எலியாவுக்கிருந்ததைப் போன்ற விசுவாசம் உங்களுக்கு உண்டா?
இன்று மனித சமுதாயம் விசுவாசத்தை அழித்துப்போடுகிறது. அறிவாற்றலுடையோர் கடவுள் இருக்கிறார் என்பதை ஏளனஞ் செய்கின்றனர். மத பாசாங்குக்காரர் கடவுளை அவமதிப்புக்கு ஆளாக்குகின்றனர். மதம் சாராத உலகம் கடவுளைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதுபோல் மேலுமதிகமாய் நடக்கிறது. இந்த மனப்பான்மைகள் ஒருவரை பயமுறுத்தி ஆட்கொண்டாலும், அல்லது மனச்சோர்வடைய செய்தாலும், அல்லது அக்கறையற்ற நிலைக்குள்ளாகும்படி பாதித்தாலும், எவ்வாறாயினும் அதன் விளைவு ஒன்றே: அவனுடைய விசுவாசம் படிப்படியாய் அழிக்கப்படுகிறது. விசுவாசமில்லாமையை அப்போஸ்தலன் பவுல் “நம்மை எளிதில் அகப்படுத்துகிற பாவம்” என்றழைத்தது ஆச்சரியமில்லை!—எபிரெயர் 12:1, தி.மொ.
ஒருவேளை இதனிமித்தமே பவுல், உறுதியான விசுவாசமுடையோராயிருந்த ஆண்களின் மற்றும் பெண்களின் வாழ்க்கைகளுக்கு நம் கவனத்தை இழுக்க கூர்ந்த அக்கறை கொண்டிருந்திருக்கலாம். (எபிரெயர், 11-ம் அதிகாரம்) இத்தகைய முன்மாதிரிகள் நம்மை ஊக்குவித்து நம் விசுவாசத்தை அழியாதபடி காப்பாற்றலாம். உதாரணமாக, தீர்க்கதரிசியாகிய எலியாவை நாம் கவனித்துப் பார்க்கலாம். தீர்க்கதரிசிக்குரிய அவருடைய நீண்டகால மற்றும் நிறைவான ஊழிய வாழ்க்கையின் தொடக்கப் பகுதிக்கு மாத்திரமே கவனத்தை ஊன்ற வைப்போம். அரசன் ஆகாபும் அவனுடைய புறமத மனைவியாகிய அரசி யேசபேலும் ஆட்சி செய்த காலத்தில் அவர் வாழ்ந்தார். அந்தச் சமயத்தில், இப்பொழுது இருப்பதுபோல், உண்மையான கடவுளில் விசுவாசம் வைப்பது மிகக் குறைந்த நிலையிலிருந்தது.
சீரழிந்த பத்துக்-கோத்திர ராஜ்யம்
அவர்கள் எத்தகைய ஜோடியானார்கள்! ஆகாப் அந்தப் பத்துக்-கோத்திர ராஜ்யத்தின் ஏழாவது அரசனாயிருந்தான். அவனுக்கு முன்னால் ஆண்டிருந்த ஆறு அரசர்களும் பொல்லாதவர்களாக இருந்தபோதிலும், ஆகாப் அவர்களெல்லாரையும் பார்க்கிலும் படுமோசமானவனாயிருந்தான். அந்தத் தேசத்தின் இழிவான கன்றுக்குட்டி வணக்கத்தை அவன் நீடித்திருக்கச் செய்ததுமட்டுமல்லாமல், அன்னிய நாட்டு இளவரசி யேசபேலை மணந்து, இதன் விளைவாக, அந்தத் தேசம் ஒருபோதும் அறிந்திராத மேலும் வலிமைவாய்ந்த வகையான பொய்மத கடவுள் பாகாலின் வணக்கத்தையும் உள்ளே புகுத்தினான்.—1 இராஜாக்கள் 16:30-33.
