“தேவ பயம்” மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராகுங்கள்!
1994-ல் நடக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய “தேவ பயம்” மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராகத் திட்டங்கள் செய்துவிட்டீர்களா? அந்த மூன்று நாட்களும் அங்கிருப்பதால் நீங்கள் நிச்சயமாகவே பயனடைவீர்கள்! இந்தியாவில் மாத்திரமே 16 மாநாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன, நீங்கள் வாழும் இடத்துக்கருகில் ஒரு மாநாடு பெரும்பாலும் நடத்தப்படலாம்.
ஏதோவொரு பயம் தைரியத்தைக் கெடுத்து நம்பிக்கையை அழித்துப்போடக்கூடும்; எனினும், வெள்ளிக்கிழமை காலையின் முக்கியப் பேச்சு தேவ பயம் என்பதற்குப் பொருள் விளக்கம் அளித்து அதன் பல நன்மைகளை விவரிக்கும். நிச்சயமாகவே, மாநாட்டின் முழு நிகழ்ச்சிநிரலும் இந்த நன்மைகளை மேம்படுத்திக் காட்டும்.
வெள்ளிக்கிழமை பிற்பகலில், தேவ பயம் எவ்வாறு திருமணத்தையும் குடும்ப வாழ்க்கையையும் பலப்படுத்தக்கூடும் என்பதையும், அதோடு இளைஞர் கடவுளிடம் கொண்டுள்ள தங்கள் பற்றுறுதியில் மாறாமல் நிலைத்திருக்க அவர்களுக்கு எவ்வாறு உதவிசெய்யக்கூடுமென்பதையும் கேட்பீர்கள். இந்தப் பிற்பகல் கூட்டம், “மரித்தோருக்காக துக்கிப்பவர்களுக்கு ஆறுதல்” என்ற இருதயத்தைத் தேற்றும் பேச்சோடு முடிவடையும். அன்புக்குரியோரை மரணத்தில் இழந்திருப்போருக்கு உதவிசெய்ய அந்தப் பேச்சின்போது அளிக்கப்படும் நடைமுறையான தகவலை நீங்கள் நன்றியோடு மதிப்பீர்கள்.
சனிக்கிழமை நிகழ்ச்சிநிரல், சபையையும் நம்முடைய ஊழியத்தையும் குறித்ததில் யெகோவாவின் வழிநடத்துதலை நாம் கடைப்பிடிப்பதைத் தேவ பயம் எவ்வாறு ஊக்கமூட்டி வலுப்படுத்தக்கூடும் என்பதைக் காட்டும். “கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினமும் வாசியுங்கள்” என்ற பேச்சில், பைபிளை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நடைமுறையான ஆலோசனைகளைக் கூட்டத்துக்கு வந்திருப்போர் பெறுவர். “யெகோவாவின் பயங்கரமான நாள் விரைவில் வருகிறது” என்ற அக்கறையைத் தூண்டுவிக்கும் பொருளின்பேரில் கொடுக்கும் பேச்சோடு சனிக்கிழமை நிகழ்ச்சிநிரல் முடிவுபெறும்.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிநிரலின் முக்கிய அம்சமானது, “நீதிமான்களுக்கான உயிர்த்தெழுதல் ஒன்று இருக்கும்” என்ற பேச்சாகும். இதைப் பின்தொடரும் பேச்சாகிய “மகா உபத்திரவத்தினூடே உயிரோடு காக்கப்படுதல்” என்பதில், ஒருபோதும் சாவாமலிருப்போரைக் குறித்த இயேசுவின் அதிசயமான வாக்குக்கு ஒரு விளக்கம் அளிக்கப்படும்.—யோவான் 11:26.
ஞாயிற்றுக்கிழமை காலை கூட்டம் நீங்கள் எதிர்ப்படும் தெரிவுகள் என்ற சிந்தனையைத் துண்டுவிக்கும் 40 நிமிட நாடகத்துடன் முடிவுபெறும். வந்திருப்போருக்கு யோசுவாவின் நாள் நினைப்பூட்டப்பட்டு, யெகோவாவைச் சேவிப்பதற்கு அவர் கொண்டிருந்த உறுதியான தீர்மானத்தை அவர்கள் காட்சியில் காணும்படி செய்யப்படுவர். எலியாவின் நாட்களில் நெருப்பினால் நடத்தப்பட்ட பரிட்சையுங்கூட காட்டப்படும், இந்த இரண்டு சம்பவங்களிலிருந்தும் கற்கும் பாடங்கள், இன்று தேவ பயத்தைக் காட்டும்படி கூடிவந்திருப்போருக்கு உதவிசெய்யும். பிற்பகலில் “மெய்க் கடவுளுக்கு இன்று ஏன் பயப்படவேண்டும்” என்ற பொதுப் பேச்சு மாநாட்டின் மேம்பட்ட ஒரு அம்சமாயிருக்கும்.
ஆஜராவதற்கு இப்பொழுதே திட்டமிடுங்கள். உங்கள் வீட்டுக்கு மிக அருகிலுள்ள இடத்தைக் கண்டறிய, யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்திலுள்ளோரிடம் விசாரியுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.