யெகோவா எவ்விதம் தமது வேலையைச் செழிக்கச்செய்கிறார்
சமீப பத்தாண்டுகளில், யெகோவாவின் சாட்சிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவித்து வந்திருக்கின்றனர். கடந்த பத்தே ஆண்டுகளில், அவர்கள் 42,600 சபைகளிலிருந்து 212 தேசங்களில் மொத்தம் 60,192 சபைகளாக விரிவாகியிருக்கின்றனர். இதன் காரணமாக சிலர் இவ்விதமாகக் கேட்டிருக்கிறார்கள்: சாட்சிகளுடைய வேலை எவ்விதமாக பணஉதவி பெறுகிறது? காவற்கோபுரம் சங்கம், இதற்கும் இது சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.
யெகோவாவின் சாட்சிகள் தசமபாகம் செலுத்துகிறார்களா?
இல்லை. பூர்வ இஸ்ரவேலில், கடவுளுடைய ஆலய ஊழியர்களாகிய லேவியர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் ஆதரவளிப்பதற்காக மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் தசமபாகம் கட்டளையிடப்பட்டது. (எண்ணாகமம் 18:21, 24–29) ஒரு சில பட்டணங்களைத் தவிர, இவர்களுக்கு கோத்திர நிலங்கள் எதுவும் இருக்கவில்லை, ஆகவே அவர்களுக்கு இந்த விசேஷித்த ஆதரவு தேவைப்பட்டது. கூடுதலாக, கூடாரத்தையும் பின்னால் ஆலயத்தையும் கட்டுவது போன்ற விசேஷித்த திட்டங்களுக்கு உண்மையுள்ள இஸ்ரவேலர்கள் மனப்பூர்வமாக நன்கொடைகளை அளிக்க சுயாதீனமுள்ளவர்களாக இருந்தனர்.—யாத்திராகமம் 25:1–8; 1 நாளாகமம் 29:3–7.
என்றபோதிலும் இயேசு மரித்த போது, “சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தை . . . ஒழித்தார்” என்று பைபிள் சொல்லுகிறது. (எபேசியர் 2:15; கொலோசெயர் 2:13, 14) வேறு வார்த்தைகளில், கடவுளுடைய பார்வையில் நியாயப்பிரமாணம் இனிமேலும் யூதர்களையோ கிறிஸ்தவர்களையோ கட்டுப்படுத்துவதாக இல்லை. ஆகவே ஆலயத்தில் ஒழுங்காக பலிகள் செலுத்துவது போன்ற நியாயப்பிரமாணத்தின் மற்ற அம்சங்களோடுகூட தசமபாகமும் இனிமேலும் உண்மையுள்ளவர்களிடம் தேவைப்படுத்தப்படவில்லை.
கிறிஸ்தவர்கள் மத்தியில் கொடுப்பது சட்டத்தினால் அல்ல அன்பினால் தூண்டப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல், யூதேயாவில் தேவையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பணம் வசூலிப்பதற்கு ஏற்பாடு செய்கையில் நியமத்தை விளக்கினார். அவர் சொன்னார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) மனப்பூர்வமாக கொடுக்கும் இந்த வேதப்பூர்வமான முறையையே யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகிறார்கள்.
பணம் திரட்ட விருந்துகள், நன்கொடை திரட்ட உறைகள், உண்டிகுலுக்கல் மற்றும் இதுபோன்ற பணம் திரட்டும் வழிகளில் நீங்கள் உதவியை நாடுகிறீர்களா?
இல்லை. மெய் கிறிஸ்தவர்களை கட்டாயப்படுத்தவோ அவர்களுக்கு முன்னால் பரிசுகளை தொங்கவிடுவதன் மூலம் கொடுப்பதற்கு கைக்கூலி கொடுக்கவோ தேவையில்லை. சூதாட்ட விளையாட்டு, அங்காடிகள், குலுக்குச் சீட்டு விற்பனை, விழாக்கள், கோயில் இருக்கையை வாடகைக்கு கொடுத்தல், காணிக்கைத் தட்டுகளை கடத்துவது போன்றவற்றின் உதவிகளை நாடும் மதத் தொகுதிகள் தங்கள் மக்களுக்கு ஆவிக்குரிய உணவை கொடுக்கவில்லை என்பது தெரிகிறது. ஆகவே தாராளமாக நன்கொடை வழங்க அவர்களுடைய பங்கைச் சேர்ந்த மக்களை கடவுளுடைய ஆவி தூண்டுவதில்லை. வழக்கற்றுப் போன தசமபாக பழக்கத்தைக் குறித்தும் இதுவே சொல்லப்படலாம்.—மத்தேயு 10:8.