யேசபேல் குழந்தைப் பருவத்திலிருந்து பாகால் மதத்தில் மூழ்க்கப்பட்டிருந்தாள். அஷ்டொரெத்தின் (பாகாலின் மனைவியின்) பூஜாரியான அவளுடைய தகப்பன், எத்பாகால், கொலைசெய்தே, இஸ்ரவேலுக்கு வடக்கில்தானே இருந்த ராஜ்யமாகிய, சீதோனின் சிங்கானத்திலேறியிருந்தான். யேசபேல், இஸ்ரவேலில் பாகால் மதத்தை ஸ்தாபிக்கும்படி, நீதிநெறிமுறையில் பலவீனனான தன் கணவனைத் தூண்டி செய்வித்தாள். சிறிது காலத்துக்குள், அந்தப் பொய்க் கடவுளின் 450 தீர்க்கதரிசிகளும் அஷேரா தேவதையின் 400 தீர்க்கதரிசிகளும் தேசத்தில் இருந்தனர், இவர்கள் எல்லாரும் ராஜ பந்தியில் சாப்பிட்டனர். உண்மையான கடவுளாகிய, யெகோவாவின் கண்களில் அவர்களுடைய வணக்க வகை எவ்வளவு அருவருப்பாயிருந்தது! ஆண்குறி (இலிங்க) சின்னங்கள், கருவுறச்செய்யும் வழிபாட்டுமுறைகள், ஆலய வேசிகள் (ஆண்பாலினரும் பெண்பாலினரும்), பிள்ளைகளைப் பலிசெலுத்துதலுங்கூட—இத்தகைய காரியங்கள் இந்த வெறுப்பூட்டும் மதத்தின் தனிப்பட்ட அம்சங்களாயிருந்தன. ஆகாபின் ஆசீர்வாதத்தால், இது அந்த ராஜ்யம் முழுவதிலும் தடையில்லாமல் பரவினது.
பூமியையும் அதன் நீர் சுழற்சியையும் உண்டாக்கின சிருஷ்டிகராகிய யெகோவாவை லட்சக்கணக்கான இஸ்ரவேலர் மறந்துவிட்டனர். பாகாலே, வறண்ட பருவத்தின் முடிவில் மழையைத் தந்து தேசத்தை ஆசீர்வதித்தான் என அவர்கள் எண்ணினர். ஒவ்வொரு ஆண்டிலும், இந்த வறண்ட நிலையை முடிவுசெய்யும்படி, கருவளத்தின் மற்றும் மழைபருவத்தின் கடவுள் என அழைக்கப்பட்ட இந்த ‘மேகங்களை ஓட்டுபவனை,’ [மேகங்களைக் கொண்டுவருவதாக அவர்கள் நம்பின பாகாலை] அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆண்டுதோறும், இந்த மழைகள் வந்தன. ஆண்டுதோறும், பாகாலே அதற்குப் புகழைப் பெற்றான்.
மழைபெய்யப் போவதில்லையென எலியா அறிவிக்கிறார்
அது ஒருவேளை மழையில்லாது நீடித்த வேனிற் பருவத்தின் முடிவில்—உயிரளிக்கும் மழைகளைப் பாகால் கொண்டுவருவானென ஜனங்கள் எதிர்பார்க்கத் தொடங்கும் சமயத்தில்—எலியா காட்சியில் தோன்றியிருக்கலாம்.a பைபிள் விவரப் பதிவில் அவர் இடிமுழக்கம்போல் திடீரெனத் தோன்றுகிறார். அவருடைய வரலாற்று விவரத்தைப்பற்றி, அவருடைய பரம்பரையைப் பற்றியுங்கூட நமக்கு அதிகம் சொல்லியில்லை. ஆனால் இடிமுழக்கத்துக்கு மாறாக, எலியா, புயல் மழை வருவதை அறிவிக்கும் முன்னோடியாக இல்லை. அவர் ஆகாபுக்குப் பின்வருமாறு அறிவித்தார்: “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் சந்நிதியில் நிற்கிற நான் அவருடைய ஜீவன்மேல் ஆணையாகச் சொல்லுகிறதைக் கேள்; நான் சொன்னாலன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும்”!—1 இராஜாக்கள் 17:1, தி.மொ.
