பைபிள் ஏன் கடவுளுடைய ஏவப்பட்ட ஈவாக உள்ளது
“தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் கூறுகிறது, மேலும் ஞானமும் வல்லமையும் அவருக்குரியவையெனவும் குறிப்பிடுகிறது. (1 யோவான் 4:8; யோபு 12:13; ஏசாயா 40:26) “அவர் வழிகளெல்லாம் நியாயம்” எனவும் அது நமக்குச் சொல்கிறது. (உபாகமம் 32:4) பைபிள் சொல்கிறபடி, கடவுள் இரக்கம், உருக்கம் போன்ற இத்தகைய பண்புகளையும் காட்டுகிறார்.—யாத்திராகமம் 34:6; ரோமர் 9:15.
யெகோவா தேவன் இத்தகைய பண்புடையவரென பைபிள் குறிப்பிடுவதால். தட்டித் தடவி தேடும் மனிதர்களை இது அவரிடமாக இழுக்கிறது. இந்தப் புத்தகம் படைப்பைப் பற்றியும், பாவம் மற்றும் மரணத்தின் தொடக்கத்தைப் பற்றியும், கடவுளுடன் திரும்ப ஒப்புரவாகுவதற்குரிய வழிவகையைப் பற்றியும் பேசுகிறது. பூமிக்குத் திரும்பக் கொண்டுவரப்படவிருக்கிற பரதீஸைப் பற்றிய கவர்ச்சிகரமான நம்பிக்கையையும் இது அளிக்கிறது. எனினும் பைபிள் கடவுள் கொடுத்த ஏவப்பட்ட ஈவு என நிரூபிக்க முடிந்தால் மாத்திரமே மதிப்புள்ளதாயிருக்கும்.
பைபிளும் விஞ்ஞானமும்
குற்றச்சாட்டுகளின்பேரில் பைபிள் நிலையாக வெற்றிப்பெற்றிருக்கிறது. உதாரணமாக, இதைத் தப்பெண்ணமற்ற திறந்த மனதுடன் வாசிக்கையில், இது உண்மையான விஞ்ஞானத்துக்கு ஒத்திசைவாயிருக்கிறதென கண்டுபிடிக்கப்படுகிறது. நிச்சயமாகவே, பைபிள், விஞ்ஞான பாடபுத்தகமாக அல்ல, ஆவிக்குரிய வழிகாட்டியாகவே தயாரிக்கப்பட்டது. எனினும் பைபிள் விஞ்ஞான உண்மைகளோடு ஒத்திருக்கிறதாவென நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
உடல் உறுப்புகளின் அமைப்பியல்: தொடக்க நிலையிலுள்ள மனித கருவின் ‘அவயவங்கள் அனைத்தும்’ புஸ்தகத்தில் “எழுதியிருக்”கிறதென பைபிள் திருத்தமாய்க் கூறுகிறது. (சங்கீதம் 139:13-16) மூளை, இருதயம், நுரையீரல்கள், கண்கள்—இவையும் உடலின் மற்ற எல்லா உறுப்புகளும் தாயின் கர்ப்பத்திலிருக்கும் கருவுறச் செய்யப்பட்ட கருவின் பிறப்புமூலத்துக்குரிய தொகுப்பில் ‘எழுதப்பட்டிருக்கின்றன.’ இந்தத் தொகுப்பில் இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் சரியான வரிசைமுறைப்படி தோன்றுவதற்கான உட்புற கால அட்டவணைகளும் அடங்கியுள்ளன. சற்று சிந்தித்துப் பாருங்கள்! மனித உடலின் இந்தப் படிப்படியான வளர்ச்சியைப்பற்றிய உண்மை, பிறப்புமூலத்துக்குரிய தொகுப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பைபிளில் பதிவுசெய்யப்பட்டது.
