யெகோவாவின் சேவையில் செழுமையான, பலனளிக்கும் ஒரு வாழ்க்கை
லேயா கால்லியா சொன்னபடி
அது 1914-ம் வருடம்; பின்லாந்திலுள்ள டுர்கு என்ற நகரின் புறநகர் பகுதியில் ஓர் அழகிய, பொழுதுநீண்ட கோடைக்கால நாள் நிறைவடைந்துகொண்டிருந்தது. திடீரென்று எழும்பியிருந்த ஒரு பெரிய போரைப் பற்றிய செய்தியால் அந்த அமைதி எதிர்பாராதவிதத்தில் கலைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிகளின் அர்த்தத்தைப்பற்றி தீர யோசிப்பவர்களால் விரைவில் தெருக்கள் நிரம்பி இருந்தன. பெரியவர்களின் துயரார்ந்த முகங்கள், பிள்ளைகளாகிய எங்களை என்ன நடக்குமோ என்று சிந்திக்க வைத்தன. எனக்கு அப்போது ஒன்பது வயது; பிள்ளைகளின் சமாதான விளையாட்டு, போர் விளையாட்டாக மாறியதை நான் நினைவுகூருகிறேன்.
முதல் உலகப் போரில் (1914-18), பின்லாந்து கலந்துகொள்ளவில்லை என்றாலும், அந்த நாடு 1918-ல் உள்நாட்டுக் கலகத்தால் சூறையாடப்பட்டது. உறவினர்களும் முன்னாள் நண்பர்களும், வேறுபடுகிற அரசியல் கருத்துக்களின் காரணமாக ஒருவருக்கெதிராக ஒருவர் போர்க்கருவிகளைப் பயன்படுத்தினர். ஏழு பேரடங்கிய எங்கள் குடும்பம் இந்தப் பகைமையை அனுபவித்தது. தன்னுடைய கருத்துக்களை நேரடியாகச் சொன்ன என் தந்தை, கைது செய்யப்பட்டு, ஏழு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் அவர் குற்றமில்லாதவரென விடுவிக்கப்பட்டார்; ஆனால் அதற்குள் அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பயங்கரமான காலப்பகுதியின்போது, எங்கள் குடும்பம் பசியிலும் நோயிலும் கஷ்டப்பட்டது. என்னுடைய தங்கைகளில் மூவர் இறந்துவிட்டனர். டம்பியர் என்ற நகரில் வாழ்ந்த என் பெரியப்பா, எங்களுடைய இக்கட்டான நிலையைப்பற்றிக் கேள்விப்பட்டு, என் தந்தையையும் தாயையும், மீதியிருந்த பிள்ளைகளாகிய எங்கள் இருவரையும் அவரோடு தங்கும்படி அழைத்தார்.
வருடங்களுக்குப்பின், இன்னும் டம்பியரில் வாழ்ந்துகொண்டிருக்கையில், சில்வி என்ற பெயருடைய கவர்ச்சிகரமான பெண்ணை நான் சந்தித்தேன். அவள் என்னுடையதை ஒத்த பின்னணியைக் கொண்டிருந்தாள். அவள் தந்தை உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டார்; பின்னர் அவளுடைய குடும்பத்தின் ஒரு நெருங்கிய நண்பரான, போரி என்ற பட்டணத்தைச் சேர்ந்த கார்லா (கால்லே) வெசான்டோ என்பவர் அவளையும் அவளுடைய அக்காவையும் அவளுடைய தாயையும் தன்னுடைய வீட்டில் சேர்த்துக்கொண்டார். சில்வியின் தாய்க்கு ஒரு வேலை கிடைக்கும்படியும், அந்தப் பெண்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்படியும் அவர் ஏற்பாடுகளைச் செய்தார். காலப்போக்கில் சில்வி வேலைக்காக டம்பியருக்குக் குடிபெயர்ந்தாள்; அங்குதான் நாங்கள் சந்தித்தோம்.
