வெர்ட்முனையில் “ஜீவத்தண்ணீர்” பொங்கிவழிகிறது
“யெகோவாவின் சாட்சிகளின் வணக்கம் 1958 முதற்கொண்டு வெர்ட் முனையில் இருப்பதும் அப்பியாசிக்கப்பட்டு வருவதும் கவனிக்கப்படத்தக்க உண்மையாகும்” என்பதாக வெர்ட் முனை குடியரசின் நீதித்துறை மந்திரி விளக்கினார். அவர் தம்முடைய அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்த இரண்டு சாட்சிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். “யெகோவாவின் சாட்சிகள் சட்டப்படி அங்கீகரிக்கப்படுவதற்கு இத்தனை நீண்ட காலமெடுத்திருப்பது குறித்து நாங்கள் வருந்துகிறோம்” என்று மேலுமாக அவர் குறிப்பிட்டார்.
நவம்பர் 30, 1990-ல் நடைபெற்ற அந்தச் சந்திப்பு வெர்ட் முனையிலுள்ள யெகோவாவின் சாட்சிகளால் நீண்ட காலத்துக்கு நினைவுகூரப்படும். அந்தத் தேசத்தில் சட்டப்பூர்வமான ஒரு மத சங்கமாக அவர்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதை அது தெரிவிப்பதாக இருந்தது. என்றபோதிலும் அங்கிருந்த இரண்டு சாட்சிகளுக்கும் அது உணர்ச்சிப்பூர்வமான தனிப்பட்ட அனுபவமாக இருந்தது, ஏனென்றால் 1958-ல் அவர்களில் ஒருவர்—லூயிஸ் அந்திரேட்—காவற்கோபுரம் சங்கத்தால் பிரசுரிக்கப்பட்ட ஒரு சில பைபிள் பிரசுரங்களை காண நேரிட்டார். பிரசுரங்களை ஆரம்பம் முதல் முடிவு வரையாக வாசித்தப் பிறகு, தான் சத்தியத்தை கண்டுபிடித்து விட்டதை அவர் அறிந்தார். ஆவலோடு தான் கற்றுக்கொண்டவற்றை நெடு நாளைய நண்பராகிய பிரான்சிஸ்கோ டவேரசுடன் பகிர்ந்துகொண்டார். அடுத்த சில ஆண்டுகளின் போது, இருவருமே சந்தா மூலம் பெற்றுக்கொண்ட காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை வாசிப்பதன் மூலம் சத்திய தண்ணீர்களை தொடர்ந்து எடுத்து வந்தார்கள். பத்து வருடங்களுக்குப் பிறகு 1968-ல் வெர்ட் முனைக்கு வந்த பிரயாண கண்காணியின் முதல் சந்திப்பில் அவர்கள் முழுக்காட்டப்பட்டனர்.
சகோதரர் அந்திரேடும் டவேரசும் “வா . . . ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்” என்ற அழைப்பைக் கொடுப்பதில் ஒரு பங்கை கொண்டிருப்பதற்கு தங்களுக்கிருக்கும் உத்தரவாதத்தை உணர்ந்தனர். (வெளிப்படுத்துதல் 22:17) சிதறியும் கடினமாயும் இருந்த தங்கள் பிராந்தியத்தின் சவாலை அவர்கள் ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாயிருந்தனர். வெர்ட் முனையில் 10 முக்கிய தீவுகளும், செனிகலிலுள்ள டகருக்கு மேற்கே சுமார் 560 கிலோ மீட்டர் தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள ஒரு சில சிறு தீவுகளும் உள்ளன. “பசுமை முனை” என்று பொருள்படும் வெர்ட் முனை என்ற பெயர் ஆப்பிரிக்க கரையின் மீதுள்ள தீபகற்பத்துக்கு முதலில் குறிப்பிடப்பட்டது. என்றபோதிலும் இந்தத் தீவுகளில் மழை குறைவாக இருப்பதன் காரணமாக அவை பசுமையாக இருப்பதில்லை. 3,50,000 குடிமக்கள், வறட்சியான நிலத்திலிருந்தே பிழைப்புக்கு வழி செய்து கொள்ள வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளாக மிஷனரிகளும் விசேஷ பயனியர்களும் முழுநேர ஊழியர்களாக தீவிலுள்ள மக்களுக்கு ஜீவத் தண்ணீரை கொண்டுவருவதில் கடினமாக வேலை செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட உழைப்பின் பலன் என்னவாக இருந்திருக்கிறது? சமீபத்தில் போர்ச்சுகலிலிருந்து பிரயாண கண்காணி ஒருவர் வெர்ட் முனையிலுள்ள சபைகளைச் சந்தித்தார். அவர் கண்டதை நமக்குச் சொல்ல நாம் கேட்கலாம்.