மிருக வாழ்க்கை: பைபிள் சொல்கிறபடி, “முயலானது அசைபோடுகிறது.” (லேவியராகமம் 11:6) ஃப்ரான்காய் போர்லியர் (பாலூட்டும் பிராணிகளின் இயற்கை சரித்திரம், The Natural History of mammals, 1964, பக்கம் 41) பின்வருமாறு கூறுகிறார்: “இந்தத் ‘திரும்ப உண்ணும்’ பழக்கம் அல்லது உணவை ஒருமுறைமட்டுமே குடலுக்குள் செல்ல வைப்பதற்குப் பதிலாக, இருமுறை செல்ல வைக்கும் பழக்கம், குழிமுயல்களிலும் முயல்களிலும் சாதாரணமான இயல்நிகழ்ச்சியாக இருப்பதாய்த் தோன்றுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் குழிமுயல்கள் பொதுவாய் தங்கள் இரவு சாணங்களை மெல்லாமல் சாப்பிட்டு விழுங்குகின்றன, இது காலையில் வயிற்றில் மொத்தமாய் அடங்கியுள்ளவற்றில் பாதியளவை உண்டுபண்ணுகின்றன. காட்டு முயல்களில் இவ்வாறு திரும்ப உண்பது நாள்தோறும் இருமுறை நடக்கிறது, ஐரோப்பிய முயலுக்கும் இதே பழக்கம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.” இதன் சம்பந்தமாக, உலகத்தின் பாலூட்டும் பிராணிகள் (Mammals of the World) (E. P. உவாக்கர், 1964 புத்தகம் II, பக்கம் 647) என்ற புத்தகம் பின்வருமாறு கூறுகிறது: “இது அசைபோடும் பாலூட்டும் பிராணிகள் ‘உணவை வாய்க்குத் திரும்பக்கொண்டுவந்து மெல்லு’வதற்கு ஒத்திருக்கலாம்.”
தொல்பொருள் ஆராய்ச்சி: களிமண் எழுத்துப் பலகைகள், மண்பாண்டங்கள், கல்வெட்டுப் பொறிப்புகள், மற்றும் இவைபோன்றவற்றின் கண்டுபிடிப்புக்களால், பைபிளில் குறிப்பிட்டுள்ள அரசர்கள், நகரங்கள், மற்றும் ஜாதிகள் தெளிவுபெற்றனர். உதாரணமாக, வேதவார்த்தைகளில் குறிப்பிட்டுள்ள ஏத்தியர் போன்ற ஜனங்கள் உண்மையில் வாழ்ந்திருந்தனர். (யாத்திராகமம் 3:8) பைபிள் உயிர்ப்புள்ளதாகிறது (The Blible Comes Alive) என்ற தன் புத்தகத்தில், சர் சார்ல்ஸ் மார்ஸ்டன் பின்வருமாறு கூறினார்: “பைபிளில் பொதுமக்களின் விசுவாசத்தைத் தள்ளாடச் செய்து, அதன் அதிகாரத்தைத் தகர்க்கச் செய்தவர்கள், வெளிப்பட செய்யப்பட்ட அத்தாட்சிகளால் தங்களையே தகர்த்துக்கொண்டனர், அவர்களுடைய அதிகாரம் அழிக்கப்பட்டது. அழிவு உண்டாக்கக்கூடிய குற்றங்குறை உரைப்பதை, மண்வெட்டி, சந்தேக உண்மைகளின் எல்லையிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்டுக்கதைக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது.”