என் வாழ்க்கையை மாற்றிய ஒரு மாலை
1928-ல் சில்வி எனக்கென்று நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக ஆனாள்; ஒரு நாள் நாங்கள் கால்லே வெசான்டோவையும் அவருடைய குடும்பத்தையும் சந்திப்பதற்காக போரிக்குப் பயணப்பட்டோம். வேறு எந்தச் சம்பவமும் அவ்வளவு உறுதியான தீர்மானம் எடுக்கும்வகையில் என்னைப் பாதித்ததில்லை. கால்லே, பெரு நடையுடைய குதிரைகளை வைத்திருந்தவராகவும், பந்தயம் ஓட்டுபவராகவும் இருந்து, ஆனால் அந்தத் தொழிலைக் கைவிட்டவராய் இருந்தார். அவரும் அவருடைய மனைவியும் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியின் வைராக்கியமான பிரஸ்தாபிகளாகி இருந்தனர். “இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் லட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிக்கமாட்டார்கள்” [Millions Now Living Will Never Die] என்ற வார்த்தைகளை தன் இரண்டு-மாடி வீட்டின் வெளிச்சுவர் ஒன்றில் தீட்டுவதற்கு அவர் எப்படி ஆட்களைக் கூலிக்கு அமர்த்தினார் என்பதுபற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகம் 1990 [1990 Yearbook of Jehovah’s Witnesses] விவரிக்கிறது. அந்த வாசகம், வேகமாகக் கடந்துசெல்லும் ரயில்களிலிருந்தும் எளிதில் வாசிப்பதற்குப் போதியளவு பெரிதாக இருந்தது.
அந்த இரவு கால்லேயும் நானும் விடியற்காலை வரையாகப் பேசினோம். “ஏன்? ஏன்? ஏன்?” என்று நான் கேட்டேன், கால்லே விளக்கினார். நான் சொல்லர்த்தமாக, அடிப்படை பைபிள் சத்தியங்களை ஓரிரவிற்குள் கற்றுக்கொண்டேன். பல்வேறு போதனைகளை விளக்கிய வேதவசனங்களை நான் எழுதிவைத்தேன். பின்னர், நான் வீடு திரும்பியபோது, ஒரு குறிப்பேட்டை வாங்கி அந்த எல்லா வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை எழுதி வைத்தேன். நான் இன்னும் பைபிளில் அதிக பழக்கப்படாததால், நான் வேலை செய்த கட்டுமானப் பணி இடத்திலுள்ளவர்களிடத்தில் சாட்சி கொடுக்க இந்தக் குறிப்பேட்டைப் பயன்படுத்தினேன். பொய் மதத்தின் போதனைகளை வெளிப்படுத்தியபோது, “நீங்கள் உண்மையில் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள்!” என்ற கால்லேயின் வார்த்தைகளை நான்தானே திரும்பத் திரும்பச் சொல்வதாகக் கண்டேன்.
டம்பியரில் சுமார் 30 பைபிள் மாணக்கர்கள் தங்கள் கூட்டங்களைக் கொண்டிருந்த ஒரு சிறிய வீட்டின் விலாசத்தை கால்லே என்னிடம் கொடுத்தார். அங்கு அந்தச் சிறிய வீட்டின் சொந்தக்காரரான சகோதரர் ஆன்டர்சனின் அருகே, கதவருகிலுள்ள மூலை ஒன்றில் நான் பதுங்கி இருப்பேன். நான் அங்கு செல்வதில் சற்று ஒழுங்கற்று இருந்தேன்; ஆனால், ஜெபம் உதவியுள்ளதாக நிரூபித்தது. வேலையில் கடுமையான கஷ்டங்கள் இருந்தபோது, நான் ஒருமுறை ஜெபித்தேன்: “தயவுசெய்து, கடவுளே, இந்தக் கஷ்டங்களை மேற்கொள்ள எனக்கு உதவி செய்தீரானால், எல்லா கூட்டங்களுக்கும் நான் செல்வேன் என்று உறுதிகூறுகிறேன்.” ஆனால் காரியங்கள் மோசமாகவே ஆயின. யெகோவாவுக்கு நிபந்தனைகள் வைத்துக்கொண்டிருந்தேன் என்று பின்னர் நான் உணர்ந்தேன்; அப்போது நான் என்னுடைய ஜெபத்தை இவ்வாறு மாற்றினேன்: “என்ன நடந்தாலும் சரி, நான் எல்லா கூட்டங்களுக்கும் செல்வேன் என்று உறுதிகூறுகிறேன்.” அப்போது என்னுடைய துன்பங்கள் மறைந்துபோயின; நானும் ஒழுங்காகக் கூட்டங்களுக்குச் செல்பவன் ஆனேன்.—1 யோவான் 5:14.
