ஆப்பிரிக்க பைபிள் மொழிபெயர்ப்புகள்
ஆப்பிரிக்க மொழியில் முழு பைபிளின் மிகப் பழங்கால மொழிபெயர்ப்புகள் எகிப்தில் செய்யப்பட்டன. காப்டிக் மொழிபெயர்ப்புகள் என்று அறியப்பட்டிருந்த இவை பொ.ச. மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டைச் சேர்ந்தவையாக கருதப்படுகின்றன. சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பைபிள் எதியோபியா மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
எதியோபியா மற்றும் சகாராவுக்கு தெற்கே பேசப்பட்ட நூற்றுக்கணக்கான எழுதப்படாத மொழிகள், 19-ம் நூற்றாண்டில் மிஷனரிகளின் வருகைக்காக காத்திருக்க வேண்டியதாயிருந்தன. 1857-ல் ராபர்ட் மாஃபீட் பைபிளை ஒரு தென் ஆப்பிரிக்க மொழிக்கு மொழிபெயர்த்து முடித்தபோது ஒரு மைல்கல் எட்டப்பட்டது. கையினால் இயக்கப்பட்ட அச்சியந்திரம் ஒன்றில் அவர் அவற்றைப் பகுதிகளாக அச்சடிக்கவும் செய்தார். இதுவே ஆப்பிரிக்காவில் அச்சுசெய்யப்பட்ட முதல் முழு பைபிளாகவும், முற்காலங்களில் எழுதப்படாத ஆப்பிரிக்க மொழியில் முதல் முழு மொழிபெயர்ப்பாகவும் இருந்தது. மாஃபீட், தன்னுடைய மொழிபெயர்ப்பில் யெகோவா என்ற பெயரை பயன்படுத்தியிருப்பது அக்கறைக்குரியதாகும். பிரிட்டிஷ் மற்றும் அயல்நாட்டு பைபிள் சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்ட 1872 பதிப்பில் யெகோவா என்ற பெயர் மத்தேயு 4:10 மற்றும் மாற்கு 12:29, 30 போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி இயேசு பேசிய முக்கிய கூற்றுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
முழு பைபிள் 1990-க்குள் 119 ஆப்பிரிக்க மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவற்றின் சில பகுதிகள் கூடுதலாக 434 மொழிகளில் கிடைக்கிறது.