யெகோவாவின் முறையே மிகச் சிறந்த வாழ்க்கை முறை
எர்க்கி கான்கான்பா கூறினபடி
நான் சிறு பிள்ளையாக இருந்த காலத்திலிருந்து, என் இலக்கு, யெகோவாவின் சாட்சிகளின் ஃபின்லாந்து கிளை அலுவலகத்தில், அல்லது அது அழைக்கப்படுகிறபடி பெத்தேலில் சேவிக்க வேண்டுமென்பதே. ஆகையால் 1941-ன் கோடைக்காலத்தின்போது பயணக் கண்காணி ஒருவர், “எதிர்காலத்துக்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறாய்?” என்று என்னைக் கேட்டபோது நான் பின்வருமாறு பதிலளித்தேன்: “நான் பெத்தேலுக்குப் போகவே எப்பொழுதும் விரும்பினேன்.”
“நீ அந்த மனக்கோட்டைகளை விட்டுவிடுவது நல்லது; நீ ஒருபோதும் அழைக்கப்பட மாட்டாய்,” என்று அவர் சொன்னார். முதலில் நான் வெகு கூர்ந்த ஏமாற்றமடைந்தேன், ஆனால் பின்பு அந்தக் காரியத்தை வெறுமென யெகோவாவின் கைகளில் விட்டுவிடவேண்டுமென்று தீர்மானித்தேன். சில மாதங்களுக்குப் பின், பெத்தேலில் சேவிக்கும்படி ஓர் அழைப்பைப் பெற்றேன்.
நவம்பர் 1941-ல் வெகு குளிர்ந்த, தெளிவான ஒரு நாளில் நான் ஹெல்ஸிங்க்கியிலுள்ள கிளை அலுவலகத்தின் வாசல்-மணியை அடிக்கையில் நான் வெட்கப்படும் சுபாவமுள்ள, 17 வயது நாட்டுப்புறத்து இளைஞன். சீக்கிரத்தில் நான் கிளை அலுவலகக் கண்காணியான கார்லோ ஹார்டேவாவால் வரவேற்கப்பட்டேன். அந்தச் சமயத்தில் அந்தக் கிளை அலுவலகம் ஃபின்லாந்திலுள்ள 1,135 சாட்சிகளின்மீது கண்காணிப்பைக் கொண்டிருந்தது.
கிறிஸ்தவ பரம்பரை
என் தகப்பன் 1914-ல் உவாட்ச் டவர் பிரசுரமாகிய யுகங்களுக்குரிய தெய்வீகத் திட்டம் என்ற ஆங்கில புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கினார். எனினும், அதன்பின் சீக்கிரத்திலேயே முதல் உலகப் போர் தொடங்கிவிட்டது, அவர் அதை வாசிக்கவில்லை.
தேசீய சுதந்திரத்துக்கான ஃபின்லாந்தின் போராட்டம் பிரச்னைகளை உண்டுபண்ணின. இரண்டு வல்லமைவாய்ந்த தொகுதிகள்—வெள்ளையரும் செந்நிறத்தாரும்—உருவாக்கப்பட்டன. வெள்ளையர்கள் முதலாளிகளையும் நடுவகுப்பாரையும் பிரதிநிதித்துவஞ் செய்தனர், செந்நிறத்தாரோ உழைப்பாளிகளைப் பிரதிநிதித்துவஞ் செய்தனர். என் தகப்பன், அந்த இரண்டு தொகுதிகளிலிருந்தும் முற்றிலும் தூர விலகியிருந்து, நடுநிலை வகிக்க முயற்சி செய்தார். எனினும் அந்த இரு தொகுதியாரும் அவரைச் சந்தேகத்துக்குரியவராகக் குறித்து வைத்தனர்.