தொல்பொருள் ஆராய்ச்சி பல வழிகளில் பைபிளை ஆதரித்திருக்கிறது. உதாரணமாக, கண்டுபிடிப்புகள் ஆதியாகமம் 10-ம் அதிகாரத்தில் காணப்படும் இடங்களையும் பெயர்களையும் உண்மையென உறுதிசெய்திருக்கின்றன. தோண்டியெடுப்பவர்கள், ஆபிரகாம் பிறந்த, வாணிக மற்றும் மத மையமாயிருந்த ஊர் என்ற கல்தேயர் தேசத்துப் பட்டணத்தைத் தோண்டி வெளிப்படுத்தினார்கள். (ஆதியாகமம் 11:27-31) எருசலேமின் தென் கிழக்குப் பகுதியிலிருந்த கீகோன் நீரூற்றுக்கு மேல், அரசன் தாவீது கைப்பற்றின எபூசியரின் பட்டணத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். (2 சாமுவேல் 5:4-10) அரசன் எசேக்கியாவின் ஊற்றுநீர்க் கால்வாய், அல்லது சாலகம் முடியும் இடத்தில் சீலோவாம் கல்வெட்டு எழுத்துப் பொறிப்பு 1880-ல் கண்டுபிடிக்கப்பட்டது. (2 இராஜாக்கள் 20:20) பொ.ச. 19-வது நூற்றாண்டில் தோண்டியெடுக்கப்பட்ட நபோனிடஸ் நாளாகமத்தில், பொ.ச.மு. 539-ல் மகா கோரேசுவின் கைகளில் பாபிலோன் வீழ்ந்தது விவரிக்கப்பட்டுள்ளது. பொ.ச. 1880-க்கும் 1890-க்கும் இடையே பெர்ஸிபாலிஸிலிருந்து கிடைத்த கல்வெட்டு எழுத்துப்பொறிப்புகளிலிருந்தும் சூசானில், அல்லது சூசாவில், அரசன் ஸெர்க்ஸெஸின் (அகாஸ்வேருவின்) அரமனை கண்டுபிடித்ததிலிருந்தும் எஸ்தர் புத்தகத்திலுள்ள நுட்பவிவரங்கள் உறுதிசெய்யப்பட்டன. செசரியாவிலிருந்த ஒரு ரோம அரங்கத்தின் இடிந்துகிடந்த பாழ்க்கடிப்பில், 1961-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எழுத்துப்பொறிப்பு, இயேசுவை கழுமரத்தில் அறையும்படி ஒப்புக்கொடுத்த ரோம தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து இருந்ததை நிரூபித்தது.—மத்தேயு 27:11-26.
வானாராய்ச்சி: ஏறக்குறைய 2,200 ஆண்டுகளுக்கு முன்னால்—இந்தப் பூமி உருண்டையாயிருந்ததென பொதுவில் ஜனங்கள் அறிவதற்கு வெகு காலத்துக்கு முன்னால்—தீர்க்கதரிசியாகிய ஏசாயா, “அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்,” என்று எழுதினார். (ஏசாயா 40:22) “வட்டம்” என சில பைபிள்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த எபிரெய சொல் சக் (chugh) “உருண்டை” எனவும் மொழிபெயர்க்கப்படலாம். (எபிரெய மற்றும் கல்தேய வேத எழுத்துக்களின் சொல்விளக்கப்பட்டியல் [A Concordance of the Hebrew and Chaldee Scriptures,] B. டேவிட்ஸன் என்பவராலாகியது) பின்னும், பூமியின் அடிவானத்தின் “இந்த வட்டம்” வானவெளியிலிருந்தும் சிலசமயங்களில் உயரப் பறக்கும் ஆகாயவிமான பயணத்தின்போதும் தெளிவாகக் காணப்படுகிறது. அதே சமயத்தில் “பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்,” என யோபு 26:7 கூறுகிறது. இது உண்மை, எவ்வாறெனில், இந்தப் பூமிக்குக் காணக்கூடிய ஆதார வழிவகை ஒன்றும் இல்லையென வானாராய்ச்சியாளர்கள் அறிந்திருக்கின்றனர்.
தாவரவியல்: இயேசு கிறிஸ்து “ஒரு கடுகுவிதை”யை “சகல விதைகளிலும் சிறிது” எனக் குறிப்பிட்டுப் பேசினதால் பைபிள் பிழையுள்ளதென சிலர் தவறாக முடிவு செய்கின்றனர். (மாற்கு 4:30-32) பெரும்பாலும், இயேசு கருங்கடுகு செடியின் விதையை (பிராஸிக்கா நிக்ரா அல்லது சினாப்ஸிஸ் நிக்ரா [Brassica nigra அல்லது Sinapis nigra]) மனதில் கொண்டிருக்கலாம், இது விட்டத்தில் ஏறக்குறைய 1-லிருந்து 1.6 மில்லிமீட்டர் அளவேயுள்ளது. பகட்டு மலர்ச்செடியின் விதைகள் போன்று, மாவைப்போல் அவ்வளவு மிகப் பொடியாயுள்ள இதைவிட சிறிய விதைகளும் இருக்கின்றனவெனினும், இயேசு, பகட்டு மலர்ச் செடிகளை வளர்க்கும் ஜனங்களிடம் பேசிக்கொண்டில்லை. உள்ளூர் விவசாயிகள் விதைக்கும் பல்வேறு வகைகளில், இந்தக் கடுகுவிதையே மிகச் சிறியதாயிருந்ததென அந்தக் கலிலேய யூதர்கள் அறிந்திருந்தனர். இயேசு ராஜ்யத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார், தாவரவியலில் ஒரு பாடத்தைக் கற்பித்துக்கொண்டில்லை.
