கடவுளிடம் நெருங்கிவருவது சமாளிக்க எனக்கு உதவிற்று
மதத்தில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட எல்லா மதங்களுமே எனக்குப் போலியாகத் தோன்றின. மக்களை மற்றவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ள முடியாதவர்களாக்கியிருப்பதைத் தவிர அது மக்களுக்கு அதிக பயனுள்ளவற்றைச் செய்ததை என்னால் காணமுடியவில்லை. அப்போது 1960-களின் பிற்பகுதியாயிருந்தது. ஐ.மா.வின் ஒரு ஜனாதிபதி கொலை செய்யப்பட்டார். இதனால் வியட்நாமின் ஒரு போரில் ஆயிரக்கணக்கானோர் மாண்டுகொண்டிருந்தனர். உலகம் ஒரு பெரிய குழப்பத்திலிருந்தது. என்னுடைய சொந்த வாழ்க்கையுங்கூட நிலையிழந்துகொண்டிருந்தது. என்மீது அல்லது மனிதவர்க்கத்தின்மீது அக்கறையுடைய ஒரு கடவுள் எப்படி இருக்கமுடியும்?
திருமணமாகி, இரண்டு குழந்தைகளையுடைய எனக்கு அப்போது வயது 27. ஒரு மனநல மருத்துவ நிலையத்தில் முழுநேர வேலை செய்துவந்தேன். அச்சமயத்தில்தான் அயலவர் ஒருவர் பைபிளைப்பற்றி என்னிடம் பேசத் தொடங்கினார். ஆச்சரியகரமாகவே, என்னையே அறியாமல் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசி நாட்கள் என்று அவர் அழைத்த காலத்தைப்பற்றி பேசினார். அவர் பேசியது வித்தியாசமாக இருந்தது. ஆனால் எனக்குப் பதில்கள் தேவைப்பட்டன. நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற தலைப்பையுடைய ஒரு புத்தகத்தை என்னிடத்தில் விட்டுச் சென்றார். நான் ஒரே இரவில் அதைப் படித்து, எல்லா வசனங்களையும் எடுத்துப் பார்த்துவிட்டு, ‘நான் சத்தியத்தைக் கண்டடைந்துவிட்டேனா?’ என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
கண்டடைந்துவிட்டிருந்தால், அது எனக்கு ஒரு பிரச்னையை உண்டாக்கும். நான் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு ஒரு யூத கணவனும் இரண்டு சிறு குழந்தைகளும், யூத உறவினர்களும் இருந்தனர். நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறியிருந்தால் அவர்கள் அமைதியிழப்பார்கள் என்று எனக்குத் தெரியும். எனவே தேவையில்லாமல் என் குடும்பத்தினரைப் புண்படுத்த நான் விரும்பவில்லை; நான் நிச்சயமுள்ளவளாக இருக்கவேண்டும். நான் பைபிள் பிரசுரங்களைப் பேராவலுடன் படிக்க ஆரம்பித்தேன். ஒரே வாரத்தில் இதுதான் சத்தியம் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்தது. இது நான் செய்யவேண்டிய ஒன்றாக இருந்தது. ஆகவே யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு சில வாரங்களுக்குள் நான் எல்லாருக்கும் பிரசங்கித்துக்கொண்டிருந்தேன். கடவுளுடைய பெயர் யெகோவா, அவர் என்மீதும் மனிதவர்க்கம் முழுவதின்மீதும் அக்கறையுடையவராக இருக்கிறார், பரதீசிய பூமியில் என்றென்றும் வாழ்வது கூடிய காரியமே என்றெல்லாம் அறிவதில் நான் கிளர்ச்சியடைந்தேன். நான் 1970 ஜூன் 12-ம் தேதி முழுக்காட்டப்பட்டேன்.
