வாழ்க்கை சரிதை
யெகோவாவின் வழிகளில் எட்டுப் பிள்ளைகளை வளர்த்த சவாலும் சந்தோஷமும்
ஜாசிலின் வாலன்டைன் சொன்னபடி
1989-ல் என் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றார். எட்டுப் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள கட்டாயம் அங்கிருந்து பணம் அனுப்புவதாகச் சொன்னார். ஆனால், வாரங்கள் நகர்ந்தன, அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை; மாதங்கள் உருண்டோடின, அப்போதும் தகவலே இல்லை. அங்கு நிலைமை சரியானவுடன் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
பணம் இல்லாததால் குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் திண்டாடினேன். தூக்கமின்றி புழுங்கிய ராத்திரிகள் பல; ‘அவரால் எப்படி எங்களுக்குத் துரோகம் செய்ய முடிந்தது?’ நம்பமுடியாமல் குமுறினேன். அவர் எங்களைக் கைவிட்டுவிட்டார் என்ற கசப்பான உண்மையைக் கடைசியில் என் மனம் ஏற்றுக்கொண்டது. இன்று, அவர் எங்களை விட்டுப் பிரிந்துப்போய் சுமார் 16 வருடங்களாகின்றன; போனவர் போனவர்தான். அதனால், நானே என் பிள்ளைகளை வளர்த்தேன். இது பெரிய சவாலாக இருந்தாலும், அவர்கள் யெகோவாவின் வழியில் நடப்பதைப் பார்த்து அதிக சந்தோஷப்படுகிறேன். நாங்கள் குடும்பமாக எப்படி இந்தப் பிரச்சினையைச் சமாளித்தோம் என்பதை விளக்குவதற்கு முன்பு, நான் வளர்ந்துவந்த கதையைச் சொல்கிறேன்.
பைபிளின் வழிநடத்துதலைத் தேடினேன்
1938-ல் கரீபியன் தீவான ஜமைகாவில் நான் பிறந்தேன். என் அப்பா எந்தவொரு சர்ச்சிலும் சேரவில்லை என்றாலும், தனக்கு கடவுள்பக்தி இருப்பதாகக் கருதினார். எப்போதும் ராத்திரியில் பைபிளிலிருந்து சங்கீதங்களைப் படித்துக்காட்டுமாறு என்னிடம் சொல்வார். கொஞ்ச நாட்களிலேயே, நிறைய சங்கீதங்களை என்னால் மனப்பாடமாகச் சொல்ல முடிந்தது. என் அம்மா பக்கத்து சர்ச்சில் அங்கத்தினராக இருந்தார், எப்போதாவது என்னை அங்கு அழைத்துச்செல்வார்.
நல்லவர்களை கடவுள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வார், ஆனால் கெட்டவர்களை நரகத்தில் என்றென்றும் வதைப்பார் என அங்கு கற்றுக்கொடுத்தார்கள். ஆனாலும், இயேசுதான் கடவுள், பிள்ளைகள் மேல் அவர் அன்பாக இருக்கிறார் எனவும் கற்றுக்கொடுத்தார்கள். நான் ரொம்பவும் குழம்பிவிட்டேன், கடவுளை நினைத்தாலே பயமாக இருந்தது. ‘நம்மேல் அன்பாக இருக்கும் கடவுள் நம்மை எப்படி நெருப்பில் போட்டு வாட்ட முடியும்?’ என்று குழம்பினேன்.
எரிநரகத்தைப் பற்றிய நினைப்பால் எனக்குப் பயங்கரக் கனவுகள் வர ஆரம்பித்தன. அதன்பின், செவன்த் டே அட்வென்ட்டிஸ்ட் சர்ச் ஏற்பாடு செய்த அஞ்சல்வழி கல்வி மூலம் பைபிளைப் படித்தேன். துன்மார்க்கர் என்றென்றும் வதைக்கப்பட மாட்டார்கள், மாறாக அவர்கள் எரிக்கப்பட்டு சாம்பலாகிவிடுவார்கள் என்று அந்த சர்ச்சில் கற்றுக்கொடுத்தார்கள். இது எனக்கு கொஞ்சம் நியாயமாகப் பட்டது, அதனால் அவர்களுடைய கூட்டங்களுக்குப் போகத் தொடங்கினேன். ஆனால் அவர்களுடைய போதனைகள் எனக்குக் குழப்பமாக இருந்தன, ஒழுக்கநெறிகளைப் பற்றிய என்னுடைய தவறான எண்ணங்களை அவை சரிசெய்யவே இல்லை.
