செவிகொடுக்க எவரேனும் ஒருவர் நமக்கு வேண்டும்
மனிதர்களாக, நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் காண முயற்சி செய்கிறோம். ஆனால் தனிப்பட்ட பிரச்னைகள் எழும்பும் போது, நம்முடைய மனக்கலக்கங்களைக் குறித்து பேச எவரேனும் ஒருவரைக் கொண்டிருப்பது எத்தனை பிரயோஜனமாயும் ஆறுதலளிப்பதாயும் இருக்கிறது!
டாக்டர் ஜார்ஜ் S. ஸ்டீவன்சன் சொல்கிறார்: “காரியங்களை மனம்விட்டு பேசுவது உங்கள் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, உங்கள் கவலையை தெளிவான வெளிச்சத்தில் காண உங்களுக்கு உதவி செய்கிறது, அநேகமாக அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம் என்பதைக் காண உங்களுக்கு உதவி செய்கிறது.” டாக்டர் ரோஸ் ஹில்ஃபெர்டிங் குறிப்பிட்டார்: “நாம் அனைவருமே நம்முடைய மனக்கலக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கவலையை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். செவிகொடுத்து கேட்க மனமுள்ளவரும் புரிந்துகொள்ளக்கூடியவருமான ஒருவர் உலகில் இருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.”
நிச்சயமாகவே, எந்த மனிதனும் முழுமையாக இந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. நேரம் கட்டுப்படுத்தப்பட்டதாயும் மற்ற காரணங்கள் இருப்பதாலும் நமக்கு மிகவும் தேவைப்படுகின்ற சமயத்தில் நம்பிக்கைக்குரிய நம்முடைய மனித நண்பர்கள் கிடைக்காதவர்களாக இருப்பார்கள் அல்லது ஒரு சில விஷயங்களை நம்முடைய மிக நெருங்கிய நண்பர்களிடமும்கூட கலந்து பேச நாம் தயங்கக்கூடும்.
என்றபோதிலும், மெய்க் கிறிஸ்தவர்கள் முழுவதுமாக செவிகொடுத்து கேட்கும் ஒரு செவியில்லாமல் ஒருபோதும் இருப்பதில்லை, ஏனென்றால் ஜெபிப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. யெகோவா என்ற பெயருடைய நம்முடைய சிருஷ்டிகராகிய கடவுளிடம் ஜெபிக்கும்படியாக பைபிள் திரும்ப திரும்ப நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாம் உண்மை மனதுடனும், இயேசுவின் நாமத்திலும், கடவுளுடைய சித்தத்திற்கிசைவாகவும் ஜெபிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறோம். தனிப்பட்ட மற்றும் அந்தரங்கமான விஷயங்களும் கூட ஜெபிப்பதற்கு தகுதியான விஷயங்களாக இருக்கின்றன. பிலிப்பியர் 4:6-ல் “எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை . . . தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று நாம் சொல்லப்படுகிறோம். என்னே குறிப்பிடத்தக்க ஒரு வரம்! நம்முடைய பிரபஞ்சத்தின் பேரரசர் தம்முடைய மனத்தாழ்மையுள்ள ஊழியர்கள் அவர்கள் எந்தச் சமயத்திலும் அவரை அணுக விரும்பினாலும் அவர்களுடைய ஜெபங்களை வரவேற்கவும் ஏற்றுக்கொள்ளவும் எப்போதும் தயாராக இருக்கிறார்.—சங்கீதம் 83:17; மத்தேயு 6:9-15; யோவான் 14:13, 14; 1 யோவான் 5:14.
என்றாலும், கடவுள் உண்மையில் செவிகொடுத்து கேட்கிறாரா? ஜெபத்தின் பலன், மனித திறமைக்கு கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறதா என்பதாகச் சிலர் யோசிக்கக்கூடும்: ஒரு நபர் தன் எண்ணங்களை வரிசைப்படுத்தி அவைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தி ஜெபிக்கிறார். இவ்விதமாக தன் பிரச்னையை விளக்கிய பின், அவர் பொருத்தமான ஒரு பரிகாரத்தை நாடி, அதை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய அனைத்துக் காரியங்களையும் குறித்து விழிப்புள்ளவராய் இருக்கிறார். அவருடைய பிரச்னை தீர்க்கப்படுகையில், அவர் அதற்குரிய நன்மதிப்பை கடவுளுக்குக் கொடுக்கலாம், ஆனால் உண்மையில் அவருடைய சொந்த மனதும் முயற்சிகளுமே விரும்பிய பலன்களை உண்டுபண்ணின.
உண்மையில் ஜெபத்துக்கு இருப்பதெல்லாம் இது மாத்திரமே என்பதாக அநேகர் இன்று நினைக்கிறார்கள். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? ஜெபத்தின் வல்லமை இவ்விதமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதா? தன்னுடைய ஜெபங்களுக்கு இசைவாக ஒரு நபர் செய்யும் மனதின் மற்றும் சரீர முயற்சிகள், பதில்களைப் பெற்றுக்கொள்வதில் முக்கியமான ஒரு பங்கை வகிப்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. என்றபோதிலும் இந்த விஷயத்தில் கடவுளுடைய சொந்த பங்கைப் பற்றியதென்ன? நீங்கள் கடவுளிடமாக ஜெபிக்கையில் அவர் செவிகொடுத்து கேட்கிறாரா? உங்கள் ஜெபங்களை அவர் முக்கியமாக கருதி, அவற்றின் பொருளடக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அவைகளுக்கு பிரதிபலிக்கிறாரா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் முக்கியமானதாகும். கடவுள் நம்முடைய ஜெபங்களுக்கு தம் கவனத்தைச் செலுத்துவதில்லையென்றால், ஜெபத்திற்கு வெறுமென உளவியல் மதிப்புத்தானே இருக்கிறது. மறுபட்சத்தில், நம்முடைய ஜெபங்கள் ஒவ்வொன்றையும் கடவுள் அக்கறையோடு பெற்றுக்கொண்டு செவிகொடுத்துக் கேட்கிறாரென்றால், இப்படிப்பட்ட ஓர் ஏற்பாட்டுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! ஒவ்வொரு நாளும் அந்த ஏற்பாட்டை பயன்படுத்திக்கொள்ள அது நம்மைத் தூண்ட வேண்டும்.
அப்படியென்றால் இந்த விஷயங்களைப் பற்றி பின்வரும் கட்டுரை பேசுவதால் தொடர்ந்து வாசிக்கும்படியாக நாங்கள் உங்களை அழைக்கிறோம். (w92 4/15)