ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
தளராததன்மை நிறைவான பலன்களைக் கொண்டுவருகிறது
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் துன்புறுத்தப்படுவர் என்று சொன்னார். அவ்வாறே அப்போஸ்தலன் பவுலும் 2 தீமோத்தேயு 3:12-ல் சொல்லியிருக்கிறார்: “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” ஆனால் யெகோவா தேவனைச் சேவிப்பதில் தளராததன்மை நிறைவான பலன்களைக் கொண்டுவருகிறது.
◻ மலேசியாவின் வடகிழக்கு கரையோரத்திலுள்ள நகரத்தில் இது உண்மையாய் இருந்தது. ஒரு தகப்பன் புத்த மதப் பிரியராக இருந்து, அவருடைய பிள்ளைகளுக்குக் கடுமையாகப் போதித்திருந்தார். எனினும் அவருடைய மூன்று மகள்களையும் மூன்று மகன்களையும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிப்பதிலிருந்து தடுக்கமுடியவில்லை. அவருடைய மனைவியும் பைபிளில் அக்கறையைக் காண்பித்தார். பின்பு ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அவரைக் கேலிசெய்தார்: “நீ எப்படி உன் பிள்ளைகள்மீதுள்ள கட்டுப்பாட்டை இழந்து, அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக மாறும்படி அனுமதிக்கலாம்? என் பிள்ளைகள் எல்லாரும் என்னோடேயும் நம் மூதாதையரின் புத்த மதத்தோடும் ஒட்டிக்கொள்கிறார்கள். உன்னைப் பார்த்தால் பாவமாயிருக்கு!”
தகப்பன் அவருடைய பிள்ளைகளோடு படிப்புகளை நடத்தின அந்தச் சகோதரியை அடிக்கப்போவதாகப் பயமுறுத்திக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். எனினும் பிள்ளைகள் அவரைச் சமாதானப்படுத்திவிட்டு, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிப்பதைத் தொடர்ந்தனர்; அவர்களுடைய அம்மாவின் ஆதரவால் கூட்டங்களுக்கும்போய் வந்தனர்.
ஆனால் இறுதியில், அந்தத் தகப்பன் முழுக் குடும்பத்தையும் தனக்கு முன்பாக வந்து நிற்கும்படி கட்டளையிட்டார். அவர் இவ்வாறு பயமுறுத்தினார், “தெரிந்தெடுங்கள், என்னையும் வீட்டிலிருப்பதையுமா அல்லது கிறிஸ்தவர்களாகி வீட்டைவிட்டு வெளியேறுவதையா.” மூத்த பையன், மிக அமைதலாக பேசும் பையன், உடனே வெளியேறுவதற்கு பொருள்களை மூட்டைக்கட்ட ஆரம்பித்துவிட்டான். “கூடாது!” என்று தகப்பன் கத்தினார். “நீங்கள் அனைவரும் எதிர்ப்பதால் நான் சாவதே மேல்.” பின்பு வேகமாக வீட்டைவிட்டு வெளியேறுகையில், குடும்பத்தினர் அவரைப் பின்தொடர்ந்து, அவர் தற்கொலை செய்யக்கூடாது என்று மன்றாடினர். அவர்களுடைய வேண்டுதல்களினால் மனங்கவரப்பட்டு, அவர் வீட்டிற்குத் திரும்பினார்.
காலம் கடந்தது. தகப்பன் தன் பிள்ளைகள் நடத்தையில் பைபிள் சத்தியம் கொண்டுள்ள நல்ல பாதிப்பைக் காண ஆரம்பித்தார். ஒரு நாள் அவர் கேலிசெய்த அவருடைய நண்பரைச் சந்தித்தார்; இப்போதோ சோக மனிதனாகக் காட்சியளித்த அவர் இவ்வாறு சொன்னார்: “என் பிள்ளைகளால் நான் அதிக மனக்கஷ்டத்தில் இருக்கிறேன். அவர்கள் என்னை வஞ்சிக்கிறார்கள், மேலும் என்னிடத்திலிருந்து பணத்தைத் திருடியெடுத்துக்கொள்கிறார்கள்.” ஆனால் யெகோவாவின் சாட்சிகளோடு படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளையுடைய தகப்பன் சொன்னார்: “ஓ, என் குழந்தைகளோ வித்தியாசம்! அவர்கள் என்னிடத்தில் அதிக கனிவாய் நடந்துகொள்கிறார்கள். நான் வேலையில்லாமல் இருந்தபோது, என் காருக்கான தவணைகளைக் கொடுக்கவும்கூட எனக்கு உதவிசெய்தார்கள்.”
இப்போது, மூன்று மகள்களும் தாயும் முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறார்கள். ஒரு மகன் விசேஷித்த பயனியராக இருக்கிறார். முன்பு மதப்பற்றும் கோபமும் உடைய தகப்பன்? இப்போது சிநேகப்பான்மையோடு இருக்கிறார்; நினைவுநாள் ஆசரிப்பிற்கும் வந்திருந்தார்.
யெகோவா அந்த மகனையும் அவருடைய மூன்று சகோதரிகளையும் அவர்களின் தாயையும் அவர்களுடைய தளராததன்மைக்குப் பலனளித்திருக்கிறார். அவர்கள் இப்பொழுது உற்சாகமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளாய் இருந்து, யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகின்றனர்.—நீதிமொழிகள் 27:11.