உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 12/15 பக். 29-31
  • மடகாஸ்கரில் பைபிள் பிறந்த கதை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மடகாஸ்கரில் பைபிள் பிறந்த கதை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் மொழிபெயர்ப்பு தொடங்குகிறது
  • தடங்கல்கள். . .
  • ஆச்சரியமும் ஏமாற்றமும்
  • பைபிள்மீது அலாதி பிரியம்
  • யெகோவாவுக்கு சேவை செய்ய உறுதிபூண்டோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பைபிள் பிரியரை மகிழ்வித்த சாதனை!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • புதிய உலக மொழிபெயர்ப்பு உலகெங்கிலும் கோடிக்கணக்கானோரால் பாராட்டப்படுகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • ஆப்பிரிக்க மொழி பைபிள்களை உருவாக்குவதில் எட்டிய மைல்கற்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 12/15 பக். 29-31

மடகாஸ்கரில் பைபிள் பிறந்த கதை

மடகாஸ்கர். உலகின் நான்காவது மிகப் பெரிய செந்தீவு. ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடவுளுடைய பெயர் யெகோவா என்பது அங்கு வாழும் மலகாஸி மக்களுக்கு நன்கு பரிச்சயம். ஏனென்றால், 170 வருடங்களுக்கும் மேலாகப் புழக்கத்திலுள்ள மலகாஸி மொழி பைபிள்களில் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்களின் விடாமுயற்சியாலும் முழு ஈடுபாட்டாலுமே மக்களுடைய கைகளில் மலகாஸி பைபிள் இப்போது தவழ்கிறது. மலகாஸி பைபிள் பிறந்த கதையைக் கொஞ்சம் கேளுங்கள்!

இத்தீவுக்கு அருகிலுள்ள மொரிஷியஸ் தீவில்தான் முதன்முதலாக பைபிளை மலகாஸியில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. மொரிஷியஸில் நியமிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஆளுநர் சர் ராபர்ட் ஃபர்க்குஹார், சுவிசேஷப் பதிவுகளை மலகாஸியில் மொழிபெயர்ப்பதற்கான ஆரம்பப் படிகளை 1813-லேயே எடுத்தார். பின்னர், லண்டன் மிஷனரி சொஸைட்டியை (LMS) சேர்ந்த ஆசிரியர்களைப் பெரிய செந்தீவு என அழைக்கப்படுகிற மடகாஸ்கருக்கு வரவழைக்கும்படி முதலாம் ராடமா மன்னரிடம் (மடகாஸ்கரை ஆண்டுவந்தவர்) சிபாரிசு செய்தார்.

மொரிஷியஸிலிருந்து வேல்ஸ் நாட்டு மிஷனரிகளான டேவிட் ஜோன்ஸும் தாமஸ் பெவ்வனும் டோமாசினா என்ற துறைமுக நகரில் ஆகஸ்ட் 18, 1818 அன்று கால்பதித்தார்கள். அங்கே மக்கள் மிகுந்த மதப்பற்றுள்ளவர்களாய் இருந்ததைக் கண்டார்கள்; மூதாதை வழிபாடும், வாய்வழிப் பாரம்பரியங்களும் அந்த மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருந்தன. மலகாஸி மக்கள் பேசும் மொழி பல்சுவைமிக்க மொழி; அது, முக்கியமாக மலேயோ-பாலினேசிய மொழிகளிலிருந்து பிறந்தது.

ஜோன்ஸும் பெவ்வனும் டோமாசினாவில் ஒரு சிறிய பள்ளியைத் திறந்தார்கள்; பின்பு, தங்களுடைய மனைவி மக்களை மொரிஷியஸிலிருந்து அங்கே அழைத்துவந்தார்கள். என்றாலும், வருத்தகரமாக, அவர்கள் அனைவருக்கும் மலேரியா காய்ச்சல் தொற்றிக்கொண்டது; ஜோன்ஸ் தனது மனைவியையும் மகளையும் டிசம்பர் 1818-ல் பறிகொடுத்தார். இரண்டு மாதங்கள் கழித்து, பெவ்வன் குடும்பத்தினர் அனைவருமே இந்தக் காய்ச்சலுக்குப் பலியானார்கள். டேவிட் ஜோன்ஸ் மட்டுமே உயிர்தப்பினார்.