நான் சந்தேகப்பட்டதுபோலவே, என் குடும்பத்தினரும் என் கணவனுடைய வீட்டாரும் மிகவும் வருந்தினர். சிலர் என்னைப் புறக்கணிக்கவும் செய்தனர். என்னுடைய கணவனோ பல வருடங்களாக அவ்வப்போது படித்தார், ஆனால் ஒரு விசுவாசியாக மாறவேயில்லை. இருப்பினும், என்னுடைய பிள்ளைகள் யெகோவாவின் சாட்சிகளாக மாறினர். தொடக்கத்திலிருந்தே, கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை வீடுவீடாகச் சென்று பிரசங்கிக்கும் ஒரு முழுநேர ஊழியராக இருக்கவேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் வளர்ந்துவரும் ஒரு குடும்பத்தையும் அவிசுவாசியான ஒரு கணவனையும் கொண்டிருந்தேன். நானும் முழுநேரவேலை செய்தபோதிலும், வாடகை கொடுக்கமுடியாமல் இரண்டுமுறை நாங்கள் வீட்டைக் காலி செய்யவேண்டிய நிலை வந்தது, அநேக தடவைகளில் எங்களுக்கு வசிப்பதற்கு இடமே இல்லாமற்போயிற்று. வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது.
ஒருமுறை நாங்கள் எங்களுடைய வீட்டின் அடமான மீட்புரிமையை இழந்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் வீட்டைக் காலி செய்யவேண்டியவர்களாய் இருந்தோம். வசிக்க எங்களுக்கு வேறு இடமே இல்லை. என்னால் முடிந்ததெல்லாம் நான் செய்தேன். இறுதியில் அதற்கு முந்தின நாள், சனிக்கிழமை காலை, இயேசு மத்தேயு 6:33-ல் சொன்னதுபோல் செய்ய—ராஜ்யத்தை முதலாவது தேடி, எனக்குத் தேவையான காரியங்களை யெகோவா தருவதற்காகக் காத்திருக்க—தீர்மானித்தேன். நான் பொது ஊழியத்திற்குச் சென்றேன். அந்தச் சூழ்நிலை ஏற்படுத்திய அழுத்தத்தினால் அழுதது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் ஐந்து நிமிடங்களுக்குள் நான் நன்றாக உணர்ந்தேன். பிரசங்க வேலை என்மீது மிகவும் நேர்நிலையான ஒரு பாதிப்பைக் கொண்டுவருவதை நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்; அது என்னுடைய பிரச்னைகளுக்கெல்லாம் மேலே என்னை உயர்த்துகிறது, யெகோவாவின் ஆவி என்னைச் சந்தோஷமாகவும் பலனுள்ளவளாகவும் வைத்திருந்து என்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது. எப்படியோ, அந்நாளில் நான் வீட்டுக்கு வந்தபோது, எங்களுக்குப் வசிப்பதற்கு இன்னும் எந்தவொரு இடமும் இல்லாதிருந்தது. ஆனால் நான் நன்றாக உணர்ந்தேன்.
அதே மாலையில் எங்களுடைய வீட்டுத் தேவைகளைக் கையாண்டுவரும் ஒரு சொத்துத் தரகு நிறுவனத்திடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது இரவு 11:30. எங்களுக்குப் வசிக்க இடமேயில்லாததால் அந்த வீட்டுமனை தரகர் எங்கள்மீது மிகவும் அக்கறை காட்டினார். எனவே எங்களுக்குக் கிடைக்கவேண்டியிருந்த வீடு தயாராகும்வரை நாங்கள் தற்காலிகமாக தங்கியிருக்க ஓர் இடத்தைக் கண்டுபிடித்துத் தந்தார். ஆகவே ஞாயிற்றுக்கிழமை நாங்கள் அந்த வீட்டிற்கு மாற என்னுடைய சக சாட்சிகள் உதவிசெய்தனர். எங்களுடைய சாமான்களையெல்லாம் பெட்டிகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு மூன்று வாரங்களுக்கு நாங்கள் அங்கு வாழ்ந்தோம். இறுதியில் எங்களுடைய வீடு தயாரானதும் அதற்கு மாறிவிட்டோம். அது சுலபமாக இருக்கவில்லை, ஆனால் எங்களுக்குத் தேவை ஏற்பட்டபோது யெகோவா தந்தார். இது என்னை மிகவும் உறுதிபடுத்தி என்னுடைய விசுவாசத்தைக் கட்டியெழுப்பியது. இது தாவீது ராஜா சங்கீதம் 37:25-ல் “நான் இளைஞனாயிருந்தேன். முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை,” என்று கூறியதுபோல இருந்தது.