மண்ணியல் ஆராய்ச்சி: படைப்பைப் பற்றிய பைபிள் விவரத்தைக் குறித்து, பெயர்பெற்ற மண்ணியலமைப்பு ஆராய்ச்சியாளர் உவாலஸ் ப்ராட் பின்வருமாறு கூறினார்: “மண்ணியலமைப்பு ஆராய்ச்சியாளனாக நான், பூமியின் தொடக்கத்தையும் அதன்மீது உயிர்வாழ்க்கையின் தோற்றத்தையும் குறித்த எங்கள் நவீன எண்ணங்களை, ஆதியாகமம் நோக்கிப்பேசும் வகையான மரபினரைப்போன்ற எளிய, நாட்டுப்புற வாழ்க்கை நடத்தும் ஆட்களுக்குச் சுருக்கமாக விளக்கங்கூறும்படி அழைக்கப்பட்டால், ஆதியாகமத்தின் முதல் அதிகாரத்தின் மொழிநடையின் பெரும்பாகத்தை நுட்பமாய்ப் பின்பற்றுவதைப் பார்க்கிலும் மேன்மையாக என்னால் செய்ய முடியாது.” ஆதியாகமம் நிகழ்ச்சிகளின் வரிசை முறை—சமுத்திரங்கள் தோன்றினது, நிலம் வெளிப்பட்டது, பின்பு கடற் பிராணிகள், பறவைகள் மற்றும் பாலூட்டும் மிருகங்களின் தோற்றம்—மண்ணியல் சரித்திர வளர்ச்சி காலத்தின் முதன்மையான பிரிவுகளின் முக்கியமான வரிசைமுறையாகும்.
மருத்துவக்கலை: மருத்துவர் பைபிளை ஆராய்கிறார் (The Physician Examines the Bible) என்ற தன் புத்தகத்தில் C. ரோமர் ஸ்மித் பின்வருமாறு எழுதினார்: “மருத்துவ நோக்குநிலையிலிருந்து கவனிக்க பைபிள் அவ்வளவு நுட்பதிருத்தமாய் இருப்பது எனக்கு மிக வியப்பாயுள்ளது. . . . கட்டிகள், காயங்கள், முதலியவற்றிற்கு, சிகிச்சையைக் குறிப்பிடுகையில், தற்கால தராதரங்களின்படியும் அது திருத்தமாயுள்ளது. . . . பக்கை (buckeye) எனப்படும் மரத்தின் கொட்டையை ஜேப்பில் வைத்துக்கொள்வது கீல்வாதத்தைத் தவிர்க்கும் என்பது; தேரைகளை கையில் பிடிப்பது மறுக்கள் உண்டாகச் செய்யும் என்பது; சிவப்பு மெல்லிய கம்பளித்துணியைக் கழுத்தில் சுற்றிக்கொள்வது தொண்டை வலியைச் சுகப்படுத்தும் என்பது; பெருங்காயம் கொண்ட சிறு பையை அணிந்திருப்பது நோய்களைத் தடுக்கும் என்பது; ஒரு பிள்ளை நோய்ப்படும் ஒவ்வொரு சமயத்திலும் அதற்கு வயிற்றில் புழு இருக்கிறதென்பது போன்ற பல குருட்டு நம்பிக்கைகளைப் பெரும் எண்ணிக்கையான ஜனங்கள் இன்னும் நம்புகின்றனர், ஆனால் இத்தகைய கூற்றுகள் ஒன்றும் பைபிளில் காணப்படுகிறதில்லை. இதுதானே குறிப்பிடத்தக்கது, மேலும் இது எனக்கு அதன் தெய்வீக மூலத்தொடக்கத்தின் நிரூபணமாயுள்ளது.”
