வாழ்க்கை சரிதை
யெகோவாவுக்கு சேவை செய்ய உறுதிபூண்டோம்
ரைமோ க்வோகானன் சொன்னபடி
வருடம் 1939. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. என் சொந்த நாடான பின்லாந்தை சோவியத் யூனியன் தாக்கியது. தாய்நாட்டின் சார்பில் போரிட என் அப்பா வீட்டைவிட்டுப்போய் பின்லாந்து ராணுவப் படையில் சேர்ந்துகொண்டார். சீக்கிரமே ரஷ்ய போர் விமானங்கள் எங்கள் நகரத்தின் மீது குண்டு மழை பொழிந்தன. என் பாட்டி வசித்துவந்த இடத்திலோ ஓரளவு அமைதி நிலவியது. அதனால் அம்மா என்னை அங்கு அனுப்பி வைத்தார்.
கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் நான் ஒரு மிஷனரியாக சேவை செய்தேன். அது 1971-வது வருடம். ஒருநாள் நான் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்து கொண்டிருந்தபோது மக்கள் பதறியடித்து ஓடுவதைப் பார்த்தேன், அவர்கள் என்னைக் கடந்து முன்னே ஓடினார்கள். டுமீல் டுமீல் என்று துப்பாக்கி வெடி சத்தத்தைக் கேட்டபோது வீட்டிற்கு ஓட்டம்பிடித்தேன். குண்டுகள் என் பக்கத்தில் விழுந்தபோது தெருவோரமாக இருந்த ஒரு கால்வாய்க்குள் குதித்தேன். குண்டுகள் என் தலைக்கு மேல் விர்-ரென பறந்துகொண்டிருக்க, தவழ்ந்தபடியே வீடு போய்ச் சேர்ந்தேன்.
இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளிலிருந்து என்னால் தப்ப முடியவில்லை. ஆனால், கிழக்கு ஆப்பிரிக்காவில் கலவரமும் கொந்தளிப்புமாக இருந்த சமயத்தில் நானும் என் மனைவியும் ஏன் அங்கேயே இருந்துவிட்டோம்? யெகோவாவுக்கு சேவை செய்ய நாங்கள் உறுதிபூண்டிருந்ததே முக்கிய காரணம்.
தீர்மான விதை மனதில் விழுந்தது
நான் பின்லாந்திலுள்ள ஹெல்சிங்கியில் 1934-ம் ஆண்டு பிறந்தேன். என் அப்பா ஒரு பெயின்டர். ஒருநாள் பெயின்ட் அடிப்பதற்காக அவர் யெகோவாவின் சாட்சிகளுடைய பின்லாந்து கிளை அலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. அங்கிருந்த சாட்சிகள் சபை கூட்டங்களைப் பற்றி அவரிடம் சொன்னார்கள். அவர் வீட்டுக்கு வந்த பிறகு அம்மாவிடம் அதைப் பற்றிச் சொன்னார். அம்மா உடனே கூட்டங்களுக்குப் போகாவிட்டாலும் அவருடன் வேலை பார்த்த ஒரு யெகோவாவின் சாட்சியோடு பின்னர் பைபிள் விஷயங்களைப் பற்றி கலந்துபேச ஆரம்பித்தார். சீக்கிரத்தில், அம்மா தான் கற்றதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். 1940-ல் யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றார்.
அதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்புதான், பாட்டி என்னைத் தன்னுடைய கிராமத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். இரண்டாம் உலகப் போர் முடியும் வரை என்னை அவருடனேயே வைத்துக்கொண்டார். ஹெல்சிங்கியில் இருந்த என் அம்மா, யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைக் குறித்து பாட்டிக்கும் சித்திக்கும் கடிதம் எழுதினார். அவர்கள் இருவருமே அதில் ஆர்வம் காட்டினார்கள். அவற்றை எனக்கும் கற்றுக்கொடுத்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணிகள் பாட்டி வீட்டிற்கு வந்து எங்களை ஊக்கமூட்டினார்கள். ஆனால், அப்போது கடவுளுக்குச் சேவை செய்ய நான் தீர்மானிக்கவில்லை.