ஆனாலும் அவர் மனந்தளரவில்லை. மடகாஸ்கர் மக்களுக்கு எப்படியாவது கடவுளுடைய வார்த்தை கிடைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தார். உடல்நிலை தேறுவதற்காக மொரிஷியஸுக்குத் திரும்பிச் சென்றார்; அந்தச் சமயத்தில், மலகாஸி மொழியைக் கற்றுக்கொள்ளக் கடினமாய் முயற்சி செய்தார். அதன்பிறகு சீக்கிரத்திலேயே, யோவான் சுவிசேஷத்தை மொழிபெயர்க்கும் ஆரம்பக் கட்ட வேலையைத் தொடங்கினார்.

அக்டோபர் 1820-ல், மடகாஸ்கருக்கு அவர் திரும்பினார். தலைநகரான அன்டனனரிவோவுக்கு வந்துசேர்ந்தார். மிஷனரிகளால் நடத்தப்படும் ஒரு புதிய பள்ளியை விரைவிலேயே நிறுவினார். அந்தப் பள்ளியில் அப்போது எந்த வசதியும் இருக்கவில்லை. பாடப் புத்தகங்களோ, கரும்பலகைகளோ, மேஜைகளோ இருக்கவில்லை. ஆனால், பாடத்திட்டம் தரமானதாக இருந்தது; பிள்ளைகளும் படு ஆர்வமாகப் படிக்க வந்தார்கள்.

ஜோன்ஸ் தனிமரமாய்ச் சுமார் ஏழு மாதங்கள் உழைத்தார்; பிறகு, அவரோடு சேர்ந்து வேலைசெய்ய டேவிட் கிரிஃபத்ஸ் என்ற மிஷனரி அனுப்பப்பட்டார். பைபிளை மலகாஸி மொழியில் மொழிபெயர்ப்பதற்காக இவ்விருவரும் முழு ஈடுபாட்டோடு அயராமல் உழைத்தார்கள்.

பைபிள் மொழிபெயர்ப்பு தொடங்குகிறது

1820-களின் தொடக்கத்தில், அரபிக் எழுத்துக்களைப் பயன்படுத்தி மட்டுமே மலகாஸி வார்த்தைகளை எழுதிவந்தார்கள்; இந்த எழுத்துக்கள் சூராபி என்று அழைக்கப்பட்டன. இவற்றை வெகு சிலரால் மட்டுமே வாசிக்க முடிந்தது. ஆகவே, அந்த மிஷனரிகள் முதலாம் ராடமா மன்னரைக் கலந்தாலோசித்துவிட்டு, அவருடைய சம்மதத்தோடு சூராபி எழுத்துக்களை ரோம எழுத்துக்களால் மாற்றீடு செய்தார்கள்.

மொழிபெயர்ப்பு வேலை செப்டம்பர் 10, 1823-ல் தொடங்கியது. ஆதியாகமம், மத்தேயு புத்தகங்களை ஜோன்ஸும், யாத்திராகமம், லூக்கா புத்தகங்களை கிரிஃபத்ஸும் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்கள். இருவருமே முழுமூச்சோடு உழைத்தார்கள். இந்த மொழிபெயர்ப்பு வேலையைச் செய்ததோடு, பள்ளியில் காலைமுதல் பிற்பகல்வரை பாடம் நடத்தினார்கள். சர்ச் ஆராதனைகளுக்காக முன்கூட்டியே தயார்செய்து அவற்றை மூன்று மொழிகளில் நடத்தினார்கள். ஆனாலும், மொழிபெயர்ப்பு வேலைக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.