இதன் விளைவாக முடிவில், அப்பா, முதல் வெள்ளையராலும் பின்பு செந்நிறத்தாராலும், இருமுறை மரணத்தீர்ப்பு அளிக்கப்பட்டார், ஒருமுறை ஒரு மனிதன் கொலைசெய்யப்பட்டு, கொலைசெய்தவனைக் கைப்பற்ற முடியாமற்போனபோது, என் தகப்பன் உட்பட பத்து வாலிபர் மரணத்தீர்ப்பளிக்கப்பட்டனர். ஜூரியின் ஓர் உறுப்பினராயிருந்த என் தகப்பனின் ஆசிரியர்களில் ஒருவர், அவருக்கு ஒரு விதிவிலக்கைச் சிபாரிசு செய்தார், அது அளிக்கப்பட்டது. மற்ற ஒன்பது வாலிபர்களும் கொல்லப்பட்டனர்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் அப்பாவுக்கு மரணத்தீர்ப்பிலிருந்து மறுபடியும் விலக்களிக்கப்பட்டது. அதன்பின் அவர் underground என்ற ஆங்கில சொற்பொருளின்படி தரைக்குக்கீழ் செல்ல தீர்மானித்தார்! அவரும் அவருடைய சகோதரனும் மண்ணைக் குடைந்து ஒரு பாதுகாப்பிடத்தை உண்டுபண்ணினர், போர் முடியும் வரை அவர்கள் அங்கே வாழ்ந்தனர். அவர்களை உயிரோடு வைக்க, அவர்களுடைய இளைய சகோதரன் அவர்களுக்கு உணவும் பானமும் அளித்தான்.
போர் 1918-ல் முடிந்தபோது, அப்பா மணஞ்செய்து அந்தக் குடைந்தமைக்கப்பட்ட மறைவிடத்துக்கு அருகில் ஒரு வீடு கட்டினார். பின்னால் நான் அதோடு நன்றாய்ப் பழக்கப்பட்டேன், எப்படியெனில் அது எனக்கு விளையாடுமிடமாகப் பயன்பட்டது. அங்கே தரைக்குக் கீழே மறைந்திருக்கையில் தான் மிகுதியாய் ஜெபம் செய்ததாக என் தகப்பன் என்னிடம் சொன்னார். கடவுளைச் சேவிப்பது எவ்வாறென தான் எப்போதாவது கற்றறிந்தால், அவ்வாறு செய்வாரென அவர் கடவுளுக்கு வாக்குக் கொடுத்தார்.
மணம் செய்து சிறிது காலத்துக்குப் பின், வேலை சம்பந்தமாய்ப் பயணப்படுகையில் வாசிப்பதற்குத் தன்னோடு எதையாவது எடுத்துச் செல்லும்படி தீர்மானித்தார். மேல்மாடியின் சிறிய அறையில், அவர் தான் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கின யுகங்களுக்குரிய தெய்வீகத் திட்டம் என்ற அந்தப் புத்தகத்தைக் கண்டார். அவர் அதை “யெகோவாவின் நாள்” என்ற அதிகாரத்துக்குத் திறந்து வாசித்தார். ‘இதுவே சத்தியம், இதுவே சத்தியம்’ என்று அவர் தனக்குள்ளே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். மேலறையிலிருந்து கீழே வந்து, என் தாயாரிடம்: “நான் உண்மையான மதத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்,” என்று கூறினார்.
ஏறக்குறைய உடனடியாக அப்பா தான் கற்றுக்கொண்டிருந்த காரியங்களைப்பற்றி மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கத் தொடங்கினார், முதலாவது தன் உறவினரிடமும் அயலாரிடமும் பேசினார். பின்பு அவர் பொதுப்பேச்சுகள் கொடுக்கத் தொடங்கினார். சீக்கிரத்தில் அந்தப் பகுதியிலிருந்த மற்றவர்கள் அவரைச் சேர்ந்துகொண்டனர். அப்பொழுது யெகோவாவின் சாட்சிகள் அழைக்கப்பட்டபடி, பைபிள் மாணாக்கருடன் தொடர்புகொண்டபின்பு, அப்பா 1923-ல் முழுக்காட்டப்பட்டார். பிள்ளைகளாகிய நாங்கள் பிறந்தபோது—முடிவில் நாங்கள் நான்குபேர் இருந்தோம்—அப்பா எங்களுக்குக் கற்பிக்கத் தவறவில்லை. உண்மையில், ஒரு சபை அமைக்கப்பட்ட பின்பு, நாங்கள் ஒவ்வொரு கூட்டத்துக்கும் தவறாமல் ஆஜராகும்படி கட்டளையிடப்பட்டோம்.