தேவராஜ்ய பயிற்சி தொடங்கினது
1945-ல் போர் முடிந்த பிறகு நான் ஹெல்சிங்கிக்குத் திரும்பினேன்; அப்போது அம்மா என்னை யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். சில சமயங்களில் கூட்டங்களுக்குப் போகாமல் சினிமாவுக்குப் போய்விடுவேன். அந்தச் சமயங்களில், கூட்டத்தில் தான் கேட்ட விஷயங்களை அம்மா எனக்குச் சொல்லுவார். சீக்கிரத்திலேயே அர்மகெதோன் வரப்போகிறது என்று அடிக்கடி சொல்லுவார். அவர் சொல்வது சரிதான் என்பதை உணர்ந்தபிறகு தவறாமல் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். பைபிள் சத்தியங்கள் பற்றி அதிகமதிகமாகத் தெரிந்துகொண்டபோது, சபையின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன்.
முக்கியமாக, அசெம்பிளிகளுக்கும் மாநாடுகளுக்கும் செல்வது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 1948-ல் கோடை விடுமுறையின்போது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அருகே நடந்த ஒரு மாவட்ட மாநாட்டிற்குச் சென்றேன். என் நண்பன் ஒருவன் அந்த மாநாட்டில் முழுக்காட்டுதல் எடுக்கவிருந்தான். என்னையும் முழுக்காட்டுதல் பெறும்படி சொன்னான். அதற்கான உடையை எடுத்து வரவில்லையென சொன்னபோது, முழுக்காட்டுதலுக்குப் பிறகு தான் உபயோகித்த உடையையே என்னையும் உபயோகித்துக்கொள்ளும்படி சொன்னான். அதற்கு நானும் சம்மதித்தேன், முழுக்காட்டுதல் பெற்றேன். அது ஜூன் 27, 1948. எனக்கு அப்போது 13 வயது.
மாநாட்டுக்குப் பிறகு என் அம்மாவுடைய ஃபிரெண்டுகளில் சிலர் நான் முழுக்காட்டுதல் பெற்ற விஷயத்தை அவரிடம் போய் சொன்னார்கள். நான் வீடு திரும்பியதும், யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென நான் ஏன் முழுக்காட்டுதல் பெற்றேன் என்பதைத் தெரிந்துகொள்ள அம்மா விரும்பினார். அடிப்படை பைபிள் போதனைகளைப் புரிந்துகொண்டிருப்பதை அவரிடம் விளக்கினேன், அதோடு, நான் செய்கிற காரியங்களுக்காக யெகோவாவிற்குக் கணக்கு கொடுக்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும் என்றும் அவரிடம் கூறினேன்.
என் தீர்மானம் வேர்பிடித்தது
யெகோவாவுக்குச் சேவை செய்யும் என் தீர்மானத்தில் உறுதியாக நிலைத்திருக்க சபையிலிருந்த சகோதரர்கள் எனக்கு உதவினார்கள். என்னோடு சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தார்கள். கிட்டத்தட்ட எல்லா வாரத்திலும் சபை கூட்டத்தில் எனக்கு பேச்சு நியமிப்புகள் கொடுத்தார்கள். (அப்போஸ்தலர் 20:20) 16 வயதில் முதன்முதலாக பொதுப் பேச்சைக் கொடுத்தேன். சீக்கிரத்தில், எங்கள் சபையில் பைபிள் படிப்பு ஊழியராக நியமிக்கப்பட்டேன். இந்த ஆன்மீக காரியங்கள் எல்லாமே நான் முதிர்ச்சி அடைவதற்கு உதவின. ஆனால், ஜனங்களுக்குப் பயப்பட்டேன், அந்தப் பயத்தை மேற்கொள்ள முடியவில்லை.
அந்தக் காலத்தில் மாவட்ட மாநாட்டின் பொதுப் பேச்சை பெரிய அட்டைகளில் எழுதி விளம்பரம் செய்தோம். அந்த அட்டைகளில் இரண்டைக் கயிற்றால் இணைத்து முன்னும் பின்னுமாக தோளில் தொங்கவிடுவோம். இதைப் பார்த்து சிலர் எங்களை சான்ட்விச் மனிதர்கள் என்று அழைத்தார்கள்.