12 மாணவர்களின் உதவியோடு 18 மாதங்களில் கிரேக்க வேதாகமம் முழுவதையும், எபிரெய வேதாகமத்தின் அநேக புத்தகங்களையும் மொழிபெயர்த்து முடித்தார்கள். அதற்கடுத்த வருடத்தில் முழு பைபிளையும் மொழிபெயர்த்து முடித்தார்கள். உண்மைதான், அந்த மொழிபெயர்ப்பில் சில திருத்தங்கள் செய்து, அதற்கு மெருகூட்ட வேண்டியிருந்தது. இதற்காக, மொழி அறிஞர்கள் டேவிட் ஜான்ஸும் ஜோசஃப் ஃப்ரீமேனும் இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்டார்கள்.

தடங்கல்கள். . .

மலகாஸி பைபிளின் மொழிபெயர்ப்பு முடிந்தபோது, மடகாஸ்கரில் முதன்முதலாக அச்சு இயந்திரத்தை நிறுவுவதற்கு சார்லஸ் ஹாவன்டன் என்பவரை லண்டன் மிஷனரி சொஸைட்டி அனுப்பிவைத்தது. அவர் நவம்பர் 21, 1826 அன்று மடகாஸ்கர் வந்துசேர்ந்தார். என்றாலும், மலேரியா காய்ச்சல் அவரையும் விட்டுவைக்கவில்லை; வந்து ஒரே மாதத்திற்குள் அவர் அந்தக் காய்ச்சலுக்குப் பலியானார். அச்சு இயந்திரத்தை இயக்கத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கவில்லை. அதற்கடுத்த வருடம் ஸ்காட்லாந்திலிருந்து வந்த திறமைசாலியான ஜேம்ஸ் காம்ரன் என்பவர், அச்சு இயந்திரத்திற்கு இடையே கிடந்த ஒரு கையேட்டின் உதவியோடு அதன் பாகங்களை ஒன்றிணைத்தார். ஆரம்பத்தில் தப்பும்தவறுமாக அச்சிட்டாலும் கடைசியில் டிசம்பர் 4, 1827-ல் ஆதியாகமப் புத்தகத்தின் முதல் அதிகாரத்திலிருந்து ஒரு பகுதியை அச்சிட்டார்.a

முதலாம் ராடமா மன்னர் இறந்ததைத் தொடர்ந்து ஜூலை 27, 1828-ல் இன்னொரு தடங்கல் வந்தது. ராடமா மன்னர் இந்த மொழிபெயர்ப்பு வேலைக்குப் பெரும் ஆதரவு அளித்து வந்திருந்தார். “ராடமா மன்னர் அளவில்லா அன்புடையவர், இனிய பண்புடையவர். கல்விக்காக எதையும் செய்யத் தயாராய் இருப்பவர். தன் நாட்டு மக்களுக்குத் தங்கம் வெள்ளி ஆகிய செல்வங்களைவிடக் கல்விச் செல்வம்தான் சிறந்தது என நினைப்பவர்” என்று அச்சமயத்தில் டேவிட் ஜோன்ஸ் கூறினார். அந்த மன்னரின் மறைவுக்குப் பின்னரோ அவரது மனைவி முதலாம் ரானவாலோனா அரியணையில் அமர்ந்தார். ஆனால், மொழிபெயர்ப்பு வேலைக்கு ராடமா மன்னரைப் போல் ஆதரவு அளிக்க மாட்டார் என்பது சீக்கிரத்திலேயே தெரியவந்தது.

ராணி பதவியேற்ற கொஞ்ச நாளிலேயே, இங்கிலாந்திலிருந்து ஒருவர் வந்திருந்தார்; மொழிபெயர்ப்பு வேலையைப் பற்றிப் பேசுவதற்காக ராணியைச் சந்திக்க வாய்ப்புத் தரும்படி அவர் கேட்டுப் பார்த்தார். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மற்றொரு சந்தர்ப்பத்தில், மக்களுக்கு கிரேக்க, எபிரெய மொழிகள் உள்ளிட்ட பல விஷயங்களைக் கற்பிக்க வேண்டியுள்ளதாக ராணியிடம் இந்த மிஷனரிகள் குறிப்பிட்டார்கள்; அவரோ, “கிரேக்க மொழியாவது எபிரெய மொழியாவது! அதைவிட உருப்படியான காரியம் ஏதாவது இருந்தால் அதை என் நாட்டு மக்களுக்குக் கற்பியுங்கள். முதலில் சோப்பு தயாரிக்கக் கற்றுக்கொடுங்கள்!” என்றார். மலகாஸி பைபிளை அச்சிட்டு முடிப்பதற்குள் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை வந்துவிடுமோ எனப் பயந்து, காம்ரன் ஒரு வார அவகாசம் கேட்டார்.

