ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
பராகுவேயில் ஒதுக்கமாயுள்ள பிராந்தியத்தில் ஊழியஞ்செய்வது பலன் தருகிறது
பராகுவேயில் உள்ள உவாட்ச் டவர் சங்கத்தின் கிளை அலுவலகம், ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தியை அதன் பிராந்தியம் முழுவதிலும் பிரசங்கிக்க வேண்டியதைப்பற்றி உணர்வுள்ளதாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 1:8) எல்லாரும் ராஜ்யத்தைப்பற்றிக் கற்றுக்கொள்வதற்கும், வரவிருக்கும் “மிகுந்த உபத்திரவத்தில்” யெகோவா இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன் அவரைச் சேவிக்கவும் இதுவே காலம். (மத்தேயு 24:21, 22) நியமிக்கப்படாத பிராந்தியங்களிலுள்ள ஜனங்களுக்கு உதவிசெய்வதற்கு என்ன செய்யப்படுகிறதென்பதைப் பின்வரும் அனுபவங்கள் காட்டுகின்றன. அந்தக் கிளை அலுவலகம் பின்வருமாறு அறிவிக்கிறது:
நியமிக்கப்படாத பிராந்தியம் முழுவதையும், தற்காலிக விசேஷித்தப் பயனியர்களைக் கொண்டு பிரசங்க ஊழியஞ்செய்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நவம்பரிலிருந்து ஜனவரி 1990-ன் ஊழிய ஆண்டு வரையான மாதங்களின்போது, 39 சகோதரர்களும் சகோதரிகளும், இதுவரையாக ராஜ்ய பிரஸ்தாபிகள் ஒருவரும் இல்லாத மொத்தம் நூறு நகரங்களும் சிறிய பட்டணங்களுமானவற்றில் முழுமையாக ஊழியஞ்செய்து முடித்தனர். அவர்கள் 6,119 புத்தகங்களையும், 4,262 சிறு புத்தகங்களையும், 5,144 பத்திரிகைகளையும் அளிக்க முடிந்தது. இந்த ஊழியத்தின் பலனாக, புதிய பிரஸ்தாபிகளின் தொகுதிகள் உருவாகி அமைக்கப்பட்டன.
◻ நியமிக்கப்படாதப் பிராந்தியத்தில் ஊழியஞ்செய்துகொண்டிருந்த ஒரு பயனியர் சகோதரியினிடமிருந்து ஓர் அம்மாள், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை ஏற்றுக்கொண்டாள். அந்தப் பயனியர் அவளுடன் பைபிள் படிப்பு ஒன்றை நடத்துவதற்கு முன்வந்தாள், அவள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றாள். அந்தப் பயனியர் திரும்பி வந்தபோது, அந்த அம்மாள் மாத்திரமல்ல, அவளுடைய கணவரும் அவர்களுடைய பத்து பிள்ளைகளும் அவளுக்காகக் காத்திருந்தனர். அடுத்தச் சந்திப்பில், அந்தக் குடும்பமும் அவர்களோடுகூட அவர்களுடைய நண்பர்களும் அயலாரும் பைபிள் படிப்புக்கு ஆயத்தமாயிருந்தனர்! அந்தப் படிப்பு மிகவும் நன்றாயிருந்ததென்றும், யெகோவா கொடுக்கும் அந்த நம்பிக்கையும் ஆசீர்வாதங்களும் அதிசயமாயிருந்தனவென்றும் சொல்லி, அந்த அம்மாள் அவர்களை வரவழைத்திருந்தாள். இது முன்னொருபோதும் ஒருவரும் அவளுக்குச் சொல்லாத ஒன்றாயிருந்தது, ஆகையால் தன் அயலாரும் நண்பர்களுங்கூட இந்த நற்செய்தியைக் கேட்கவேண்டுமென அவள் உணர்ந்தாள்.