புதிய ராஜ்ய மன்றங்கள் மற்றும் கிளைக்காரியாலய கட்டிடங்கள் போன்ற திட்டங்களுக்கும் மற்றும் நியு யார்க்கிலுள்ள புரூக்ளின் மற்றும் பேட்டர்சன் தலைமைக்காரியாலயங்களிலும் விரிவாக்கங்களுக்குப் நிதி உதவியை எவ்வாறு பெற்றுக்கொள்கிறீர்கள்?
யெகோவா தம்முடைய சாட்சிகளின் மீது தம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றி, “நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும் நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும்” உதவி செய்கிறார். (1 தீமோத்தேயு 6:18, 19) இந்த ஆவி யெகோவாவின் சாட்சிகளை எல்லா வகையிலும் ராஜ்ய வேலைக்கு ஆதரவு கொடுக்கத் தூண்டுகிறது.
1989-ல் உதாரணமாக 212 தேசங்களில் 37,87,188 சாட்சிகள் கடவுளுடைய வார்த்தையை மற்றவர்களுக்கு போதிப்பதில் 83,54,26,538 மணிநேரங்களை செலவழித்தனர். அக்கறையுள்ள ஆட்களோடு 34,19,745 ஒழுங்கான வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தினர். இந்த வேலைக்கு உண்டான செலவுகளை தனிநபர்களே ஏற்றுக்கொண்டனர். யெகோவா, இந்த அன்பின் ஊழியத்தை புதிதாக முழுக்காட்டப்பட்ட 2,63,855 சாட்சிகளைக் கொண்டு ஆசீர்வதித்தார்.
இதேப் போன்ற கொடுக்கின்ற ஆவி வேலைக்கு பண உதவியளிக்க சாட்சிகளையும் அக்கறையுள்ள ஆட்களையும் தூண்டுகிறது. தங்கள் உள்ளூர் சபையின் வழக்கமான செலவுகளுக்கு உதவுவதைத் தவிர, தங்கள் ராஜ்ய மன்றங்கள் அல்லது அசெம்ளி மன்றங்களை புதிப்பிப்பது அல்லது பெரிதுபடுத்துவது அல்லது புதிய ஒன்றைக் கட்டுவது போன்ற தேவைப்படும் எந்தக் கட்டிட வேலையிலும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், வேகமான வளர்ச்சியின் காரணமாக, பெரும் எண்ணிக்கையில் ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட வேண்டும், அவற்றில் சில லட்சக்கணக்கான ரூபாய் செலவிலும்கூட கட்டப்பட வேண்டும். இவைகளுக்காகும் செலவு உள்ளூர் சாட்சிகள் மனமுவந்து கொடுக்கும் நன்கொடைகளினாலும் உழைப்பினாலும் ஈடுசெய்யப்படுகின்றன.
வளர்ந்துவரும் அமைப்பு தேவைப்படுத்துகிற அதிகமான பணி ஆட்களுக்கும் கட்டிடங்களுக்கும் இடவசதிக்காக—அநேக தேசங்களில் கிளைக்காரியாலய அச்சுவேலை மற்றும் அலுவலக வசதிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்—அல்லது புதியவை கட்டப்பட வேண்டும். இதுவும்கூட நியு யார்க்கிலுள்ள புரூக்ளின் மற்றும் பேட்டர்சனில் கட்டிட மற்றும் புதிப்பிக்கும் திட்டங்களைப் போன்றே மனப்பூர்வமாக கொடுக்கப்படும் நன்கொடை மற்றும் உழைப்பினால் ஆதரிக்கப்படுகின்றன. கூடுமான இடங்களில், உள்ளூர் சாட்சிகள் கட்டிட வேலைக்கு பணஉதவியளிக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், காவற்கோபுரம் சங்கம், கிளைக்காரியாலயங்கள் உதவியை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கின்றது—பணஉதவிக்கும் மற்ற தேசங்களிலிருந்து திறமையுள்ள வேலையாட்களுக்கும் ஏற்பாடு செய்கின்றது. இவ்விதமாக சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் “ஏற்றத்தாழ்வில்லாமை” அடையப்பெறுகிறது.—2 கொரிந்தியர் 8:14, NW.