அந்தக் காலத்தில், வேசித்தனம் தவறானது என்று மக்கள் பொதுவாகக் கருதினார்கள். என்றாலும், பலருடன் உடலுறவு கொள்பவர்கள்தான் வேசித்தனம் செய்பவர்கள் என்று நானும் மற்ற அநேகரும் நம்பினோம். அதனால், ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமல் தங்களுக்குள் தாம்பத்திய உறவு வைத்திருப்பதில் பாவம் இல்லை என்று நினைத்தோம். (1 கொரிந்தியர் 6:9, 10; எபிரெயர் 13:4) இந்த நம்பிக்கையால் திருமணமாகாமலேயே நான் ஆறு குழந்தைகளுக்குத் தாயானேன்.
ஆன்மீக முன்னேற்றம்
1965-ல் வாஸ்லின் குடிசன், எத்தல் சேம்பர்ஸ் என்ற இரண்டு பெண்கள், அருகிலிருந்த பாத் என்ற நகரில் குடியேறினார்கள். அவர்கள் பயனியர்களாக, அதாவது முழுநேர ஊழியம் செய்த யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள். ஒருநாள் அவர்கள் என் அப்பாவைச் சந்தித்துப் பேசினார்கள். அவர்களுடன் பைபிளைப் படிக்க அவர் சம்மதித்தார். பைபிளைக் கற்றுக்கொடுக்க அவர்கள் வரும்போது, நான் வீட்டில் இருந்தால் என்னிடமும் பேசுவார்கள். யெகோவாவின் சாட்சிகளை நான் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தேன். ஆனாலும், அவர்கள் கற்றுத்தருவது தவறு என்று நிரூபிப்பதற்காவது நான் அவர்களுடன் பைபிளைப் படிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.
பைபிள் படிப்பின்போது நிறைய கேள்விகள் கேட்டேன், அந்தச் சாட்சிகள் எல்லாக் கேள்விகளுக்கும் பைபிளிலிருந்து பதில் சொன்னார்கள். மரித்தவர்களுக்கு எந்த உணர்வும் இல்லை, அவர்கள் நரகத்தில் வேதனைப்படுவதும் இல்லை என்பதை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். (பிரசங்கி 9:5, 10) அதுமட்டுமல்ல, பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையைக் குறித்தும் கற்றுக்கொண்டேன். (சங்கீதம் 37:11, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4) அப்பா பைபிள் படிப்பை நிறுத்தியபோதிலும், பக்கத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்குச் செல்லத் தொடங்கினேன். அந்தக் கூட்டங்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடந்ததைப் பார்த்தபோது யெகோவாவைப் பற்றி இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள தூண்டப்பட்டேன். யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாடு, மாவட்ட மாநாடு போன்ற பெரிய கூட்டங்களுக்கும் சென்றேன். இவ்வாறு, பைபிளைப் பற்றி அதிகம் படிக்கப்படிக்க யெகோவாவை மனப்பூர்வமாக வணங்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் ஊற்றெடுத்தது. ஆனால், ஒரு முட்டுக்கட்டை இருந்தது.
அந்தச் சமயத்தில், நான் திருமணம் செய்யாமலேயே, என் ஆறு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகளின் அப்பாவுடன் வாழ்ந்து வந்தேன். திருமணமாகாமல் தாம்பத்திய உறவு கொள்வதை கடவுள் கண்டிக்கிறார் என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதும் என் மனம் உறுத்த ஆரம்பித்தது. (நீதிமொழிகள் 5:15-20; கலாத்தியர் 5:19) சத்தியத்தின் மேல் எனக்கு அன்பு ஆழமானதும், கடவுளுடைய சட்டத்திற்கிணங்க என் வாழ்க்கையை மாற்ற விரும்பினேன். முடிவாக, ஒரு தீர்மானம் எடுத்தேன். என்னோடு வாழ்ந்து கொண்டிருந்தவரிடம், ‘இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது பிரிந்துவிடலாம்’ என்று சொன்னேன். அவர் என்னுடைய மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் திருமணம்செய்ய ஒப்புக்கொண்டார்; ஆகஸ்ட் 15, 1970-ல் சட்டப்பூர்வமாக நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். யெகோவாவின் சாட்சிகள் முதன்முறையாக என்னைச் சந்தித்து ஜந்து வருஷங்களுக்குப்பின் அது நடந்தது. டிசம்பர் 1970-ல், யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன்.