ஆரம்ப வருடங்களில் எங்கள் ஊழியம்
1929-ல், சில்வியும் நானும் திருமணம் செய்தோம்; 1934-ல் நாங்கள் இருவரும் யெகோவாவுக்கான எங்கள் ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலமாக அடையாளப்படுத்தினோம். அந்த நாட்களில் எங்களுடைய ஊழியம் ஒரு ஃபோனோகிராஃபையும் ரெகார்டுகளையும் மக்களுடைய வீடுகளுக்கு எடுத்துச்சென்று, இலவசமாக ஒரு பைபிள் பேச்சை அளிக்கலாமா என்று அவர்களிடம் தயவாகக் கேட்பதை உட்படுத்தியது. மக்கள் பெரும்பாலும் எங்களை உடனடியாக உள்ளே அழைத்தார்கள்; பதிவுசெய்யப்பட்ட பேச்சிற்குச் செவிகொடுத்துக் கேட்டபின், அவர்கள் ஓர் உரையாடலில் கலந்துகொண்டு, நம் பிரசுரங்களில் சிலவற்றை ஏற்றுக்கொண்டனர்.
அதிகாரிகளின் அனுமதியுடன், இதே பைபிள் பேச்சுக்களைப் பூங்காக்களில் ஒலிபெருக்கிகள் வழியாகக் கேட்கச் செய்தோம். மேலும் புறநகர் பகுதிகளில் நாங்கள் ஒலிபரப்பிகளை ஒரு கூரையில் அல்லது ஒரு புகைப்போக்கியின்மேல் பொருத்தி வைப்போம். மற்ற சமயங்களில் நகர மக்கள் பெருந்திரளாகக் கூடிவந்த ஏரிப்பகுதியில் அவற்றைப் போட்டுக் கேட்கச்செய்தோம். ஒரு படகில் நாங்கள் வெறுமனே ஒலிபெருக்கிகளை எடுத்துச்சென்று, மெதுவாகக் கரையோரமாகச் செலுத்தினோம். ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டுப்புற பிரச்சாரத்திற்காக, எங்களுடைய மதிப்புள்ள ஒலிபெருக்கிகளுடனும் அதிகமதிகமான பிரசுரங்களுடனும் பேருந்தில் சென்றோம்.
எங்களுடைய விசுவாசத்தைச் சோதிக்கும் ஒரு மாற்றம்
1938-ல், நான் ஒரு பயனியராக முழு நேர ஊழியத்தை ஆரம்பித்தேன், ஆனால் ஒரு கொத்தனாராகவும் தொடர்ந்து வேலை செய்தேன். அதற்கடுத்த இளவேனிற்காலத்தில், தற்போது வட்டாரக் கண்காணி என்றழைக்கப்படும் ஒரு பயண ஊழியராகும்படி சொஸையிட்டியின் கிளை அலுவலகத்திலிருந்து ஓர் அழைப்பை நான் பெற்றேன். அதை ஏற்பதற்கான தீர்மானம் எளிதான ஒன்றாக இருக்கவில்லை, ஏனென்றால் டம்பியரிலுள்ள எங்கள் சபையுடன் சேர்ந்து உழைப்பதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். மேலும், எங்களுக்கு ஒரு சொந்த வீடு இருந்தது; விரைவில் பள்ளிக்குச் செல்லத் துவங்கும் ஆறு வயது மகன் ஆர்டோ இருந்தான்; சில்வி ஒரு கடையில் விற்பனை செய்பவளாக, வேலை செய்வதில் மகிழ்ச்சியாக இருந்தாள். இருந்தாலும், ஒன்றுசேர்ந்து கலந்தாலோசித்தப்பின், ராஜ்ய சேவையின் இந்தக் கூடுதலான சிலாக்கியத்தை நான் ஏற்றுக்கொண்டேன்.—மத்தேயு 6:33.
