ஆப்பிரிக்க மொழி பைபிள்களை உருவாக்குவதில் எட்டிய மைல்கற்கள்
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பைபிளை ஆர்வமாகப் படிப்பவர்கள், ஆப்பிரிக்க மக்களும் தங்கள் சொந்த மொழிகளில் பைபிளைப் படிக்க உதவ வேண்டுமென நீண்டகாலமாகவே அறிந்திருந்தார்கள். இந்த மகத்தான இலக்கை அடைய ஆப்பிரிக்க மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு அநேகர் அங்கே சென்றார்கள். அவர்களில் சிலர், சில மொழிகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து, அகராதிகளை உருவாக்கினார்கள். பிறகு, பல்வேறு ஆப்பிரிக்க மொழிகளில் பைபிளை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்கள். இது சுலபமான வேலையாக இருக்கவில்லை. “மிகவும் அடிப்படையான, எளிமையான கிறிஸ்தவக் கருத்துகளை விளக்குவதற்குக்கூட சரியான வார்த்தையைக் கண்டுபிடிப்பதற்கு, ஒரு மொழிபெயர்ப்பாளர் வருடக்கணக்காக ஆராய்ச்சி செய்யவேண்டியிருந்தது” என்று கேம்பிரிட்ஜின் பைபிள் சரித்திரம் (ஆங்கிலம்) விளக்குகிறது.
முன்னாளில் எழுத்து வடிவில் இல்லாத ஆப்பிரிக்க மொழிகளில் ட்ஸ்வானா மொழியும் ஒன்று. இம்மொழி பேசும் மக்களே 1857-ல் முதன்முதலில் ஒரு முழுமையான பைபிள் மொழிபெயர்ப்பைப் பெற்றார்கள்.a அது அச்சடிக்கப்பட்டு, ஒரு புத்தகமாக அல்லாமல் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டது. நாளடைவில் ஆப்பிரிக்காவின் மற்ற மொழிகளிலும் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் பூர்வ ஆப்பிரிக்க மொழிபெயர்ப்புகளில் அநேகம் கடவுளுடைய, யெகோவா என்ற பெயரைக் கொண்டுள்ளன; இந்தப் பெயர் “பழைய ஏற்பாடு” என்றழைக்கப்படும் எபிரெய வேதாகமங்களிலும், “புதிய ஏற்பாடு” என்றழைக்கப்படுகிற கிரேக்க வேதாகமங்களிலும் காணப்படுகிறது. என்றாலும் பைபிளின் ஆசிரியரான யெகோவா தேவனின் பரிசுத்தப் பெயருக்கு மரியாதை காட்டாத தனிநபர்கள், திருத்திய பதிப்புகளையும் புதிய மொழிபெயர்ப்புகளையும் உருவாக்கினார்கள். அவர்கள் யூத பாரம்பரியத்தின் மூடநம்பிக்கைகளைப் பின்பற்றி தேவனுடைய பெயருக்குப் பதிலாக கடவுள் அல்லது கர்த்தர் என்னும் பட்டப்பெயர்களைப் பயன்படுத்தினார்கள். எனவே, கடவுளை நேசிக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கு அவருடைய புனிதப் பெயரைக் கொண்ட பைபிள் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டது.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு 1980-களிலிருந்து பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஆப்பிரிக்காவின் முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்க விஷேச முயற்சி எடுத்தது. இதன் விளைவாக, பைபிளை நேசிக்கும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் தங்களுடைய தாய்மொழியிலேயே புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை இன்று படிக்க முடிகிறது. ஆப்பிரிக்காவில் பேசப்படுகிற 17 மொழிகளில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ கிடைக்கிறது.