ஒருநாள் விளம்பர அட்டைகளை மாட்டிக்கொண்டு ஒரு தெரு முனையில் நான் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். அப்போது, என் கூடப் படிக்கும் மாணவர்கள் வருவதைப் பார்த்தேன். அவர்கள் என் பக்கத்தில் வந்தபோது என்னை ஒரு மாதிரியாக பார்த்ததால் பயந்துபோனேன். எனக்கு தைரியத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு, அங்கேயே அசையாமல் நின்றேன். அன்று நான் மனிதர்களுக்குப் பயப்படாமல் இருந்தது, பிற்காலத்தில் கிறிஸ்தவ நடுநிலை சம்பந்தமாக பெரிய பெரிய சவால்களை சந்திக்க உதவியது.
சிறிது காலம் கழித்து, என்னையும் இன்னும் அநேக இளம் சாட்சிகளையும் ராணுவத்தில் சேரும்படி அரசாங்கம் உத்தரவிட்டது. அதனால், நானும் என் நண்பர்களும் ராணுவ தளத்திற்குச் சென்றோம். ஆனால் ராணுவ சீருடையை அணிவதற்குப் பணிவுடன் மறுத்துவிட்டோம். அதனால் அதிகாரிகள் எங்களை அங்கேயே அடைத்துவைத்தார்கள். பிறகு நீதிமன்றம் எங்களுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. அதோடு, ராணுவ சேவைக்குரிய எட்டு மாத காலமும் சிறையில் அடைக்கப்பட்டோம். நடுநிலை வகித்ததற்காக மொத்தம் 14 மாதங்களைச் சிறையில் கழித்தோம்.
சிறையில் நாங்கள் அனைவரும் பைபிள் படிப்பதற்காக தினமும் ஒன்றாக கூடினோம். அந்த சிறைவாசத்தின்போது எங்களில் பலர் முழு பைபிளையும் இரண்டு முறை படித்துமுடித்துவிட்டோம். சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு எங்களில் அநேகருக்கு யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் முன்பைவிட இன்னும் உறுதியானது. அவர்களில் பலர் இன்றுவரை யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்து வருகிறார்கள்.
சிறையிலிருந்து வெளியே வந்தபோது, என் பெற்றோருடன் இருந்தேன். கொஞ்ச காலத்திற்குள் விரா என்ற ஒரு பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவள் சமீபத்தில்தான் முழுக்காட்டுதல் பெற்றிருந்தாள். என்றாலும், சத்தியத்தில் வைராக்கியமாக இருந்தாள். நாங்கள் இருவரும் 1957-ல் திருமணம் செய்துகொண்டோம்.
மாற்றம் தந்த மாலை
ஒருநாள் மாலை, கிளை அலுவலகத்திலிருந்து வந்திருந்த பொறுப்பான சகோதரர்கள் சிலரை சந்தித்தோம். அப்போது அவர்களில் ஒருவர், வட்டார ஊழியத்தில் ஈடுபட முடியுமா என்று எங்களைக் கேட்டார். அன்று இரவெல்லாம் ஜெபம் செய்தேன், அடுத்த நாள் கிளை அலுவலகத்திற்கு ‘போன்’ செய்து என்னால் முடியும் என்றேன். முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதற்கு கைநிறைய சம்பாதித்து வந்த வேலையைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கடவுளுடைய ராஜ்யத்திற்கே எங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க உறுதிபூண்டிருந்தோம். 1957 டிசம்பரில் நாங்கள் பயண வேலையை ஆரம்பித்தபோது எனக்கு 23 வயது, விராவிற்கு 19 வயது. மூன்று வருடங்களுக்கு பின்லாந்திலுள்ள சகோதர சகோதரிகளைச் சந்தித்து உற்சாகப்படுத்தும் வேலையில் சந்தோஷமாக ஈடுபட்டோம்.
