்பட்ட போது அதை எதிர்ப்பதற்கு யோசேப்புக்கு உதவியது என்ன? யெகோவாவுக்கு விண்ணப்பஞ் செய்வதை மேதிய பெர்சிய சட்டம் தடை செய்த போது தானியேல் ஏன் ஜெபம் செய்வதை நிறுத்திவிடவில்லை? (ஆதியாகமம் 39:7–16; தானியேல் 6:4–11) ஏன், கடவுளோடு ஒரு நல்ல உறவு வெற்றிகரமாக வெளியே வர இந்த மனிதர்களுக்கு உதவியது, அவ்விதமாகவே செய்ய நமக்கும் அது உதவி செய்யும்!
15. கிறிஸ்தவ கூட்டங்களை நாம் எவ்வாறு கருதவேண்டும்? ஏன்?
15 அடுத்து, நம்முடைய ஐந்து வாராந்தர கூட்டங்களில் ஆஜராவதை நாம் எத்தனை முக்கியமாக எடுத்துக் கொள்கிறோம்? நம்முடைய உடன்விசுவாசிகளோடு கூடிவருவதை அசட்டை செய்யக்கூடாது என்ற நம்முடைய கடமையோடு களைப்பு, இலேசான உடல் நலமின்மை அல்லது சற்றே மோசமான வானிலை குறுக்கிட நாம் அனுமதிக்கிறோமா? (எபிரெயர் 10:24, 25) இயந்திரத்தில் வேலை செய்த ஓர் அமெரிக்க நாட்டவர், நல்ல வருவாய் அளிக்கும் தன் வேலை கிறிஸ்தவ கூட்டங்களில் தான் ஆஜராயிருப்பதோடு அடிக்கடி குறுக்கிட்டதைக் கண்டார். ஆகவே அவர் தன் வேலையை மாற்றிக்கொண்டு, எல்லாக் கிறிஸ்தவ கூட்டங்களிலும் ஆஜராயிருக்கக்கூடும்படி, பண இழப்பை ஏற்றுக்கொள்கிறவராக இருந்தார். நம்முடைய கூட்டங்கள் உற்சாக பரிமாற்றத்தை அனுபவித்துக் களிக்கவும் ஒருவருக்கொருவர் விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்வதற்கும் நமக்கு உதவி செய்கின்றன. (ரோமர் 1:11, 12) இந்த எல்லா விஷயங்களிலும் “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பதை” நாம் பார்ப்பதில்லையா? (2 கொரிந்தியர் 9:6) ஆம், இப்படிப்பட்ட வழிகளில் மெய்யான அன்பைக் காண்பிப்பது மிகவும் பலனளிப்பதாக இருக்கிறது.
மெய்யான அன்பும் நம்முடைய ஊழியமும்
16. முறைப்படி அமையாத சாட்சி கொடுக்க அன்பு நம்மைத் தூண்டும்போது, என்ன விளைவடையக்கூடும்?
16 அன்பு, யெகோவாவின் ஜனங்களாக நற்செய்தியைப் பிரசங்கிக்க நம்மைத் தூண்டுகிறது. உதாரணமாக, அது முறைப்படி அமையாத சாட்சி கொடுப்பதில் ஈடுபடுவதற்கு நம்மை உந்துவிக்கிறது. முறைப்படி அமையாத சாட்சி கொடுப்பதற்கு நாம் தயங்கக்கூடும், ஆனால் அன்பு பேசும்படி நம்மை உந்துவிக்கும். ஆம், அன்பு நம்மை ஒரு சம்பாஷணையை ஆரம்பிக்கவும் பின்னர் ராஜ்யத்திடமாக அதைத் திருப்பவும் சாதுரியமான வழிகளைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்படியும் செய்யும். இதை விளக்க: விமானம் ஒன்றில் பயணம் செய்கையில் ஒரு கிறிஸ்தவ மூப்பர், ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தன் பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். முதலில் மூப்பர் புண்படுத்தாத கேள்விகளைப் பாதிரியாரிடம் அடுக்கிக்கொண்டே போனார். ஆனால் பாதிரி விமானத்தை விட்டு இறங்குவதற்குள் அவருடைய அக்கறை நம்முடைய புத்தகங்களில் இரண்டை பெற்றுக்கொள்ளும்படியாக அவரைத் தூண்டியது. முறைப்படியாக அமையாத சாட்சி கொடுத்ததினால் என்னே ஒரு சிறந்த பலன்!
17, 18. கிறிஸ்தவ ஊழியத்தின் சம்பந்தமாக அன்பு எதைச் செய்யும்படியாக நம்மைத் தூண்டும்?