முதன்முறையாக நான் வெளி ஊழியத்திற்குச் சென்ற நாளை மறக்கவே முடியாது. பைபிளைப் பற்றி எப்படிப் பேசத் தொடங்குவது என்று தெரியாததால் கைகாலெல்லாம் வெடவெடத்தது. ஆனால் முதல் வீட்டுக்காரர், சீக்கிரமாகவே உரையாடலை முடிவுக்குக் கொண்டுவந்தவுடன் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். அதன்பின், கொஞ்ச நேரத்திலேயே பயமெல்லாம் பறந்துவிட்டது. அன்று அநேகரிடம் பைபிளைப் பற்றி சுருக்கமாகப் பேசி, சில பைபிள் பிரசுரங்களைக் கொடுத்தேன், ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
ஆன்மீக ரீதியில் குடும்பத்தை உறுதியாக வைத்திருக்க முயன்றேன்
1977-க்குள் எனக்கு மொத்தம் எட்டுப் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் எல்லாருமே யெகோவாவைச் சேவிப்பதற்கு, என்னால் முடிந்தளவு உதவ வேண்டும் என்று தீர்மானித்தேன். (யோசுவா 24:15) அதனால், தவறாமல் குடும்பப் படிப்பை நடத்த கடினமாக முயன்றேன். ஒரு பிள்ளை பாராவை சத்தமாக வாசித்துக்கொண்டிருக்கும்போது சில சமயங்களில் களைப்பினால் அப்படியே தூங்கிவிடுவேன், பின்பு பிள்ளைகள்தான் என்னை எழுப்புவார்கள். ஆனால் உடல் அசதியைக் காரணங்காட்டி நாங்கள் ஒருபோதும் குடும்பப் படிப்பை விட்டுவிட்டதில்லை.
பிள்ளைகளுடன் நான் அடிக்கடி ஜெபம் செய்தேன். அவர்கள் கொஞ்சம் பெரியவர்களானதும், அவர்களே சொந்தமாக யெகோவாவிடம் ஜெபம் செய்ய கற்றுக்கொடுத்தேன். ஒவ்வொரு பிள்ளையும் தூங்குவதற்கு முன் தனிப்பட்ட ஜெபம் செய்கிறார்களா என்று பார்த்துக்கொள்வேன். ஜெபம் செய்யத் தெரியாத சின்ன குழந்தைகளோடு தனித்தனியாக ஜெபம் செய்வேன்.
பிள்ளைகளைச் சபை கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றதை ஆரம்பத்தில் என் கணவர் எதிர்த்தார். ஆனால், நான் மட்டும் கூட்டங்களுக்குப் போனால் அவர்தான் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் எதிர்ப்பு கொஞ்சம் குறைந்தது. இரவில் தன் நண்பர்களோடு பொழுதுபோக்குவதையே அவர் விரும்பினார்; அந்த நண்பர்களின் வீடுகளுக்கு எட்டுப் பிள்ளைகளையும் அழைத்துச்செல்வதை நினைத்துப் பார்ப்பதே அவருக்கு வெறுப்பாக இருந்தது! ஆகவே பிற்பாடு, பிள்ளைகளை ராஜ்ய மன்றத்திற்கு அழைத்துச்செல்ல தயார் செய்வதில் எனக்கு உதவவும் ஆரம்பித்துவிட்டார்.
சபை கூட்டங்களுக்குச் செல்வதும், ஊழியத்தில் பங்குகொள்வதும் சீக்கிரத்திலேயே பிள்ளைகளுக்குப் பழக்கமாகிவிட்டது. கோடை விடுமுறையில், சபையிலிருந்த பயனியர்களுடன், அதாவது முழுநேர ஊழியர்களுடன் பிரசங்கிக்க அவர்கள் அடிக்கடி சென்றுவிடுவார்கள். சபை மீதும், ஊழியத்தின் மீதும் மனப்பூர்வமான அன்பை வளர்த்துக்கொள்ள இது என் பிள்ளைகளுக்கு உதவியது.—மத்தேயு 24:14.