சாவ் வின்சென்ட் “சுத்தமான பாஷை”யை கேட்கிறது
வெர்ட் முனையில் எங்கள் முதல் நிறுத்தம் சாவ் வின்சென்ட் தீவில் போர்டோ க்ராண்டி நகரமாக இருந்தது. விமான நிலையத்திலிருந்து நகரத்துக்குள் செல்லும் வழியில் காற்றினால் அடித்துவரப்பட்ட மண் மூடிய பாறைகள் நிறைந்த மலையோரங்களைப் பார்த்தோம். வட ஆப்பிரிக்காவின் பாலைவனம் ஏற்கெனவே வெர்ட் முனை தீவையும் சென்றெட்டிவிட்டது! டிசம்பர் முதல் பிப்ரவரி வரை, மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனத்திலிருந்து வீசும் வறண்ட வடகிழக்குப் புழுதிக் காற்று சமுத்திரத்தின் மீது வீசி தீவுகளை மண் மற்றும் புழுதி படலத்தால் மூடிவிடுகிறது. சில சமயங்களில் புழுதி மேகங்கள் அத்தனை கனமாக இருப்பதன் காரணமாக விமானங்கள் பறக்க முடிவதில்லை. பாலைவனப் புழுதிக் காற்று அடிக்கையில் மிஞ்சியிருக்கும் கொஞ்சத் தாவரங்களும் வாடிவிடுகின்றன.
என்றாலும் ஆவிக்குரிய விதத்தில் பேசுகையில், தண்ணீர் வளம் உடனடியாக கிடைக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் போர்டோ க்ராண்டியில் இரண்டு சபைகளை ஸ்தாபித்திருக்கிறார்கள், 167 ராஜ்ய பிரஸ்தாபிகள் சாவ் வின்சென்ட் தீவிலுள்ள 47,000 பேருக்கு ஜீவனை அளிக்கும் சத்தியத்தின் தண்ணீர்களை எடுத்துச் செல்வதில் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். வார இறுதி நாட்களில், சுமார் 400 பேர் ராஜ்ய மன்றத்தில் பைபிள் அடிப்படையில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு வருகிறார்கள்.