நாட்டுப்புறத்தாருக்குரிய தன் மயிர் உடையை அணிந்திருக்கும் இந்த மனிதனைக் காட்சிப்படுத்திப் பாருங்கள். இவர் கிலேயாத்தின் கரடுமுரடான குன்றுகளைச் சேர்ந்தவர், மந்தைகளை மேய்க்கும் தாழ்மையான மேய்ப்பர்களுக்குள் பெரும்பாலும் வளர்க்கப்பட்டிருக்கலாம். இவர் வல்லமைவாய்ந்த அரசன் ஆகாபுக்கு முன் நிற்கிறார், ஒருவேளை அவனுடைய மிகப் பரந்த அரண்மனையில்தானே, அதன் பிரசித்திப்பெற்ற தந்தத்தால் செய்யப்பட்ட வீடும், அதன் ஆடம்பரமான மற்றும் அசாதாரண அலங்காரங்களும் கவர்ச்சி தோற்றமளிக்கும் விக்கிரகங்களும் சூழ்ந்திருக்க அவர் அங்கே நிற்கிறார். அங்கே, அந்த ஆரவாரமான மற்றும் அரண்காப்புகளால் பலப்படுத்தப்பட்ட நகரமாகிய சமாரியாவில், யெகோவாவின் வணக்கம் ஏறக்குறைய முற்றிலும் மறக்கப்பட்டுவிட்ட இடத்தில், அவர் ஆகாபை நோக்கி அவனுடைய இந்தக் கடவுள், இந்தப் பாகால், வல்லமையற்றவன், கற்பனையானவனே எனக் கூறுகிறார். இந்த ஆண்டும் வரப்போகிற ஆண்டுகளிலும், மழையோ பனியோ பெய்யப்போவதில்லையென எலியா அறிவிக்கிறார்!
அத்தகைய விசுவாசத்தை அவர் எங்கிருந்து அடைந்தார்? அந்த அகந்தையான, விசுவாசத்துரோகியாகிய அரசன் முன்னிலையில் அங்கே நிற்பது, அவருக்கு திகிலுணர்ச்சியை உண்டாக்கவில்லையா? ஒருவேளை உண்டாக்கியிருக்கலாம். எலியா “நமக்கிருப்பதைப்போன்ற உணர்ச்சிகளையுடைய ஒரு மனிதன்,” என ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின், இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனான யாக்கோபு நமக்கு உறுதியளிக்கிறார். (யாக்கோபு 5:17) ஆனால் எலியாவின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் சந்நிதியில் நிற்கிற நான்.” யெகோவாவின் ஊழியனாக, தான் ஆகாபினுடையதைப் பார்க்கிலும் மிக அதிக உன்னதமான சிங்காசனத்துக்கு முன்பாக—சர்வலோக உன்னதப் பேரரசரான கர்த்தரின் சிங்காசனத்துக்கு முன்பாகத்தானே—நிற்பதை எலியா மனதில் வைத்திருந்தார்! அவர் அந்தச் சிங்காசனத்தின் ஒரு பிரதிநிதி, தூதுச்செய்தியாளன். இந்த மனக்காட்சி தனக்கு இருக்கையில், யெகோவாவின் ஆசீர்வாதத்தை இழந்திருந்த அற்ப மனித அரசனான ஆகாபுக்குப் பயப்பட அவருக்கு என்ன இருந்தது?
யெகோவா எலியாவுக்கு அவ்வளவு மெய்ம்மையானவராக இருந்தது தற்செயலாய் ஏற்பட்டதல்ல. கடவுள் தம்முடைய ஜனங்களுடன் நடைமுறைத் தொடர்புகள் கொண்டதைப்பற்றிய பதிவை சந்தேகமில்லாமல், இந்தத் தீர்க்கதரிசி படித்திருந்தார். அவர்கள் பொய்க் கடவுட்களை வணங்குவதற்குத் திரும்பினால் தாம் அவர்களை மழையில்லாமையாலும் பஞ்சத்தாலும் தண்டிப்பாரென யெகோவா யூதர்களை எச்சரித்திருந்தார். (உபாகமம் 11:16, 17) யெகோவா தம்முடைய வார்த்தையை எப்பொழுதும் நிறைவேற்றுபவர் என்ற திடநம்பிக்கையுடன், எலியா “மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினார்.”—யாக்கோபு 5:17.
