மறக்கமுடியாத ஜலப்பிரளயம்
ஏறக்குறைய 4,300 ஆண்டுகளுக்கு முன்னால், பேரழிவுண்டாக்கின ஜலப்பிரளயம் பூமியைச் சூழ்ந்து மூழ்க்கடித்தது. ஒரே பெரும் வீச்சில், உயிருள்ள பெரும்பாலும் எல்லாவற்றையும் அது துடைத்தழித்தது. அது அவ்வளவு மகா பெரியதாயிருந்ததனால் மனிதவர்க்கத்தின்மீது மறக்கமுடியாத ஆழ்ந்த பதிவை விட்டுச் சென்றது, ஒவ்வொரு சந்ததியும் அந்தச் சரிதையை அடுத்தச் சந்ததிக்குக் கடத்தியது.
இந்த ஜலப்பிரளயத்துக்கு ஏறக்குறைய 850 ஆண்டுகளுக்குப் பின், எபிரெய எழுத்தாளனாகிய மோசே பூமியளாவிய இந்தப் பிரளயத்தைப் பற்றிய விவரத்தை எழுத்தில் பதிவுசெய்தான். இது பைபிளிலுள்ள ஆதியாகமத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது, அதன் 6-லிருந்து 8 வரையான அதிகாரங்களில் இந்த விளக்கமான நுட்பவிவரங்களை நாம் வாசிக்கலாம்.
ஜலப்பிரளயத்தைப் பற்றி பைபிளிலுள்ள விவரம்
ஆதியாகமம் இந்த நுட்பவிவரங்களைக் கொடுக்கிறது, சந்தேகமில்லாமல் இவை கண்கண்ட சாட்சி கூறும் விவரங்கள்: “நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது. ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.”—ஆதியாகமம் 7:11, 17, 19.
உயிருள்ளவற்றின்மீது இந்த ஜலப்பிரளயத்தின் பாதிப்பைக் குறித்து, பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்”தன. எனினும், நோவாவும் மற்றும் ஏழு ஆட்களும் உயிர்தப்பிப் பிழைத்தனர், அவர்களோடுகூட ஒவ்வொரு மிருகவகையிலும், பறக்கும் சிருஷ்டியிலும், தரையில் ஊருபவற்றிலும் ஒவ்வொரு மாதிரியாகத் தேர்ந்தெடுத்தவையும் பிழைத்தன. (ஆதியாகமம் 7:21, 23) யாவரும் ஏறக்குறைய 133 மீட்டர் நீளமும், 22 மீட்டர் அகலமும், 13 மீட்டர் உயரமுமாக இருந்த ஒரு பெரிய மிதக்கும் பேழையில் பாதுகாக்கப்பட்டனர். தண்ணீர் புகாதபடி அடைக்கப்பட்டதாயிருப்பதும் மேலே மிதந்துகொண்டிருப்பதும் மாத்திரமே அந்தப் பேழையின் இயக்கங்களாதலால், அடிபாகம் உருள்வடிவாக்கப்பட்டிருப்பதோ, கூரான முகப்போ, முன்னோக்கித்தள்ளச் செய்வதற்கான வழிவகைகளோ, அல்லது இயக்குவதற்கான கருவியோ அதற்கு இல்லை. நோவாவின் பேழை வெறுமென ஒரு நீள்சதுர பெட்டிபோன்ற கப்பலாகவே இருந்தது.
பிரளயம் தொடங்கி ஐந்து மாதங்களுக்குப் பின், அந்தப் பேழை அரராத் மலைகள்மேல் தங்கிற்று, இம்மலைகள் தற்போதிருக்கும் கிழக்கத்திய துருக்கியில் உள்ளன. ஜலப்பிரளயம் தொடங்கி ஓர் ஆண்டுக்குப் பின் நோவாவும் அவனுடைய குடும்பமும் பேழையிலிருந்து வெளிப்பட்டு உலர்ந்த தரைமீதிறங்கி தங்கள் இயல்பான நடைமுறை வாழ்க்கையை மறுபடியும் தொடங்கினர். (ஆதியாகமம் 8:14-19) காலப்போக்கில், ஐபிராத்து நதியினருகே பாபேல் நகரத்தையும் இழிந்த பெயர்பெற்ற அதன் கோபுரத்தையும் கட்டத் தொடங்குவதற்குப் போதியளவு பெருகியிருந்தனர். மனிதவர்க்கத்தின் மொழியைக் கடவுள் தாறுமாறாக்கினபோது ஜனங்கள் அங்கிருந்து படிப்படியாய் பூமியின் எல்லா பாகங்களுக்கும் சிதறிச் செல்லும்படி செய்யப்பட்டனர். (ஆதியாகமம் 11:1-9) ஆனால் அந்தப் பேழைக்கு என்ன ஆயிற்று?
பேழைக்காகத் தேடுதல்
அரராத் மலைகள்மேல் பேழையைக் கண்டுபிடிப்பதற்காக, 19-வது நூற்றாண்டு முதற்கொண்டு மிகப்பல முயற்சிகள் செய்யப்பட்ருக்கின்றன. இந்த மலைகள் இரு உயர்ந்த சிகரங்களை உடையன, ஒன்று 5,165 மீட்டர் உயரமும் மற்றொன்று 3,914 மீட்டர் உயரமுமானவை. இவ்விரண்டில் அதிக உயரமானது எப்பொழுதும் உறைபனியால் மூடப்பட்டுள்ளது. ஜலப்பிரளயத்தைப் பின்தொடர்ந்து உண்டான தட்பவெப்பநிலை மாற்றங்களினால், அந்தப் பேழை சீக்கிரத்தில் உறைபனியால் மூடப்பட்டிருக்கலாம். அந்தப் பேழை இன்னும் அங்குள்ளது, பனிக்கட்டிப் பாளங்களுக்குள் ஆழமாய்ப் புதைந்து கிடக்கிறதென துருவித்தேடுவோரில் சிலர் உறுதியாய் நம்புகின்றனர். அந்தப் பேழையின் பாகம் தற்காலிகமாய் வெளித்தோன்றச் செய்வதற்கேதுவாகப் பனிக்கட்டி உருகின சமயங்கள் இருந்தனவென அவர்கள் சொல்கின்றனர்.