பின்னர் மற்றொரு கடினமான காலம் ஆரம்பித்தது. பின்லாந்துக்குள் சோவியத் துருப்புகள் அணிவகுத்தபோது, நவம்பர் 30, 1939-ல் போர் எழும்பியது. குளிர்கால போர் என்றழைக்கப்பட்ட அந்தப் போர், மார்ச் 1940 வரையாக நீடித்தது; அப்போது பின்லாந்து ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொள்ளவேண்டியதாய் இருந்தது. இயற்கையும்கூட போருக்குச் சென்றதுபோல் தோன்றியது, ஏனென்றால் அதுவே நான் நினைத்துப்பார்க்கக்கூடியதில் கடுங்குளிராயிருந்த குளிர்காலமாக இருந்தது. வெப்பமானியில் பூஜ்யம் சென்டிகிரேடுக்குக் கீழே 30-க்கும் அதிகமான டிகிரிகள் குறைந்தபோது, நான் ஒரு சபையிலிருந்து மற்றொன்றிற்கு சைக்கிளில் சென்றேன்!
1940-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை பின்லாந்தில் தடைசெய்யப்பட்டது. அதற்குப்பின் பின்லாந்தைச் சேர்ந்த அநேக இளம் சாட்சிகள் சிறையிலிடப்பட்டு, மனிதத்தன்மையற்ற நிலைமைகளின்கீழ் தொடர்ந்திருக்கும்படி வற்புறுத்தப்பட்டனர். சந்தோஷத்திற்குரிய விதத்தில், இரண்டாம் உலகப் போர் முழுவதிலும், 1939-லிருந்து 1945 வரை, என்னால் சபைகளைச் சேவிக்க முடிந்தது. ஒரேசமயத்தில் மாதக்கணக்கில் சில்வியையும் ஆர்டோவையும் விட்டுப் பிரிந்திருப்பதை இது அடிக்கடி தேவைப்படுத்தியது. மேலுமாக, ஒரு சட்டப்பூர்வமற்ற வேலையில் ஈடுபடுவதற்காக கைதுசெய்யப்படும் நிலையான அச்சுறுத்தலும் இருந்தது.
ஒரு ஸூட்கேஸ், பிரசுரங்களையுடைய ஒரு பை, ஒரு ஃபோனோகிராஃப் மற்றும் ரெகார்டுகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு ஒரு சைக்கிளை ஓட்டிச்செல்லும் நான் ஒரு விநோதமானக் காட்சியை அளித்திருக்கவேண்டும். நான் அந்த ஃபோனோகிராஃப் ரெகார்டுகளைக் கொண்டுசென்றதற்கு ஒரு காரணம் என்னவென்றால், நான் பிடிக்கப்பட்டால், ரஷ்யர்களுக்காக வேவுபார்க்கும் வேவுபணி வான்குடை படையாளரில் ஒருவராக இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவே ஆகும். நான் ஒரு வான்குடை படையாளனாக இருந்தால், குதிக்கும்போது ரெகார்டுகள் உடைந்திருக்கும் என்று என்னால் வாதாட முடியும்.