அந்தப் பயனியர் படிப்பு நடத்தும் ஒவ்வொரு சமயத்திலும், அவ்வளவு பலர் வந்திருந்ததால் அது ஒரு சிறிய சபையைப்போல் தோன்றியது. அக்கறைகாட்டின இந்த ஆட்கள் பல கேள்விகளைக் கேட்டனர் மற்றும் படிப்பில் பங்குகொண்டனர். ஒருமுறை அந்தப் பிராந்தியம் முழுவதிலும் ஊழியஞ்செய்தப் பின், தான் தன் தோழர்களுடன் வேறு புதிய இடத்துக்குச் செல்லவேண்டுமென, அந்தப் பயனியர் விளக்கினபோது, அந்த அம்மாள் கவலையுற்றவளாய் தங்களுக்கு என்னவாகுமென கேட்டாள். அந்தப் படிப்பைத் தொடர்ந்து நடத்தும்படி அதற்கு மிக அருகிலிருந்த சபையிலுள்ள சகோதரருடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்கறைகாட்டின, செம்மறியாட்டைப்போன்ற இந்த ஆட்களுக்கு உதவிசெய்ய இப்பொழுது விசேஷித்தப் பயனியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
◻ நியமிக்கப்படாத மற்றொரு பிராந்தியத்தில் ஒரு பயனியர் சகோதரி வீடுவீடாக ஊழியஞ்செய்கையில், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தைப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கின ஒரு மனிதனைக் கண்டாள். அந்தச் சமயத்துக்குப் பின் யெகோவாவின் சாட்சிகளோடு அவருக்குத் தொடர்பே இல்லாமற்போயிற்று. எனினும். சேனைகளின் யெகோவா என்று அவர் அழைத்த, யெகோவாவே ஒரே உண்மையான கடவுள் என்றும் அவரை மாத்திரமே வணங்க வேண்டுமென்றும் அவர் அறிந்திருந்தார். தன் சொந்த முயற்சியால், அவர் தனக்குத் தெரிந்த எல்லாரிடமும் யெகோவாவைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். உண்மையில், ஒவ்வொரு வாரமும் அவர், அக்கறை காட்டின ஒரு தம்பதிகளைச் சந்தித்து அவர்களிடம் கடவுளைப்பற்றிப் பேசும்படி, மூன்று கிலோமீட்டர் நடந்தார், ஏனெனில் அவர் சொன்னபடி குறிப்பிட, ‘நான் அவர்களைப் போய்ப் பார்ப்பதை நிறுத்திவிட்டால், அவர்கள் யெகோவாவைப்பற்றி மறந்துவிடுவார்கள்.’ மணம்செய்த இந்தத் தம்பதிகளோடு கூட, பத்து வேறு ஆட்களும் பைபிள் படிப்பு வேண்டுமென்றனர்—இதெல்லாம் அக்கறைகாட்டின அந்த நபர் அவர்களுக்குப் பிரசங்கித்ததால்தான்.
குறிப்பிடத்தக்கதாய், இந்தப் பயனியர் அவரைச் சந்திக்க நேரிட்ட ஒருசில நாட்களுக்கு முன்புதானே, இதே ஆள், உள்ளூர் பாதிரி ஒருவரும் அவரோடு ஊர்வலம் சென்றவர்களும் கன்னியின் ஒரு சிலையோடு தன் வீட்டுக்குள் பிரவேசிக்க வந்ததை அனுமதியாமல், தனக்குச் சிலைகளில் நம்பிக்கையில்லையென விளக்கினார். அந்தப் பாதிரி மூர்க்க கோபமடைந்தார். அன்றிரவில், இந்த ஆள் உதவிக்காக யெகோவாவிடம் ஜெபித்தார். ஆகையால் இந்தப் பயனியர் அங்கு சென்றபோது அவர் எவ்வளவு கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தாரென்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்! முறைப்படி தொடர்ந்து நடத்தும் பைபிள் படிப்புக்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அந்த ஆள் தேவாட்சிக்குரிய அமைப்புடன் கூட்டுறவுகொண்டு தொடர்ந்து முன்னேறுகிறார்.
நியமிக்கப்படாத இந்தப் பிராந்தியங்களில் சகோதரர்கள் முழுமையான சாட்சி கொடுக்க முயற்சி செய்கையில், பராகுவேயில் செய்யப்படும் இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலையை யெகோவா, மெய்யாகவே ஆசீர்வதிக்கிறார்.—மத்தேயு 24:14.