சரித்திர நுட்பவிவரங்களில் நம்பத்தக்கது
வழக்கறிஞர் பைபிளை ஆராய்கிறார் (A Lawyer Examines the Bible) என்ற தன் புத்தகத்தில் வழக்கறிஞர் இர்வின் H. லின்டன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “இலக்கிய காவியங்கள், புராணக்கதைகள் மற்றும் பொய்ச் சாட்சியம், எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளை தூரமான ஏதோவோரிடத்திலும் திட்டமல்லாத ஏதோவொரு காலத்திலும் வைப்பதற்குக் கவனமாயிருந்து, இவ்வாறு, நல்லமுறையில் வாதாடுவதற்கு ‘அறிக்கை நேரத்தையும் இடத்தையும் கொடுக்க வேண்டும்,’ என்ற வழக்கறிஞர்களாகிய நாங்கள் கற்றுக்கொள்ளும் முதல் சட்ட விதிகளை மீறுகையில், பைபிள் நிகழ்ச்சி விரிவுரைகள், எடுத்துரைக்கும் காரியங்களின் தேதியையும் இடத்தையும் உச்ச அளவான நுட்பதிட்டமாக நமக்குக் கொடுக்கின்றன.”
அந்தக் குறிப்பை நிரூபிக்க, லின்டன் லூக்கா 3:1, 2-ஐக் குறிப்பிட்டார். அங்கே அந்த சுவிசேஷம் எழுதியவர், இயேசு கிறிஸ்து தம்முடைய ஊழியத்தைத் தொடங்கின காலத்தை உறுதிப்படுத்த ஏழு உயர் அதிகாரிகளைக் குறிப்பிட்டார். பின்வரும் இந்த வார்த்தைகளில் லூக்கா அளித்துள்ள நுட்பவிவரங்களைக் கவனியுங்கள்: “திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும், அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.”
இதைப்போன்ற நுட்பவிவரங்களால் பைபிள் நிரம்பியுள்ளது. மேலும், சுவிசேஷங்களைப்போன்ற இத்தகைய பகுதிகள், யூத, கிரேக்க, மற்றும் ரோம அறிவு வளர்ச்சி உயர்வாய் முன்னேற்றமடைந்திருந்த காலத்தின்போது எழுதப்பட்டன. அது வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆட்சிப் பொறுப்பாளர்கள், போன்றோரின் காலமாயிருந்தது. அவ்வாறெனில், நிச்சயமாகவே, சுவிசேஷங்களிலும் பைபிளின் மற்ற பாகங்களிலும் காணப்படும் நுட்பவிவரங்கள் உண்மைநிகழ்ச்சிகளாக இருந்திராவிடில், அவை ஏய்க்கும் இயல்புடையவையென வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் உலகப்பிரகாரமான சரித்திராசிரியர்கள் இயேசு கிறிஸ்து இருந்ததைப்பற்றிய அத்தகைய குறிப்புகளை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். உதாரணமாக, இயேசுவையும் அவரைப் பின்பற்றினோரையும் குறித்து ரோம சரித்திராசிரியன் டாஸிட்டஸ் பின்வருமாறு எழுதினான்: “கிறிஸ்டஸ், அவரிடமிருந்தே [கிறிஸ்தவர்கள் என்ற] அந்தப் பெயர் தொடங்கினது, திபேரியுவின் ஆட்சியின்போது நம்முடைய மாகாண அதிகாரிகளில் ஒருவனாகிய, பொந்தியு பிலாத்துவின் கைகளில் கடும் உச்ச அளவான தண்டனையை அனுபவித்தார்.” பைபிள் சரித்திரப் பூர்வமாய்த் திருத்தமாக இருப்பது, அது மனிதவர்க்கத்துக்குக் கடவுள் கொடுத்த ஈவென நிரூபிப்பதற்கு உதவிசெய்கிறது.
எல்லாவற்றிலும் மிகப் பெரிய அத்தாட்சி
தொல்பொருள் ஆராய்ச்சி, வானாராய்ச்சி, சரித்திரம், மற்றும் வேறு அறிவு துறைகள் பைபிளை ஆதரிக்கிறபோதிலும், அதில் விசுவாசம் வைப்பது அத்தகைய உறுதிப்பாட்டில் ஆதாரங்கொண்டில்லை. பைபிள் நமக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய ஏவப்பட்ட ஈவு என்பதற்கு இருக்கும் பல நிரூபணங்களுக்குள், அதன் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைப் பார்க்கிலும் மேம்பட்ட அத்தாட்சியை அளிக்க முடியாது.