குடும்ப நிதியை நிர்வகிப்பதிலுங்கூட கஷ்டங்கள் இருந்தன. சில சமயங்களில் நானே நிதி நிர்வாக பொறுப்பை ஏற்று, எல்லா காரியங்களையும் சரிப்படுத்துவேன். இக்காலகட்டத்தின்போது, என்னுடைய திருமணத்தைப் பாதுகாக்க நான் ஊக்கமுடன் முயற்சித்தேன். இது பெரும்பாலும் யெகோவா தேவனிடமாக எனக்கிருந்த அன்பினாலும், திருமண ஏற்பாட்டிற்கான மரியாதையினாலுமே ஆகும். என்னுடைய கணவர் திருந்தி சத்தியத்திற்குள் வருவார் என்று என் இருதயத்தின் ஆழத்தில் நம்பிக்கையாயிருந்தேன்.
நான் ஒழுங்கான பயனியராவதற்குத் தொடர்ந்து ஜெபித்து, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் துணைப் பயனியராக சேவைசெய்தேன்.a என்னுடைய வாழ்க்கையைப் பயன்படுத்த மிகச் சிறந்த மற்றும் மிக முக்கியமான வழி பிரசங்கிப்பதே என்பதை அறிந்திருந்தேன். நான் யெகோவாவை நேசித்தேன்; அவரை முழு மனதோடு சேவிக்க விரும்பினேன். மக்களையும் நான் நேசித்தேன்; அவர்களுக்கும் உதவிசெய்ய விரும்பினேன். கடினமான என்னுடைய சொந்த வாழ்க்கையிலிருந்து, பைபிள் நியமங்கள் எவ்வளவு பயனுள்ளவையாய் இருந்தன என்பதைப் போற்றினேன். எனவே இந்த ராஜ்யம் கொடுக்கக்கூடிய நம்பிக்கை மக்களுக்குத் தேவை என்பதை அறிந்திருந்தேன். ஆனால் நான் வேலை செய்யாவிடில் என்னுடைய குடும்பத்திற்கு வாழ்க்கையின் தேவைகள் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்தேன். ஏற்கெனவே எங்களுக்கு இவை இருந்தும் இல்லாமலும் வாழ்ந்துவந்தோம்.
நான் கூச்சலிட்டேன், கற்பழிப்பவன் ஓடிவிட்டான்
பின்னர் என்னுடைய வாழ்க்கையில் மற்றொரு சம்பவம் நடந்தது. இது யெகோவா எப்போதுமே என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து, என்மீது அக்கறை கொள்கிறார் என்ற விசுவாசத்தை எனக்குக் கொடுத்தது. யாரோ ஒருவன் என்னுடைய வீட்டை உடைத்து என்னைக் கற்பழிக்க முயற்சித்தான். நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவன் என்னைத் தாக்கினான். நான் விழித்துக்கொண்டபோது, கூச்சலிட்டாலோ அசைந்தாலோ கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தினான். நான் திகிலடைந்துபோயிருந்தாலும் ஜெபம் செய்யும்படியும் செய்யத்தகுந்த ஒவ்வொரு காரியத்தையும் சீர்தூக்கிப்பார்க்கும்படியும் நான் அமைதியாகவும் சமயோசித புத்தியுடனும் இருக்க யெகோவா எனக்கு உதவிசெய்தார். கூச்சலிடுவதைப்பற்றி பைபிள் என்ன சொல்லியிருக்கிறது என்பதை நான் அறிந்திருந்தேன். ஆனால் நான் கூச்சலிட்டால் அவன் ஒருவேளை என்னைக் கொன்றுவிடுவான்; பின்பு என் குழந்தைகள் விழித்துக்கொள்வார்கள், அவர்களையும் அவன் கொல்லுவான் என்று உணர்ந்தேன். ‘காலமானார்’ பத்திகளில் என் பெயர் தோன்றுவதை என் மனக்கண்ணில் பார்த்தேன். பின்னர் நான் இறந்தால் என் பிள்ளைகளைக் காப்பாற்றும்படி யெகோவாவிடம் ஜெபித்தேன். இருந்தாலுங்கூட பைபிள் சொன்னதைச் செய்தேன்—கூச்சலிட்டேன். (உபாகமம் 22:26, 27) கற்பழிப்பவன் ஓடிவிட்டான். அந்த இரவில் இறந்துவிடப்போகிறேன் என உண்மையிலேயே நம்பிவிட்டேன். யெகோவாவோடு எப்பொழுதைப்பார்க்கிலும் அதிகம் நெருங்கிவந்தேன்.