என்றபோதிலும், ஒரு வேவுகாரனைப்பற்றி எச்சரிக்கப்பட்டிருந்த ஒரு சுற்றுவட்டாரத்தை நான் சந்தித்தபோது, சாட்சிகளின் ஒரு குடும்பத்தினர் என்னை ஒரு வேவுகாரன் என்று தவறாகக் கருதினர். ஓர் இருண்ட குளிர்கால இரவில், நான் அவர்களுடைய கதவைத் தட்டினேன்; அவர்கள் திறப்பதற்கு மிகவும் பயந்தார்கள். ஆகவே நான் ஒரு கொட்டகையில், அனலாக வைத்துக்கொள்வதற்காக வைக்கோலில் புதைந்துகிடந்து அந்த இரவைக் கழித்தேன். மறுநாள் காலை, தவறான ஆள் அடையாளம் தெளிவுபடுத்தப்பட்டது; மேலும், என்னுடைய சந்திப்பின் மீதி பகுதியில், அந்த வீட்டின் அங்கத்தினர் எனக்கு அதிவிசேஷித்த உபசரிப்பைக் காண்பித்தனர் என்பதை நான் அழுத்திச் சொல்லவேண்டும்!
போர் வருடங்களின்போது, சகோதரர் யோஹான்னஸ் காஸ்கினனும் நானும் மட்டுமே மத்திப மற்றும் வட பின்லாந்தின் சபைகளைச் சேவித்தோம். எங்களில் ஒவ்வொருவருக்கும், கவனிப்பதற்காக சுமார் 600 கிலோமீட்டர் நீண்டிருந்த பெரிய பகுதிகள் இருந்தன. ஒவ்வொரு சபையோடும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே தங்கமுடிந்த அளவிற்கு, அவ்வளவு அதிக சபைகளை நாங்கள் சந்திக்கவேண்டி இருந்தது. ரயில்கள் அபூர்வமாகவே குறித்தநேரத்தில் வந்தன; மேலும் பேருந்துகள் குறைவாகவும் அவ்வளவு கூட்டமாகவும் இருந்ததால், நாங்கள் சேரும் இடங்களைச் சென்றடைந்தது ஓர் ஆச்சரியமாகவே இருந்தது.
மயிரிழையில் தப்புதல்கள்
ஒருமுறை, குளிர்கால போரின் ஆரம்பத்தில், ஹெல்சிங்கியிலுள்ள கிளை அலுவலகத்திற்கு நான் சென்று, தடைசெய்யப்பட்ட பிரசுரங்கள் நிரம்பிய கனமுள்ள நான்கு அட்டைப்பெட்டிகளை, என்னுடன் ரயிலில் ஏற்றி சபைகளில் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றேன். ரீஹிமாக்கி ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ஒரு விமானத்தாக்குதலின் அபாய ஒலி தொனித்தது. ரயிலில் இருந்த படைவீரர்கள் தங்களுடைய பனிக்கால உடைகளை அணிந்துகொண்டனர்; பயணிகள் உடனடியாக ரயிலை விட்டிறங்கி, நிலையத்திற்கு எதிரிலுள்ள வெறுமையான நிலத்தை நோக்கிப் போகும்படி கூறப்பட்டனர்.
அந்தப் படைவீரர்களிடம் என்னுடைய அட்டைப்பெட்டிகளின் முக்கியத்துவத்தைப்பற்றிக் கூறி, அவர்களிடம் அவற்றைச் சுமந்து செல்லும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களில் நான்கு பேர் ஆளுக்கொரு அட்டைப்பெட்டியை எடுத்துக்கொண்டனர்; நாங்கள் அந்தப் பனிபடர்ந்த நிலத்தில் சுமார் 200 மீட்டர் ஓடினோம். நாங்கள் தரையில் விழுந்துவிட்டோம்; அப்போது யாரோ ஒருவர் என்னிடம் சத்தமிட்டுச் சொன்னார்: “படைத்துறை சாராத பொதுமகனே, சிறிதும் அசையவேண்டாம்! குண்டு வீசுபவர்கள் ஏதாவது அசைவைக் கண்டார்களேயானால், அவர்கள் நம்மை நோக்கி குண்டு வீசுவார்கள்.” வானத்தைப் பார்க்குமளவிற்கு ஆவலுள்ளவனாய், என்னுடைய முகத்தைக் கவனமாகத் திருப்பி அங்கு 28 விமானங்களை எண்ணினேன்!