வழிநடத்துதலைப் பின்பற்றுவதில் விசுவாசம் வெளிப்படுத்திக் காட்டப்பட்டது
எனினும், எலியாவின் அறிவிப்பு, ஒரு விநாடி அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தது. அவருடைய விசுவாசத்தின் மற்றொரு அம்சத்தைக் காட்டுவதற்கு அது சமயமாயிருந்தது. உயிருடனிருப்பதற்கு, அவர் யெகோவாவின் பின்வரும் கட்டளைகளைப் பின்பற்றி நடப்பதில் உண்மையுள்ளவராயிருக்க வேண்டும்: “நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசைக்குப்போய், யோர்தானுக்கு நேராய் ஓடுகிற கெரீத் நீரோடையண்டையில் ஒளித்துக்கொண்டிரு. அந்த நீரோடையின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு ஆகாரம் அளிக்கும்படி காகங்களுக்குக் கட்டளையிடுவேன்.”—1 இராஜாக்கள் 17:3, 4, தி.மொ.
எலியா உடனடியாகக் கீழ்ப்படிந்தார். அவர் தன் தேசத்துக்கு உண்டான அந்த மழைபெய்யாமையையும் பஞ்சத்தையும் தப்பிப் பிழைக்க வேண்டுமென்றால், யெகோவா அவருக்குச் செய்த ஏற்பாடுகள் என்னவாயினும் அவற்றின்மீது நம்பியிருக்க வேண்டும். இது நிச்சயமாகவே எளிதாக இல்லை. இது தன்னை ஒளித்துக்கொண்டு, இடைவிடாமல் பல மாதங்கள் முற்றிலும் தனிமையில் வாழ்வதைக் குறித்தது. இது—மோசேயின் நியாயப்பிரமாணத்தில் அசுத்தமானவையென தீர்க்கப்பட்ட, பிணம் தின்னும் பறவைகளாகிய—காகங்கள் தனக்குக் கொண்டுவரும் இறைச்சியையும் அப்பத்தையும், அத்தகைய இறைச்சி பிணத்துண்டு அல்ல ஆனால் நியாயப்பிரமாணத்தின்படி சரியான முறையில் இரத்தம் வடிக்கப்பட்டதென்று யெகோவாவில் நம்பிக்கை வைத்து சாப்பிடுவதைக் குறித்தது. இந்த நீடித்த அற்புதம் அவ்வளவாய் இயல்பாக நடைபெற முடியாததாகத் தோன்றுவதால் பைபிள் விளக்கவுரையாளர்கள் சிலர், அந்த மூல வார்த்தை இங்கே “அரபியர்” என பொருள்பட்டிருக்க வேண்டும் “காகங்கள்” என்று அல்லவே அல்லவென யோசனை கூறுகின்றனர். ஆனால் காகங்களே சிறந்த தெரிவாயிருந்தன. இந்த எளிய, அசுத்தமான பறவைகள் தங்கள் உணவு துணிக்கைகளுடன் வனாந்தரத்துக்குள் பறந்து செல்வதை, சுற்றிலுமுள்ள ராஜ்யங்கள் எல்லாவற்றிலும் ஆகாபும் யேசபேலும் தேடிக்கொண்டிருந்த எலியாவுக்கு உண்மையில் உணவளித்துக்கொண்டிருக்கலாமென ஒருவரும் சந்தேகிக்கமாட்டார்கள்!—1 இராஜாக்கள் 18:3, 4, 10.
மழையின்மை நீடித்துக்கொண்டேயிருந்தபோது, கெரீத் பள்ளத்தாக்கு நீரோடையில் தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குறித்து எலியாவுக்குக் கவலை ஏற்பட்டிருக்கலாம். இஸ்ரவேலின் நீரோடை பள்ளத்தாக்குகள் மழையில்லா காலங்களில் வற்றிப்போகும், “சில நாட்களுக்குப்பின்பு,” இதுவுங்கூட வற்றிப்போயிற்று. அந்தத் தண்ணீர் சிறிதுசிறிதாய்க் குறைந்து மெதுவாகக் கசிந்தொழுகி நீர்த்தேக்கங்களின் மட்டம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்தபோது எலியாவின் உணர்ச்சிகளை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? தண்ணீர் வற்றிவிட்டபின் என்ன நடக்குமென அவர் நிச்சயமாகவே கவலையுடன் சிந்தித்திருப்பார். இருப்பினும் எலியா உண்மையுடன் அங்கேயே தங்கியிருந்தார். அந்த நீரோடை வற்றிப்போன பின்பே யெகோவா அவனுக்கு அடுத்தத் தொகுதி கட்டளைகளைக் கொடுத்தார். சாறேபாத்துக்குப் போகும்படி இந்தத் தீர்க்கதரிசிக்குச் சொல்லப்பட்டது. அங்கே ஒரு விதவையின் வீட்டில் அவருக்கு உணவு கிடைக்கும்.—1 இராஜாக்கள் 17:7-9, தி.மொ.