தொடக்க நினைவுகள்
நான் 1929-ல், ஐந்து வயதாயிருந்தபோது, எங்கள் வீட்டு சபையில் ஏற்பாடு செய்த ஒரு மாநாட்டைப் பற்றியது என் தொடக்க நினைவிலுள்ளது. அருகே இருந்த சபைகளிலிருந்து பலர் கூடினர், மேலும் கிளை அலுவலகத்திலிருந்து ஒரு பிரதிநிதியும் அங்கிருந்தார். மாநாடுகளில் பிள்ளைகளை ஆசீர்வதிப்பது வழக்கமாயிருந்தது, ஃபின்லாந்திலாவது அவ்வாறு இருந்திருக்கலாம். ஆகையால் பெத்தேலிலிருந்து வந்த அந்தச் சகோதரன், இயேசு தம்முடைய ஊழியத்தின்போது செய்ததைப்போலவே, பிள்ளைகளை ஆசீர்வதித்தார். நான் அதை ஒருபோதும் மறந்துவிடவில்லை.—மாற்கு 10:16.
மற்றொரு தொடக்க நினைவானது, 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றதாகும். என் தகப்பன், அந்தச் சந்தர்ப்பத்தின் தனி முக்கியத்துவத்தைப் பற்றி உணர்வுடையவராய், நம்முடைய புதிய பெயரைப் பற்றிய அந்த அறிவிப்பை பயபக்தியூட்டும் முறையில் சபைக்கு வாசித்தார்.
நான் நினைவுபடுத்திக் காணக்கூடிய அந்தச் சமயத்திலிருந்தே, என் தகப்பனுடன் பிரசங்க ஊழியத்துக்குச் சென்றேன். தொடக்கத்தில், நான் வெறுமென அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருப்பேன், ஆனால் முடிவில் நான் அந்த ஊழியத்தைத் தனியே செய்தேன். 1935-ல் பயணக் கண்காணி ஒருவர் எங்களைச் சந்திக்கையில், நான் எங்கள் அயலார் எல்லாரிடமும் சென்று அந்தக் கூட்டத்துக்கு வரும்படி அவர்களை அழைத்தேன். நான் அவர்களுக்குச் சிறு புத்தகங்களையும் அளித்தேன், சிலர் அவற்றை ஏற்றனர்.
பள்ளியும் ஒரு முக்கியமானத் தீர்மானமும்
பள்ளியில் நாங்கள் நான்கு பிள்ளைகள் மாத்திரமே சாட்சிகளாயிருந்த பெற்றோரை உடையோராயிருந்தோம், கிறிஸ்தவத்துக்கு மாறான நடத்தையில் நாங்கள் மற்ற இளைஞர்களைச் சேர்ந்துகொள்ளாததால் அடிக்கடி ஏளனஞ்செய்யப்பட்டோம். புகைக் குடிக்கும்படி என்னை வசீகரிக்க பள்ளித் தோழர்கள் முயன்றபோதிலும், நான் ஒருபோதும் அதைச் செய்யவில்லை. மேலும் நாங்கள் ரஸ்ஸல்காரர் (ரஸ்ஸல் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் முதல் தலைவர்) அல்லது ஹார்ட்டேவாக்காரர் (ஹார்ட்டேவா அச்சமயம் ஃபின்லாந்தின் கிளை அலுவலகக் கண்காணி) என கேலியாக அழைக்கப்பட்டோம். ஒரு காலத்தில் எங்களை ஏளனஞ்செய்த சில இளைஞர்கள் முடிவில் சாட்சிகளானார்கள் என்று சொல்வதற்குச் சந்தோஷப்படுகிறேன்.