திடீரென்று குண்டு வெடிப்புகளால் தரை அதிர்ந்தது. நிலையம் குண்டு வீச்சில் தப்பினபோதிலும், நாங்கள் அங்கு வந்து சேர்ந்த ரயில் தகர்க்கப்பட்டது. அந்தச் சிதைவுற்ற ரயிலும் திருகப்பட்ட தண்டவாளங்களும் என்னே ஒரு கோரமான காட்சியை அளித்தன! மறுநாள் காலை அட்டைப்பெட்டிகளோடு என்னுடைய பயணத்தை என்னால் தொடர முடிந்தது; அந்தப் படைவீரர்கள் வேறொரு ரயிலில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர் போருக்குப்பின் ஒரு சாட்சியானார்; அட்டைப்பெட்டிகளை வைத்திருந்த அந்த விநோதமான பொதுக் குடிமகனைப் பற்றி அந்தப் படைவீரர்கள் பின்னர் அடிக்கடி பேசினர் என்று அவர் என்னிடம் சொன்னார்.
சில காலத்திற்குப்பின், வட பின்லாந்தில் ராவனியமியிலுள்ள சிறிய சபையைச் சேவிப்பதற்காகப் பயணம்செய்தபோது சகோதரர் காஸ்கினன் ரயிலிலிருந்து இறங்குமுன் கைதுசெய்யப்பட்டார். அவர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். அதே சபையைச் சேவிப்பதற்காக என்னுடைய நேரம் வந்தபோது, நான் காய்வ்யூ என்ற சிறிய நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கும்படி ஏற்பாடுகள் செய்தேன். அங்கு சகோதரி ஹெல்மி பாலாரி, என்னுடைய மீதி பயணத்தை பால் ஏற்றிச்செல்லும் வண்டி ஒன்றில் தொடரும்படி ஏற்பாடு செய்தார்கள். ராவனியமி சபைக்கான என்னுடைய சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தது. என்றபோதிலும், திரும்பும்போது நான் கஷ்டங்களை அனுபவித்தேன்.
ரயில் நிலையத்திற்குப் போகும் வழியில், கடந்துசெல்லும் எல்லாரிடமிருந்த ஆதாரச் சான்றுகளையும் பரிசோதித்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரிகள் இருவரை நானும் என்னுடைய கூட்டாளியும் எதிர்ப்பட்டோம். “அவர்களைப் பார்க்காதே. நேராக பார்த்துச் செல்,” என்று நான் சொன்னேன். அவர்கள் அங்கு இல்லாததுபோல, நாங்கள் அவர்களிடையினூடாக நடந்து சென்றோம். பின்னர் அவர்கள் எங்களைத் துரத்த ஆரம்பித்தனர். கடைசியில், ரயில் நிலையத்தில், கூட்டத்தில் அவர்கள் பார்வையில்படுவதைத் தவிர்த்து ஓடும் ரயிலில் ஏற என்னால் முடிந்தது. அந்த நாட்களில், பயண வேலையில் கிளர்ச்சிக்குக் குறைவே இல்லை!