1960-ன் பிற்பகுதியில் நியு யார்க்கிலுள்ள புரூக்ளினில் நடைபெற்ற உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள வரும்படி எனக்கு அழைப்பு கிடைத்தது. பின்லாந்திலிருந்து நானும் இன்னும் இரண்டு பேரும், கிளை அலுவலகக் காரியங்களில் பயிற்சிபெற பத்து மாத விசேஷ பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. எங்களுடைய மனைவிகள் பின்லாந்து கிளை அலுவலகத்திலேயே இருந்து சேவை செய்தார்கள்.
கிலியட் பள்ளி முடிவதற்கு கொஞ்ச நாட்கள் இருந்தபோது நேதன் ஹெச். நார் அலுவலகத்திற்குப் போய் அவரைப் பார்க்கும்படி சொன்னார்கள். அப்போது அவர் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலையை மேற்பார்வை செய்துவந்தார். நானும் என் மனைவியும் மலகாஸி குடியரசில் அதாவது இன்றைய மடகாஸ்கரில், மிஷனரிகளாக சேவை செய்ய முடியுமா என்று கேட்டார். இந்த ஊழிய நியமிப்பைக் குறித்து விராவின் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள அவளுக்கு கடிதம் எழுதினேன், அவள் உடனே மனப்பூர்வமாய் சம்மதம் தெரிவித்தாள். நான் பின்லாந்து திரும்பியதும், உடனே மடகாஸ்கருக்கு கிளம்பத் தயாரானோம்.
சந்தோஷமும் சோகமும்
1962 ஜனவரியில் நாங்கள் மடகாஸ்கரின் தலைநகரான அன்டனனரிவோ நகருக்கு விமானத்தில் சென்றோம். பின்லாந்திலிருந்து கிளம்பினபோது குளிர்காலமாக இருந்ததால் ரோமத்தால் ஆன மென்மையான தொப்பியையும் கனமான கோட்டையும் அணிந்து சென்றோம். ஆனால் மடகாஸ்கரில் வெயில் கொளுத்தியதால் உடனே அவற்றை கழட்டிவிட்டோம். எங்களுடைய முதல் மிஷனரி இல்லம் ஒரேவொரு பெட்ரூம் கொண்ட ஒரு சிறிய வீடு. அங்கு ஏற்கெனவே ஒரு மிஷனரி தம்பதியர் இருந்தார்கள், அதனால் நானும் விராவும் வீட்டு வராண்டாவில் தூங்கினோம்.
பிரெஞ்சு மொழி, மடகாஸ்கரின் ஆட்சி மொழியாக இருந்ததால் அதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினோம். ஆனால், கற்றுக்கொள்ள ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஏனென்றால், எங்களுக்கு பிரெஞ்சு சொல்லிக்கொடுத்த கார்பானோ என்ற சகோதரி பேசிய மொழி எங்கள் இருவருக்குமே புரியவில்லை. அதனால், எங்களுக்கு பிரெஞ்சு சொல்லித்தர அவர் ஆங்கிலத்தைப் பயன்படுத்தினார், ஆனால் விராவிற்கோ ஆங்கிலம் தெரியாது. அதனால் சகோதரி கார்பானோ சொன்ன விஷயங்களை நான் விராவிற்கு ஃபின்னிஷ் மொழியில் சொன்னேன். தொழில் நுட்ப கலைச்சொற்களை விரா ஸ்வீடிஷ் மொழியில் நன்றாகப் புரிந்துகொண்டாள். அதனால் பிரெஞ்சு மொழியின் இலக்கணத்தை விராவிற்கு ஸ்வீடிஷ் மொழியில் விளக்கினேன். சீக்கிரத்தில், நாங்கள் பிரெஞ்சு மொழி பேசுவதில் முன்னேறினதால் அடுத்ததாக மலகாஸி என்ற உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினோம்.
மடகாஸ்கரில் நான் முதன்முதலில் பைபிள் படிப்பு நடத்தின நபருக்கு மலகாஸி மொழி மட்டுமே தெரிந்திருந்தது. நான் வசனங்களை ஃபின்னிஷ் பைபிளில் எடுத்துப்பார்த்தேன். பிறகு நானும் அவருமாகச் சேர்ந்து மலகாஸி பைபிளில் அந்த வசனங்களைத் தேடி கண்டுபிடித்தோம். வசனங்களை நன்றாக விளக்கிச் சொல்ல என்னால் முடியவில்லை, என்றாலும் கூடிய சீக்கிரமே பைபிள் சத்தியங்கள் அவர் மனதில் ஆழமாக பதிந்தது, அவர் நன்றாக முன்னேறி, முழுக்காட்டுதல் பெற்றார்.