மறுவாரம், உள்ளூரில் கிடைத்த பொருள்களைப் பயன்படுத்திச் சோப்பு தயாரித்து இரண்டு சிறிய சோப்புக் கட்டிகளை ராணியின் தூதுவர்களிடம் அளித்தார். இந்த மிஷனரிகளுடைய கைவண்ணத்தையும், அவர்கள் செய்த பிற பொது நலத் தொண்டுகளையும் கண்டு ராணியின் மனம் சற்றுக் காலத்திற்கு இளகியது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்களால் எபிரெய வேதாகமத்தின் பெரும்பாலான புத்தகங்களை அச்சிட முடிந்தது; சில புத்தகங்கள் மட்டுமே பாக்கி இருந்தன.

ஆச்சரியமும் ஏமாற்றமும்

இந்த மிஷனரிகளுடைய கோரிக்கையை ராணி ஆரம்பத்தில் ஒதுக்கித்தள்ளினாலும், மே 1831-ல் ஆச்சரியமான ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். அவருடைய குடிமக்கள் கிறிஸ்தவர்களாக ஞானஸ்நானம் பெறுவதற்கு அனுமதி அளித்தார்! ஆனால், இந்த ஆணை நெடுநாள் நீடிக்கவில்லை. மடகாஸ்கரின் வரலாறு என்ற புத்தகம் சொல்கிறபடி, “ஏராளமானோர் ஞானஸ்நானம் பெறுவதைக் கண்ட பழமைவாதிகளான அரசவை அங்கத்தினர்கள் உஷாராகிவிட்டார்கள்; நாட்டில் கிறிஸ்தவ நடவடிக்கைகளை அனுமதிப்பது பிரிட்டிஷ் அரசை ஆதரிப்பதுபோல் இருக்குமெனச் சொல்லி ராணியின் மனதைக் கலைத்துவிட்டார்கள்.” இதனால், ஞானஸ்நானத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ஆறே மாதங்களுக்குப்பின், 1831-ன் இறுதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், பைபிள் அச்சிடும் பணியை முடித்துவிட மிஷனரிகள் தீவிரமாக முயன்றார்கள். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் ஏற்கெனவே அச்சிடப்பட்டிருந்தது; அதன் ஆயிரக்கணக்கான பிரதிகள் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், வேறொரு தடங்கல் மார்ச் 1, 1835-ல் வந்தது. கிறிஸ்தவ மதம் சட்டவிரோதமானது என்ற அறிக்கையை ராணி வெளியிட்டார்; அதோடு, கிறிஸ்தவ மதப் புத்தகங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் ஆணை பிறப்பித்தார்.

ராணி பிறப்பித்த அந்த ஆணையின் காரணமாக, மலகாஸி பணியாளர்களால் பைபிளை அச்சடிக்கும் வேலையில் ஈடுபட முடியாமல்போனது. ஆகவே, வெகு சில மிஷனரிகள் மட்டுமே இரவுபகலாக உழைத்து, கடைசியில் ஜூன் 1835-ல் முழு பைபிளையும் வெளியிட்டார்கள். இதுவே மலகாஸி பைபிள் பிறந்த கதை!