யெகோவா தேவனே உண்மையான தீர்க்கதரிசனத்தின் மூலகாரணர். அவருடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின்மூலம், அவர் பின்வருமாறு சொன்னார்: “பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (ஏசாயா 42:9) மேலும், அதன் எழுத்தாளர்கள் கடவுளால் அவருடைய பரிசுத்த ஆவியை, அல்லது செயல்நடப்பிக்கும் சக்தியைக் கொண்டு ஏவப்பட்டார்களெனவும் பைபிள் சொல்கிறது. உதாரணமாக, கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது,” என்று கூறினார்.” (2 தீமோத்தேயு 3:16) அப்போஸ்தலன் பேதுரு, “வேதவாக்கியங்களிற் கண்ட எந்தத் தீர்க்கதரிசனமும் அவனவன் வியாக்கியானத்தினால் வருவதல்லவென்று நீங்கள் முதல்முதல் அறிந்துகொள்ளவேண்டும். தீர்க்கதரிசனம் ஒருபோதும் மனுஷசித்தத்தினால் வரவில்லை; கடவுளினிடமிருந்து வந்ததையே பரிசுத்த ஆவியினால் ஏவப்படுகிறவர்களாய் மனுஷர் பேசினார்கள்,” என்று எழுதினார். (2 பேதுரு 1:20, 21, தி.மொ.) ஆகையால் பைபிள் தீர்க்கதரிசனத்தை நாம் பார்க்கலாம்.
பைபிளிலுள்ள நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்களில் அசீரிய தலைநகரமான, நினிவேயைப் பற்றியவையும் அடங்கியுள்ளன. இது பூர்வ மத்திய கிழக்கு முழுவதிலும் 15 நூற்றாண்டுகளுக்குமேல் பயங்கர திகிலூட்டிவந்த “இரத்தப்பழிகளின் நகரம்.” (நாகூம் 3:1) எனினும், நினிவேயின் வல்லமை அதன் உச்சநிலையில் இருக்கையில், பைபிள் பின்வருமாறு அறிவித்தது: “[கடவுள்] நினிவேயை வனாந்தரம்போன்ற வறண்ட பாழிடமாக்குவார். அதின் நடுவில் மந்தைகளும் ஜாதி ஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும், அதின் தூண் தலைப்புகளின்மேல் நாரையும் கொக்கும் இராத்தங்கும், பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகள் பாழாகும்; கேதுரு மரங்களின் மச்சைத் திறப்பாக்கிப் போடுவார்.” (செப்பனியா 2:13, 14, தி.மொ.) இன்று, பார்க்கச் செல்வோர் பூர்வ நினிவேயின் பாழான இடத்தைக் குறிக்கும் ஒரு மண்மேட்டை மாத்திரமே காண்கிறார்கள். மேலும், முன்னறிவிக்கப்பட்டபடியே, செம்மறியாட்டு மந்தைகள் அங்கே புல்மேய்கின்றன.
தரிசனத்தில், கடவுளுடைய தீர்க்கதரிசி தானியேல் இரண்டு கொம்புகளுள்ள ஓர் ஆட்டுக்கடாவையும் தன் கண்களுக்கு நடுவே ஒரு பெரிய கொம்பையுடைய ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் கண்டார். அந்த வெள்ளாட்டுக்கடா அந்த ஆட்டுக்கடாவை முட்டித் தள்ளி, அதன் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது. அதன்பின், அந்த வெள்ளாட்டுக்கடாவின் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று, அதனிடத்தில் நான்கு கொம்புகள் முளைத்தெழும்பின. (தானியேல் 8:1-8) காபிரியேல் தூதன் பின்வருமாறு விளக்கினான்: “நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.” (தானியேல் 8:20-22) சரித்திரம் நிரூபித்திருக்கிறபடி, அந்த இரண்டு-கொம்புகளுள்ள ஆட்டுக்கடா—மேதிய-பெர்சிய பேரரசு—“கிரேக்கு தேசத்தின் ராஜா”வால் கவிழ்க்கப்பட்டது. அந்த அடையாளக் குறிப்பான வெள்ளாட்டுக்கடா ஒரு “பெரிய கொம்பை” மகா அலெக்ஸாந்தரில் கொண்டிருந்தது. அவனுடைய மரணத்துக்குப் பின், அவனுடைய நான்கு படைப்பெருந்தலைவர்கள், “நாலு ராஜ்யங்க”ளில் தங்களை அதிகாரத்தில் நிலைநாட்டிக்கொண்டதால் அந்தப் “பெரிய கொம்பின்” இடத்தை ஏற்றனர்.
