“சந்தோஷமாய் துதிப்போர்”—யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
பலனளிக்கும் மூன்று நாள் பைபிள் போதனைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 16 மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால், நீங்கள் வசிக்கிற இடத்துக்கு அருகாமையில் ஒரு மாநாடு நடைபெறக்கூடிய சாத்தியம் உள்ளது. நிகழ்ச்சிநிரல் வெள்ளிக்கிழமை காலை 9:40 மணிக்கு இசையுடன் ஆரம்பமாகும்போது ஆஜராயிருங்கள்.
வெள்ளிக்கிழமை காலை நடைபெறும் நிகழ்ச்சிநிரல், வரவேற்புரைகளையும் “சந்தோஷமாய் துதிப்போராக உலகெங்கும் பிரித்தெடுக்கப்பட்டிருத்தல்” என்ற முக்கிய பேச்சையும் சிறப்பித்துக் காண்பிக்கும். பிற்பகல் நிகழ்ச்சிநிரல் இளைஞர்கள்மீதும், பெற்றோர்கள்மீதும், கல்வியின்மீதும் கவனம் செலுத்தும். “திருமணம் செய்துகொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேனா?” என்ற பேச்சு, இளைஞர்கள் தவறவிட விரும்பாத ஒன்று. “தங்களுடைய பிள்ளைகளில் மகிழ்ச்சியைக் கண்டடையும் பெற்றோர்கள்” என்ற பேச்சை பெற்றோர்கள் கவனமாக செவிகொடுத்துக் கேட்கவேண்டும். பிற்பகல் நிகழ்ச்சிநிரல், “கல்வி—யெகோவாவைத் துதிக்க அதைப் பயன்படுத்துங்கள்” என்ற பேச்சோடு முடிவடையும். கலந்தாலோசிக்கப்படுகிற விஷயம், பள்ளிக்கூடத்தில் நிலைமைகளை வெற்றிகரமாக சமாளிக்க இளைஞர்களுக்கு உதவிசெய்யும்.
சனிக்கிழமை காலை நடைபெறும் நிகழ்ச்சிநிரல் முழுக்காட்டுதலை சிறப்பம்சமாக காண்பிக்கும். முழுக்காட்டப்படுவதற்குத் தகுதிபெறுகிறவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மக்களைக் கண்ணியில் சிக்கவைப்பதற்காக சாத்தான் எவ்வாறு பூர்வகாலம் முதற்கொண்டே பாலுறவு ஆசையை உபயோகித்து வந்திருக்கிறான் என்பதைப்பற்றிய ஒளிவுமறைவற்ற கலந்தாலோசிப்பு இருக்கும். “பிசாசின் கண்ணிகளைத் தவிருங்கள்” என்ற சக்திவாய்ந்த பேச்சும் இருக்கும். “மனிதவர்க்கத்திற்கு ஏன் கடவுளுடைய அறிவு தேவைப்படுகிறது” என்ற பேச்சுடன் அந்நாளின் நிகழ்ச்சிநிரல் முடிவடையும்.
ஞாயிற்றுக்கிழமை காலை, “இந்த ஒழுங்குமுறையின் முடிவின் காலத்தில் சந்தோஷமாய் துதிப்போர்” என்று தலைப்பிடப்பட்ட தொடர்பேச்சு, மிக விரைவில் நடக்கப்போகிற உலகை அதிரவைக்கும் சம்பவங்களின்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தும். மத்தேயு 24:21-ல் பதிவுசெய்யப்பட்டபடி, இயேசு கிறிஸ்து பேசிய “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பிப்பதற்கு முன்பாக புகலிடத்தை நோக்கி ஓடிச்செல்ல வேண்டியதன் அவசரத்தன்மையை அது வலியுறுத்திக் காண்பிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல், “முதிர்வயதிலுள்ள தகுதியுள்ளவர்களைக் கனம்பண்ணுதல்” என்ற முக்கியமான நாடகத்தோடு முடிவுறும். பின்பு பிற்பகலில், “நித்திய ராஜாவைத் துதியுங்கள்!” என்ற தலைப்புடைய பொதுப் பேச்சு கொடுக்கப்படும். அது மாநாட்டின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.
ஆஜராக இப்பொழுதே திட்டமிடுங்கள். உங்களுடைய வீட்டுக்கு வெகு அருகாமையில் நடைபெறும் மாநாட்டு இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு, உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துடன் தொடர்புகொள்ளுங்கள், அல்லது இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.