ஒருமுறை நான் கைதுசெய்யப்பட்டு, கட்டாய இராணுவ சேவைக்காகத் தேர்ந்தெடுக்கும் குழுமத்திடம் கொண்டு செல்லப்பட்டேன். என்னைப் போரிடும் வரிசைக்கு அனுப்புவதே நோக்கமாக இருந்தது. ஆனால் தொலைபேசி மணி ஒலித்தது, என்னைப் பேட்டி காணவிருந்த படைத்துறை அதிகாரி பதிலளித்தார். மறுமுனையிலிருந்து வந்த குரல் இவ்வாறு கத்துவதை என்னால் கேட்க முடிந்தது: “ஏன் இப்படிப்பட்ட நோயுற்ற, ஒன்றுக்கும் உதவாத மனிதர்களை அனுப்பிக்கொண்டேயிருக்கிறீர்? எங்களால் செய்ய முடிந்ததெல்லாம் அவர்களைத் திரும்ப அனுப்புவதே. வேலைக்குத் தகுதியுள்ள மனிதர் எங்களுக்குத் தேவை!” நல்லவேளையாக, எனக்கிருந்த ஓர் உடல்நலப் பிரச்னையைப் பற்றி கூறிய ஒரு மருத்துவ சான்றை நான் எடுத்துச் சென்றிருந்தேன். நான் இதை அளித்தபோது, போகும்படி அனுமதிக்கப்பட்டு, அதனால் தடையின்றி சபைகளுக்குள் என்னுடைய வேலையைத் தொடர்ந்தேன்!
ஒரு சோதனையில் உதவிசெய்தல்
போர் சீற்றம் உச்சநிலையை அடைந்துகொண்டிருந்தது; என்னுடைய நண்பர் ஆஹ்டி லாயஸ்டா கைது செய்யப்பட்டார். அவருடைய மனைவி என்னை அழைத்தார்கள். நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றபோது, நகரின் பொது பூங்காக்களில் பதிவுசெய்யப்பட்ட பேச்சுக்களை அளிப்பதற்கு ஆஹ்டிக்கு அனுமதி வழங்கும் உள்ளூர் போலீஸிடமிருந்து கொடுக்கப்பட்ட ஓர் ஆவணத்தை அவருடைய எழுத்துச் சான்றுகளுக்கு மத்தியில் நான் கண்டேன். நாங்கள் அந்த ஆவணத்துடன் நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தோம். அவர்கள் குற்றச்சாட்டை வாசித்து முடித்ததும், நான் இந்த ஆவணத்தை சகோதரர் லாயஸ்டாவிடம் கொடுத்தேன். நீதிமன்றம் கேட்பதற்காக ஒரு ஃபோனோகிராஃபையும் பதிவுசெய்யப்பட்ட பைபிள் பிரசங்கங்களில் பலவற்றையும் ஒரு படைவீரனைவிட்டு எடுத்துவரும்படி செய்தார் அந்த நீதிபதி. ஒவ்வொரு பிரசங்கத்தையும் கேட்டபின், அங்கு சொல்லப்பட்டதில் தகுதியற்ற எதையும் தான் காண முடியவில்லை என்று அந்த நீதிபதி சொன்னார்.
பின்னர் ஆஹ்டியும் அவருடைய மனைவியும் நானும் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குக் காத்திருக்கும்படி நடைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டோம். அங்கு நாங்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு நின்றோம். கடைசியாக ஒரு குரல் இவ்வாறு சொல்வதைக் கேட்டோம்: “பிரதிவாதி, தயவுசெய்து நீதிமன்றத்திற்குள் வரவும்.” சகோதரர் லாயஸ்டா குற்றமில்லாதவராக அறிவிக்கப்பட்டார்! உண்மையாகவே எங்களுடைய இருதயங்களில் யெகோவாவுக்கு முழு நன்றியுணர்ச்சியுடன் நாங்கள் எங்கள் வேலையில், சகோதரர் மற்றும் சகோதரி லாயஸ்டா உள்ளூர் சபையில் அவர்களுடைய வேலையிலும், நான் என்னுடைய பயண வேலையிலும் தொடர்ந்தோம்.