மேலும் தொடர்ந்து உயர் கல்விபெறும்படி என் ஆசிரியர் என்னை ஊக்குவித்தார், ஒரு சமயத்தில் நான் பொறியாளர் ஆகும்படியும் கருதினேன். ஆனால் அப்போது 1939-ன் இளவேனிற் காலத்தில், போரியில் யெகோவாவின் சாட்சிகளின் ஒரு மாநாடு நடந்தது, அது என் வாழ்க்கையில் ஒரு திரும்புகட்டமாக நிரூபித்தது. என் இளைய சகோதரன் டுமோவும், நானும் யெகோவாவுக்கு எங்களை ஒப்புக்கொடுத்து, மே 28, 1939 அன்று, அந்த மாநாட்டில் தண்ணீரில் முழுக்காட்டப்படுவதன்மூலம் அதை அடையாளப்படுத்தினோம். பின்பு செப்டம்பர் தொடக்கத்தில், இரண்டாம் உலகப் போர் தொடங்கினது.
ஐரோப்பாவில் சூழ்நிலைமைகள் திடீர்த்திருப்பங்களுடன் மாறிற்று. ஃபின்லாந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலைமை இடரார்ந்ததாயிற்று. என் தகப்பன் அர்மகெதோன் நெருங்கி வந்துகொண்டிருக்கிறதென அறிவுறுத்தி பயனியர் ஊழியம் செய்யும்படி எங்களை ஊக்கப்படுத்தினார். ஆகையால், டிசம்பர் 1940-ல், என் சகோதரனும் நானும் வட ஃபின்லாந்தில் பயனியர் ஊழியம் செய்ய தொடங்கினோம்.
பயனியர் ஊழியமும் பெத்தேல் சேவையும்
பயனியர் ஊழியம் செய்கையில், நாங்கள் பெரும்பான்மையான காலம் யிரியோ காலீயோ உடன் வாழ்ந்தோம். அவர் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஐக்கிய மாகாணங்களிலுள்ள பென்ஸில்வேனியாவில் பைபிள் மாணாக்கராகியிருந்தார். யிரியோ மிக மீறிய பாச இருதயமுடையவர், அவர் எங்களுக்கு இன்பமான சூழ்நிலைமைகளை அளிக்கும்படி தன்னால் இயன்றதையெல்லாம் செய்தார். அவருடைய உடன்பிறந்த சகோதரன், கையோஸ்டி காலீயோ, 1937-லிருந்து 1940 வரை ஃபின்லாந்தின் ஜனாதிபதியாகச் சேவித்தார். யிரியோ, தன் சகோதரனிடம், கடவுளுடைய ராஜ்யமே நல்ல அரசாங்கத்துக்கும் உலகளாவிய நிரந்தரமான சமாதானத்துக்கும் ஒரே நம்பிக்கையென விளக்கி, அவருக்கு தான் முழுமையான சாட்சிகொடுத்ததாக எங்களிடம் கூறினார்.
காலம் செல்லச்செல்ல, பெத்தேல் குடும்பத்தின் ஓர் உறுப்பினனாவதற்கான என் ஆவலும் வளர்ந்தது. என் நம்பிக்கை ஏமாற்றமடையுமென அந்தப் பயணக் கண்காணி எச்சரித்திருந்தும், மகிழ்ச்சியுண்டாக, பெத்தேலில் சேவிப்பதற்கான என் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. அங்கே என் முதல் வேலை குற்றேவலனாக இருப்பதாகும். எனினும், சீக்கிரத்தில், அச்சாலையில் வேலைசெய்யும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. அங்கே எங்கள் சிறு அச்சகமும் புத்தகங்களை அனுப்பும் துறையும் உட்பட பல துறைகளில் நான் வேலை செய்தேன்.
நடுநிலை வகிப்பைக் காத்துக்கொள்ளுதல்
நான் 1942-ல், 18 வயதில், இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டேன். நான் அதற்கு இணங்க மறுத்ததால், என்னை நெடுநேர கேள்வி விசாரணைக்கு உட்படுத்தினர், இரண்டு சந்தர்ப்பங்களில் ஒரு துப்பாக்கியை எனக்கு நேராகக் குறிபார்த்து வைத்து அவ்வாறு செய்தனர். வேறு சமயங்களில் உடல்சார்ந்த வன்முறையைப் பயன்படுத்தினர். மேலும், கேள்வி கேட்கும் காலப்பகுதியின்போது, வெப்பம் உண்டாக்கப்படாத சிறையறையில் என்னை வைத்தனர், அங்கே குளிர் எலும்பையும் குளிரச்செய்யுமளவாக இருந்தது.