என்னுடைய வேலையை விட்டுவிட்டு 1975-ல் நான் ஓர் ஒழுங்கான பயனியராக சேவைசெய்யத் தொடங்கினேன். ஆறு வருடங்களாக நான் பயனியர் சேவை செய்துவந்தேன்; வீட்டுச் செலவுகளை என் கணவர் ஏற்றுக்கொண்டார். சந்தோஷத்தை இழக்கும்வகையில், சிறிய வயதில் எனக்குச் சர்க்கரை வியாதி வந்து, ஒரு சமயத்தில் நான் மிக மோசமான நிலையில் இருந்தேன். அதைச் சமாளிக்க தொடர்ந்து இன்னும் அதிகமாக யெகோவாவைச் சார்ந்திருந்தேன். என்னுடைய சூழ்நிலைமைகள் இப்படி இருந்தபோதிலும், அந்த வருடங்கள்தான், இதுவரை எனக்கு இருந்த வருடங்களைவிட அதிக பலனுள்ளவையாயும் மிகுந்த சந்தோஷமுடையவையாயும் இருந்தன. முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு முன்னேறிய பல பைபிள் மாணாக்கர்களை எனக்குத் தந்து யெகோவா ஆசீர்வதித்தார். அவர்களில் சிலர் பயனியர்களாகவும் ஆனார்கள்.
பிறகு, 1980-ல், என் வாழ்க்கை சிதறியது. எனக்கும் என் கணவருக்குமிடையே ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டது. என் குழந்தைகள் மிகவும் கலக்கமடைந்தனர். எனவே அவர்களுக்காக என் திருமணத்தைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால் என் கணவரோ என்னுடைய முயற்சிகளுக்குச் சாதகமாகப் பிரதிபலிக்கவில்லை. இக்கட்டத்தில், வேதப்பூர்வ திருமணவிலக்குப் பெறுவதற்கு இது தகுந்த சமயம் என்பதை நான் அறிந்திருந்தேன். அவருடைய பிரிவு என்னுடைய குழந்தைகள்மீது நாசத்துக்குரிய பாதிப்பைக் கொண்டிருந்தது.
இந்தச் சமயத்தில் நான் தொடர்ந்து பயனியராக சேவை செய்ய முழுமூச்சுடன் முயற்சித்தேன். சுமார் ஒரு வருடத்திற்கு மட்டுமே அதைத் தொடரமுடிந்தது. எனினும், என்னுடைய மகள், நிலைமையைச் சமாளிக்கமுடியாமல், என்னையும் சத்தியத்தையும் உட்பட எல்லாவற்றையும் எதிர்க்க ஆரம்பித்தாள். அவளுடைய நடத்தையின் காரணமாக இச்சமயத்தில் நான் பயனியர் சேவையை நிறுத்திவிட்டேன். இது என்னை நொறுக்கியது; என் உயிர்நாடி துண்டிக்கப்பட்டது. யெகோவாவைத் தவிர மற்றெல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோல, தனிமையிலுணர்ந்தேன்.
கிட்டத்தட்ட இக்கட்டத்தில்தான், தாங்கள் அறிந்திருந்த அளவைவிட அதிகம் எனக்குதவிய இரண்டு அன்பார்ந்த சகோதரர்களை யெகோவா எனக்குக் கொடுத்தார். அதில் ஒருவர் ஒரு வட்டார கண்காணி. மற்றவர் மற்றொரு சபையின் மூப்பர். என் கணவர் இவரிடம் படித்ததால் என்னுடைய சூழ்நிலைமைகளை இவர் அறிந்திருந்தார். மனிதரில் உள்ள இந்த வரங்களுக்காக யெகோவாவுக்கு நான் ஒருபோதும் போதுமான அளவு நன்றி செலுத்தமுடியாது. அவர்கள் எப்பொழுதுமே எனக்கு அன்பார்ந்தவர்களாக இருப்பார்கள்.