அநேக மதத் தொகுதிகள் செய்வது போல மருத்துவமனைகள் நடத்தி, நிவாரணப் பணியிலும் மற்ற சமூக சேவைகளிலும் நீங்கள் ஏன் ஈடுபடுவதில்லை?
யெகோவாவின் சாட்சிகள் போரின் பின்விளைவுகள் அல்லது இயற்கை பேராபத்துகளில் முடிந்தபோது, உடனடியாக அவர்கள் பிரதிபலிக்கின்றனர். உண்மையில், உணவு, உடை மற்றும் மீண்டும் கட்டுவதற்கு உதவி செய்ய வாலண்டியர்களோடு கூட பொதுவாக முதலில் வந்து சேர்பவர்களாக இருக்கின்றனர். என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகள் உயிரைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தீயணைப்பு இலாக்காவை அல்லது காவல் படைகளை நடத்தாதது போலவே அவர்கள் மருத்துவமனைகளை நடத்துவதில்லை.
அவர்கள் சுவிசேஷத்தின் ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக இருக்கின்றனர், முடிவு வருவதற்கு முன்பாக கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை சாட்சியாக உலகம் முழுவதிலும் பிரசங்கிப்பதும் கற்பிப்பதுமே அவர்களுடைய வேலையாக இருக்கிறது. (மத்தேயு 24:14) இயேசு சொன்ன வண்ணமாக, அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம். எத்தனை போற்றத்தகுந்ததாக இருப்பினும் மற்ற வேலைகளை எடுத்துக் கொள்வதற்காக இந்த மிக முக்கியமான வேலையை அசட்டை செய்வது மன்னிக்க முடியாததாக இருக்கும்.—மத்தேயு 9:37, 38.
யெகோவாவின் சாட்சிகள் அநேகர் மருத்துவர்களாக, தாதிகளாக, மருத்துவமனை உதவியாளர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் கிறிஸ்தவ ஊழியமாகிய அவர்களுடைய பிரதான வாழ்க்கைத் தொழிலோடு சேர்க்கப்பட்ட ஒரு வேலையாகவே இவைகளைக் கருதுகின்றனர்.
காவற்கோபுர சங்கத்தின் அதிகாரிகளோ அல்லது உறுப்பினர்களோ விரிவான உங்கள் அச்சு வேலைகளில் பணம் சம்பாதிக்கிறார்களா?
திட்டவட்டமாக இல்லை. சட்டப்படி சங்கம் லாபம் கருதாத ஒரு சங்கமாகும். இங்கு பங்குதாரர்களோ, ஆதாயப் பங்குகளோ, சம்பளமோகூட இல்லை. சங்கத்தின் தலைவரும் நிர்வாகிகளும் உட்பட தலைமைக் காரியாலயத்திலுள்ள ஒவ்வொரு ஊழியரும் வறுமையின் உறுதிமொழியை எடுத்திருக்கின்றனர். அவர் உணவு, உறைவிடம் மற்றும் தேவையான மருத்துவ உதவியையும் சில்லறை செலவுகளுக்காக ஒரு சிறிய தொகையையும் பெற்றுக்கொள்கிறார். சாட்சி சங்கத்தின் வேலையாக பிரயாணம் செய்தால், அவருடைய பயணச் செலவுகள் பொதுவாக கொடுக்கப்படுகின்றன.
மேலுமாக, உலகில் எந்த இடத்திலுமே எமது ஊழியர்கள் விவாகங்கள், முழுக்காட்டுதல்கள் அல்லது சவஅடக்கங்களை நடத்தி வைக்க பணம் வசூலிப்பதில்லை. பொதுப் பேச்சுகள் அல்லது மாநாடுகளில் அனுமதி கட்டணமோ அல்லது காணிக்கை வசூலிப்போ இல்லை.
காணிக்கைத் தட்டுகள் ஒருபோதும் கடத்தப்படாதிருப்பதால், உள்ளூர் சபைகள் தங்கள் செலவுகளுக்கு எவ்விதமாக நன்கொடைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்?