சாறேபாத்! இந்த ஊர் சீதோன் நகரத்துக்குரியது, அங்கிருந்தே யேசபேல் வந்திருந்தாள் மற்றும் அங்கேதான் அவளுடைய சொந்த தகப்பன் அரசனாக ஆட்சி செய்திருந்தான்! அது பாதுகாப்பாயிருக்குமா? எலியா அவ்வாறு யோசித்திருக்கலாம். எனினும் “அவர் எழுந்து சாறேபாத்துக்குப் போனார்.”—1 இராஜாக்கள் 17:10, தி.மொ.
யெகோவா உணவும் உயிரும் அளிக்கிறார்
அவருடைய கீழ்ப்படிதல் சீக்கிரத்தில் பலனளிக்கப்பட்டது. முன்னறிவிக்கப்பட்டபடியே, அவர் அந்த விதவையை எதிர்ப்பட்டார், மேலும் தன் நாட்டினருக்குள் காணப்படாத அந்த வகையான விசுவாசத்தை அவர் அவளில் கண்டார். இந்த ஏழை விதவையினிடம், தனக்கும் தன் இளம் குமாரனுக்கும் ஒரு கடைசி சாப்பாட்டைச் செய்வதற்கு மாத்திரமே போதுமான மாவும் எண்ணெய்யும் இருந்தது. எனினும், தன் மிகக் கடுமையான தேவையிலும், அவள், தேவையிருக்கும் வரையில் யெகோவா அவளுடைய கலயத்திலுள்ள எண்ணெய்யும் பானையிலுள்ள மாவும் குறையாமல் இருக்கும்படி வைப்பாரென்ற அவருடைய வாக்கில் நம்பிக்கை வைத்து, எலியாவுக்கு முதலாவது அப்பம் சுடுவதற்கு மனமுவந்தாள். இயேசு தம்முடைய நாளிலிருந்த உண்மையற்ற இஸ்ரவேலர்களைக் கண்டனஞ்செய்கையில் இந்த விதவையின் உண்மையுள்ள முன்மாதிரியை நினைவுபடுத்தினது ஆச்சரியமில்லை!—1 இராஜாக்கள் 17:13-16, தி.மொ.; லூக்கா 4:25, 26.
எனினும், அந்த அற்புதம் இருந்தும், அந்த விதவையினுடைய விசுவாசமும் எலியாவினுடைய விசுவாசமும் சீக்கிரத்தில் கடும் சோதனை ஒன்றை எதிர்ப்படவிருந்தன. அவளுடைய மகன் திடீரென்று இறந்துவிட்டான். மீறிய துக்கத்தில் ஆழ்ந்தவளாய், அந்த விதவை, இந்தத் துயர சம்பவம் நேர்ந்தது, “உண்மையான கடவுளின் மனிதனான” எலியா சம்பந்தப்பட்ட ஏதாவதாக இருந்திருக்க வேண்டுமென கருதிக்கொள்ள செய்வித்தது. ஏதோ கடந்த கால பாவத்துக்காகத் தான் ஒருவேளை தண்டிக்கப்பட்டாளோவென அவள் எண்ணினாள். ஆனால் எலியா அவளுடைய உயிரற்ற மகனை அவளுடைய புயங்களிலிருந்து எடுத்து அவனை ஒரு மேல் அறைக்குக் கொண்டுசென்றார். யெகோவா உணவைப்பார்க்கிலும் அதிகத்தை அளிக்க முடியுமென அவர் அறிந்திருந்தார். யெகோவா உயிருக்குத்தானே மூலகாரணர்! ஆகையால் எலியா, அந்தப் பிள்ளைக்கு உயிர் திரும்பிவரும்படி ஊக்கமாயும் திரும்பத்திரும்பவும் ஜெபித்தார்.