ஒரு வார கால சந்திப்புகளின் போது, நகரிலுள்ள மிகச் சிறந்த அரங்கத்தில் நடைபெறவிருந்த “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டுக்காக கடைசி ஆயத்தங்கள் செய்யப்பட்டு வந்தன. (செப்பனியா 3:9) உள்ளூர் மக்களோடு கூட சான்டோ அன்டோ மற்றும் சாவ் நிக்கலோ தீவுகளிலுள்ள பிரதிநிதிகளும் சேர்ந்து 756 என்ற உச்ச ஆஜர் எண்ணிக்கையை கொண்டுவந்தனர். இருபத்து நான்கு பேர் முழுக்காட்டப்பட்டார்கள். நிகழ்ச்சிநிரலில் சாட்சிகள் அளித்த ஒரு பைபிள் நாடகமும் இடம் பெற்றிருந்தது. திரைப்பட ஒத்திகை இயக்குநராக இருந்த ஒரு மனிதன் நாடகத்துக்கு வந்திருந்து இவ்வாறு சொன்னார்: “ஒரு வருட காலமாக நாங்கள் பயற்சியளித்தோம், அப்படியும்கூட எங்களுக்கு அநேக பிரச்னைகள் இருந்தன. உங்கள் நாடகத்தில் பங்கேற்றவர்கள் இரண்டே மாத பயிற்றுவிப்பில் மிக நன்றாகச் செய்தார்கள்.” மாநாடு வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, சாவ் டியாகோ தீவில் வெர்ட் முனை குடியரசின் தலைநகரான பிரேயா நகரத்துக்குச் செல்ல எங்களுக்கு நேரமாகிவிட்டது.
சுத்திகரிக்கப்பட்ட ஒரு ஜனம்
அண்மை ஆண்டுகளில் மற்ற தீவுகளில் குடியிருப்பவர்கள் வேலைத் தேடி தலைநகரத்திற்குள் திரண்டு வந்திருக்கின்றனர். இதன் விளைவாக, நகர் புற எல்லைகளில் பழம்பாணியில் ஆயிரக்கணக்கான குடிசைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இது அளவாக வழங்கப்படும் தண்ணீரையும் கழிவுநீக்க ஏற்பாடுகளையும் மேலுமாக நெருக்கடிக்குள்ளாக்குகிறது. வருவாயை பெருக்க அநேக குடும்பங்கள் வெள்ளாடுகளையும் பன்றிகளையும் கோழிகளையும் வளர்க்கிறார்கள். இவைகள் தாராளமாக தெருக்களில் திரிவதைக் காண்பது சாதாரணமாக இருக்கிறது. இது நோய்கள் பரவுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.
இந்தக் கடினமான நிலைமைகளின் மத்தியிலும் இப்பொழுது பிரேயாவில் மொத்தமாக சுமார் 130 ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்ட வளர்ந்துகொண்டிருக்கும் இரண்டு சபைகள் இருக்கின்றன. இந்தச் சந்தோஷமான சாட்சிகள் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டவற்றை பொருத்துவன் மூலம் ‘தங்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்’படி செய்திருக்கிறார்கள். சுத்தமும் பரிசுத்தமுமான ஜனங்களாக இருக்க முயலுபவர்களாய், நம்முடைய சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் ஆவிக்குரிய விதமாயும் சரீரப் பிரகாரமாயும் மேம்பட்ட ஆரோக்கியத்தை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை கடினமாக இருந்தபோதிலும், அவர்கள் ஆவிக்குரிய ஐசுவரியவான்களாக இருக்கிறார்கள்.—ஏசாயா 48:17; 1 பேதுரு 1:15, 16.
நாங்கள் வந்திறங்கிய போது, சகோதரர்கள் தங்கள் மாவட்ட மாநாட்டுக்காக சுறுசுறுப்பாக தயார் செய்து கொண்டிருந்தார்கள். சாவ் டியாகோ முழுவதிலும், சால் மற்றும் ஃபாகோ தீவுகளிலிருந்தும் சாட்சிகளும் அக்கறை காண்பிக்கும் ஆட்களும் மாநாட்டுக்கு வந்துகொண்டிருந்தார்கள், 472 என்ற உச்ச ஆஜர் எண்ணிக்கையினால் யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். பிரகாசமான முகங்களையுடைய அநேக சிறுவர்கள் உட்பட அனைவருமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்! கவனமாக செவிசாய்த்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்தின் மத்தியில் நாங்கள் அமர்ந்திருந்த போது, நாம் “அற்பமான ஆரம்பத்தின் நாளை” ஒருபோதும் அசட்டை செய்யக்கூடாது என்பது தெளிவானது. (சகரியா 4:10) 30 ஆண்டுகளுக்கு சற்று முன்பாக சத்தியத்தைக் கற்றறிந்த இரண்டு ஆட்களிடமிருந்து இவை அனைத்தும் வளர்ந்திருக்கிறது!