இந்த ஆப்பிரிக்க மொழி பைபிள்களைப் படிப்பவர்கள், யெகோவா தேவனுடைய மகத்தான பெயரைக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பை வைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள். உதாரணமாக, நாசரேத்திலுள்ள ஆலயத்தில் இயேசு எழுந்து நின்று ஏசாயா புத்தகச் சுருளின் ஒரு பகுதியை வாசிப்பதன்மூலம் தமக்கு அளிக்கப்பட்டிருந்த பொறுப்பை அறிவித்தார். அந்தப் பதிவில் அவருடைய தந்தையின் பெயர் வருகிறது. (ஏசாயா 61:1, 2) புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலுள்ள லூக்கா சுவிசேஷத்தின்படி இயேசு இவ்வாறு வாசித்தார்: “யெகோவாவுடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி யெகோவா என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், யெகோவாவுடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்.”—லூக்கா 4:18, 19.
ஆகஸ்ட் மாதம் 2005-ல் ஆப்பிரிக்க மொழி பைபிள்களை உருவாக்குவதில் இன்னொரு மைல்கல் எட்டப்பட்டது. அந்த மாதத்தில் தென் ஆப்பிரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் 76,000-க்கும் அதிகமான புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்கள் ஆப்பிரிக்க நாட்டில் பேசப்படும் மொழிகளில் அச்சடிக்கப்பட்டு, ‘பைண்டிங்’ செய்யப்பட்டன. அவற்றுள் 30,000 பைபிள்கள் ஷோனா மொழியில் இருந்தன. ஜிம்பாப்வேயில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” என்ற மாவட்ட மாநாட்டில் இந்தப் பதிப்பு வெளியிடப்பட்டது.
மறக்கமுடியாத இந்த மாதத்தின்போது தென் ஆப்பிரிக்கக் கிளை அலுவலகத்திற்கு வந்திருந்த பார்வையாளர்கள், ஆப்பிரிக்க மொழியில் புதிய பைபிள்கள் உருவாக்கப்படுவதைப் பார்த்து மெய்சிலிர்த்துப்போனார்கள். “ஷோனா மொழியிலும் மற்ற ஆப்பிரிக்க மொழிகளிலும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை தயாரிப்பு செய்வதில் உதவும் பாக்கியம் எனக்கு கிடைத்ததற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன், கிளர்ச்சியுறுகிறேன்” என்கிறார் ங்ஹலாங்ஹலா. இவர் பெத்தேலில் பைண்டிங் செய்யும் இடத்தில் வேலை செய்கிறார். உண்மையில், இவர் தென் ஆப்பிரிக்க பெத்தேல் குடும்பத்திலுள்ள அனைவருடைய உணர்ச்சிகளையும் சுருக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.
வெளிநாடுகளில் பைபிள்கள் தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டபோது இருந்ததைவிட இப்போது குறைந்த விலையிலும், விரைவாகவும் ஆப்பிரிக்க மக்களுக்குப் புதிய பைபிள்கள் கிடைக்கின்றன. அதிமுக்கியமாக, பைபிளின் மகத்தான ஆசிரியரான யெகோவா தேவனின் பரிசுத்தப் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் துல்லியமான மொழிபெயர்ப்பு ஆப்பிரிக்கர்களுக்குத் தற்போது சுலபமாகக் கிடைக்கிறது.
[அடிக்குறிப்பு]
a 1835-வாக்கில் மடகாஸ்கரின் மலகாஸி மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது, 1840-வாக்கில் அது எத்தியோப்பியாவின் அம்ஹாரிக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த மொழிகளில் பைபிள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதற்கு வெகு முன்னமே அவை எழுத்து வடிவில் இருந்தன.
[பக்கம் 12-ன் படம்]
1840-ல் பிரசுரிக்கப்பட்ட ட்ஸ்வானா மொழி பைபிளில் கடவுளுடைய பெயர்
[படத்திற்கான நன்றி]
Harold Strange Library of African Studies
[பக்கம் 13-ன் படம்]
ஸ்வாஸிலாந்திலிருந்து வந்த பார்வையாளர்கள், தென்னாப்பிரிக்க கிளை அலுவலகத்தில் தயாரிக்கப்படும் புதிய பைபிள்களைப் பார்வையிடுகிறார்கள்