நிவாரணப் பணிக்குழு யூக்ரேனுக்கு
மறுபடியுமாக பயங்கரமான அறிக்கைகள் செய்திகளை நிரப்புகின்றன. பொருளாதார குழப்பம், உணவு பற்றாக்குறை, பசி ஆகியவை பூமியில் பரவி வருகிறது—இம்முறை முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு சில பகுதிகளில். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு, அண்மையில், டென்மார்க்கிலுள்ள காவற்கோபுரம் சங்கத்தின் கிளைக்காரியாலயத்தை யூக்ரேனில் தேவையிலிருக்கும் சாட்சிகளுக்கு நிவாரணத்தை ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக்கொண்டது. டென்மார்க்கிலுள்ள சகோதரர்கள் என்ன செய்தார்கள்?
உடனடியாக வேலையில் இறங்கினார்கள்! கிளைக்காரியாலயம் உடனடியாக உணவுப்பொருட்களில் மிகச் சிறந்ததை வாங்குவதற்காக சந்தைகளைச் சுற்றிவர சகோதரர்களை அனுப்பியது. டென்மார்க்கிலுள்ள யெகோவாவின் மக்களுடைய எல்லா சபைகளுக்கும் தேவையைப் பற்றிய தகவல் அனுப்பப்பட்டது. கிளைக்காரியாலயம் அறிவிக்கிறது: “எல்லா சபைகளும் நன்கொடையளிக்க மிகவும் விருப்பமுள்ளவர்களாயிருந்தனர். கடைசியாக, துன்பப்பட்டுக்கொண்டிருந்த அவர்களுக்காக எங்களுக்கிருந்த அநுதாபத்துக்கு தெளிவான அத்தாட்சியை எங்களால் கொடுக்க முடிந்தது.” இரண்டு வேன்களோடுகூட ஐந்து ட்ரக்குகளும் 14 வாலண்டியர் ஓட்டுநர்களும் 1991, டிசம்பர் 7, சனிக்கிழமை டென்மார்க் கிளைக்காரியாலயத்தை வந்தடைந்ததாக அறிக்கை செய்யப்பட்டது. கிளைக்காரியாலய பணியாளர்கள் தாங்கள் வாங்கிய உணவு பொருட்களை ட்ரக்குகளில் ஏற்றினார்கள்.
டிசம்பர் 9 திங்கள் நண்பகலில் ஐரோப்பா வழியாக யூக்ரேனுக்கு பாதுகாப்புக் குழு அதன் நீண்ட பயணத்தை துவங்கியது. “இவர்களுக்கு கையசைத்து வழி அனுப்ப முழு பெத்தேல் குடும்பமும் குழுமியிருந்தது நெகிழ வைக்கும் ஒரு காட்சியாக இருந்தது” என்று கிளைக்காரியாலயம் எழுதுகிறது. “அநேக நிவாரணப் பணிக் குழுக்கள் தாக்குதல்களுக்கு பலியாகியிருப்பதை அறிந்தவர்களாய் நாங்கள் வழி முழுவதுமாக அநேக ஜெபங்களோடு எங்கள் சகோதரர்களோடு பின்சென்றோம்.”
டிசம்பர் 18-ம் தேதி கவலை ஒரு வழியாக தீர்ந்தது. டென்மார்க் கிளைக்காரியாலயம் யூக்ரேனிலுள்ள லிவ்வில் பாதுகாப்புக் குழு பத்திரமாக வந்து சேர்ந்தத் தகவலைப் பெற்றது. யூக்ரேனிலுள்ள சகோதரர்கள் உதவியைப் பெற்றுக்கொண்டனர். ஒவ்வொன்றிலும் இறைச்சி, மாவு, அரிசி, சர்க்கரை இன்னும் அடிப்படை தேவைகள் கொண்ட 1,100 குடும்ப-அளவு, 20 கிலோ பெட்டிகளை இறக்கி வைத்த போது அவர்களுக்கு எத்தனை நிம்மதியாக இருந்தது! மொத்தத்தில் பாதுகாப்புக் குழு சுமார் 22 டன்கள் தேவையான பொருட்களை எடுத்துச் சென்று வழங்கியது. டென்மார்க் கிளைக்காரியாலயம் எழுதுகிறது: “யெகோவாவுடைய பாதுகாப்புக்காகவும், உதவிகரம் நீட்டுவதற்கு இந்த வாய்ப்பை எங்களுக்கு அளித்தமைக்காகவும் அவருக்கு நாங்கள் நன்றி செலுத்துகையில் எங்கள் மகிழ்ச்சி பெரிதாக இருக்கிறது.”
துணிமணிகளை கப்பலில் ஏற்றி அனுப்பவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்திலும் கூட “சபைகளின் பிரதிபலிப்பு அளவுக்கும் அதிகமாகவே உள்ளது” என்று கிளைக்காரியாலயம் தெரிவிக்கிறது. யெகோவா நிச்சயமாகவே, ‘உதார குணத்திற்காக தம்முடைய மக்களை சம்பூரணமுள்ளவர்களாக்குகிறார்.’ (2 கொரிந்தியர் 9:11) அவர்கள் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு தாராளமாக கொடுப்பதிலிருந்து வரும் மகிழ்ச்சியை அதிகமாக உணருகிறார்கள். இவ்விதமாக அவர்கள் காண்பிக்கும் அன்பு இயேசுவை பின்பற்றுகிறவர்களின் அடையாள குறியாக இருக்கிறது. (யோவான் 13:35) தேவையிலிருக்கும் இந்த உலகில் இப்படிப்பட்ட அன்பைக் காண்பது மிகவும் அரிதாகும். (w92 3/15)