தீவை விட்டு புறப்படுவதற்கு முன்பு, நகரத்திற்கு வெளியே இருந்த விலா அசமோடா மற்றும் டராஃபால் என்ற இரண்டு தொகுதிகளை நாங்கள் சந்திக்கச் சென்றோம். தீவு மேடாகவும், தரிசாகவும் வறட்சியாகவும் இருந்தது. ஆனால் அங்குமிங்கும் தழைத்தோங்கும் தாவரங்களையும் மரங்களையும்—பல ஏக்கர்கள் தென்னை, வாழை, பப்பாளி, மா மரங்கள் போன்றவை—பச்சை திட்டுகளாக நாங்கள் பார்த்தோம். ஒரு நாள் வறண்ட நிலமும் செழிக்கும் என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை இது நினைவுக்கு கொண்டு வந்தது. (ஏசாயா 35:1) ஒரு பாலைப் பசுந்திடலைப் போல, இப்பொழுதும்கூட சாட்சிகளின் இரண்டு தொகுதிகளும் ஆவிக்குரிய வகையில் வறட்சியான நிலத்தில் வாழும் ஆயிரக்கணக்கானோருக்கு ஏராளமான ஆவிக்குரிய உணவையும் பானத்தையும் அளித்து வருகிறார்கள்.
ஃபாகோ தீவில் கொழுந்துவிட்டெறியும் வைராக்கியம்
அடுத்த தீவு, “நெருப்பு” என்று பொருள்படும் ஃபாகோ தீவாகும். எரிமலையின் பிறப்பிடமாக இருப்பது பெயருக்கு விளக்கமளிக்கிறது. கேனோ பீக் இன்னும் சுறுசுறுப்பான எரிமலையாகவே இருக்கிறது. அது சமுத்திரத்திலிருந்து ஏறக்குறைய சரியான ஒரு கூம்பு வடிவில் 2,800 மீட்டர் உச்சிக்கு மேலெழுகிறது. தீவில் அப்போதுதானே கணிசமான பலத்த மழை பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக பெய்திருந்தது. மக்களின் மத்தியில் பூரிப்பான உணர்வு காணப்பட்டது. வெர்ட் முனையின் உணவில் முக்கிய உணவுப்பொருளாக இருக்கும் மொச்சையையும் கிழங்குகளையும் பயிர் செய்வதில் அவர்கள் அசாதாரணமாக சுறுசுறுப்பாயிருந்தனர்.
என்றபோதிலும், போற்றுதலுள்ள இந்த மக்கள் நின்று பைபிளிலிருந்து சத்தியத்தின் தண்ணீர்களை எடுப்பதற்கு அதிக வேலையாயிருப்பதில்லை. கார்கள் மிகக் குறைவாகவும் அவை மோசமான நிலையிலுமிருந்தபடியால் இவர்கள் இருக்குமிடம் செல்வது ஒரு போராட்டமாக இருந்தபோதிலும் மூன்று வித்தியாசமான தொகுதிகளை எங்களால் சந்திக்க முடிந்தது. மொத்தம் 162 பேர் கூட்டங்களுக்கு வந்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், ஏனென்றால் அந்தத் தீவில் 42 ராஜ்ய பிரஸ்தாபிகள் மட்டுமே இருந்தனர். ஃபாகோ தீவிலுள்ள 32,000 குடிமக்களுக்கு அடையாள அர்த்தமுள்ள சத்திய மற்றும் ஜீவத்தண்ணீரை கொண்டு வருவதில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15 மணிநேரங்களை செலவிடும் சகோதர சகோதரிகளின் இந்தச் சிறிய தொகுதியினுடைய வைராக்கியத்தின் பிரதிபலிப்பாக இது இருந்தது.