தடையுத்தரவு அமலில் இருந்தபோதிலும், பைபிள்கள் மளமளவென்று விநியோகிக்கப்பட்டன; பைபிள் அடியோடு அழிக்கப்பட்டுவிடாதபடி அதன் 70 பிரதிகள் புதைத்து வைக்கப்பட்டன. இப்படிச் செய்தது மிகவும் நல்லதாகப் போயிற்று; ஏனென்றால், அந்த வருடத்திற்குள் இரண்டு மிஷனரிகள் தவிர மற்ற எல்லா மிஷனரிகளும் மடகாஸ்கரிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. ஆனாலும், கடவுளுடைய வார்த்தை இந்தப் பெரிய செந்தீவு முழுக்கப் பரவிவந்தது.

பைபிள்மீது அலாதி பிரியம்

கடவுளுடைய வார்த்தையைத் தங்கள் தாய்மொழியிலேயே வாசிக்க முடிவதை நினைத்து மடகாஸ்கர் மக்கள் அளவில்லா ஆனந்தம் அடைந்தார்கள். உண்மைதான், அந்த மொழிபெயர்ப்பில் சில தவறுகள் உள்ளன, மொழிநடையும் பழமையானதுதான்; இருந்தாலும், பைபிள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம்; மலகாஸி மக்களில் அநேகர் அதைத் தவறாமல் வாசிக்கிறார்கள். கடவுளுடைய பெயர் எபிரெய வேதாகமம் முழுவதிலும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதே இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பம்சம். மூலப்பிரதிகளில் கடவுளுடைய பெயர் கிரேக்க வேதாகமத்திலும் காணப்படுகிறது. இதனால், மலகாஸி மக்களில் பெரும்பாலோருக்குக் கடவுளுடைய பெயர் நன்கு பரிச்சயம்.

சொல்லப்போனால், கிரேக்க வேதாகமத்தின் முதல் பிரதிகள் அச்சிடப்பட்டபோது, மலகாஸி மக்கள் ஆனந்தம் அடைந்ததைக் கண்டு அந்த அச்சு இயந்திரத்தை இயக்கிய திரு. பேக்கர் இவ்வாறு கூறினார்: “நான் ஒரு தீர்க்கதரிசி இல்லைதான், ஆனாலும், இந்த நாட்டிலிருந்து கடவுளுடைய வார்த்தையை ஒழித்துவிட முடியாது என்றே சொல்வேன்!” அவருடைய வார்த்தை பொய்த்துப்போகவில்லை. உயிரைக் குடித்த மலேரியாவாகட்டும், கஷ்டமான மொழியைக் கற்றுக்கொள்வதாகட்டும், அரசு பிறப்பித்த ஆணையாகட்டும், வேறெதுவும் ஆகட்டும் மடகாஸ்கரில் கடவுளுடைய வார்த்தை பரவுவதைத் தடுக்க முடியவில்லை.

தற்போது மலகாஸியில் கடவுளுடைய வார்த்தை இன்னும் மெருகேறி உள்ளது. எப்படி? 2008-ல், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் மலகாஸி மொழியில் முழுமையாக வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்திலும் நவீன மொழிநடையிலும் இருப்பதால் இது ஒரு பெரிய சாதனை என்றே சொல்லலாம். ஆகவே, இப்போது இந்தப் பெரிய செந்தீவில் கடவுளுடைய வார்த்தை இன்னும் உறுதியாக வேரூன்றியிருக்கிறது.—ஏசா. 40:8.

[அடிக்குறிப்பு]

a பைபிளிலுள்ள பத்துக் கட்டளைகளும் இயேசு கற்பித்த மாதிரி ஜெபமும்தான் மலகாஸி மொழியில் முதன்முதலாக அச்சிடப்பட்டன; இது, ஏப்ரல்/மே 1826-ல் மொரிஷியஸில் வெளியிடப்பட்டது. ஆனாலும், இவற்றின் பிரதிகள் ராடமா மன்னரின் குடும்பத்தாருக்கும் அரசு அதிகாரிகள் சிலருக்கும் மட்டுமே விநியோகிக்கப்பட்டன.

[பக்கம் 31-ன் படம்]

மலகாஸி மொழியில் “புதிய உலக மொழிபெயர்ப்பு” பைபிள் யெகோவாவின் பெயருக்கு மகிமை சேர்க்கிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்