விரைவில், மிகவும் இளவயதில், என் மகள் சத்தியத்திற்கு வெளியே திருமணம் செய்துகொண்டாள். இது குடும்பத்தைச் சிதறடித்து, எங்களை முழுமையாக வருத்தத்தில் ஆழ்த்தியது. இதற்குப்பின் விரைவில் என் மகன் தனியே பிரிந்து போய்விட்டான். என் குடும்பம் சத்தியத்தில் நிலைத்திருக்க யெகோவா உதவிசெய்யும்படி இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு அருமையானவர்களாக இருந்தனர். நான் அதிகம் விரும்பியதெல்லாம், அவர்கள் யெகோவாவோடு நிலைத்திருக்கவேண்டும் என்பதுமட்டுமே. நான் சத்தியத்தில் கழித்த வாழ்நாளெல்லாம் இதுவே என்னுடைய இடைவிடா ஜெபமாயிருந்திருக்கிறது. அந்தச் சமயம் என்னுடைய திருமண வாழ்க்கையின் இருபது வருடங்கள் முழுவதையும்விட மோசமானதாக இருந்தது. அந்த இருபது வருடங்களும் மோசமான காலமாக இருந்தன. இருந்தபோதிலும், இதைக் கடக்க எப்படியாவது யெகோவா உதவிசெய்வார் என்று எனக்குத் தெரியும். என்னவானாலும் சரி நான் அவருடைய சித்தத்தைச் செய்தேதீரவேண்டும்.
ஒரு நிகழ்ச்சி எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. நான் இன்னும் பயனியராக சேவித்துக்கொண்டிருந்தேன். எங்களுக்குப் பணமே இல்லாதிருந்தது; ஆனால் வாரக்கடைசியைக் கழிக்க சுமார் 70 டாலர்கள் தேவைப்பட்டது. அடுத்த வாரம் வேலைக்குச் செல்ல தேவையான போக்குவரத்துச் செலவுக்கு மட்டும் என்னிடம் பணம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு ஒரு தற்காலிக பணியாளாக வேலைசெய்தேன். வழக்கமாகவே சம்பாதித்த பணம்—சுமார் 40 டாலர்கள்—கைக்குக் கிடைக்க சுமார் ஒரு வாரம் காத்திருக்கவேண்டியிருக்கும். சாப்பாட்டிற்கு என்னிடத்தில் பணமேயில்லை, போக்குவரத்துச் செலவுக்கும் மிகக் குறைந்த பணமேயிருந்தது. அடுத்த நாள் இரவு ஒரு பெண்மணியோடு எனக்கு ஒரு பைபிள் படிப்பு இருந்தது. அவர் எனக்கு ரயில் கட்டணம் கொடுத்து உதவினார்.
அடுத்த நாள் காலை வெள்ளிக்கிழமை. தபால்களைப் பெறுவதற்காகப் போனேன், இரண்டு கடிதங்கள் இருந்தன. ஒன்று நான் அடுத்த வாரம் எதிர்பார்த்த காசோலை (cheque). மூன்று நாட்களுக்குக் குறைந்த சமயத்தில் அது நகர வங்கிக்குச் சென்று என்னுடைய கணக்கில் இடப்பட்டிருந்தது. நான் வியப்படைந்தேன். நிலைமையைச் சமாளிக்க எனக்கு இன்னும் 29 அல்லது 30 டாலர்கள் தேவைப்பட்டது. இரண்டாவது உறையில் எனக்கு எவ்வளவு தேவைப்பட்டதோ அந்த 29 டாலர்களுக்கான ஒரு காசோலை இருந்தது. இதில் உண்மையிலேயே ஆச்சரியத்துக்குரிய காரியம் என்னவென்றால், அந்த வருடம் பிப்ரவரி மாதம் என்னுடைய வீட்டைச் சூடுபடுத்த எண்ணெய் வாங்குவதற்கு அரசாங்கம் எனக்கு ஒரு மானியம் கொடுத்திருந்தனர். இப்பொழுது ஆகஸ்ட் ஆகிவிட்டது. அவர்கள் எனக்கு 29 டாலர்கள் கொடுக்கவேண்டியிருக்கிறது என்று தீர்மானித்தனர்—ஆகஸ்டில், சூடுபடுத்துவதற்காகவா? எனக்கு ஏதோ கொடுக்கவேண்டியிருக்கிறதென்று அவர்கள் ஏன் தீர்மானிக்கவேண்டும்? அதைவிட ஆச்சரியமாக ஆகஸ்டில் எண்ணெய் வாங்கவா? விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்னே ஒரு பாதிப்பை அது என்மீது கொண்டிருந்தது!