சோதனைக் காலம்
குடும்பத்தின் பணக்கஷ்டத்தைத் தீர்க்க என் கணவர் வெளிநாடுகளுக்குச் செல்லத் தொடங்கினார். அவர் வெகுகாலம் அங்கேயே இருந்துவிடுவார், இருந்தாலும் அவ்வப்போது எங்களை வந்து பார்த்துவிட்டுச் செல்வார். ஆனால் 1989-ல் சென்றவர் திரும்பி வரவேயில்லை. நான் முன்பு சொன்ன விதமாக, அவர் எங்களைக் கைவிட்டுவிட்டதால் நிலைகுலைந்து போனேன். அநேக இரவுகள் யெகோவாவிடம் அழுது உருக்கமாக ஜெபித்தேன்; வேதனையைத் தாங்கிக்கொள்ள சக்தியையும் ஆறுதலையும் தருமாறு மன்றாடினேன். அவர் என் ஜெபங்களுக்குப் பதில் அளித்ததை உணர்ந்தேன். ஏசாயா 54:4, 1 கொரிந்தியர் 7:15 போன்ற வசனங்கள் எனக்கு மன சமாதானத்தையும், தொடர்ந்து வாழ்வதற்கான பலத்தையும் கொடுத்தன. கிறிஸ்தவ சபையில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உணர்ச்சி ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள். அவர்கள் செய்த உதவிக்காக யெகோவாவுக்கும் அவரது மக்களுக்கும் அதிக நன்றியுள்ளவளாய் இருக்கிறேன்.
எங்களுக்கு வேறு பல சோதனைகளும் வந்தன. பைபிளுக்கு எதிரான ஒரு காரியத்தைச் செய்ததால் என்னுடைய ஒரு மகள் ஒருசமயம் சபைநீக்கம் செய்யப்பட்டாள். பிள்ளைகளை நான் அதிகமாக நேசித்தாலும், என் உத்தமத்தன்மை முதலில் யெகோவாவுக்குத்தான். அதனால் சபைநீக்கம் செய்யப்பட்டவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென பைபிள் சொல்கிறதோ அப்படியே நானும் என் மற்ற பிள்ளைகளும் அந்தச் சமயத்தில் நடந்துகொண்டோம். (1 கொரிந்தியர் 5:11, 13) எங்கள் சூழ்நிலைமையைப் புரிந்துகொள்ளாதவர்களிடமிருந்து நிறைய ஏச்சுப்பேச்சுகளை கேட்க வேண்டிவந்தது. ஆனால் என் மகள் சபையில் திரும்ப சேர்க்கப்பட்டதும், பைபிள் நியமங்களை நாங்கள் உறுதியாகப் பின்பற்றியதைப் பார்த்து மனம் கவரப்பட்டதாக அவளுடைய கணவர் சொன்னார். இப்போது அவர் குடும்பமாக யெகோவாவைச் சேவிக்கிறார்.
பணப்பிரச்சினைகளைச் சமாளித்தல்
என் கணவர் எங்களை விட்டுச்சென்ற சமயத்தில், எனக்கு நிலையான வருமானம் எதுவும் இருக்கவில்லை, அவரிடமிருந்தும் பணம் வரவில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலை, எளிமையான வாழ்க்கையில் திருப்தி காணவும் பொருள் செல்வத்தைவிட ஆன்மீகச் செல்வத்திற்கே மதிப்பு கொடுக்கவும் எங்களுக்குக் கற்பித்தது. பிள்ளைகள் ஒருவரையொருவர் நேசித்து, ஒருவருக்கொருவர் உதவிசெய்யக் கற்றுக்கொண்டதால், அவர்கள் ரொம்பவும் அன்யோன்யமானார்கள். வளர்ந்த பிள்ளைகள் வேலை செய்ய ஆரம்பித்ததும், அவர்களே முன்வந்து தங்கள் கூடப்பிறந்தவர்களுக்குத் தோள்கொடுத்தார்கள். என் கடைசி மகள் நிகால் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு மூத்த மகள் மார்செரீ உதவினாள். அதோடு, நான் ஒரு சின்ன மளிகைக் கடை நடத்திவந்தேன். அதில் கிடைத்த சிறிய வருமானம், எங்களுடைய சில பொருளாதாரத் தேவைகளைக் கவனித்துக்கொள்ள உதவியது.
யெகோவா எங்களை ஒருபோதும் கைவிடவில்லை. ஒருமுறை, ‘பணம் இல்லாததால் மாவட்ட மாநாட்டிற்குப் போக முடியாது’ என்று ஒரு கிறிஸ்தவ சகோதரியிடம் சொன்னேன். அதற்கு அவர்: “சகோதரி வாலன்டைன், மாநாட்டுத் தேதி தெரியவந்தவுடன் உங்கள் பங்கில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய ஆரம்பித்துவிடுங்கள். தேவையானதை யெகோவா தருவார்” என்று சொன்னார். அவர் சொன்னபடியே செய்தேன். தேவையானதை யெகோவா தந்தார், இன்னமும் தந்துகொண்டே இருக்கிறார். பணப் பற்றாக்குறையால் நாங்கள் ஒருபோதும் மாநாடுகளைத் தவறவிட்டதில்லை.