எபிரெய வேத எழுத்துக்களில் (“பழைய ஏற்பாட்”டில்) உள்ள பல எண்ணிக்கையான தீர்க்கதரிசனங்கள் இயேசு கிறிஸ்துவின் சம்பந்தமாக நிறைவேற்றமடைந்திருக்கின்றன. இவற்றில் சிலவற்றைக் கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் (“புதிய ஏற்பாட்”டின்) தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளர்கள் அவருக்குப் பொருத்திப் பயன்படுத்தினர். உதாரணமாக, சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு, கன்னியின் மூலம் இயேசு பிறந்ததில், அவருக்கு ஒரு முன்னோடி இருந்ததில், மற்றும் அவர் கழுதைக் குட்டியின்மேல் எருசலேமுக்குள் பிரவேசித்ததில், வேதாகமத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார். (மத்தேயு 1:18-23; 3:1-3; 21:1-9-ஐ ஏசாயா 7:14; 40:3; சகரியா 9:9 உடன் ஒத்துப்பாருங்கள்.) இத்தகைய நிறைவேற்றமடைந்த தீர்க்கதரிசனங்கள் பைபிள் நிச்சயமாகவே கடவுளுடைய ஏவப்பட்ட ஈவு என்று நிரூபிக்க உதவிசெய்கின்றன.
பைபிள் தீர்க்கதரிசனத்தின் தற்போதைய நிறைவேற்றம் நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்று நிரூபிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) இணையற்ற பேரளவுகளில் போர்கள், உணவு போதாக்குறைகள், கொள்ளை நோய்கள், மற்றும் பூமியதிர்ச்சிகள், ராஜ்ய வல்லமையில் இயேசுவின் “வந்திருத்தலைக்” குறிக்கும் இந்த “அடையாளத்”தின் பாகமாயுள்ளன. ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டிருக்கும், நாற்பது லட்சத்துக்கு மேற்பட்ட, யெகோவாவின் சாட்சிகளின் உலகளாவிய நடவடிக்கையும் இந்த அடையாளத்தில் அடங்கியுள்ளது. (மத்தேயு 24:3-14; லூக்கா 21:10, 11) இப்பொழுது நிறைவேற்றமடைந்துகொண்டிருக்கும் பைபிள் தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ள கடவுளுடைய பரலோக அரசாங்கம், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு நித்திய மகிழ்ச்சிக்குரிய ஒரு புதிய உலகத்தை சீக்கிரத்தில் கொண்டுவருமென்றும் நமக்கு உறுதியளிக்கிறது.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-5.
“பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின” என்ற தலைப்பைக் கொண்ட இதோடுசேர்ந்த அட்டவணை வரிசையாய்க் கொடுக்கக்கூடிய பைபிளின் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்களில் சிலவற்றை மாத்திரமே அளிக்கிறது. இவற்றில் சிலவற்றின் நிறைவேற்றம் வேதவார்த்தைகளில்தானே குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் முக்கியமாய்க் கவனிக்கத்தக்கது இன்று நிறைவேறிக்கொண்டிருக்கும் தீர்க்கதரிசனங்களாகும்.
