வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
லூக்கா 1:62 தெரிவிப்பதாகத் தோன்றுகிறபடி, முழுக்காட்டுபவனான யோவானின் தகப்பன், சகரியா, ஊமையாகும்படி மட்டுமல்லாமல் செவிடாகும்படியும் செய்யப்பட்டாரா?
சகரியா செவிடுமானாரென சிலர் முடிவுசெய்திருக்கின்றனர். நாம் பைபிள் விவரத்தில் வாசிப்பதாவது: “எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள். அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்.”—லூக்கா 1:59-63.
ஓரளவான காலம் வரை சகரியா செவிகேளாமல் இருந்தாரென திட்டமாய்ச் சொல்லும் எதுவும் இந்த விவரத்தில் இல்லை.
முன்னால் காபிரியேல் தூதன், ஒரு குமாரன் பிறக்கப்போவதையும் அவன் யோவான் என அழைக்கப்பட வேண்டுமென்பதையும் சகரியாவுக்கு அறிவித்தான். வயதான சகரியா அதை நம்புவதைக் கடினமாகக் கண்டார். தூதன் பின்வருமாறு பதிலளித்தான்: “இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய்.” (லூக்கா 1:13, 18-20) சகரியா செவிகேட்பதல்ல, அவருடைய பேச்சே பாதிக்கப்படுமென தேவதூதன் சொன்னான்.
அந்த விவரம் மேலும் சொல்வதாவது: “அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.” (லூக்கா 1:22) “ஊமை” என இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல், பேச்சில், செவிகேட்பதில், அல்லது இரண்டிலுமே மழுங்கிப்போயிருக்கும் எண்ணத்தைத் தெரிவிக்கிறது. (லூக்கா 7:22) சகரியாவைப் பற்றியதென்ன? அவர் சுகப்படுத்தப்பட்டபோதும் நடந்ததைக் கவனியுங்கள். “உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.” (லூக்கா 1:64) இது சகரியாவின் பேசும் திறமை மாத்திரமே பழுதாயிற்றென்ற கருத்துக்கு நியாயப்படி வழிநடத்துகிறது.
அவ்வாறெனில், மற்றவர்கள் ஏன் சகரியாவினிடம் பிள்ளைக்கு “என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்”? சில மொழிபெயர்ப்பாளர்கள் இதைச் “சைகை மொழியில்” என அல்லது “சைகைமொழியைப் பயன்படுத்தி” எனவும் மொழிபெயர்த்திருக்கின்றனர்.
தேவதூதன் அறிவித்ததுமுதற்கொண்டு ஊமையாயிருந்த சகரியா, தன் மனதில் உள்ளவற்றைச் சொல்ல அடிக்கடி சைகைகளை, ஒருவகையான சைகை மொழியை, பயன்படுத்தும்படி வற்புறுத்தும்நிலையில் இருந்தார், உதாரணமாக, ஆலயத்தில் இருந்தவர்களிடம் தொடர்ந்து “சைகை காட்டி”னார். (லூக்கா 1:21, 22) பின்னால் அவர் எழுத்துப் பலகை ஒன்றைக் கேட்டபோது, சைகைகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். (லூக்கா 1:63) ஆகையால், ஊமையாயிருந்த காலத்தின்போது அவரைச் சுற்றியிருந்தவர்களும் இயல்பாக சைகைகளைப் பயன்படுத்தும் போக்கை மேற்கொண்டிருக்கக்கூடும்.
எனினும், லூக்கா 1:62-ல் குறிப்பிடப்பட்டுள்ள சைகைகளுக்குப் பெரும்பாலும் பொருத்தமான ஒரு விளக்கும் உண்டு. எலிசபெத் அப்போதுதான் தன் குமாரனின் பெயரைப்பற்றித் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்திக் கூறியிருந்தாள். ஆகவே, அவளுக்கு மறுத்துரைக்காமல், அவர்கள் வெறுமென அவளுடைய கணவரின் தீர்மானத்தைப் பெறும் அடுத்த மற்றும் சரியான படியை மேற்கொண்டிருக்கலாம். இதை அவர்கள் வெறுமென தலையாட்டுவதால் அல்லது ஒரு சைகை குறிப்பதால் செய்திருக்க முடியும். சகரியா வாசிப்பதற்கு அவர்கள் தங்கள் கேள்வியை எழுதாததுதானே அவர் தன் மனைவியின் வார்த்தைகளைக் கேட்டிருந்தாரென்பதற்கு அத்தாட்சியாயிருக்லாம். இவ்வாறு, அவருக்குச் செய்த ஒரு வெறும் தலையசைப்பு அல்லது சைகைக் குறிப்பு. (‘சகரியாவே, நீரும் உட்பட) நாமெல்லாரும் அவளுடைய சிபாரிசைக் கேட்டோம், ஆனால் பிள்ளையின் பெயரைப்பற்றி உம்முடைய முடிவானத் தீர்மானம் என்ன?” என்று பொருள்படும் வல்லமையைக் கொண்டிருக்கலாம்.
நிலைமையை மாற்றுவதாய், அதன்பின் உடனடியாக மற்றொரு அற்புதம் நிகழ்ந்தது. “உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, . . .பேசினான்” (லூக்கா 1:64) அவருடைய செவிகேட்பது பாதிக்கப்பட்டிராவிடில் அதைப்பற்றிக் குறிப்பிடுவதற்குத் தேவைப்படவில்லை.