நோவாவின் பேழையைத் தேடுதல் என்ற புத்தகம் ஜார்ஜ் ஹகோப்பியன் சொன்னதைக் குறிப்பிடுகிறது, இவர் ஓர் ஆர்மீனியர், 1902-லும் மறுபடியும் 1904-லும் தான் அரராத் மலைமீதேறி பேழையைக் கண்டதாகப் பாராட்டினார். முதல் தடவை சென்றபோது, தான் அந்தப் பேழையின் உச்சியின்மேல் உண்மையில் ஏறினதாகச் சொன்னார். “நான் நேரே நிமிர்ந்துநின்று அந்தக் கப்பல் முழுவதன்மீதும் பார்வைச் செலுத்தினேன். அது நீளமாயிருந்தது. உயரம் ஏறக்குறைய 12 மீட்டர்.” அடுத்த தடவை அவர் சென்றபோது தான் கவனித்ததைக் குறித்து, பின்வருமாறு கூறினார்: “உண்மையான வளைவுகள் எவற்றையும் நான் காணவில்லை. அது நான் பார்த்திருக்கும் வேறு எந்தப் படகைப்போலும் இல்லை. அது தட்டையான அடிபாகத்தைக்கொண்ட ஒரு படகைப்போல் பெரும்பாலும் தோன்றியது.”
ஃபெர்னன் நவேரா என்பவர், இந்தப் பேழையைப்பற்றிய அத்தாட்சியைக் கண்டுபிடிக்க 1952-லிருந்து 1969 வரை நான்கு முயற்சிகள் செய்தார். அரராத் மலைக்குச் சென்ற தன்னுடைய மூன்றாவது பயணத்தின்போது, ஒரு பனிப்பாறையிலிருந்த பிளவின் அடிப்பாகம் வரை அவர் புகுந்தார், அங்கே அவர் ஒரு துண்டு கருப்பு மரக்கட்டை பனிக்கட்டியில் பதிந்து கிடப்பதைக் கண்டார். “இது வெகு நீளமாக இருந்திருக்க வேண்டும், மேலும் அந்தக் கப்பலின் கட்டமைப்புக்குரிய மற்றப் பாகங்களுடன் ஒருவேளை இன்னும் இணைக்கப்பட்டிருக்கலாம். நான் ஏறக்குறைய 1.5 மீட்டர் அளவான ஒரு துண்டைப் பிளந்தெடுக்கும் வரையில் அந்தக் கட்டையின் நார் அமைப்புவழியாக மட்டுமே வெட்ட முடிந்தது,” என்று அவர் சொன்னார்.
அந்தக் கட்டையை ஆராய்ந்து பார்த்த பல நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ரிச்சர்ட் பிளிஸ் பின்வருமாறு கூறினார்: “அந்த நவேரா மாதிரி கட்டை கப்பலின் பக்கக் கட்டமைப்புக்குரிய நெடுங்கட்டை, நிலக்கீல் பசை ஊடுருவத் தோய்விக்கப்பட்டுள்ளது. அது துளைப்பொருத்த விளிம்பும் பொருத்து முளைகளும் கொண்டுள்ளது. மேலும் அது திட்டவட்டமாய்க் கையால் வெட்டி உருவாக்கி சதுரமாக்கப்பட்டது.” அந்தக் கட்டையின் மதிப்பிடப்பட்ட பழமை ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து ஆயிர ஆண்டுகள் என குறிக்கப்பட்டது.
அரராத் மலையில் பேழையைக் கண்டுபிடிக்க முயற்சிகள் செய்யப்பட்டபோதிலும், பேரழிவுண்டாக்கின பிரளயத்தைத் தப்பிப்பிழைப்பதற்கு அது பயன்படுத்தப்பட்டதென்ற திட்டவட்டமான நிரூபணம் பைபிளிலுள்ள ஆதியாகமத்தில் அந்தச் சம்பவத்தைப்பற்றி எழுதப்பட்ட பதிவில் இருந்துவருகிறது. இந்தப் பதிவின் இசைவு பொருத்தத்தை உலகமெங்குமுள்ள பழங்குடி மக்களுக்குள் இருந்துவரும் மிகப்பல எண்ணிக்கையான ஜலப்பிரளய புராணக்கதைகளில் காணலாம். பின்வரும் கட்டுரையில் அவர்களுடைய சாட்சியத்தைக் கவனியுங்கள். (w92 1/15)
[பக்கம் 4 , 5-ன் படம்]
ஒவ்வொன்றும் 25 அமெரிக்க தொடர்பெட்டிவண்டிகளைக்கொண்ட சரக்குகளையும் பிரயாணிகளையும் ஏற்றிச்செல்லும் 10 ரயில் வண்டிகளுக்குச் சமமான கொள்திறமுடைய இடம் அடங்கியதாக அந்தப் பேழை இருந்தது!