பொருளாதார காரியங்கள் பதிலல்ல
நான் முழுநேரவேலை செய்ய ஆரம்பித்தேன். நான் செய்த வேலையில் கம்ப்யூட்டரை உபயோகிக்கக் கற்றுக்கொண்டேன். நான் பயனியராக சேவை செய்யாத வருடங்கள் மிகவும் கடினமானவையாயிருந்தன. எனக்கு ஒரு சிறந்த வேலை, நிதி பாதுகாப்பு, பொருளாதார காரியங்கள் போன்றவை இருந்தபோதிலும், நான் சந்தோஷமாய் இருந்தில்லை. என் பிள்ளைகள் என்னைவிட்டுத் தனியாக வாழ்ந்துவந்தனர், அதிகக் கடினமான பிரச்னைகளைக் கொண்டிருந்தனர். என்னுடைய மகள் சத்தியத்திற்குத் திரும்ப வந்துகொண்டிருந்தாள், இருப்பினும் அவளுக்குப் பிரச்னைகளிருந்தன. என்னுடைய மகனுக்கும் பிரச்னைகள் இருந்துவந்தன. சில காலத்திற்குப் பிறகு, நான் மிகவும் அருமையாகக் காத்துவந்த யெகோவாவோடுள்ள அந்த நெருங்கிய உறவையே இழந்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன். மற்றவர்கள் யாரும் அறியமுடியவில்லை என்றாலும் நான் யெகோவாவிடமிருந்து விலகிச் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தேன். இன்னும் நான் எல்லாக் கூட்டங்களுக்கும் ஆஜராயிருந்தேன், வெளிஊழியத்தில் பங்குபெற்றேன், ஆனால் அது எனக்கு போதுமானதாக இல்லை. நண்பர்களோடு அதிகம் பழக ஆரம்பித்தேன். ஆனால் அதுவும் எனக்கு உதவிசெய்யவில்லை.
நான் எனக்காக வருந்தத் தொடங்கினேன். என் மனதுக்குக் கவனம் செலுத்தி என்னைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். நான் இதைவிட ஏதாவது அதிகத்தைப் பெற தகுதியுடையவளாக இருக்கிறேன் அல்லவா? சந்தேகமின்றி, சாத்தானுக்குத் தேவையானதும் இதுவே. முதல் முறையாக, நான் என்னுடைய உடன்வேலையாட்களிடமாக வசீகரிக்கப்பட ஆரம்பிப்பதை உணர்ந்தேன். ‘சரி, அவர்களுக்குப் பிரசங்கிப்பேன்,’ என்று நினைத்தேன். பிரசங்கிக்கவும் செய்தேன். ஆனால் அசட்டை செய்யக்கூடாத காரியங்களை என் இருதயம் அசட்டை செய்யத் தொடங்குவதை மனதின் ஆழத்தில் என்னால் உணரமுடிந்தது. அது வெளியேயிருந்து வரும் பிரச்னைகளில்லை. பிரச்னை நானேதான். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என்னுடைய மனச்சாட்சியிடமிருந்து என்னால் தப்பமுடியவில்லை. யெகோவாவிடம் ஜெபித்தேன்.
நான் முழுநேரவேலை செய்துகொண்டிருந்தேன். நான் பெருக்கியிருந்த பொருளாதார பாதுகாப்பை விட்டுவிடவேண்டிய தேவையிருந்தது. லாங் ஐலண்டிலிருந்து உவால் ஸ்ட்ரீட் வரை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் வந்துபோய்கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம்! ரயில் பயணத்தில் உலகப்பிரகாரமான பல ஆட்களோடு தொடர்புகொள்வது நிலைமையை முன்னேற்ற உதவிசெய்யவில்லை. முக்கியமான காரியங்களுக்குக் கவனம் செலுத்துவதில் எனக்கு உதவிசெய்ய, நான் மூப்பர்களிடம் பேசவும், வாரக்கடைசிகளில் அசெம்பிளிகளுக்குப் போகவும் தொடங்கினேன். என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக, பொருளாதார காரியங்களைப்பற்றி நான் கவலைப்பட வேண்டியிருந்ததில்லை, பிறகு ஏன் இப்பொழுது மீண்டும் போராட விரும்பினேன்? ஒரு வருட ஜெபத்திற்குப்பின், என் நிலைமையை மாற்றவேண்டுமா என கவனமாக சீர்தூக்கிப்பார்த்து, மாற்றங்களைச் செய்தேன்.