போர் முடிகிறது—எங்கள் சேவை தொடர்கிறது
போர் முடிந்தபோது, எங்களுடைய பிரசங்க வேலையின்மேல் இருந்த தடையும் நீக்கப்பட்டது; சகோதரர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். என்னுடைய பல வருடங்களின் சேவையின்போது, ராஜ்ய வேலையிலும் தங்களுடைய கணவன்மாருக்கு ஆதரவளிப்பதிலும் கிறிஸ்தவ சகோதரிகள் வகித்திருக்கும் பங்கு என் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. விசேஷமாக சில்வியின் தியாகங்களுக்கும் ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். அதன் விளைவாக, நான் 33 வருடங்களுக்குப் பயண வேலையில் தடையின்றி தொடரவும், பின்னர் ஒரு விசேஷித்த பயனியராகச் சேவிக்கவும் முடிந்தது.
சில்வியும் நானும் ஆர்டோவை பள்ளி படிப்பை முடித்ததும் பயனியர் சேவை செய்யத் தொடங்கவும், ஆங்கிலம் படிக்கவும், ஐக்கிய மாகாணங்களில் உவாட்ச் டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியடுக்குச் செல்லும்படியும் உற்சாகப்படுத்தினோம். அவன் 1953-ல் கிலியடிலிருந்து பட்டம் பெற்றான். அதற்குப்பின் அவன் ஏவாவை திருமணம் செய்தான்; அவர்கள் ஒன்றாகச்சேர்ந்து வட்டார வேலை, பெத்தேல் சேவை, விசேஷித்த பயனியர் சேவை ஆகியவை உட்பட பல்வேறு வகைகளான முழு நேர சேவையில் பங்கெடுத்திருக்கின்றனர். 1988-ல் அவர்கள் விசேஷித்த பயனியர்களாக தொடர்ந்து சேவித்துக்கொண்டே சில்வியையும் என்னையும் கவனிப்பதற்கு உதவும்படி நாங்கள் குடியிருக்கும் நகரமாகிய டம்பியருக்குக் குடிபெயர்ந்தார்கள்.
எங்களுடைய பெலன் இப்போது மிகவும் குறைந்திருந்தாலும், சில்வியும் நானும் எங்களை உற்சாகமூட்டுவதற்குப் பல நினைவுகளை உடைய செழுமையான, ஆசீர்வாதமான வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவித்திருக்கிறோம். நாங்கள் கண்டிருக்கிற அதிகரிப்பைப் பற்றி நினைத்துப்பார்ப்பது மிகவும் பலனளிப்பதாய் இருக்கிறது. நான் 1939-ல் சபைகளைச் சந்திக்க ஆரம்பித்தபோது, அங்கு 865 ராஜ்ய பிரஸ்தாபிகள் பின்லாந்தில் இருந்தார்கள், ஆனால் இப்போதோ 18,000-ற்கும் மேற்பட்டோர் உள்ளனர்!
அப்போது 1938-ல் முழுநேர ஊழியத்தை நான் ஆரம்பித்தபோது, 55 வருடங்கள் கழித்து நான் இன்னும் அதில் ஒரு பங்கைக் கொண்டிருந்து அனுபவித்து மகிழ்வேன் என்று நினைத்துப்பார்க்கவேயில்லை. அதிகரித்துக்கொண்டேபோகும் வயதின் மத்தியிலும், நாங்கள் யெகோவாவின் பலத்தினால், எங்களுடைய உறுதியளிக்கப்பட்ட வெகுமதியை எதிர்நோக்கிச் செல்கிறோம். நாங்கள் சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கிறோம்: “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.”—சங்கீதம் 100:5.
[பக்கம் 21-ன் படம்]
லேயா மற்றும் சில்வி கால்லியா யெகோவாவுக்கான தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை 1934-ல் அடையாளப்படுத்தினர்
[பக்கம் 23-ன் படம்]
லேயா மற்றும் சில்வி தங்களுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட சேவையின் 60 வருடங்களை அணுகுகையில், ஒரு சமீபகால நிழற்படம்