கடைசியாக, ஜனவரி 1943-ல், எனக்கும் மற்ற சாட்சிகளுக்கும் தீர்ப்புக்கூறும் சமயம் வந்தது. எங்களுக்குக் கேள்வி விசாரணை நடத்தின படைத்தலைவர் எங்கள் சிறை தண்டனை பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டுமென வற்புறுத்தினார். படைத்துறை மதகுரு இன்னும் கடுமையான தீர்ப்பளிக்கும்படி கேட்டார், ‘மரணத்தீர்ப்பு அல்லது இந்தத் துரோகிகளை வேவுப்பணிசெய்யும் வான்குடை மிதவையிலிருந்து இறங்குவோராக [பெரும்பாலும் நிச்சய மரணம்] ரஷியாவுக்கு அனுப்புதல், இந்தத் தண்டனையே அவர்களுக்குத் தகுதியானது,’ என ஒரு கடிதத்தில் வற்புறுத்தினார்.
ஏளன போலி விசாரணை ஏற்படுத்தப்பட்டது. நான் வழக்கு மன்றத்துக்கு முன் அழைக்கப்பட்டு மரணத்தீர்ப்பு அளிக்கப்பட்டேன். எனினும், இது பயமுறுத்துவதற்கு மற்றொரு முயற்சியாயிற்று, ஏனெனில் அந்நாளில் பின்னால் நான் மறுபடியும் வழக்கு மன்றத்துக்குமுன் அழைக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள் திருத்தியல் சிறை தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டேன். நான் அந்தத் தீர்ப்புக்கு மேல்-வழக்காடு வேண்டுகோள் செய்தேன், அது இரண்டு ஆண்டுகளுக்குக் குறைக்கப்பட்டது.
சிறைச்சாலையில், உணவு அரிதாயிருந்தது, மற்றக் கைதிகளிடமிருந்து கெடு நோக்கான பயமுறுத்தல்களும் இருந்தன. இருமுறை நான் ஓரின பாலினத்தவர்களால் தாக்கப்பட்டேன், ஆனால் நல்ல காலமாக நான் தப்பிக்கொள்ள முடிந்தது. அவர்களில் ஒருவன், நான் அவன் கேட்பவற்றிற்கு இணங்காவிடில் என்னைக் கொன்றுவிடுவானென பயமுறுத்தினான். ஆனால் என் எல்லா இக்கட்டுகளிலும் நான் செய்ததுபோல், யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், அவர் எனக்கு உதவி செய்தார். உண்மையில், அந்தக் கைதியின் பயமுறுத்தல் சிறிய காரியமல்ல, முன்னால் அவன் அவ்வாறு கொன்றிருந்தான். அவன் விடுதலை செய்யப்பட்டபின், அந்த மனிதன் மற்றொரு கொலை செய்து திரும்ப சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான்.
சந்தேகமில்லாமல் யெகோவாவின் சாட்சிகள் நம்பத்தகுந்தவர்கள் என்று அறியப்பட்டிருந்ததால், சீக்கிரத்தில் எனக்குக் கவனிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. என் வேலை மற்றக் கைதிகளுக்கு அன்றாட உணவுப்படியை அளிப்பதாகும், மேலும் சிறைச்சாலை எல்லைகளுக்குள் தடையின்றி சுற்றிவருவதற்கு அனுமதிக்கப்பட்டேன். ஆகையால், எனக்குப் போதிய உணவு இருந்தது மட்டுமல்லாமல், என் கிறிஸ்தவ சகோதரர்களும் நன்றாய்க் கவனிக்கப்படும்படி நான் பார்த்துக்கொள்ள முடிந்தது. சிறையிலிருக்கையில் ஒரு சகோதரன் எடையில் பல கிலோகிராம் அதிகரிக்கவுஞ் செய்தார், உணவுபோதாக் குறையைக் கருதுகையில் இது வெகு அரிதான காரியம்!