தனிப்பட்டவர்கள் அவர்கள் விரும்பினால், மனப்பூர்வமாக நன்கொடை அளிப்பதற்காக நன்கொடை பெட்டிகள் ராஜ்ய மன்றங்களில் வைக்கப்படுகின்றன. (2 இராஜாக்கள் 12:9) பெரிய தொகையோ சிறிய தொகையோ எல்லா நன்கொடைகளும் போற்றப்படுகின்றன. (மாற்கு 12:42–44) மாதமொரு முறை, சபையில் கணக்குகளை கவனிக்கும் ஊழியர், பெற்றுக்கொண்ட மொத்த தொகை, செலவுகள், உலகளாவிய பிரசங்க வேலையையும் மற்ற திட்டங்களையும் ஆதரிக்க சபை காவற்கோபுரம் சங்கத்துக்கு அனுப்பிய தொகை ஆகியவற்றை சபைக்கு தெரியப்படுத்தும் ஒரு சுருக்கமான அறிக்கையை வாசிக்கிறார்.
இந்த ஏற்பாட்டை தனிநபர்கள் புரிந்துகொள்ளும் போது, ஒவ்வொருவரும், அவர்கள் விரும்பினால், “தன்தன் வரவுக்குத்தக்கதாக” அதில் பங்கு கொள்ளுவதற்கு அவர்கள் சுயாதீனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 16:2) இதுவே உலகம் முழுவதிலுமுள்ள 63,000-க்கும் மேற்பட்ட சபைகள் ஒவ்வொன்றின் பழக்கமாக இருக்கிறது.
பெந்தெகொஸ்தேவின் போது, பூர்வ கிறிஸ்தவர்கள் அனைத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தனர். யெகோவாவின் சாட்சிகள் இதைச் செய்கிறார்களா?
பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவைத் தொடர்ந்து நெருக்கடி நிலை ஏற்பட்டது. சமீபத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியிருந்த, தூர இடங்களிலிருந்து வந்த யூதர்கள் மேலுமான ஆவிக்குரிய அறிவொளியை பெற்றுக்கொள்ள எருசலேமில் தங்கிவிட்டிருந்தனர். அவர்களுக்கு தற்காலிக இருப்பிடமும் உணவும் தேவைப்பட்டது. ஆகவே உள்ளூர் கிறிஸ்தவர்கள், கூடுதலான காலம் ஐக்கியங்கொள்ளுவதற்காக மனமுவந்து தங்கள் உடைமைகளை விற்று கிடைத்ததை வைத்து எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். (அப்போஸ்தலர் 2:1, 38–47; 4:32–37) எவருமே விற்க அல்லது நன்கொடையளிக்க வற்புறுத்தப்படவில்லை. (அப்போஸ்தலர் 5:1–4) இவ்விதமாக பொதுவாய் வைத்து அனுபவித்தல், சிலர் நினைப்பது போல பொதுவுடைமை கொள்கை இல்லை. அது வெறுமென ஒரு தற்காலிகமான ஏற்பாடாக இருந்தது. கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பிச் சென்ற போது அது நின்று போனது.
பொருள் சம்பந்தமாக கொடுப்பது, பாவத்தை நிவிர்த்தி செய்வதற்கு ஒரு வழி என்பதாக நீங்கள் போதிக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை! பைபிள் சொல்கிறது: “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள்.”—1 பேதுரு 1:18, 19.
யெகோவாவின் சாட்சிகள் இரட்சிப்புக்காக இயேசுவின் மீட்பின் பலியில் விசுவாசம் வைக்கிறார்கள். இது அவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் என்று எதிர்பார்த்து அவர்கள் மனப்பூர்வமாக நன்கொடைகளை செலுத்துவதில்லை. இருந்தபோதிலும், கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகின் நற்செய்தியை பரப்புவதற்கு கணிசமான தொகை தேவைப்படுகின்றது என்பதை அவர்கள் அறிவார்கள். (2 பேதுரு 3:13) இதை பிரகடனம் செய்வதற்கு நன்கொடை அளிப்பது யெகோவா அருளிச்செய்திருக்கும் ஒரு சிலாக்கியமாக அவர்கள் கருதுகிறார்கள்.
தன்னுடைய மகன் சாலொமோன் கட்டவிருந்த யெகோவாவின் ஆலயத்துக்கு பெரும் மதிப்புள்ள நன்கொடையை அளிக்கையில் தாவீது ராஜா இவ்விதமாக ஜெபித்தார்: “கர்த்தாவே, (யெகோவாவே, NW) மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; . . . இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.”—1 நாளாகமம் 29:11, 14.
