‘இசைந்துகொடுக்கிற விசுவாசத்தை’ உடைய மதம்
ஹங்கேரியின் அரசாங்கம், பிற்பட்ட-கால பரிசுத்தவான்களுக்குரிய இயேசு கிறிஸ்துவின் சர்ச்சுக்கு முழு அங்கீகாரம் அளித்தபோது, தி உவால் ஸ்டிரீட் ஜர்ணல் (செய்தித்தாள்) பின்வருமாறு கூறியது: “முற்போக்கு மக்களாட்சிகளிலும் சர்வாதிபத்திய ஆட்சி சமுதாயங்களிலும் இடங்கள் பெறுவதற்கான மார்மன் மதத்தின் திறமை வியக்கத்தக்கது.” இந்த சர்ச் எவ்வாறு இதைச் சாதிக்கிறது? அந்தப் பத்திரிகை சொல்லுகிறபடி, “அதற்கு முக்கிய காரணம் அந்த மார்மன்களின் உயர் பிறப்பு வீதங்களோ, தங்கள் சுவிசேஷத்தை வலுக்கட்டாயமாக பரவச் செய்வதோ அல்ல. மாறாக, அந்த விசுவாசத்துக்குள் அமைக்கப்பட்ட இசைந்துகொடுக்கும் தன்மையே.” எவ்வாறு?
கிழக்கு ஐரோப்பாவில் சமீபத்தில் உண்டான அரசியல் மாற்றங்களுக்கு முந்திய காலப்பகுதியைப்பற்றிப் பேசி, இந்தப் பத்திரிகை பின்வருமாறு கூறியது: “ப்ரிகாம் யங் சர்வகலாசாலையிலிருந்து இசைக்கலைத் திறமைவாய்ந்த மற்றும் மக்கள்-நடன தொகுதிகளைப் பயன்படுத்தி இந்த மார்மன்கள், பெரும்பான்மையான பொதுவுடைமைக் கொள்கையர் நாடுகளில், மிஷனரிகள் பொதுவாய் எதிர்ப்படும் அடக்குமுறை மற்றும் ஒத்துழையாமையை சங்கடமில்லாமல் சமாளித்திருக்கின்றனர்.” அவர்களுடைய கூட்டங்கள் ருமேனியா, செக்கொஸ்லாவேக்கியா, ஹங்கேரி, போலாந்து, ரஷியா, மற்றும் சீனா, ஆகிய இடங்களுக்கு மட்டுமல்லாமல், செளதி அரேபியா, லிபியா, எகிப்து, ஜோர்டன், சொமாலியா, மற்றும் இஸ்ரயல் ஆகியவற்றிற்கும் சென்றிருக்கின்றன. மேலும், “மார்மன் சர்ச்சின் செல்வம் மார்க்கிஸ்ட் மற்றும் மூன்றாம் உலக நாடுகளுக்குள் நுழைவதற்கு நெம்புகோலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.” அணை-கட்டுதலும் கிணறு-தோண்டுதலும் மார்மன் நன்கொடைகளால் ஆதரிக்கப்படும் திட்டங்களில் அடங்கியவை.
இன்ப-அவா கொண்ட மற்றும் பணப்பசியுள்ள இன்றைய உலகத்தில், அத்தகைய பாட்டும்-நடனமும் பண உதவியளிக்கும் தந்திரோபாயங்களும் பலத்தக் கவர்ச்சியூட்டி இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:2, 4) ஆனால் செம்மறியாட்டைப் போன்றவர்கள், நிச்சயமாகவே, நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் குரலால் வசீகரிக்கப்படுகின்றனர். (யோவான் 10:27) இதனிமித்தமே, அவர் “சகல ஜாதியாரின் ஜனங்களையும் சீஷராக்குங்கள்,” என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கட்டளையிட்டபோது, எந்த வழிவகையிலாயினும் எந்த பணசெலவிலாயினும் அவ்வாறு செய்யும்படி சொல்லவில்லை, ஆனால் ‘தாம் கட்டளையிட்ட யாவற்றையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பி’ப்பதால் அதைச் செய்யச் சொன்னார். (மத்தேயு 28:19, 20) இந்தப் பொறுப்பளிப்பை நிறைவேற்றுவதில், பைபிள் தராதரங்களை விட்டுக்கொடுத்து இசைந்துபோவதற்கு இடமில்லை.