கத்தோலிக்க தேசத்தில் பலன்
சான்டோ அன்டோவிலும் சாவ் நிக்கலோவிலும் இன்னும் எங்களுடைய சகோதரர்களை நாங்கள் சந்திக்கவில்லை. இந்தப் பெயர்கள் சுட்டிக் காண்பிப்பது போலவே, ரோமன் கத்தோலிக்க சர்ச் பல நூற்றாண்டுகளாக தீவுகளின் மீது தன் செல்வாக்கை செலுத்தி வந்திருக்கிறது. வெர்ட் முனையில் முக்கிய மதம் இன்னும் கத்தோலிக்க மதமாகவே இருந்தபோதிலும் அநேக உண்மை மனதுள்ள ஆட்கள், பைபிளிடமாக அதன் புத்துயிரளிக்கும் சத்தியத்தின் தண்ணீர்களுக்காக அதனிடமாக திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சான்டோ அன்டோவின் நேர் எதிர் முனையிலுள்ள 2 சிறிய சபைகளின் 49 பிரஸ்தாபிகள் அதன் 44,000 குடிமக்களின் ஆவிக்குரிய தேவைகளை நிறைவு செய்ய கடினமாக உழைக்கின்றனர். போர்டோ நோவ் சபையில் பொது பைபிள் பேச்சுக்கு 512 பேர் வந்த போது, சான்டோ அன்டோவில் சத்தியத்தின் தண்ணீர்களுக்காக அநேக செம்மறியாட்டைப் போன்ற ஆட்கள் தாகமாயிருப்பது 32 ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கும் தெளிவானது.
போர்ச்சுகலிலுள்ள பயனியர் சகோதரி கடிதத்தின் மூலமாக தீவிலுள்ள ஒரு குடும்பத்தோடு பைபிள் படிப்பு ஒன்றை நடத்திய போது, சாவ் நிக்கலோ தீவில் வேலை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பமானது. பின்னர் 1978-ல் போர்ச்சுகலிலுள்ள மற்றொரு பயனியர் தன்னுடைய சொந்த தீவாகிய சாவ் நிக்கலோவுக்கு திரும்பி வந்து, அதிலுள்ள 15,000 குடிமக்களோடு பைபிள் சத்தியத்தை பகிர்ந்து கொள்ள தீர்மானித்தார். அவர் முதல் பைபிள் கூட்டத்தை தீவில் நடத்திய போது, ஆஜர் எண்ணிக்கை ஒரு நபராக—அவர் மாத்திரமே இருந்தார்! ஆனால் அந்தக் கூட்டத்தில் அவர் செய்த ஊக்கமான ஜெபத்துக்கு யெகோவா தேவன் பதிலளித்தார். எங்கள் சந்திப்பின் போது மூன்று சபைகளில் இருந்த 48 பிரஸ்தாபிகளும் மொத்தம் கூட்டங்களுக்கு வந்திருந்த 335 பேரை கண்டு கிளர்ச்சியடைந்தனர்.
தீவில் முதல் வட்டார அசெம்ளி, எங்கள் சந்திப்பின் சமயத்தில் நடத்தப்பட்டது. உள்ளூர் அரங்கம் கட்டணமின்றி எங்களுக்கு கிடைத்தது. நகர அதிகாரிகள் ஒலி கருவிகளுக்கும் இலவச போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்தார்கள். உள்ளூர் சபையிலுள்ள 19 பிரஸ்தாபிகள் 100 பிரதிநிதிகளுக்கு இடவசதி அளித்து, ஆஜராயிருந்த 208 பேருக்கு உணவு தயாரித்தார்கள். நம்முடைய சகோதரர்கள் அன்றாடம் எதிர்ப்படும் அநேக இன்னல்கள் மத்தியிலும், சங்கத்தின் ராஜ்ய மன்ற நிதிக்கு நன்கொடையளித்தனர்.