செப்டம்பர் 1944-ல், சகோதரன் ஹார்ட்டேவா விடுதலை செய்யப்பட்ட அதே நாளில், நான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன், என் விடுதலை பெத்தேல் சேவைக்குத் திரும்பச் செல்வதைக் குறித்தது. ‘பெத்தேலில் ஒரு நாளுக்கு 16 மணிநேரங்கள் கடினமாய் உழைப்பது சிறைச்சாலை வாழ்க்கையைப் பார்க்கிலும் மிக உயர்வாய் விரும்பத்தக்கதென’ நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். அதுமுதற்கொண்டு வேலையை நான் ஒருபோதும் தவிர்த்தொதிக்கினதில்லை!
பல்வேறு ஊழிய சிலாக்கியங்கள்
பின்னால் 1944-ல், நான் ஓர் அழகிய இளம் பயனியர் மார்கிட்டைச் சந்தித்தேன். நான் அவள்பேரில் காட்டின அக்கறைக்கு இணங்கினாள், பிப்ரவரி 9, 1946-ல் நாங்கள் மணம் செய்துகொண்டோம். மணம் செய்த தம்பதிகளாக எங்கள் முதல் ஆண்டின்போது, நான் பெத்தேலில் வேலை செய்தேன் மார்கிட் பயனியராக ஹேல்ஸிங்கியில் ஊழியஞ்செய்தாள். பின்பு ஜனவரி 1947-ல் நாங்கள் வட்டார ஊழியத்துக்கு நியமிக்கப்பட்டோம்.
இந்தப் பயண ஊழியத்தில், நாங்கள் அடிக்கடி குடும்பங்களோடு தங்கி அவர்களோடு ஒரே அறையில் பங்குகொண்டோம். அவர்கள் தாங்கள் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்ததை எங்களுக்கு அளித்தார்கள் என்று நாங்கள் அறிந்திருந்தோம், நாங்கள் ஒருபோதும் குறைகூறவில்லை. அந்நாட்களில் வட்டாரங்கள் சிறியவையாக இருந்தன, சில சபைகளுக்கு முழுக்காட்டப்பட்ட சாட்சிகளே இல்லை!
பெத்தேல் சேவைக்குத் திரும்பிவரும்படி 1948-ல் அழைக்கப்பட்டோம். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் உவாலஸ் எண்ட்ரஸ் ஐக்கிய மாகாணங்களிலிருந்து ஃபின்லாந்துக்கு வந்தார், அதன்பின் சீக்கிரத்திலேயே அவர் கிளைக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். அவர் எங்களைத் தொடர்ந்து ஆங்கிலம் படிக்கும்படி ஊக்கப்படுத்தினார், அதையே செய்தோம். இதனால், பிப்ரவரி 1952-ல், நியு யார்க்கிலுள்ள செளத் லான்ஸிங்கில் தொடங்கின, உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 19-வது மிஷனரி வகுப்புக்கு வரும்படி நாங்கள் அழைக்கப்பட்டோம்.
பட்டம் பெற்றப்பின் நாங்கள் திரும்பவும் ஃபின்லாந்துக்கு நியமிக்கப்பட்டோம். எனினும், நாங்கள் ஐக்கிய மாகாணங்களை விட்டுச் செல்வதற்குமுன், நியு யார்க், புரூக்லினுள்ள யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அலுவலகத்திலிருந்த அச்சகங்களில் வேலைசெய்வதற்கு நான் பயிற்றுவிக்கப்பட்டேன்.
ஃபின்லாந்துக்குத் திரும்பிவந்தபோது, நாங்கள் பயண ஊழியத்துக்கு நியமிக்கப்பட்டோம், ஆனால் பின்பு 1955-ல் நாங்கள் ஃபின்லாந்து கிளை அலுவலகத்துக்குத் திரும்பிவரும்படி அழைக்கப்பட்டோம். அந்த ஆண்டில் நான் அச்சாலை கண்காணியானேன், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், 1957-ல், நான் கிளை கண்காணியாக நியமிக்கப்பட்டேன். 1976 முதற்கொண்டு, நான் ஃபின்லாந்து கிளை ஆலோசனைக் குழுவின் ஒத்திசைவாளனாகச் சேவித்து வந்திருக்கிறேன்.