கில்பர்ட் என்று பெயரிடப்பட்ட சூறாவளி, 1988-ல் ஜமைகாவைச் சின்னாபின்னமாக்கியது; அதனால், நாங்கள் வீட்டைவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றோம். சூறாவளி கொஞ்சம் ஓய்ந்ததும், இடிந்துகிடந்த எங்கள் வீட்டைப் பார்ப்பதற்காக நானும் என் மகனும் சென்றோம். அப்போது நான் தேடிக்கொண்டிருந்த ஒரு பொருள் என் கண்ணில் சிக்கியது. ஓடிப்போய் அதை எடுத்துக்கொண்டேன். அந்தச் சமயம்பார்த்து, திடீரென பேரிரைச்சலோடு திரும்பவும் காற்று வீசியது, ஆனாலும் அந்தப் பொருளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே இருந்தேன். “அம்மா, அந்த டிவியை கீழே போடுங்கள். நீங்கள் என்ன லோத்துவின் மனைவியா?” என்று என் மகன் சொன்னான்; அப்போதுதான் எனக்கு புத்தி வந்தது. (லூக்கா 17:31, 32) மழையில் நனைந்துபோயிருந்த அந்த டிவி செட்டைப் போட்டுவிட்டு, பாதுகாப்பான இடத்தை நோக்கி இருவரும் ஓடினோம்.
ஒரு டிவி செட்டுக்காக என் உயிரையே ஆபத்துக்குள்ளாக்க இருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, என் உடம்பு நடுங்குகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் என் மகன் ஆன்மீக எச்சரிப்பு கொடுத்ததை நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது. எனக்கு ஏற்படவிருந்த பயங்கரமான சரீர, ஆன்மீக ஆபத்துகளிலிருந்து என்னை அவனால் பாதுகாக்க முடிந்தது; அதற்குக் காரணம், கிறிஸ்தவ சபையிலிருந்து அவனுக்குக் கிடைத்த வேதப்பூர்வ பயிற்சிதான்.
சூறாவளி எங்கள் வீட்டையும் உடைமைகளையும் சின்னாபின்னமாக்கியது, எங்கள் மனதையும் துவண்டுபோகச் செய்தது. பிறகு, கிறிஸ்தவ சகோதரர்கள் அங்குவந்து சேர்ந்தார்கள். யெகோவாமீது நம்பிக்கையாய் இருந்து இந்த இழப்புகளைத் தைரியமாகச் சமாளிக்கவும், ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடவும் எங்களை ஊக்குவித்தார்கள். எங்கள் வீட்டைத் திரும்பக் கட்டவும் உதவினார்கள். ஜமைகாவிலிருந்த சாட்சிகளும் வெளிநாடுகளிலிருந்து வந்த மற்ற சாட்சிகளும் அன்போடு, சுயதியாக மனப்பான்மையோடு மனமுவந்து செய்த உதவிகள் எங்கள் மனதைத் தொட்டன.
யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்தோம்
என் இரண்டாவது மகள் மெலென் தன் படிப்பை முடித்ததும், முழுநேர பயனியராகச் சேவை செய்தாள். பிறகு, வேறொரு சபையில் பயனியராகச் சேவை செய்ய அழைக்கப்பட்டாள்; அதற்காக அவள் தன்னுடைய வேலையை விடவேண்டியிருந்தது. அந்த வேலை குடும்பத்தைக் காப்பாற்ற பெரிதும் உதவியதென்றாலும், நாங்கள் எல்லாரும் ராஜ்ய அக்கறைகளை முதலில் வைக்கும்போது யெகோவா நிச்சயம் எங்களைக் கவனித்துக்கொள்வார் என்ற முழு நம்பிக்கையோடு இருந்தோம். (மத்தேயு 6:33) பிறகு, பயனியர் சேவை செய்ய என் மகன் யூவனுக்கும் அழைப்பு வந்தது. குடும்பத்திற்குத் தேவையான பண உதவியை அவன் அளித்து வந்தபோதிலும், அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அவனை உற்சாகப்படுத்தினோம், யெகோவாவின் ஆசீர்வாதம் கிடைக்குமென்று வாழ்த்தி அனுப்பினோம். ராஜ்ய சேவையை அதிகமாகச் செய்வதிலிருந்து என் பிள்ளைகளை நான் ஒருபோதும் தடுத்ததில்லை, இதனால் வீட்டிலிருந்த மற்றவர்களுக்கு எந்தப் பற்றாக்குறையும் ஏற்பட்டதே இல்லை. அதற்குப் பதிலாக, எங்களுடைய சந்தோஷம்தான் அதிகரித்திருக்கிறது, கஷ்டத்திலுள்ள மற்றவர்களுக்கும் சில சமயம் எங்களால் உதவ முடிந்திருக்கிறது.