1963-ல் புரூக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திலிருந்து சகோதரர் மில்டன் ஹென்ஷல் மடகாஸ்கருக்கு வந்திருந்தார். சீக்கிரத்திலேயே, மடகாஸ்கரில் ஒரு புதிய கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது வட்டாரக் கண்காணியாகவும் மாவட்டக் கண்காணியாகவும் சேவை செய்து வந்த நான் கிளை அலுவலகக் கண்காணியாகவும் நியமிக்கப்பட்டேன். அந்த எல்லா வருடங்களின்போதும் யெகோவா எங்களை நிறைய விதங்களில் ஆசீர்வதித்திருக்கிறார். 1962-1970-க்குள் மடகாஸ்கரில் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 85-லிருந்து 469-ஆக உயர்ந்தது.
ஒருநாள் ஊழியம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது கதவருகே ஒரு காகிதத்துண்டைப் பார்த்தோம். யெகோவாவின் சாட்சிகளில் மிஷனரிகளாக சேவை செய்யும் அனைவரும் உள்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அங்கு சென்றபோது ஓர் அதிகாரி நீங்கள் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று அரசாங்கம் ஆணையிட்டிருக்கிறது என்றார். நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு நான் என்ன தப்பு செய்துவிட்டேன் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி, “க்வோகானன் சார், நீங்கள் ஒரு தப்பும் செய்யவில்லை” என்று சொன்னார்.
“நாங்கள் இங்கே எட்டு வருடங்களாக இருக்கிறோம், இது எங்கள் வீடு மாதிரி, எந்தக் காரணமுமில்லாமல் இப்படி திடுதிப்பென்று போகச் சொன்னால் எங்களால் எப்படி போக முடியும்?” என்றேன். நாங்கள் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் ஒன்றும் பலன் அளிக்கவில்லை, எல்லா மிஷனரிகளும் ஒரேவொரு வாரத்திற்குள் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. கிளை அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. அங்கிருந்த ஒரு சகோதரர் ஊழியத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பேற்றுக்கொண்டார். மடகாஸ்கரில் எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய சகோதரர்களை விட்டுச்செல்வதற்கு முன்பு வேறொரு புதிய இடத்தில் ஊழியம் செய்ய நியமிப்பு கிடைத்தது, உகாண்டாவுக்குச் செல்லும் நியமிப்பு அது.
புதிய நியமிப்பு
மடகாஸ்கரிலிருந்து கிளம்பிய சில நாட்களுக்குப் பிறகு உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவிற்கு வந்துசேர்ந்தோம். உடனே லுகாண்டா மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். அந்த மொழியில் பேசுவது பாட்டுப் பாடுவது போல் இருக்கும்; கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் அதைக் கற்றுக்கொள்வது கடினம்தான். அங்கிருந்த மற்ற சாட்சிகள் விராவிற்கு முதலில் ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். பிறகு, ஆங்கிலத்திலேயே எங்களால் நன்றாக ஊழியம் செய்ய முடிந்தது.
உஷ்ணத்தால் கம்பாலாவில் ஒரே புழுக்கமாக இருந்ததால் அங்கு விராவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை, அது அவள் உடல்நலத்தைப் பெரிதும் பாதித்தது. அதனால் உகாண்டாவிலுள்ள அம்பாராரா என்ற இன்னொரு நகரில் ஊழியம் செய்ய அனுப்பப்பட்டோம். அங்கு மிதமான சீதோஷணம் நிலவியது. நாங்கள்தான் அந்த நகரில் முதன்முதல் ஊழியம் செய்தவர்கள். ஊழியத்தின் முதல் நாளன்று எங்களுக்கு ஓர் அருமையான அனுபவம் கிடைத்தது. ஒரு வீட்டில் ஓர் ஆளிடம் பேசிக்கொண்டிருந்தபோது சமையல் அறையிலிருந்து அவருடைய மனைவி வெளியே வந்தார். அவருடைய பெயர் மார்கரட், அவர் நான் பேசினதைக் கேட்டார். விரா அவருக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தாள், அவர் நல்ல முன்னேற்றம் செய்து முழுக்காட்டுதல் பெற்று வைராக்கியமுள்ள ராஜ்ய பிரஸ்தாபியாக ஆனார்.