புரூக்லின் ஹைட்ஸ் பகுதியில் குடியேறினேன். அங்குள்ள சபைக்குப் போயிருந்தேன். அச்சபையில் எனக்கு எத்தகைய ஆவிக்குரிய தன்மை தேவைப்பட்டதோ அது அங்கு நிலவியிருந்ததை நான் அறிந்திருந்தேன். பல வருடங்களாக சேவித்துவரும் அநேக உண்மையுள்ள சாட்சிகள்—நான் மீண்டும் சொந்த வீட்டிற்குத் திரும்பிவந்த ஓர் உணர்வை அது எனக்குத் தந்தது. ஆறு மாதங்களுக்குள் என்னுடைய வேலையை விட்டுவிட்டு பயனியர் சேவை செய்ய தயாராயிருந்தேன். நான் ஒரு பகுதிநேர வேலையில் சேர்ந்து, 1984-ல் மீண்டும் ஓர் ஒழுங்கான பயனியராக நியமிக்கப்பட்டேன்.
அந்த வருடங்களிலெல்லாம், யெகோவா ஆச்சரியகரமான ஆசீர்வாதங்களை எனக்குத் தந்து, மிகப்பல மதிப்புள்ள பாடங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சோதனையிலும் உள்ள பாடத்தைக் கற்றுக்கொள்ளவும், நம்பிக்கையுடனிருக்கவும் முயற்சித்திருக்கிறேன். பிரச்னைகளைக் கொண்டிருப்பதுதானே வெட்கப்படவேண்டிய ஒன்றல்ல; அவற்றைத் தீர்ப்பதற்கு பைபிள் நியமங்களை உபயோகிக்காததில்தான் பாவம் உருவாகிறது. இங்கு புரூக்லினில், நான் சத்தியத்தில் புதிதாக இருந்த சமயத்தில் இருந்த அதே பிரச்னைகள் எனக்கில்லை. பணம் இனிமேலும் ஒரு பிரச்னையாக இல்லை. விசுவாசத்தில் இல்லாத கணவர் இனிமேலும் ஒரு பிரச்னையாக இல்லை. என்னுடைய இருதயம் பழுதுபார்க்கப்பட்டிருக்கிறது. பல ஆவிக்குரிய குழந்தைகளைக் கொண்டிருப்பதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே புதிய பிரச்னைகளும் சவால்களும் இருந்தேயிருக்கின்றன. என் மகன் மார்க் 1987-ல் நரம்பு மண்டலத்தில் கோளாறு ஏற்பட்டு, வினைமையான மனச்சோர்வினால் துன்பப்பட்டான். ஆனால் அத்துன்பத்தினூடே யெகோவா எங்களுக்கு உதவி செய்திருக்கிறார். மார்க் இப்போது சபையில் மிகவும் நன்கு முன்னேறி, பொறுப்புகள் எடுக்கத் தகுதி பெற்றுக்கொண்டிருக்கிறான். என் மகள், ஆன்ரியா, சத்தியத்திற்குத் திரும்பிவந்து, முழுக்காட்டுதல் பெற்று, பிள்ளைகளைச் சத்தியத்தில் வளர்த்துவருகிறாள். நாம் மகா உபத்திரவத்தை மிக வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கும் காரணத்தால், பிரச்னைகள் தொடர்ந்திருக்கும் எனவும், ஒருவேளை இன்னும் அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கிறேன். ஆனால் எந்தத் தடங்கல்கள் அல்லது சவால்கள் வந்தாலும் அவற்றினூடே எங்களுக்கு உதவி செய்ய யெகோவா எப்போதுமே ஆயத்தமாக இருப்பார்.
உண்மையிலேயே, மிகுந்த சந்தோஷம் நிறைந்த, பலன்தரக்கூடிய ஒரு வாழ்க்கையைக் கொண்டிருக்க யெகோவா எனக்கு உதவிசெய்திருக்கிறார். மீந்திருக்கும் என் வாழ்க்கையை அவரிடம் நெருங்கியிருந்து அவரது சித்தத்தைச் செய்வதில் செலவிட எதிர்நோக்கியிருக்கிறேன்.—மார்லின் பாவ்லோ கூறினதுபடி.
[அடிக்குறிப்புகள்]
a “பயனியர் சேவை செய்தல்” என்ற சொற்றொடர் முழுநேர பிரசங்கவேலை செய்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
[பக்கம் 25-ன் படம்]
இராஜ்ய நற்செய்தியை முழுநேரம் பிரசங்கிக்கும் மார்லின் பாவ்லோ