எலியா, உயிர்த்தெழுதலில் அத்தகைய விசுவாசத்தைக் கொண்டிருந்த முதல்வர் அல்ல, ஆனால், பைபிள் பதிவில், ஓர் உயிர்த்தெழுதலை நடப்பிக்கப் பயன்படுத்தப்பட்ட முதல்வராக இருந்தார். அந்தப் பையன் “உயிருக்கு வந்தான்”! (NW) எலியா அவளுடைய மகனை அவளிடம் கொண்டு வந்து எளிய வார்த்தைகளில்: “பார், உன் பிள்ளை பிழைத்துக்கொண்டான்,” என்று சொன்னபோது அந்தத் தாயின் மகிழ்ச்சியைக் காண்பது எத்தகைய காட்சியாயிருந்திருக்கும்! சந்தேகமில்லாமல் கண்ணீருடன் அவள்: “நீர் கடவுளின் மனுஷனே என்றும் உமது வாயில் பிறக்கும் யெகோவாவின் வார்த்தை உண்மையே என்றும் இப்போது அறிந்துகொண்டேன்,” என்று சொன்னாள்.—1 இராஜாக்கள் 17:17-24, தி.மொ.
“என் கடவுள் யெகோவாவே”
எலியாவின் பெயர் “என் கடவுள் யெகோவாவே,” என பொருள்படுவது எவ்வளவாய் உள்ளங்கனிய செய்கிறது, எவ்வளவு பொருத்தமாயுள்ளது! மழைபெய்யாத பஞ்சக் காலத்தில், யெகோவா அவருக்கு உணவும் பானமும் கொடுத்தார்; ஒழுக்கத் தாறுமாறான காலத்தில், யெகோவா அவருக்குச் சரியான வழிநடத்துதலைக் கொடுத்தார்; மரணம் நேரிட்ட காலத்தில், உயிர் திரும்பவரச் செய்வதற்கு யெகோவா அவரைப் பயன்படுத்தினார். தேவைப்பட்டதை அளிப்பதற்கு யெகோவாவில் நம்பிக்கை வைப்பதன் மூலமும், அவருடைய வழிநடத்துதல்களைப் பின்பற்றுவதன் மூலமும், அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும்படி அவரில் நம்பிக்கை வைப்பதன் மூலமும்—தன் கடவுளில் தன் விசுவாசத்தைக் காட்டும்படி எலியா அழைக்கப்பட்ட ஒவ்வொரு சமயத்திலும்—யெகோவாவில் விசுவாசம் வைப்பதற்கு இன்னும் அதிகக் காரணங்களால் அவர் பலனளிக்கப்பட்டாரெனத் தெரிகிறது. அவர் கடினமான மற்றும் பயமடையச் செய்யும் வேலைபொறுப்புகளைத் தன் கடவுளாகிய யெகோவாவிடமிருந்து தொடர்ந்து ஏற்று வந்தபோது இந்த மாதிரிபாங்கே அவருடைய அனுபவமாயிருந்தது. உண்மையில், அவருடைய மிக அதிகக் கிளர்ச்சியூட்டும் பகட்டான அற்புதங்கள் இன்னும் எதிர்காலத்தில் அவருக்கு வைக்கப்பட்டிருந்தன.—1 இராஜாக்கள் 18-ம் அதிகாரத்தைப் பாருங்கள்.
இன்று யெகோவாவின் ஊழியர்களுக்கும் பெரும்பாலும் இவ்வாறேயுள்ளது.
a “மூன்று வருஷமும் ஆறு மாதமும்” அந்த தேசத்தில் மழை பெய்யவில்லையென இயேசுவும் யாக்கோபும் சொல்லுகின்றனர். எனினும், எலியா, மழைபெய்யாதிருப்பதை முடிவு செய்ய “மூன்றாம் வருஷத்தில்” ஆகாபுக்கு முன் தோன்றினதாகச் சொல்லப்பட்டிருக்கிறது—இது சந்தேகமில்லாமல் அவர் மழைபெய்யாதென அறிவித்த நாளிலிருந்து கணக்கிடப்பட்டதே. இவ்வாறு, இது அவர் ஆகாபுக்கு முன் முதல்தடவை நின்றதிலிருந்து வெகுவாய் நீடித்த வறண்ட பருவத்துக்குப் பின் இருந்திருக்க வேண்டும்.—லூக்கா 4:25; யாக்கோபு 5:17; 1 இராஜாக்கள் 18:1.