தெருக் கலவரம்
1971-ல் உகாண்டாவில் வெடித்த உள்ளூர் கலவரம், எங்கள் சமாதானத்தைக் குலைத்துப்போட்டது. ஒருநாள், அம்பாராராவில் நாங்கள் தங்கியிருந்த மிஷனரி இல்லம் அருகே ஒரு கலவரம் மூண்டது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட சம்பவம் இந்தச் சமயத்தில்தான் நடந்தது.
ராணுவ வீரர்களின் கண்களில் படாதிருக்க கால்வாய் வழியாக தவழ்ந்தபடியே வீடுவந்து சேர்ந்தேன். அதற்குள் விரா வீட்டிற்கு வந்துசேர்ந்திருந்தாள். வீட்டின் ஒரு மூலையில் எங்கள் மெத்தைகளையும் நாற்காலிகளையும் வைத்து ஓர் “அரண்” அமைத்தோம். ஒரு வாரத்திற்கு நாங்கள் வெளியே தலைகாட்டவே இல்லை. வீட்டுக்குள்ளே இருந்துகொண்டு ரேடியோ செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தோம். சில சமயம் குண்டுகள் சுவர்களில் பட்டுத்தெறித்தபோது நாங்கள் குனிந்து சென்று எங்கள் அரணுக்குள் பதுங்கிக்கொள்வோம். நாங்கள் வீட்டிலிருப்பது யாருக்கும் தெரியாமலிருக்க இரவு நேரங்களில் லைட் போடாமல் இருந்தோம். ஒருமுறை ராணுவ வீரர்கள் எங்கள் கதவருகே வந்து கூச்சல் போட்டார்கள். நாங்கள் இருந்த இடத்தைவிட்டு அசையாமல் யெகோவாவிடம் மெளனமாக ஜெபம் செய்தோம். கலவரம் ஓய்ந்த பிறகு, தங்கள் உயிர்களைக் காப்பாற்றியதற்காக அக்கம்பக்கத்தினர் வந்து எங்களுக்கு நன்றி சொன்னார்கள். யெகோவாதான் எங்களையும் அவர்களையும் காப்பாற்றியிருக்கிறார் என்று நம்பினார்கள், நாங்களும் அப்படித்தான் நம்பினோம்.
போரெல்லாம் முடிந்து அமைதி திரும்பிவிட்டதுபோல் இருந்தது. ஆனால், திடீரென ஒருநாள் காலை, யெகோவாவின் சாட்சிகளை உகாண்டா அரசாங்கம் தடைசெய்திருக்கும் செய்தியை ரேடியோவில் கேட்டோம். யெகோவாவின் சாட்சியாக மாறின எல்லாரும் அவர்களுடைய பழைய மதங்களுக்கு திரும்பிவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அரசாங்க அதிகாரிகளிடம் இதைப் பற்றி எடுத்துச்சொல்ல முயற்சி செய்தேன், ஆனால், பலன் ஏதும் கிடைக்கவில்லை. இடி அமீன் என்ற முதல்வரின் அலுவலகத்திற்குச் சென்று அவரைப் பார்ப்பதற்கு அனுமதி கேட்டேன். அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட், முதல்வர் ரொம்ப பிஸியாக இருப்பதாக சொல்லிவிட்டார். பிறகு பல முறை சென்றும் அவரைப் பார்க்க முடியவில்லை. இறுதியில், 1973-ல் ஜூலை மாதம் உகாண்டாவிலிருந்து புறப்பட வேண்டியதாயிற்று.