மகிழ்ச்சிக்கேதுவாக, என் தகப்பனும் தாயும் தங்கள் மரணம் வரையிலும் யெகோவாவுக்கு உண்மையுள்ளோராய் நிலைத்திருந்தனர். காலப்போக்கில், என் தகப்பனின் உறவினர், நூறுக்கு மேற்பட்டவர்கள் சாட்சிகளானார்கள். இந்நாள்வரையாக, என் சகோதரனும் சகோதரிகளும் அவர்களுடைய குடும்பங்களும் எல்லாரும் யெகோவாவை சேவிக்கின்றனர், என் சகோதரிகளில் ஒருவர் பயனியராக இருக்கிறாள்.
நிறைவான பயனுள்ள வாழ்க்கை
ஆண்டுகள் மேலுக்குமேல் வேலை நிறைந்ததாக இருந்திருக்கின்றன, ஆனால் அந்த வேலை, கடவுளுடைய வேலையாக இருந்ததால், நிச்சயமாகவே நிறைவானதும் பயனுள்ளதுமாக இருந்திருக்கிறது. (1 கொரிந்தியர் 3:6-9) நிச்சயமாக என் வாழ்கை எல்லாம் தொல்லைகளில்லாமலும் எளிதாகச் செல்வதாயும் இன்பமானதாயும் இல்லை. இக்கட்டுகளும் துன்பங்களுங்கூட இருந்திருக்கின்றன. ஒருவர் தன்னை அடக்கிக் கட்டுப்படுத்திக்கொள்ள கற்கவேண்டுமென நான் வாழ்க்கையில் வெகு இளமையிலேயே தெளிவாக உணர்ந்தேன். ஒருவர் தன் விருப்பப்படியே எப்பொழுதும் செய்ய முடியாது. நான் அடிக்கடி கண்டித்துத் திருத்தப்பட்டேன், படிப்படியாய் சரியான வாழ்க்கை முறையை நான் கற்றேன்.
உதாரணமாக, போர்க்காலத்தின்போது அனுபவித்தத் துன்பங்களும் குறைபாடுகளும் சுகபோகங்கள் இல்லாமல் வாழ எனக்குக் கற்பித்தன. ஒரு பொருள் உண்மையில் தேவையா இல்லையா என்பதை உற்றறிய நான் கற்றேன். நான் இன்னும் எனக்கு இது அல்லது அது தேவையாவென என்னைக் கேட்டுக்கொள்ளும் பழக்கமுடையவனாக இருக்கிறேன். அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்லவென நான் உணர்ந்தால், அதை நான் வாங்குகிறதில்லை.
யெகோவா தம்முடைய அமைப்பின்மூலம் அளித்த வழிநடத்துதல் தெளிவாய் இருந்திருக்கிறது. ஃபின்லாந்து கிளை அலுவலகத்தில் நான் இருந்த ஆண்டுகளின்போது யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கை 1,135-லிருந்து 18,000-த்துக்கு மேல் வளர்ந்ததைக் காணும் மகிழ்ச்சி எனக்கு இருந்திருக்கிறது! நிச்சயமாகவே, என் ஊழியம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதை நான் காண முடிகிறது, ஆனால் அந்த வேலை நம்முடையதல்ல, யெகோவாவினுடையதானதால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறதென்று நான் அறிந்திருக்கிறேன். (1 கொரிந்தியர் 3:6, 7) வாழ்க்கையில் இளமையிலேயே நான் யெகோவாவின் முறையைத் தெரிந்துகொண்டேன், அதுவே நிச்சயமாக மிகச் சிறந்த வாழ்க்கை முறையாக நிரூபித்தது.
[பக்கம் 23-ன் படம்]
இன்று எர்க்கி கான்கான்பா, தன் மனைவி மார்கிட்டுடன்