இன்று, என் பிள்ளைகள் ‘சத்தியத்திலே நடப்பதைப்’ பார்க்கும்போது அதிக சந்தோஷமாக இருக்கிறது. (3 யோவான் 4) என் மகள் மெலென், வட்டாரக் கண்காணியான தன் கணவருடன் சேர்ந்து பயண ஊழியம் செய்துகொண்டிருக்கிறாள். என் மகள் ஆன்டிரியாவும் அவள் கணவரும் விசேஷப் பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள், அவள் கணவர் உதவி வட்டாரக் கண்காணியாகச் சபைகளுக்கு விஜயம் செய்யும்போது கூடவே அவளும் செல்வாள். என் மகன், யூவனும் அவன் மனைவியும் விசேஷப் பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள், அவன் ஒரு மூப்பராகவும் இருக்கிறான். இன்னொரு மகள், எவா-கெ, ஜமைகாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் தன் கணவருடன் சேவை செய்கிறாள். ஜெனிஃப்பர், ஜெனிவ், நிகால் ஆகியோர் தங்கள் கணவர், பிள்ளைகளோடு அவரவருடைய சபைகளில் சுறுசுறுப்பான பிரஸ்தாபிகளாக இருக்கிறார்கள். மார்செரீ என்னுடன் இருக்கிறாள், நாங்கள் இருவரும் போர்ட் மரான்ட் சபைக்குச் செல்கிறோம். ஆம், அபரிமிதமான ஆசீர்வாதங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, என் எட்டு பிள்ளைகளுமே யெகோவாவைச் சேவித்து வருகிறார்கள்.
வயது ஆக ஆக நிறைய சரீர உபாதைகளை எதிர்ப்பட்டு வருகிறேன் இப்போது மூட்டு அழற்சி நோய் இருக்கிறது, என்றாலும் சந்தோஷமாக பயனியர் ஊழியம் செய்கிறேன். ஆனால், சில வருஷங்களுக்கு முன், நான் வசித்த மலைப்பாங்கான இடத்தில் நடந்துசெல்வது எனக்கு மிகவும் கஷ்டமாக ஆனது. ஊழியத்திற்குச் செல்வதும் அதிக கஷ்டமாக ஆனது. அதனால் சைக்கிள் ஓட்ட ‘ட்ரை’ செய்தேன், நடப்பதைவிட அது எவ்வளவோ தேவலாம்போல் இருந்தது. அதனால், செகன்ட்-ஹான்ட் சைக்கிள் ஒன்றை வாங்கினேன். மூட்டு அழற்சி நோயோடு நான் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து என் பிள்ளைகள் வருத்தப்பட்டார்கள். ஆனால், என் மனவிருப்பப்படி தொடர்ந்து நான் ஊழியம் செய்வதைப் பார்த்து அவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள்.
என்னுடைய பைபிள் மாணவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது என் உள்ளம் பூரிக்கிறது. என் குடும்பத்திலுள்ள எல்லாரும் இந்த முடிவு காலத்தில் மட்டுமல்ல, நித்திய காலத்திற்கும் விசுவாசத்தில் நிலைத்திருக்க உதவுமாறு எப்போதும் யெகோவாவிடம் ஜெபம் செய்கிறேன். என் எட்டுப் பிள்ளைகளையும் அவருடைய வழியில் வளர்ப்பதன் சவாலைச் சமாளிக்க அவரே எனக்கு உதவினார்; “ஜெபத்தைக் கேட்கிற” மகத்தானவராகிய அவருக்கே துதியும் நன்றியும் செலுத்துகிறேன்.—சங்கீதம் 65:2.
[பக்கம் 10-ன் படம்]
என் பிள்ளைகள், அவர்கள் துணைவர்கள், மற்றும் பேரப்பிள்ளைகளோடு
[பக்கம் 12-ன் படம்]
இப்போது நான் ஊழியத்திற்கு சைக்கிளில் செல்கிறேன்