17 மெய்யான அன்பு வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையிலும், மற்றவிதமான கிறிஸ்தவ ஊழியத்திலும் ஒழுங்காக பங்குகொள்ளும்படியாகவும் நம்மைத் தூண்டுகிறது. பைபிள் கலந்தாலோசிப்புகளை நாம் கொண்டிருக்க முடிகிற அளவுக்கு, நாம் யெகோவா தேவனுக்கு கனத்தைக் கொண்டு வருவோம், செம்மறியாடுகளைப் போன்றவர்கள் நித்திய ஜீவனுக்குப் போகும் வழியில் வருவதற்கு நாம் உதவி செய்வோம். (மத்தேயு 7:13, 14 ஒப்பிடவும்.) பைபிள் கலந்தாலோசிப்புகளை நாம் கொண்டிருக்க முடியாவிட்டாலும்கூட, நம்முடைய முயற்சிகள் விருதாவாயிராது. ஜனங்களின் வீடுகளில் நாம் இருப்பதுதானே ஒரு சாட்சியாக சேவிக்கிறது, நாம் தாமே ஊழியத்திலிருந்து பயனடைகிறோம், ஏனென்றால் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக் கொள்ளாமல் பைபிள் சத்தியங்களை நாம் அறிவிக்க முடியாது. உண்மைதான், ‘சுவிசேஷத்தில் நாம் உடன்பங்காளியாகும்படிக்கு’ அதற்காக எல்லாக் காரியங்களையும் செய்வதற்கு, வீட்டுக்கு வீடு செல்வதற்கு, மனத்தாழ்மை தேவைப்படுகிறது. (1 கொரிந்தியர் 9:19–23) ஆனால் கடவுளிடமாகவும் உடன் மனிதர்களிடமாகவும் இருக்கும் அன்பின் காரணமாக, நாம் மனத்தாழ்மையோடு முயற்சி செய்ய, ஐசுவரியமான ஆசீர்வாதங்களால் நாம் பலனளிக்கப்படுகிறோம்.—நீதிமொழிகள் 10:22.
18 பைபிள் சத்தியங்களில் அக்கறையுள்ள ஆட்களிடம் மறுசந்திப்பு செய்வது குறித்து கடமையுணர்ச்சியுடன் இருப்பதற்கும்கூட யெகோவாவின் ஊழியர்களுக்கு மெய்யான அன்பு தேவைப்படுகிறது. வாரா வாரமும் மாதா மாதமுமாக பைபிள் படிப்புகளை நடத்துவது கடவுளிடமும் அயலாரிடமுமுள்ள அன்பின் வெளிக்காட்டாக இருக்கிறது, ஏனென்றால் இந்த வேலை நேரம், முயற்சி மற்றும் பொருளாதார வள ஆதாரங்களைச் செலவு செய்வதைக் கேட்கிறது. (மாற்கு 12:28–31) என்றபோதிலும், இந்தப் பைபிள் மாணாக்கர்களில் ஒருவர் முழுக்காட்டப்படுகையில், ஒருவேளை முழு–நேர ஊழியத்துக்குள்ளும்கூட பிரவேசிக்கையில் மெய்யான அன்பு பலனளிக்கிறது என்பதை நாம் உறுதியாக நம்புவதில்லையா?—2 கொரிந்தியர் 3:1–3 ஒப்பிடவும்.
19. அன்புக்கும் முழுநேர சேவைக்குமிடையே என்ன சம்பந்தம் இருக்கிறது?
19 முழுநேர ஊழியத்தில் பங்கு கொள்வது நமக்குக் கூடிய காரியமாக இருக்குமானால், அதற்காக பொருளாதார செளகரியங்களைத் தியாகம் செய்ய தன்னலமற்ற அன்பு நம்மைத் தூண்டுகிறது. அந்த அளவுக்குத் தங்கள் அன்பை வெளிக்காட்டுவது வெகுவாக பலனளித்திருக்கிறது என்பதற்கு ஆயிரக்கணக்கான சாட்சிகள் சான்றளிக்கக்கூடும். முழு நேர ஊழியத்தில் பங்குகொள்ள சூழ்நிலைமைகள் உங்களை அனுமதித்தும், ஆனால் அவைகளை நீங்கள் அனுகூலப்படுத்திக் கொள்ளவில்லையென்றால், நீங்கள் என்ன ஆசீர்வாதங்களை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சரியாக அறியாமலிருக்கிறீர்கள்.—மாற்கு 10:29, 30 ஒப்பிடவும்.
மற்றவழிகளில் பலனளிக்கிறது
20. அன்பு எவ்விதமாக மன்னிக்கிறவர்களாக இருக்க நமக்கு உதவி செய்கிறது?