இன்று யெகோவாவின் சாட்சிகளும் நீதியுள்ள மனசாய்வுள்ள மற்ற ஆட்களும் தாவீது உணர்ந்த விதமாக உணருகிறார்கள். யெகோவாவை துதிக்கும் வேலைக்கு ஆதரவளிக்க, நன்கொடைகளை அளிக்கும் சிலாக்கியத்துக்காக அவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவருடைய ஊழியத்துக்காக அவர்கள் கொடுக்கும் அனைத்தும் எப்படியும் அவரிடமிருந்தே வருவதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த ஆவியை யெகோவா ஆசீர்வதிக்கிறார். இவ்விதமாகவே யெகோவா தம்முடைய வேலையை செழிக்கச் செய்கிறார். (w90 12/1)
[பக்கம் 30-ன் பெட்டி]
சிலர் எப்படி ராஜ்யவேலைக்கு நன்கொடை அளிக்கிறார்கள்
◻ வெகுமதிகள்: பணமாக மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகள் நேரடியாக உவாட்ச்டவர் சொஸையிட்டிக்கு (Watch Tower Bible and Tract Society of India, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah.) அல்லது இப்பத்திரிகையை பிரசுரிப்போருக்கு அனுப்பப்படலாம். நிலம், கட்டிட மனைகள் போன்ற சொத்துகள், நகை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களும்கூட நன்கொடையாக அளிக்கப்படலாம். இவை எவ்வித நிபந்தனையும் இல்லாத ஒரு நன்கொடை என்பதைத் தெரிவிக்கும் சுருக்கமான ஒரு கடிதம் இந்த நன்கொடைகளோடு சேர்ந்து வர வேண்டும்.
◻ நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பொறுப்பில் வைத்துக்கொள்ளும்படியாகப் பணம் கொடுக்கப்படலாம். இந்தப் பணம் சொந்த தேவை ஏற்பட்டால் நன்கொடையாளருக்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு அளிக்கப்படக்கூடும்.
◻ காப்புறுதி (இன்சூரன்ஸ்): ஓர் ஆயுள்–காப்புறுதி திட்டத்தின் அல்லது ஓய்வு/ஊதியத் திட்டத்தின் அனுபவ பாத்தியத்தை உடையதாக உவாட்ச் டவர் சொஸையிட்டி பெயரிடப்படலாம். இத்தகைய ஏற்பாடுகள் யாவற்றையும் குறித்து சங்கத்துக்குத் தகவல் தெரிவித்திட வேண்டும்.
◻ நம்பகங்கள் (Trusts): வங்கி சேமிப்பு கணக்குகள் சங்கத்திடம் நம்பகமாக (Trust) வைக்கப்படலாம். இவ்வாறு செய்தால் சங்கத்துக்கு இதைத் தயவுசெய்து தெரியப்படுத்த வேண்டும். நன்கொடையாளர் அவரோ அல்லது அவளோ உயிரோடிருக்கும்வரை அதை அனுபவிப்பார் என்ற ஓர் ஏற்பாட்டின் கீழ் பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் சொத்துக்களும்கூட நன்கொடையாக அளிக்கப்படலாம். இம்முறையில் உயில் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காகும் செலவையும் அநிச்சயங்களையும் நீக்கிவிடக்கூடும். மரணம் நேரிடுமானால் சங்கம் இதைப் பெற்றுக்கொள்வதை இது நிச்சயப்படுத்துவதாகவும் இருக்கும்.
◻ உயில்கள்: சொத்து அல்லது பணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட ஓர் உயில் மூலமாக உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு ஒப்படைக்கப்படலாம். அதன் நகல் ஒன்று சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இதன் பேரில் கூடுதலான தகவல்கள் அல்லது ஆலோசனைகளுக்கு உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டிக்கு (Watch Tower Bible and Tract Society of India, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah,) அல்லது இப்பத்திரிகையை பிரசுரிப்போருக்கு எழுதிக்கேட்கவும்.
[பக்கம் 31-ன் படம்]
நியு யார்க், பேட்டர்சனில் கட்டிட வேலை நடந்துகொண்டிருக்கும் பைபிள் கல்வி மையத்தின் ஒரு பகுதி
[பக்கம் 32-ன் படம்]
மனப்பூர்வமாய் நன்கொடையளிக்கும் தம்முடைய மக்களின் கட்டிட வேலையை யெகோவா செழிக்கச்செய்கிறார்