ஒரு வருடம், பத்து வருடமானது
மடகாஸ்கரை விட்டுப் புறப்பட்டபோது எங்கள் மனதில் குடிகொண்ட அதே சோகம் உகாண்டாவில் இருந்த எங்கள் அருமையான சகோதர சகோதரிகளை விட்டுப் பிரிந்தபோதும் ஏற்பட்டது. நாங்கள் புதிதாக ஊழியம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட செனிகல் நாட்டிற்குப் போவதற்கு முன்பு பின்லாந்திற்குச் சென்றோம். அங்கு போனபோதோ, செனிகலுக்குப் போகவிருந்த திட்டம் மாறியது, பின்லாந்திலேயே இருக்க நேர்ந்தது. எங்கள் மிஷனரி ஊழியம் முடங்கிவிட்டதுபோல் தோன்றியது. பின்லாந்தில் நாங்கள் விசேஷ பயனியர்களாக சேவை செய்தோம், பிறகு மறுபடியுமாக வட்டார ஊழியத்தில் இறங்கினோம்.
1990-க்குள் மடகாஸ்கரில் யெகோவாவின் சாட்சிகள் மீதான தடை தளர்த்தப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு மட்டும் மடகாஸ்கரில் ஊழியம் செய்ய முடியுமா என்று எங்களிடம் புரூக்லின் தலைமை அலுவலகம் கேட்டபோது எங்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அங்கு போவதற்கு ஆசைதான் என்றாலும் எங்களுக்கு இரண்டு பெரிய சவால்கள் இருந்தன. ஒன்று, என் வயதான அப்பாவை கவனிப்பது; இன்னொன்று, தேறாமலிருந்த விராவின் உடல்நிலை. 1990, நவம்பரில் என் அப்பா இறந்தபோது நான் ரொம்பவே சோர்ந்துவிட்டேன். ஆனால், விராவின் உடல்நிலையோ தேற ஆரம்பித்தது. அதனால், மிஷனரி ஊழியத்தை மறுபடியும் தொடர்ந்து செய்யும் நம்பிக்கை பிறந்தது. ஆகவே, 1991, செப்டம்பரில் நாங்கள் மடகாஸ்கருக்கே திரும்பிச் சென்றோம்.
மடகாஸ்கரில் ஒரேவொரு வருடம் ஊழியம் செய்ய அனுப்பப்பட்டோம், ஆனால் அங்கு பத்து வருடங்கள் ஊழியம் செய்தோம். அந்தச் சமயத்தில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 4,000-லிருந்து 11,600-க்கு உயர்ந்தது. நான் மிஷனரி சேவையில் அளவிலா மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனாலும், சில சமயங்களில் நான் சோர்வாக உணர்ந்திருக்கிறேன். என் அருமை மனைவியின் உடல் ரீதியான, உணர்ச்சி ரீதியான தேவைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறேனோ என்று யோசித்து சில சமயங்களில் சோர்வடைந்திருக்கிறேன். ஊழியத்தைத் தொடர யெகோவா எங்கள் இருவரையும் பலப்படுத்தியிருக்கிறார். நாங்கள் 2001-ல் பின்லாந்திற்குத் திரும்பினோம், அதுமுதல் கிளை அலுவலகத்தில் வேலை செய்துவருகிறோம். ராஜ்ய வேலைக்கான எங்களுடைய வைராக்கியம் இன்றும் கொழுந்து விட்டு எரிகிறது. ஆப்பிரிக்காவைப் பற்றிய இனிய நினைவுகள் எங்கள் நெஞ்சத்தில் வாடா மலராக இருக்கின்றன. யெகோவா எங்களை எங்கு அனுப்பினாலும், அவருடைய சித்தத்தைச் செய்யவே நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம்.—ஏசாயா 6:8.
[பக்கம் 12-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பின்லாந்து
ஐரோப்பா
[பக்கம் 14-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆப்பிரிக்கா
மடகாஸ்கர்
[பக்கம் 15-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆப்பிரிக்கா
உகாண்டா
[பக்கம் 14-ன் படம்]
எங்கள் திருமண நாளில்
[பக்கம் 14, 15-ன் படங்கள்]
1960-ல் பின்லாந்தில் வட்டார ஊழியம் முதற்கொண்டு . . .
. . . 1962-ல் மடகாஸ்கரில் மிஷனரி ஊழியம் வரை
[பக்கம் 16-ன் படம்]
இன்று விராவுடன்