20 மெய்யான அன்பு பலனளிக்கின்ற மற்றொரு வழி மன்னிக்கிறவர்களாக இருக்க நமக்கு உதவிசெய்கிறது. ஆம், அன்பு “தீங்கு நினையாது.” உண்மையில், “அன்பு திரளான பாவங்களை மூடும்.” (1 கொரிந்தியர் 13:5; 1 பேதுரு 4:8) “திரளான” என்பது அநேக பாவங்களை அர்த்தப்படுத்துகிறதல்லவா? மன்னிப்பவர்களாக இருப்பது எத்தனை பலனளிப்பதாய் இருக்கிறது! நீங்கள் மன்னிக்கையில், இது உங்களையும் உங்களுக்கு விரோதமாகப் பாவஞ் செய்தவரையும் மேம்பட உணரச் செய்கிறது. ஆனால் மிக அதிக முக்கியமான உண்மையானது, நமக்கு விரோதமாக பாவஞ் செய்கிறவர்களுக்கு நாம் ஏற்கெனவே மன்னித்திருந்தாலொழிய யெகோவா நமக்கு மன்னிக்க நாம் எதிர்பார்க்க முடியாது.—மத்தேயு 6:12; 18:23–35.
21. மெய்யான அன்பு, எவ்விதமாக கீழ்ப்படிந்து அடங்கியிருக்க நமக்கு உதவி செய்கிறது?
21 மேலுமாக, மெய்யான அன்பு, கீழ்ப்படிந்து அடங்கியிருக்க நமக்கு உதவி செய்வதிலும் பலனளிப்பதாக இருக்கிறது. நாம் யெகோவாவை நேசித்தால், நாம் அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருப்போம். (1 பேதுரு 5:6) அவரிடமாக உள்ள அன்பு, அவர் தெரிந்து கொண்டிருக்கும் கருவியாகிய “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”க்கு நம்மைக் கீழ்ப்படுத்தவும் தூண்டும். இது சபையில் முன்சென்று வழிநடத்துகிறவர்களுக்கு அடங்கியிருப்பதை உட்படுத்துகிறது. இது பலனளிப்பதாயிருக்கிறது, ஏனென்றால் அவ்விதமாகச் செய்யத் தவறுவது, நமக்குப் “பிரயோஜனமாயிருக்க மாட்டாது.” (மத்தேயு 24:45–47; எபிரெயர் 13:17) உண்மைதான், கீழ்ப்படிந்து அடங்கியிருக்கும் இந்த நியமம், குடும்ப வட்டாரத்துக்குள்ளும்கூட பொருந்துகிறது. இப்படிப்பட்ட ஒரு போக்கு பலனளிப்பதாயிருக்கிறது, ஏனென்றால் அது குடும்ப சந்தோஷம், சமாதானம் மற்றும் ஒத்திசைவை ஊக்குவித்து அதே சமயம் நாம் கடவுளைப் பிரியப்படுத்துகிறோம் என்பதை அறிந்திருப்பதிலிருந்து கிடைக்கும் மனநிறைவை நமக்கு அளிக்கிறது.—எபேசியர் 5:22; 6:1–3.
22. நாம் எவ்விதமாக உண்மையில் சந்தோஷமுள்ளவர்களாக இருக்கலாம்?
22 அப்படியென்றால் நாம் வளர்த்துக் கொள்ளக்கூடிய மிகப் பெரிய பண்பு அகாப்பே, சுயநலமற்ற, நியமத்தின் பேரில் சார்ந்த விதமான அன்பு என்பது தெளிவாக இருக்கிறது. மெய்யான அன்பு பலனளிக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. ஆகவே நம்முடைய அன்புள்ள கடவுளாகிய யெகோவாவின் மகிமைக்காக இந்தக் குணாதிசயத்தை நாம் வளர்த்து அதை இன்னும் அதிகமான அளவில் வெளிக்காட்டினால் நாம் நிச்சயமாகவே சந்தோஷமுள்ளவர்களாக இருப்போம். (w90 11/15)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவா தேவன் என்ன வழிகளில் மெய்யான அன்பைக் காண்பித்திருக்கிறார்?
◻ இயேசு கிறிஸ்துவால் அன்பு எவ்விதமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது?
◻ மெய்யான அன்பைக் காண்பிப்பதில் அப்போஸ்தலனாகிய பவுல் என்ன முன்மாதிரியை வைத்தான்?
◻ யெகோவாவின் சாட்சிகள் எவ்விதமாக அன்பைக் காண்பித்திருக்கிறார்கள்?
◻ மெய்யான அன்பு பலனளிக்கிறது என்று ஏன் நீங்கள் சொல்வீர்கள்?
3. மெய்யான அன்பை பலனளிப்பதாகச் செய்வதற்குக் கடவுள் எவ்விதம் செயல்படுகிறார்?
[பக்கம் 16-ன் படம்]
நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு மனிதவர்க்கத்திற்காக தம்முடைய குமாரனைக் கொடுக்கும்படியாக யெகோவாவின் அன்பு அவரைத் தூண்டியது. இப்படிப்பட்ட மெய்யான அன்பை நீங்கள் போற்றுகிறீர்களா?
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவிடமாக மெய்யான அன்பு “ஜெபத்தில் தரித்திருக்க” நம்மைத் தூண்டும்