யெகோவாவின் சாட்சிகளுடைய நேர்த்தியான நடத்தை இங்கு நன்கு அறியப்பட்டிருக்கிறது, அநேக முதலாளிகள் வேலையாட்கள் தேவைப்படுகையில் இவர்களை தேடி வருகிறார்கள். உதாரணமாக தீவிலிருந்த ஒரே பெட்ரோல் நிலையத்தின் சொந்தக்காரர் நேர்மையான ஒருவர் தனக்கு தேவைப்பட்டதால் ஒரு சாட்சியை வேலைசெய்யும்படியாக கேட்டுக்கொண்டார். சகோதரருக்கு ஏற்கெனவே ஒரு வேலையிருந்தது, ஆனால் வேறு யாரையாவது கண்டுபிடிக்க முடியுமா என்று பார்ப்பதாக அவர் சொன்னார். “அவர் முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருந்தால் மட்டுமே!” என்பதாக முதலாளி உறுதியாக கூறினார். இரண்டு மாதங்களுக்குப் பின், அவர் “பணத்தைக் கையாள வேண்டியவர்கள் யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே!” என்று நம்முடைய சகோதரரிடம் சொன்னார்.
கடைசி நிறுத்தம்—சால் தீவு
இந்தப் பயணத்தில் எங்கள் கடைசி நிறுத்தம் சால் தீவாக இருந்தது. அதன் பெயரின் பொருள் “உப்பு,” இது இந்தத் தீவின் முக்கிய தொழிலை உடனடியாக சுட்டிக்காட்டிவிடுகிறது. இங்குள்ள சிறிய சபையில், 6,500 குடிமக்களுக்கு ராஜ்ய செய்தியை கொண்டுவர கடினமாக உழைக்கும் 22 பிரஸ்தாபிகள் இருக்கின்றனர். இந்தத் தீவுவாசிகளோடு நற்செய்தியை பகிர்ந்துகொள்வது உண்மையாக மகிழ்ச்சியாயிருந்தது. ஏனென்றால் ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் எங்களை உள்ளே அழைத்தார்கள், குடும்பத்திலுள்ள பல அங்கத்தினரோடும் எங்களால் பேச முடிந்தது.
சால் தீவை சந்தித்ததோடு எங்கள் பயணம் முடிவுக்கு வந்தது. வெர்ட் முனையிலுள்ள உண்மையுள்ள யெகோவாவின் இந்த ஊழியர்களோடு வேலை செய்வது என்னே ஓர் ஆசீர்வாதமாக இருந்தது! இப்பொழுது இந்தத் தீவுகளில் 531 ராஜ்ய பிரஸ்தாபிகள் இருக்கின்றனர். 1991-ல் கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்த ஆசரிப்புக்கு வந்திருந்த 2,567 பேர் ஆவிக்குரிய ஏற்பாடுகளைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் போது அந்த எண்ணிக்கை வளருவது நிச்சயம். பெரும்பாலான யெகோவாவின் சாட்சிகள் பொருள் சம்பந்தமாக மிகக் குறைவானதையே கொண்டிருந்த போதிலும் அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் ஐசுவரியவான்களாகவும் நன்றாக போஷிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். யெகோவா அவருடைய மகிமைக்காகவும் துதிக்காகவும் இந்தத் தீவுகளில் ஜீவத்தண்ணீரை ஏராளமாகப் பொங்கி வழியச் செய்வதற்காக அவர்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்! (w92 3/15)
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சான்டோ அன்டோ
சான்டா லூசியா
சாவ் வின்சென்ட்
சாவ் நிக்கலோ
சால்
வெர்ட் முனை
போவா விஸ்டா
அட்லாண்டிக் பெருங்கடல்
சாவ் டியாகோ
ஃபாகோ
மேயோ
பிரேவா
பிரேயா