உலகமெங்கும் ஏற்படும் குறிப்பிட்ட சில காரியங்கள் பைபிளில் முன்னறிவிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பெரும்பாலும் காணலாம். மேலும் ஆராய்ந்து பார்க்கலாமல்லவா? நீங்கள் கேட்டால் யெகோவாவின் சாட்சிகள் கூடுதலான நுட்பவிவரங்களை மகிழ்ச்சியுடன் அளிப்பார்கள். மகா உன்னதமானவரையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய அறிவை அடையும்படி நீங்கள் உள்ளப்பூர்வமாய்த் தேடுவது, பைபிள் உண்மையாகவே கடவுளுடைய ஏவப்பட்ட ஈவு என உங்களுக்கு உறுதியான நம்பிக்கை அளிப்பதாக.
[பக்கம் 7-ன் அட்டவணை]
பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின
தீர்க்கதரிசனம் நிறைவேற்றம்
ஆதியாகமம் 49:10 யூதா இஸ்ரவேலின் அரச கோத்திரமாக்கப்பட்டது
செப்பனியா 2:13, 14 ஏறக்குறைய பொ.ச.மு 632-ல் நினிவே
பாழாக்கப்பட்டது
எரேமியா 25:1-11; ஏசாயா 39:6 எருசலேமைக் கைப்பற்றினது 70-ஆண்டு
பாழ்க்கடிப்பைத் தொடங்குகிறது
ஏசாயா 13:1, 17-22; 44:24-28; 45:1,2 கோரேசு பாபிலோனைக் கைப்பற்றுகிறான்;
யூதர்கள் தங்கள் சுயதேசத்துக்குத் திரும்புகின்றனர்
தானியேல் 8:3-8. 20-22 மேதிய-பெர்சியா மகா அலெக்ஸாந்தரால்
கவிழ்க்கப்பட்டது மற்றும் கிரேக்க பேரரசு
பிரிக்கப்பட்டது
ஏசாயா 7:14; மீகா 5:2 இயேசு பெத்லகேமில் கன்னியிலிருந்து பிறந்தார்
(மத்தேயு 1:18-23; 2:1-6)
தானியேல் 9:24-26 இயேசு மேசியாவாக அபிஷேகஞ்செய்யப்படுதல்
(பொ.ச. 29) (லூக்கா 3:1-3, 21-23)
ஏசாயா 53:4, 5, 12 மீட்கும் பலியாக இயேசுவின் மரணம்
(மத்தேயு 20:28; 27:50)
சங்கீதம் 22:18 இயேசுவின் உடைகளின்பேரில் சீட்டுப்போடுதல்
(யோவான் 19:23. 24)
சங்கீதம் 16:10; மத்தேயு 12:40 மூன்றாம் நாளில் இயேசுவின் உயிர்த்தெழுதல்
லூக்கா 19:41-44; 21:20-24 ரோமர்களால் எருசலேம் அழிக்கப்பட்டது
(பொ.ச 70)
லூக்கா 21:10, 11; மத்தேயு 24:3-13; இணையற்ற போர், பஞ்சம், பூமியதிர்ச்சிகள்,
2 தீமோத்தேயு 3:1-5 கொள்ளைநோய்கள்,
அக்கிரமம், மற்றும் இவை போன்றவை,
“கடைசிநாட்களை”க் குறிப்பிட்டுக் காட்டுகின்றன
மத்தேயு 24:14; ஏசாயா 43:10; சங்கீதம் 2:1-9 கடவுளுடைய ராஜ்யம்
ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது, எதிர்ப்போர்
யாவரையும் சீக்கிரத்தில் கைப்பற்றும் என்று
யெகோவாவின் சாட்சிகள் உலகமெங்கும்
வெளிப்படையாக அறிவிக்கின்றனர்
மத்தேயு 24:21-34; வெளிப்படுத்துதல் 7:9-17 யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேச
குடும்பம் கடவுளை வணங்கிக்கொண்டு “மிகுந்த
உபத்திரவத்தைத்” தப்பிப் பிழைப்பதற்கு ஆயத்தம் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
[பக்கம் 8-ன் படம்]
போர், பஞ்சம், கொள்ளைநோய்கள், மற்றும் பூமியதிர்ச்சிகள் இன்று தங்கள் உயிர்ப்பலிகளைக் கொள்ளைகொண்டு போகின்றன. ஆனால் சமாதானத்துக்கும் மகிழ்ச்சிக்குரிய ஒரு புதிய உலகம் அடிவானத்தில் தோன்றுகிறது.